மூத்த குடிமகன் நான்
முக்கால் நூறு என் வயது
ஆமையாய் நகர்ந்தே
முயல்களை வென்றேன்
வாடிவாடி வதங்கி
மறுமழையில் துளிர்த்தேன்
என் வேர்களை இங்கு
எவரும் அறியார்
தேரை என்னைத்
தேவன் மறந்ததில்லை
சிற்பமும் தெரியும்
சிலந்திவலை நுட்பமும் புரியும்
கானல் நீரும் தெரியும்
கார்மேகமும் புரியும்
மின்மினி நான்
ஒளிக்க ஒன்றுமில்லை
பால் வடிக்கும் கள்ளிகள்
பசுவல்ல அறிந்தேன்
வெளுத்ததெல்லாம்
பாலல்ல புரிந்தேன்
விதை நான்
வீழ்ந்த மண்ணில் முளைத்தேன்
என்னையே ஊன்றி ஊன்றி
சுற்றிச்சுற்றிப் படர்ந்தேன்.
ஊற்றுக்கண்ணாய் இருந்து
ஊருணி ஆனேன்
சிப்பியாய் இருந்தேன்
முத்து பிறந்தது
மூப்பு வந்ததில்
பிணிகள் சேர்ந்தது
பசிகள் வென்றேன்
ருசிகள் துறந்தேன்
விரும்பிய உணவை
துறக்கக் கற்றேன்
விரும்பா உணவை
மருந்தாய் உண்டேன்
நான் வாழ்ந்ததை வளர்ந்ததை
என் நூல்களில் சொன்னேன்
எல்லாம் நிறைவே
இருப்பது உபரி
வாழ்க்கை சம்பூர்ணம்
அமீதாம்மாள்