கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

 

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று.

பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.  

அவருடைய கவிதை முதன் முதலாக 1979ல் ஆத்மா நாம் நடத்திய ‘ழ’ என்ற சிற்றேட்டில் வெளி வந்தது. அவருடைய மொத்த கவிதைகளையும் இத் தொகுப்பில் தொகுத்திருக்கிறார்.

முதலில் அவர் கவிதைகள் எதுவுமே தலைப்பிடவில்லை.  ‘கண் மறை துணி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டும் தலைப்பிடப்பட்டுள்ளன.

கண்மறைத் துணி என்ற பெயரில் நீண்ட கவிதை எழுதி உள்ளார். 

 

          முதல் கவிதை பழம் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

          அக் கவிதையை இப்போது பார்ப்போம்.

 

          அழுகித் தோல் கிழித்து

          அசிங்கமாய்

          சிதைந்து நாறுவது

          வெளியே சதைப்பபற்றுதான்;

          உள்ளே கொட்டை

          திடமானது

          மண்ணில் விழுந்து

          மரமாய்க்  கிளர்ந்து தழைத்துதவக்

          கனவுகள் காண்பது

          அது.

 

இப்படி எளிதாக அர்த்தம் புரியும்படி கவிதைகள் எழுதி உள்ளார்.  மேலே குறிப்பிடப்பட்ட கவிதையில் படிப்பவருக்கு எல்லாம் புரியும். எதைப்பற்றுள்ள கொட்டையில் மண்ணில் விழுந்து மரமாய்க் கிளர்ந்து என்று வருகிறது.  கனவுகள் காண்பது அது என்ற வரி வருகிறது. இது கவிஞனின் கருத்து.  இதுமாதிரி ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதை எழுதி உள்ளார்.

எளிதாக எழுதப்பட்ட இன்னொரு கவிதையைப் பரக்கலாம்.

 

கடைவாசலெல்லாம்

ஈரம் கண்டது.

நீர்தெளித்துவிடடாள்

தன் பழைய இருமலோடு

 

தேய்ந்த செருப்புக்கள்

காலுக்கு ஒரு கலர்

டப்டப் ஓசையிட்டு

வீடுவீடாய்

பால் கறக்க ஓடினார்

 

ஆசனத்தில்

ஓட்டுப்போட்ட

டவுசர்

பனியனின் கீழே

முக்கால் பெடலில்

பையன்

நியூஸ்பேப்பரோடு விரைந்தான்

ஒருவர் சத்தம் ஒருவருக்குக்

கேட்டுப் போனது

 

இந்தக் கவிதையில் ஒருவர் சத்தம் ஒருவருக்குக் கேட்டுப் போனது என்பது கவிஞர் கூறும் கருத்து.  இதைத் தான் கவனித்த சில விஷயங்களுடன் பொருத்திக்  கூறுகிறார். 

பெரும்பாலான கவிதைகளில் கருத்தையும் அனுபவத்தையும் கலந்து கலந்து சொல்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எந்தக் கவிதை முடியும் இடத்திலும் எந்த ஆண்டில் எழுதியது என்று குறிப்பு கொடுக்கப்படவில்லை. இது இந்தக் கவிதைத் தொகுப்பின் குறையாக எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு கவிதை

 

இடம்

ஊழியர்

ஏடுகள்

ஏதுமில்லாப் 

பதிவு அலுவலகம் அது

 

பிறந்தான் என்று “

செய்தி சென்றது”

உடனே வந்து

பதிவு அலுவலகம்

பார்த்துப் போனது

 

மணக்கிறான் என்று

அழைப்பிதழ் போயிற்று

அதற்கும் அந்த

அலுவலகம் வந்து

ஆர அமர

உண்டு சென்றது

 

இறந்தான் என்று

தகவல் போயிற்று

அப்போதும் வந்து

அலுவலகம் அழுது சென்றது

 

வாழ்ந்தது பற்றிக்

கூறியிருந்தான்

அலுவலகப் பணிகளில்

அதற்கெல்லாம்

இடமில்லை என்றது.

 

இந்தக் கவிதையிலும் விபரங்களை அடுக்கிக்கொண்டு முடிவாக முத்தாய்ப்பாக தன் முடிவை முன் வைக்கிறார்.

 

இன்னொரு கவிதையைப் பார்ப்போம்

 

ஒருவேளைச் சோற்றுக்கு

உத்தரவாதம் இல்லை

நடக்கும் நடையில் இவனுக்கு

மிடுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது

 

வாழ்வான வாழ்வு 

வந்து விட்டதாம்

நடையில் என்ன 

மிடுக்கு பாரேன்

 

இந்தக் கவிதை முழுவதும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கவிஞனின் பார்வையில் கவிதை விவரிக்கப்படுகிறது. இப்படியும் கவிதை எழுதலாம் என்றாலும் கருத்தைச் சுமந்த கவிதையை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை.

தன் மனக்குமுறலை வெளிப்படுத்தும் இன்னொரு கவிதையை இங்குத் தருகிறேன்.

 

அன்று ரோமில்

ஸ்பார்ட்டகலாகப் பிறந்திருந்தேன்.

 

பிரான்ஸில் என்னை

ஜோன் ஆப் ஆர்க் என்ற

பெயர்கொண்டு அழைத்தார்கள்

 

காலனி இந்தியாவில்

என் பெயர் காந்தி

 

இன்று இங்கே

அக்கா தங்கைகள் அத்தனை பேர்க்கும்

ஒரே சகோதரன் நான்

என்னை நீங்கள் “

எந்தப் பெயரிட்டும் அழைத்துக் கொள்ளலாம்

 

இதுவும் கருத்தை அடிப்படையாகக் கொண்ட கவிதை.  இதை வாசிக்கும்போது  இந்தக் கருத்தை வாசகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது பொருத்து இந்தக் கவிதையின் தன்மை உருவாகிறது.  

ஆரம்பத்தில் அனுபவம் கூட கருத்தும் எழுதிய பிரதீபன் கவிதைகள், பின்னால் கருத்தையே அடிப்படையாகக் கொண்ட கவிதைகளாக மாறி உள்ளன.  

 

ஆனால் எல்லாக் கவிதைகளும் வெளிப்படைத்தன்மை கொண்ட கவிதைகள்.  இவர் கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகிற கவிதைகள் இல்லை. 

 

அனுபவத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது, தன் வாழ்க்கையில் தென்படும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகளைக் கவிதைகளாக்கிச் சிறப்பாக எழுதி உள்ளார். 

 

இந்தக் கவிதையைப் பாருங்கள்

 

என்ன சார் 

சட்டையை மாற்றிப் போட்டுக்கொண்டு

வந்து விட்டீர்களா

பால் வாங்க இப்போது

பணம் இலையாக்கும்

பால் விற்கும் நான்

உங்களுக்குப் பழக்கமானவன் இல்லைதான்

என்னைப் பார்த்தால்

யாரையும் நம்பாத மனிதனாகவும் தோன்றும்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சார் 

பாலை வாங்கிக்கொண்டு போங்கள்

பணத்தைப் பிறகு வந்து கொடுங்கள்

 

இந்தக் கவிதை கவிகுரலோன் பார்வையில் எழுதப்படவில்லை. பால் விற்பவர் பணம் தர இயலாமல் துருதுருவென்று விழிப்பதைப் பார்த்து கவிகுரலோனைப் பார்த்துக் கூறுவதுபோல் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. 

 

இந்தக் கவிதை அனுபவம் மூலம் வேறு ஒரு பார்வையைக் கவிதைக்குள் கொண்டு வரும்போது வெற்றி பெறுகிறது.  

 

கவிதை நமக்குத் தர வேண்டியது.  ஒரு நம்பிக்கை, ஒரு எளிய புன்னகை, மனதிற்கு இதமான வருடல், இவையெல்லாம் பிரதீபன் கவிதையில் உள்ளது. 

 

‘கண்மறை துணி’ என்ற நீண்ட குறுங்கவிதையைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.

239 பக்கங்கள் கொண்ட இக் கவிதைப் புத்தகம் விலை ரூ.125 தான். பிரதீபனே இப்புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்.    

09.04.2022

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *