Posted in

வாய்ச்சொல் வீரர்கள்

This entry is part 11 of 16 in the series 17 ஏப்ரல் 2022

 

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில்

வெள்ளிக்கேடயம் தங்கவாள்

வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம்

விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.

Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்

ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில்

வந்திறங்கியவர்களும்புடைசூழ வந்த பிரமுகர்

மேடையேறி நேராக மைக்கின் முன் சென்று

முழங்கத் தொடங்கினார்.

”பல்லக்குத்தூக்கிகளும்

பல்லக்கிலேறிப் பயணம் செய்பவர்களும்

என்ற பாகுபாடு ஒழிக்கப்படுவதே நம் குறிக்கோள்”.

படபடவென்று கைத்தட்டல் விண்ணைப் பிளக்க

நலத்திட்டங்களைப் பெற வெய்யிலில்

வரிசையில் காத்திருந்தவர்களைப் பார்த்துக் கையாட்டியவாறே

கப்பலென நீண்டிருந்த காரிலேறிச்

சாலையின் இருமருங்கும் வெயிலில்

சுருண்டுகிடந்த பிச்சைக்காரர்களைப்

பார்த்தும் பாராமலேவிரைந்தார்

தனது பல்லக்குத் தயாரிப்புத் தொழிற்சாலையின்

உற்பத்திப் பெருக்க வழிமுறைகள் மாநாட்டிற்குத்

தலைமை தாங்கவும்

பன்னாட்டு நிறுவனமொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட

புது மாடல் பல்லக்குகளைப் பார்வையிடவும்…….

 

Series Navigationதிரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.சொல்லத்தோன்றும் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *