சிவகுமார்
கும்பகோணத்திலிருந்து வந்த பஸ் கோயம்பேடு நிலையத்தில் நுழையும் போது காலை மணி ஆறரை இருக்கும். சரியாகத் தூங்காமல் கண் விழித்த குகன் மனதில் அம்மாவின் முகம் சற்றென்று தோன்றி அம்மாவை நினைத்துக் கொண்டான். சுமாராக படித்த அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காமல் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டி சென்னையில் கட்டிட வேலைக்கு ஒப்புக் கொண்டு முதல் முறையாக பெரிய நகரத்திற்கு வந்திருக்கிறான். மெளலிவாக்க்ததில் உருவாகிக் கொண்டிருக்கும் பல அடுக்கு மாடி குடியிருப்பில் எலெக்ட்ரிகல் அஸிஸ்டெண்ட்டாக வேலை.
மார்கழி நேரக் காலைப்பனி விலகாத காலை நேரத்தில் ஏதோ கோவிலிருந்து குகனுக்கு புரியாத பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வடபழனியில் இருக்கும் மிகச் சுமாரான தங்கும் விடுதியை வந்தடைந்தான். காலை வைக்கவே கஷ்டமாக இருக்கும் பாத்ரூமில் கண்களை மூடிக்கொண்டு பல் தேய்து, மற்றவைகளையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது பசித்தது. கையில் அதிகம் காசில்லாததால் டீயும் பன்னையும் சாப்பிட்டுவிட்டு வாசலில் வந்து நின்றான். சற்று நேரத்தில் அவனைப் போல் சிலர் அதே இடத்திற்கு வந்தனர். குகனுக்கு யாரிடமும் அறிமுகம் இல்லாததால் பேசாமல் நின்றான். குகன் அமைதியான முக அமைப்பை உடையவன். சற்றுன்று இளகிவிடுவான், மிக அபூர்வமாகத்தான் கோபப் படுவான். எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்க தயங்குபவன். மிகவும் கஷ்டப் பட்டு வளர்ந்ததால் பசி தாகம் உணராமல் வேலை பார்ப்பவன்.
இருபது நிமிடம் கழித்து பத்து பேரை ஏற்றிப் போகும் அளவுள்ள ஒரு வேன் வந்தது. அதிலிருந்து கையில் ஒரு பேப்பர் லிஸ்டுடன் ஒருவன் இறங்கினான். மற்றவர்களை அடையாளம் பார்த்து வேனில் ஏற்றி, கடைசியாக குகனிடம் வந்தான்.
“நீ தான் குகனா?”
“ஆமாம்”
“என் பேர் காளி. போலாமா? கையில் சாப்படு வைத்திருக்கயா?”
“போலாம்; சாப்பாடு எதுவும் இல்லை, ஆனா பரவாயில்ல”. இன்று கொடுக்கப் போகும் பணத்தில்தான் அவன் நாளைக்கு ஏதாவது வாங்கிக் கொள்ள வேண்டும்.
“அங்கு ஒன்றும் கொடுக்க மாட்டாங்க. தெரியுமா?”
“தெரியும். சாப்பிடாமல் என்னால் வேலை செய்ய முடியும்.” பேசிக் கொண்டே குகன் வேனில் ஏறிக் கொண்டான்.
அருகில் இருந்தவன் குகனிடம் பேச்சு கொடுத்தான்.
“இந்த மாதிரி இடத்தில் இதுதான் முதல் வேலையா?”
“ஆமாம்.”
“காலில் சாதாரண செருப்பு போட்டுக் கிட்டு இருக்க…அங்கு கல்லும் பாறையும் விழும், நடக்கும் இடமெல்லாம் ரொம்ப குத்தும் தெரியுமா?”
“நாளைக்கு வாங்கிடறேன்.”
வேனில் ஏறிக் கொண்டான். கடைசி வரிசையில் ஓரமாக அமர்ந்தவன் முகத்தில் பட்ட மார்கழிக் காற்று இதமாக இருந்தது. வேன் சென்னைக்கு வெளியே செல்வது குகனுக்குத் தெரிந்தது. மற்றவர்கள் பேச்சு எதுவும் குகன் காதில் விழவில்லை. கண்களை மூடிக் கொண்டான். குகனுக்கு நினைவெல்லாம் அம்மாவின் அன்பான முகம், குடும்பத்தை கரையேற்ற கஷ்டப்படும் அப்பாவின் தவிப்பு, தங்கையின் பாசமான சிரிப்பு, பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தம்பியின் எதிர்பார்ப்பு என்று கும்பகோணத்திலேயே இருந்தது.
“எறங்கு” காளியின் குரல் மெளலிவாக்கத்திற்கு வந்து விட்டதை உணர்த்தியது.
காளி, குகனை கட்டிடத்தில் இருந்த பேண்ட் ஷர்ட் அணிந்து கர்வமாக இருந்தவனிடம் அழைத்துப் போனான். குகன் அவன் சட்டையில் இருந்த அட்டையைப் பார்த்து அவன் பெயர் பிரபு என்று தெரிந்து கொண்டான். பார்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக இருந்த அவனுக்கு பரந்த தோள்கள், அதிலிருந்து பனைமரக் கட்டை போல அவன் இரண்டு கைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. காலில் அழுகேறிய தோலினாலான ஷூ அவன் முட்டி வரை மறைத்திருந்தது. நிச்சயமாக கட்டிட வேலையில்தான் அவன் பல வருடங்களாக இருந்திருக்க வேண்டும். குகன் கொடுத்த லெட்டரைப் படித்த பிரபு, வேறெதுவும் கேட்காமல், சில பேப்பரை கையில் கொடுத்து,
“இதுதான் ப்ளான். இதில் எலெக்ட்ரிக் ப்ளானின் படம் இருக்கு. முதல்ல நல்லா படிச்சுக்கோ” என்றான்.
குகனுக்கு பசி லேசாக தெரிந்தது. இன்னிக்கு ஒரு நாள் எப்படியும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்புடன் படிக்க முயற்சி செய்து தோற்றான், அவனுக்கு வேலையில் கவனம் ஏற்படவில்லை. பிரபு சென்னை பாஷையில் குகனை அவ்வப்போது எதாவது ஏளனமாக சொல்லிக் கொண்டே இருந்தான். மதிய வேளையில் சாப்பாடில்லாமல் இருந்தவனைப் பார்த்து கும்பகோணத்தில் சாப்பாடெல்லாம் கிடைக்காதா என்று கடுப்பேற்றினான். தன்னுடைய உணவை பகிர்ந்து கொள்ளவந்த மற்றொருவனை ஏளனமாக கேலி செய்தான்.
சாப்பாடு எதுவும் இல்லாமல் தண்ணியை மட்டும் குடித்து குகன் ஒரு வழியாக அன்றய வேலையை முடித்து முன் பணமாக பிரபுவிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டான். அதில் தனக்கு ஒரு ஷூ வாங்கிக் கொண்டான்.
அடுத்த நாள் வேலைக்கு போகும் முன் ஞாபகமாக கையில் ஆறு இட்லியும் சாம்பாரையும் வாங்கிக் கொண்டான். பிரபுவை அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. பிரபு குகனை வேண்டு மென்றே சீண்டி, கோபப் படுத்தினான். கும்பகோணத்தை பற்றி அடிக்கடி ஜோக் அடித்து, அங்கு தேளும் பாம்பும்தான் இருக்கும் என்று கேவலப் படுத்தினான். குகனுக்கு கோபம் நாளுக்கு நாள் ஏறியது. பிரபு குகனை மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் துன்புறுத்தியே வேலை வாங்கினான். ஒரு கட்டத்தில் குகனுக்கு கோபம் தலைக்கு ஏறி,
“இங்க பாரு, என்னிடம் இப்ப காசில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் தேவர். என் அப்பா, தாத்தா எல்லாம் அரிவாளை தூக்கியே பழக்கப் பட்டவங்க இன்னொரு தடவை இப்படி பேசாதே” என்று கோபத்தை வெளிப்படுத்தி அதற்கும் கேவலப் பட்டான்.
தினமும் பிரபு குகனை மேலும் மேலும் கீழ்த்தரமாக நடத்தினான். அனாவசியமாக குடும்பத்தையும் முந்தய தலைமுறைகளையும் கேவலப் படுத்தினான். குகன் மனதில் வன்மம் வளர்ந்தது. மனதில் கும்பகோணம் தேள் பிரபுவை கடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தவனுக்கு அதை நிஜமாகவே செய்தால் என்ன என்று தேன்றியது.
பிரபுவிடம் அவமானப் பட்டுக் கொண்டே மார்கழி மாதம் முடியந்தது. நாளையிலிருந்து நாலு நாட்களுக்கு பொங்கலுக்கு விடுமுறை. திரும்பி வரும் போது கும்பகோணம் தேள் எப்படிக் கடிக்கும் என்று இவனுக்கு காட்டியே தீர வேண்டும்.
பொங்கல் விடுமுறை சந்தோஷமாக சென்றது. கும்பகோணம் குகனுக்கு நன்கு தெரிந்த ஊர். ஆனால் தெரியாத வேலையை முதன் முதலாக செய்ய வேண்டும். பொங்கல் முடிந்த அடுத்த நாள், சென்னை திரும்புவதறுகு முன் எப்படியோ ஒரு பாம்பு பிடாரனைப் பார்த்து அவனிடம் சிறு தேள் எங்கு கிடைக்கும் கண்டு பிடித்து தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டான், அவனுக்கு இரு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி அவனிடமிருந்து அதை வாங்கினான். ஒரு சிறு தீப்பெட்டி டப்பாவில் அது மயக்கத்தில் இருந்தது. அதை எப்படி சென்னைக்கு கொண்டு போவது என்று யோசித்தான். சட்டென்று பிரபுவின் புகையிலை பழக்கம் நினைவுக்கு வந்தது. கும்பகோணத்தில் மிகப் பிரபலமான அந்த புகையிலையை வாங்கி, அதை கவனமாகப் பிரித்து சிறிது தண்ணீரை தெளித்தான். அதில் தீப்பெட்டியுடன் தேளை வைத்து, காற்றுக்காக் சிறு துளைகளிட்டான். ஒரு நாளுக்கு தேவையான காற்றும் ஈரமும் நிச்சயம் இருக்கும். சில மணி நேரத்தில் தேள் தீப்பெட்டியிலிருந்து வெளியே வந்து புகையிலையில் ஒளிந்து இருக்கும். குகனுக்கு பழக்கம் இல்லாததால் நினைத்ததை சரியாகச் செய்தான் என்று சொல்ல முடியாது.
அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சியிடம் சொல்லிவிட்டு சென்னை பஸ்ஸை பிடித்து வந்து இறங்கினான்.
சென்னையில் மேகமுட்டம் மாலையில் மழை வரலாம் என்று அறிவித்தது. குகன் காலையில் மிக சுறுசுறுப்பாக வேலைக்கு கிளம்பினான். ஞாபகமாக கையில் பிரபுவிற்காக வாங்கிய புகையிலை கவரை எடுத்துக் கொண்டான். பிரபு எப்போதும் காலை பத்து மணிக்கு புகையிலை போட்டுக் கொள்வான். கவரைப் பிரித்து கையை உள்ளெ விடும் போது அவன் அலரலை ரசிக்க வேண்டும். பிறகு அவன் கீழே விழுந்து சாய்வதை பார்த்து ஆனந்தம் அடைய வேண்டும்.
பிரபுவிடம் புகையிலை கொடுத்த போது, சந்தேகத்துடன் பார்த்து வாங்கிக் கொண்டான். லேசாக திறந்து பார்த்து பின் பையில் வைத்தான். அது வரை சிறை பட்டிருந்த தேள், லேசாக திறந்ததில் மெதுவாக வெளியே வந்ததை குகனோ அல்லது பிரபுவோ கவனித்திருக்க வாய்பில்லை. வெளியே வந்த தேள் சற்று நேரத்தில் அருகில் இருக்கும் கற்குவியலுக்குள் ஒளிந்து கொண்டதையும் ஒருவரும் அறியவில்லை.
பத்து மணி எப்போது வரும் என்று காத்திருந்தான் குகன். அன்றைக்கு என்னவோ பிரபுவின் கடுமையும் அதிகாரமும் சற்று குறைவாக இருந்தது போலிருந்தது.
மணி பத்து. எல்லோரும் டீ குடிக்க தயாரானார்கள். குகனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிரபு என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டே இருந்தான். பிரபு குகன் கொடுத்த புகையிலையை எடுத்து, குகனை வழக்கத்திற்கு மாறாக நன்றியுடன் பார்த்துக் கொண்டே வாயில் போட்டு அனுபவித்தான். ஒவ்வொரு முறை பிரபு புகையிலை கவரில் கையை விடும் போதும் குகன் ஏமாந்தான். பிரபு கடைசியில் குகனிடம் வந்து,
“நல்லா இருந்துச்சு…அடுத்த மாதமும் இப்படியே வாங்கிட்டு வா” என்று சிரித்து சொன்னபோது முழுக் கூட்டமும் குகனை ஆச்சரியத்துடன் பார்த்தது. குகனுக்கு ஏமாற்றத்துல் தேளின் மேல் கோபம் வந்தது.
“மழை வரும் போலிருக்கு, சீக்கிரம் வேலையை முடிங்க”, என்று சொல்லிவிட்டு பிரபு நகர்ந்தான்.
தேள் கல்லுகடியில் அமைதியாய் இருந்தது.
குகனுக்கு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வேலை. பிரபு ஏழாவது மாடியிலிருந்து அதட்டுவது கேட்டது. மாலை மூணறை மணிக்கு திடீரென்று வானம் கருத்தது. சிலர் மெதுவாக வேலையை முடித்து கீழிறங்க ஆரம்பித்தனர். குகன் இன்னும் ஆறாவது மாடியில்தான் இருந்தான். மழை பெய்ய ஆரம்பித்தது. சற்று நேரத்தில் இடியுடன் பலமாகப் பெய்யத் துவங்கியது. கட்டிடத்தி உள்ளே மழை நீர் சுழன்று அடித்தது. இடியின் சத்தமும் இதுவரை பார்த்திராத மழையும் குகனுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியது. கீழே போய்விடலாம் என்று தீர்மானித்து, முதல் மாடிவரை வந்துவிட்டான். பிரபுவும் வேகமாக வருவது தெரிந்தது.
“சீக்கிரம் போ. கட்டிடம் ஆடுற மாதிரி இருக்கு”, என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், மேலிருந்து செங்கற்களும் காங்கிரிட்டும் விண்கற்கள் மாதிரி வேகமாக விழுந்து பலமான சப்தமும் பலரது ஓலக்குரலும் கேட்டது.
தேள் சற்று வெளியே எட்டிப் பார்த்தது. தண்ணீரின் வேகத்தில் வெளியே வந்துவிடும் போலிருந்தது.
குகன் தன் மேலிருந்த ஒரு மரப்பலகையின் அடியில் பதுங்கிக் கொண்டு பயத்துடன் செய்வதரியாது பார்த்தான். அப்படியே பலகையை குடைபோல பிடித்து வெளியே வருவதுதான் உயிர் பிழைக்க ஒரே ஒரு வழியென்று உணர்ந்து மெதுவாக நகர்ந்த போது பிரபுவின் முனகல் குரல் கேட்டது உடலில் பலத்த காயங்களுடன் என்னையும் காப்பாற்று என்று அவன் கண்கள் பார்த்தன. பழி வாங்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை முழுதும் மறந்து, பிரபுவின் கையை பிடித்து இழுத்து, அவனையும் சேர்த்துக் கொண்டு வெளியே வந்தான். மழை தன் பலத்தை குறைக்காமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.
குகன், பிரபுவுடன் வெளியெ வந்தபோது கட்டிடம் இடியத் துவங்கியது. பிரபுவை கீழே உட்கார வைத்தான். பிரபுவின் தன் காலை நீட்டிக் கொண்டான், அவன் காலடியில், தேள் ஒதுங்கி இருக்கும் கல். தேள் சற்று அமுங்கியது. வெளியெ வரத்தவித்தது, கோபத்துடன்.
மழை பலமிழந்து லேசாகப் பெய்து கொண்டிருந்தது.
“இனிமே யாரையும் அவமானப் படுத்தர மாதிரி பேச மாட்டேன், என்னை மன்னிச்சிடு”, என்று கேட்ட பிரபுவிற்கு குகன் தலையசைத்தான்.
“சரி இங்கிருந்து போலாம்” என்று பிரபு சொன்னவுடன், குகன் வேகமாக வெளியேறி ரோடுக்கு வந்து திரும்பிப் பார்தான். பிரபு வரவில்லை. மீண்டும் பிரபுவை உட்கார வைத்திருக்கும் இடத்திற்கு வந்தான், அவனை கையை பிடித்து நடக்கவைக்கலாமென்று நினைத்து அவனைப் பார்த்தவனுக்கு அவன் வாயில் இருந்த நுரை அதிர்ச்சியளித்தது.
பிரபுவின் காலிலிருந்து இறங்கிய தேள் வேகமாக தண்ணிரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மழை முழுவதும் நின்றிருந்தது.
-முடிவு.
- தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
- மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- நீ வருவாய் என…
- நான்காவது கவர்
- யாரோடு உறவு
- சிப்பியின் செய்தி
- தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
- திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
- வாய்ச்சொல் வீரர்கள்
- சொல்லத்தோன்றும் சில
- வடகிழக்கு இந்திய பயணம் – 4
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்