வெங்கடேசன் ராஜமோகன்
” வாசு “….
” சார் ” ……
வண்டிய பைபாஸ்ல விடுங்க…… அப்படியே “சாரதா இன் ” ல நிறுத்துங்க. டிபன் சாப்பிட்டுவிட்டு போவோம் .
” சரி சார் ” …
தன் முதலாளியின் சொல்லுக்கிணங்க , அந்த சொகுசு காரை அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த ஹோட்டலின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினான்…
காரை விட்டு இறங்கியவாறே, ” நீங்க ” என்று அவர் கேட்க….
நான் டிபன் எடுத்து வந்துட்டேன் சார் , வீட்டில் இருந்து வரும் போதே, என்றான் பவ்யமாய்….
அவர் நகரவும், டிரைவர் சீட்டை பின்னோக்கி சாய்த்து , சற்று நேரம் தன்னை தளர்த்தி கொள்ளும் பொருட்டு கண்களை மூடி சீட்டில் சாய்ந்தான்……
வாசுதேவன் ஆகிய வாசு , தன் முதலாளிக்கு மிகவும் பிடித்தமான தொழிலாளி ….
அவன் அந்த நற்பெயரை சம்பாதிக்க பதினோரு வருடங்கள் பிடித்தன…
வாசுவுக்கு பொறுமையும், அமைதியும் ஒட்டிப்பிறந்தவை….. அது கூடவே அவனுடைய தொழில் பக்தியும் சேர , அவன் முதலாளியின் முக்கியமான வியாபார பயணங்களில், அந்த பயணத்தின் ஒரு அங்கமாகவே இருப்பான்….
அவனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்… பிழைப்பு தேடி திருப்பூர் சென்றான். அங்கே டிரைவர் வேலைக்கு அதிக சம்பளம் தந்தார்கள்.. உடனே டிரைவிங் கற்றுக்கொண்டு ஒரு மில்லில் வேலையில் சேர்ந்தான்… பிறகு அங்கிருந்து விலகி, அதிக சம்பளம் வேண்டி கோவை வந்தான்….. ஒரு சில வாரத்தேடலுக்கு பின், தன் முதலாளியின் கம்பெனியில் வேலையில் அமர்ந்தான்…. அப்படியே வருடங்கள் ஓடின….
நேற்று மதியம் , அவனுடைய முதலாளி அவரின் கேபினுக்கு அழைத்தார்…..
வாசு, ” நான் ஒரு முக்கியமான வியாபார வேலையா திருச்சி போகணும். அங்கே ஒரு மூன்று நாள் தங்க வேண்டி வரும் ” ….
” சரி சார் “….
நீங்க நாளைக்கு காலையில , ஒரு ஆறு மணிக்கெல்லாம் , என் வீட்டுக்கு வந்துடுங்க . திருச்சியில ஒரு பத்து மணிக்கு இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க என்று சொல்லி கொண்டே போனார்……
இது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல…. ஆனால் என்ன அதே திருச்சி மாநகரம். வேறு ஊர் பெயரை அவர் சொல்ல கேட்டிருந்தால், உற்சாகம் அடைந்திருப்பான், போலும்…..
” என்ன வாசு போலாமா ? “
என்று கேட்டபடி டிபன் சாப்பிட்டு வந்த முதலாளி, காரில் அமர்ந்தார் …..
” போலாம் சார் “
மீண்டும் பயணம் தொடர்ந்தது…..
அடுத்த சில மணி நேரங்களில் , திருச்சியில் உள்ள அந்த நட்சத்திர ஹோட்டலின் முன் கார் நின்றது…..
” ம்…வாசு, எனக்கு இன்னிக்கு மீட்டிங் முடியுவே எப்படியும் ஒரு ஆறு மணி ஆயிடும்… இடையில், எதுவும் தேவை பட்டால் உங்களை கூப்பிடுறேன் ” என்று சொல்லி விட்டு அவன் முதலாளி இறங்கி சென்றார்……
இன்னிக்கு என்ன புதன் கிழமையா….. வியாழன், வெள்ளி முடிஞ்சு சனிக்கிழமை தான் இனி ஊருக்கா , என்று தனக்குள் அங்கலாய்த்து கொண்டான், வாசு….
பகல் நேரத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டான். பின் எப்பவும் போல், தன்னை போன்ற சக கார் டிரைவர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்து , அரசியல் , சினிமா , சமூகம் என கச்சேரி தொடர்ந்தது…
இப்படியே, இரண்டு நாட்கள் கழிந்தன. அவ்வப்பொழுது அவன் முதலாளி, அவருக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வர சொல்லி , அப்படியே அவன் நலத்தையும் விசாரித்து கொண்டார்…..
மூன்றாம் நாள் காலை , ஒரு ஏழு மணிக்கு, அவன் முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது.
” வாசு , கொஞ்சம் என் ரூமுக்கு இப்ப வாங்க “
” இதோ வரேன் சார் ” ….
அவர் அவனுடைய வரவுக்காகவே காத்திருந்தார்…
” சொல்லுங்க சார் “…..
ஒன்னும் இல்ல வாசு. அம்மா காலைல ஃபோன் பண்ணாங்க. அது ஏதோ ” நெட்டி மாலை ” யாம்… அது தஞ்சாவூர்ல தான் கிடைக்குமாம். முடிஞ்சா வாங்கிட்டு வர சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். அதனால நீங்க இன்னைக்கு தஞ்சாவூர் போய், அத கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுங்க. சாயுங்காலமா, ஒரு ஆறு மணிக்கெல்லாம் , இங்க இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க..
” சரி சார் , நான் போயிட்டு வந்துடுறேன் ” …
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு , கீழ் தளம் நோக்கி லிஃப்ட் டில் இறங்கினான். ஆனால் அவன் மனம் என்னவோ மேல் நோக்கி பறப்பது போல இருந்தது அவனுக்கு.
” தஞ்சாவூர் ” ….. ஆம், அது அவனுடைய சொர்க்க பூமி. அவன் பிறந்தது முதல் வாலிப வயதில் ஒரு வேலைத்தேடி திருப்பூர் செல்லும் வரை அவன் ஆண்டு அனுபவித்த அதே ஊர்…..
அப்படி வேலைத்தேடி அங்கிருந்து கிளம்பியவனுக்கு , இது நாள் வரை, ஒரு முறையேனும் திரும்பிப்போய்பார்க்க மட்டும் , வாய்ப்பு அமையவே இல்லை….
இன்று, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அளவில்லா ஆனந்தம் அவனுக்கு.
இத்தனைக்கும் அவனுக்கு அங்கு சொல்லிக்கொல்லும் படி உறவோ, நட்போ, காதலோ எதுவுமே இல்லை. ஆனாலும் அந்த மண்ணின் மீது ஒரு பற்று இயல்பாகவே வந்தது. எத்தனை வருட ஏக்கம் அது . இன்று மொத்த நாளையும் அங்கே கழிக்க வேண்டும் என்று எண்ணியவன் , காரை தஞ்சை செல்லும் சாலையில் மிதக்க விட்டான்…..
சீக்கிரமே தஞ்சாவூர், அவனை “அன்புடன் அழைக்கிறேன்” என்றது…..
அவன் முதலாளி இட்ட வேலையை முதலில் முடிக்கும் பொருட்டு, ” நெட்டி மாலையை ” தேடி அலைந்தான்.
சிலர் கீழவாசலில் கிடைக்கும் என்று கூற , சிலர் ரயிலடி என்றார்கள்… வேறு சிலரோ அங்கெல்லாம் வாய்ப்பு இல்லை ராசா….நேரா பூச்சந்தைக்கு போ என்றனர்.
இப்படி ஒவ்வொரு இடமாக அவன் தேடி அலைந்த போது , அவன் ஊர் எவ்வளவு மாற்றம் அடைந்து உள்ளது என்பதை உணர்ந்தான்….
அவன் படித்த பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் , சூப்பர் டீ ஸ்டால், ஆரிய பவன் என எல்லாம் உருமாறி இருந்தது…. அருள் தியேட்டரை தேடினான்… அதுவும் அங்கே இல்லை….
வியப்புடன் பூச்சந்தை வந்து சேர்ந்தான். அங்கு வந்த பின் தான் தெரிந்தது , நெட்டி மாலை செய்யும் கலைஞர்கள் புலம் பெயர்ந்ததாலும், யூரியா மற்றும் பூச்சி கொள்ளிகள் தெளிப்பதால் நெட்டி செடி அழிந்து விட்டதாலும் , ” நெட்டி மாலை ” என்னும் பேச்சுக்கே இடமில்லை என்று…..
எதேச்சையாக , பூக்காரத்தெரு வழியாக செல்லும் ஒரு வாய்ப்பு அவனுக்கு அங்கே கிடைத்தது…..
திடிரென அவன் மூளையில் ஏதோ ஒரு சுரப்பி சற்று அதிகமாக வேலை செய்ய, அவன் எண்ண ஓட்டங்கள் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு பின்னோக்கி
நகர்ந்தன…
ஆம்…. அவன் அப்பொழுது ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான். இருபது கண் பாலம் என்ற புதாற்றங்கரைக்கு , மிக அருகில் தான், அவர்கள் குடியிருந்த வாடகை வீடு, அமைந்திருந்தது…..
இப்போது அந்த வீடு அங்கு இருக்குமா , அல்லது உருமாற்றம் அடைந்து இருக்குமா …. நம்மால் அந்த வீட்டை அடையாளம் காண இயலுமா என்ற எத்தனையோ கேள்விகள் வாசுவை உசுப்பின…
சரி பார்த்து விட்டு தான் வருவோமே என்ற , முடிவில் அந்த தெருவுக்குள் நுழைந்தது அவன் வாகனம்…..
ஒரு பத்து பதினைந்து வீடுகள் கடந்தவுடன் , அவன் கண்களை அவனாலயே நம்ப முடியாமல் போனது…. ஆம் அந்த தெருவில் இன்றும் அந்த வீடு அப்படியே தன் எழில் மாறாமல் காட்சி தந்தது….
அது அவனையே பார்த்துக்கொண்டு இருப்பதை போன்று ஒரு உணர்வு ஏற்பட , வாசு அதன் எதிர் புறம் தன் வாகனத்தை நிறுத்தினான்….
ஒரு இரண்டு நிமிடம் அவ்வீட்டை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ….
அவன் விளையாடியது , படித்தது , அவன் தாயிடம் அடி வாங்கியது , அந்த வீட்டின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தெருவில் போவோர் , வருவோரை தரிசிப்பது , ஐஸ் வண்டிகாரரை எதிர்பார்த்து காத்து கிடந்தது போன்ற அத்தனை விஷயங்களையும் , அலசி ஆராய்ந்து பார்த்து சிலிர்ப்பை தந்தது , அவன் உள் மனம்…..
எத்தனை நாட்கள் அந்த வீடு அவனுக்கு இருப்பிடமாய், இருந்திருக்கிறது….. எத்தனை ஆண்டுகள் அது அவனது விலாசம்… எப்படி மறக்க முடியும் அவை அனைத்தையும்…
சட்டென்று அந்த வீட்டை ஒரு புகைப்படம் எடுத்து கொண்டான்…..
சில நொடிகள் கழித்து மீண்டும் தன் வாகனத்தில் அமர்ந்து புறப்பட தயாரான போது , அந்த வீட்டின் மௌனமொழி வாசுவின் காதுகளை எட்டியது……
” எத்தனை வருடங்கள் கழிந்தாலும் , என்னை பார்க்க, ஒரு முறை ஏனும் நீ வருவாய் ” என எனக்கு தெரியும், என்பது தான் அது…..
ஒரு ஏக்க பெருமூச்சுடன் , அந்த தெருவை கடந்து வந்த அவன் , அருகில் இருந்த ஒரு டீக்கடையில்…..
” ஒரு டீ ” என்று சொல்லி விட்டு அமர…. அங்கிருந்த வானொலி பெட்டியில் …..
நேயர்களே, இனி உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில், இப்போது ஒலிக்க வரும் பாடல் என்று சொல்லிய…. ஒரு இரு நொடிகளில் அந்த பாடல் ஆரம்பமானது…
” நீ வருவாய் என
நான் இருந்தேன்….
ஏன் மறந்தாய்
என நான் அறியேன்……”
உரைந்தே போன அவனுக்கு ,
” சார் இந்தாங்க டீ ” என்ற வாக்கியம் மட்டும் ….. அவனை நிகழ்காலத்துள் இட்டு சென்றது.
வெங்கடேசன் ராஜமோகன்
- தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் -32, வாலாட்டும் நாய்க்குட்டி
- மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?
- நீ வருவாய் என…
- நான்காவது கவர்
- யாரோடு உறவு
- சிப்பியின் செய்தி
- தமிழர்களின் புத்தாண்டு எப்போது?
- திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.
- வாய்ச்சொல் வீரர்கள்
- சொல்லத்தோன்றும் சில
- வடகிழக்கு இந்திய பயணம் – 4
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்