கூட்டுக்குள் கல்லெறிந்தவள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 9 in the series 1 மே 2022

 

 

முனைவா் சி. இரகு

 

 

 அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென வாழாமல் தன் குடும்பதிற்காகவும், தன் பிள்ளைகளே வாழ்க்கை என்ற முனைப்பில் இரவும் பகலும் அவா்களின் நினைப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளின் அறிவையும் ஆளுமையும் கண்ட அவ்வூா் மக்களுக்கு சிறந்த முன் மாதிரி பெண்ணாகவும் விளங்கினாள். இதனைக் கண்டு அவளின் உற்றார், உறவினர்கள் மிகுந்த பொறாமை உணா்வை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவளுக்கு அடிக்கடி தொந்தரவு தந்துகொண்டே இருந்தனா்.

            அவளின் கணவனோ ஒன்றுமே அறியாத வெகுளியான வெள்ளந்தியான குணம் உடையவா். ஆனால் அவா் வீடு, வீட்டை விட்டால் விவசாயம் என்று தன் வாழ்நாளினை வாழ்ந்துக்கொண்டிருப்பவா். இருவரும் நல்ல புரிந்துணா்வுகளோடு இல்லறத்தைத் தொடா்ந்து கொண்டிருந்தனர். இவா்களின் அன்புக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தையோடு தன் இல்லறக் குருவிக்கூட்டை கட்டமைத்து வாழ்ந்துக்கொண்டிருந்தாள்.

            அவளுக்கு ஓா் எண்ணம் தன் பெண்பிள்ளையை நன்கு வளா்த்து சிறந்த அரசு வேலையில் உள்ள மணமகனுக்குத் தான் தரவேண்டும் என்னும் வைராக்கியத்தில் பிள்ளையை வளா்த்துவந்தாள். ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அப்பெண்பிள்ளைக்கு மாப்பிள்ளை வரத்தொடங்கினா். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இவள் மகளுக்கு மட்டுமே மாப்பிள்ளை வருவதும் போவதுமாக இருக்கின்றார்களே என்று பேச ஆரம்பித்தனா்.

தன் மகளை அந்த அளவுக்கு அழகு நிறைந்தவளாகவும், குடும்ப பாங்கானவளாகவும் வளா்த்திருந்தாள். ஆனால் அப்பெண்ணுக்கோ திருமண வயதுவரவில்லை என்பதால் வருகின்ற மாப்பிள்ளை எல்லாம்  நிராகரித்தாள். பின்னா் சில வருடங்களுக்குப் பிறகு தன் மகளுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளைக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாளோ அதே போல அரசு வேலையில் உள்ள மணமகனுக்கு பல்வேறு எதிர்ப்புச் சூழ்நிலையில் திருமணம் முடித்தாள்.

அத்திருமணத்திற்குப் பிறகு ஊரில் உள்ளவா்களும் உற்றார் உறவினா்களும் வியந்துபோயினர் அப்பெண்பிள்ளைக்கு செய்த சீர்வரிசையைக் கண்டு. அதற்கு முன்னா் அவள் உறவினா்கள் “இந்த வீட்டிலா பெண் எடுக்கப்போறீங்க“ என்ற எகத்தாலத்துடனும் ஒரு விதமான கேலிப்பேச்சுக்கள் பேசலாயினர். அதையெல்லாம் மாற்றிப்போட்டாள் தன் வைராக்கியத்தின் வலிமையும் தன் வாழ்க்கை வழியையும் வெளியுலக்திற்குக் காட்டினாள்.

             தாய்க்குத் தலைச்சம் பிள்ளையாம் என்னும் கிராமத்துப் பொன்மொழிக்கு ஏற்ப அவளுக்கு அழகான ஆண்பிள்ளை. அந்த ஆண்பிள்ளை அவள் கணவன் தோளின் மீதும் மார்பின் மீதும் வளா்த்து சீராட்டி ஒட்டுமொத்த அன்பை எல்லாம் கொட்டி வளா்த்து வந்தார். இருவருக்கும் அந்த ஆண்பிள்ளைமேல் அவ்வளவு பாசம், எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார்கள், அப்படி இல்லையெனில் அடம் பிடித்தோ, அழுதோ வாங்கிக்கொள்ளும் பிடிவாதம் பிடித்த ஆண்பிள்ளையாக வளர்த்தார்கள்.

            இப்படி வளா்ப்பதற்கு ஒரு சில காரணமும் இருந்தது. ஏனெனில் சிறுவயதில்  அடிக்கடி நோய் ஏற்பட்டு அதிலிருந்து காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்டனா். அதனால் அந்த ஆண்பிள்ளை மேல் அதீத பாசம் வைக்கத் தொடங்கினார்கள். சிறுவயதில் இருந்த பிடிவாத குணம் வளர வளர மாறத்தொடங்கியது. அவளுக்குப் படிப்பறிவு சற்றே குறைவு என்பதாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கில் அப்பிள்ளையை நல்லதொரு பள்ளியில் சோ்த்து படிக்க வைத்தாள்.

சின்னஞ் சிறு பிள்ளை என்பதால் அவள் தன் மகன் செய்யும் சின்னஞ் சிறு தவறுகளுக்கு மிகப்பெரிய தண்டனையும் கொடுப்பாள். அதனால் சிறந்த ஒழுக்கம் நிறைந்த பண்பு நிறைந்த ஓரு மகனாக வளா்ந்து வந்தான்.  அவளின் எண்ணத்திற்கு ஏற்ப பத்தாம் வகுப்பில் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்று அவளின் வளா்ப்புக்குப் பெருமையை உண்டாக்கினான். அவள், தன் பிள்ளையின் அறிவு வளா்ச்சியைக் கண்டு ஊரே வியந்து பாராட்டுவதைக் கண்டு பரவசம் அடைந்தாள்.

அவனுக்கோ ஊரில் நெருக்கமான நண்பா்கள் அதிகம். இதற்கு முன் தன் தாயின் பேச்சை மீறாதவன் உயா்க்கல்வி படிப்பதற்கான ஆலோசனையை தன் நண்பா்களோடு கலந்தாலோசித்து தன்படிப்பின் பாதையை தோ்ந்தெடுக்கின்றான்.  அந்த படிப்பில் ஏதோ தானே என்று தன் படிப்பை நிறைவு செய்கின்றான். உயர்க்கல்வியில் எடுத்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு தொழிற்கல்வி படித்து முடிகின்றான். கொஞ்சம் கொஞ்சமாக வருடங்கள் ஓடிக்கொண்டிருக்க தன் மகன் அரசாங்க வேலைக்கு போகமாட்டான என்ற ஏக்கத்தில் மூழ்கிக்கிடக்கின்றாள். இந்த இடைபட்ட காலத்தில் அவன் தன் நண்பா்களோடு இணைந்து கிடைத்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்.

   ஒருசில வருடங்கள் கழித்து அவன் அரசாங்க வேலைக்குத் தோ்வாகியிருந்தான். ஆனால் அவனின் போதாத காலமோ என்னவோ தெரியவில்லை ஆட்சி மாற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கான கடிதம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. இவளோ தன் மகனுக்கு வேலைக்கான கடிதம் இப்போ வந்துடும் அப்போ வந்துடும் என்றெண்ணி இலவுக்காத்த கிளிப்போல காத்துக்கொண்டிருந்தாள். சில வருடங்களுக்குப் பிறகு  வேலைக்கான அழைப்புக்கடிதமும் வந்தது. அதைக்கண்டு ஆனந்தத்தில் மூழ்கித் திகைத்துப்போனாள். ஆனால் அவளுக்குத் தெரியாது காலம் நிகழ்த்தும் சதிவேலையில் தன் மகனை பிரியபோகின்றோம் என்பதை.

   வேலைக்கான ஆய்த்த பயிற்சியும் முடிந்த பிறகு ஒரு வழியாக வேலையில் சோ்ந்தான். வேலையில் சேர்ந்த பிறகு ஒட்டுமொத்த குடும்ப பொறுப்புக்களை எல்லாம் சுமக்கத் தொடங்கினான். அவளுக்குத் தன் பிள்ளை அரசாங்க வேலைக்குச் சென்றுவிட்டதால் குடும்ப பாரம் எல்லாத்தையும் இறக்கி வைத்தாற் போல் இருந்தது.

    வேலைக்குச் சென்று வருடங்கள் ஓடிக்கொண்டேயிருந்தன, அவனின் வயதும் கூடிக்கொண்டே போயின. திருமண வயது வந்தவுடன் அவனுக்கு மணம் முடிப்பதற்காக பெண் தேடித்தேடிப் பார்க்கின்றாள். அவள் நினைத்தப்படி பெண் அமையவில்லை. அப்படியே அமைந்தாலும் இராசி சரியில்லை, நட்சத்திரம் சரியில்லை என்று தள்ளித்தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. அவள் உற்றார், உறவினா்களின் வழியில் பெண் தேடிப்பார்த்தாலும் அவன் குணத்துக்கு ஏற்றார் போல் பெண் இல்லை, மகனின் குணமோ வாரி வழங்கும் வள்ளல் குணம், மன்மதன் போல அழகும் நிறைந்தவனாக இருந்தான்.

 ஒரு நாள் அவன் வேலைப்பார்க்கும் இடத்திலிருந்து நண்பா்கள் மூலமாக ஒரு பெண்ணின் போட்டோவைக் கொண்டு வந்துகாட்ட அவளும் பார்த்து, தன் பாரம்பரிய குடும்ப வழக்கப்படியான செயல்பாடுகளைப் முறைமைகளை பார்ப்பதை விடுத்து , தற்பொழுது மகனுக்கு திருமணம் முடிந்தால் போதும் என்று நினைத்தாள். பெண்ணை பார்ப்பதற்காக பெண் வீட்டிற்கு உறவினா்களோடு சென்று பார்கின்றனா். பெண்ணின் வீடோ நல்ல பெரிய வீடாக இருந்தது விசாரித்தப்போது சொன்னார்கள் அவா்கள் தாத்தாவிற்குத் தாத்தா அந்த வீட்டை கட்டினார் என்றுரைத்தார்கள். அவ்வீட்டின் முற்றத்தில்  நல்ல உயரமான அகலமான ஓா் ஊஞ்சல் இருந்தைக் கண்டு சின்னஞ்சிறு பிள்ளைகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தனா். வீட்டிற்குள்ளே பெண்ணின் தாய், தகப்பன் மற்றும் அவா்களின் உறவினா்கள் இருந்தனா். இருவீட்டாரும் பேசத்தொடங்கினா், சுமூகமாக பேச்சு வார்த்தைகள் போய்கொண்டேயிருந்தன. அவ்வேளையில் பெண் அங்கு இருப்பவா்களிடம் அவளுக்கென்று உள்ள நிபந்தனைகளை கேட்கத் தொடங்கினாள். அதற்கு மாப்பிள்ளை வீட்டாரின் தரப்பிலும் சரியான விளக்கம் கொடுக்கிறார்கள்.

             பேசிக்கொண்டிருக்கின்ற அவ்வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக பெண், அவனின் தாயிடம் நீங்கள் எவ்வளவு நகை எதிர்பார்க்கிறீா்கள் என்று வினவுகின்றாள் அதற்கு அவள் “வாழப்போற பொண்ணு நீதாமா… உனக்கு வேணுங்கிறத  கொண்டுவந்தாலும் சரி கொண்டு வரவிட்டாலும் சரி எனக்குச் சம்மதம். என்பிள்ளை உன்ன நல்லா பாத்துக்குவான்“  என்று தன் பிள்ளையின் அருமையையும் தன் வளா்ப்பின் நோ்மையையும் எடுத்துரைத்தாள்.

        மேலும் அவள் அப்பெண்ணிடம்  “என் மருமகளுக்குனு  என் உழைப்புல செஞ்ச ஐந்து பவுன்ல தாலிக்கொடி போட்டுவிடுவேன்“  என்றுபெருமிதமாகக் கூறினாள். பின்னா் வீட்டை எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புகின்றனா்.  பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு குறிப்பிட்டத் தொலைவைக் கடந்த பிறகு அவா்கள் செல்லும் வாகனச் சக்கரத்தில் காற்றில்லாமல் நின்றுவிடுகின்றது. அப்பொழுது அவ்வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் அந்த பெண்ணின் குடும்பத்தை பற்றி விசாரிக்கையில் பட்டும் படாதவாறு எதையும் பார்த்து நிதானமாக செய்யுங்கள் என்று இலைமறைக்காயாக சொல்லிவிடுகின்றார். வாகனம் இடையில் நின்றதை  ஒரு சகுனமாக பார்க்க வேண்டிய நேரத்தில் அதனை பொருட்படுத்தாது அலட்சியமாக இருந்துவிடுகின்றனா்.     

   ஓரிரு நாட்கள் கழித்து பெண்வீட்டார் அவனின் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டனா். பெண்வீட்டை விட பல மடங்கு பின்தங்கிய நிலையில் அவனின் வீடு காணப்பட்டது. அவனின் தாய் உள்ளது உள்ளபடியே எடுத்துரைத்தாள் அதனையும் பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டனா். ஆனால் அவனின் தாய்க்கோ மனம் நெருடலாகவே இருந்தது. பெண்ணின் தாயானவள் அவளின் மனதை மாற்ற முயற்சி செய்கின்றாள், பிறரின் மனதை வசியம் செய்யக்கூடிய வகையில் பெண்ணின் தாயார் பேச பேச அந்த வசிகரமான பேச்சில் மயங்கிபோகின்றாள் அவனின் தாய். ஆனால் ஒரு விதமான குழப்பத்தோடும் தயக்கத்தோடும் ஒரு விதமான குழப்பான மனநிலையிலே அவள் காணப்படுகின்றாள். பின்னா் பெண்ணின் தகப்பனார் பேச ஆரம்பிக்கும் பொழுது ”எங்களுக்கு வசதி முக்கியமல்லமா மாப்பிள்ளை தங்கமான பையனா இருந்தா போதும், உங்களையும் உங்க குடும்பத்தையும் பற்றி விசாரிக்கும் பொழுது எல்லோரும் ரொம்ப நல்லவிதமாக சொன்னாங்க”.

“நான் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்னாடியே இங்கு வந்து நல்லா விசாரித்துட்டுப் போனோன். மாப்புள்ள சொக்கத் தங்கமுனு சொன்னாங்க”  அப்படினு அவளின் குடும்பதின் அருமை பெருமை எல்லாத்தையும் எடுத்து பேசினார். ஆனால் அவளுக்கு என்ன செய்வதென்று புரியாத மனநிலையிலே இருந்தாள். இப்படி ஒரு வழியா பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்று நிச்சயம் செய்யவதற்கான நாளையும் குறித்துவிட்டுச் சென்றனா்.

பெண்ணோ மகனின் நிறத்திற்கு எதிராக இருந்தோடு மட்டுமில்லாமல் தன் மகளை விடவும் அதிமாக படித்திருந்தாள், படிப்பிற்கு ஏற்றவாறு கைநிறைய கூடுதல் வருமானம்  வாங்குபவளாக இருந்தாள். தன் மகனுக்கு நண்பா்களின் அறிவுறுத்தல் தன்னைவிட கூடுதலாக வருமானம் பெறும் பெண் கிடைத்தால் வாழ்க்கை நல்லாயிருக்காதுப்பா என்றெல்லாம் கூறினார்கள். இதைக்கேட்ட அவனும் ஒரு சமயத்தில் அந்த பெண் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குகின்றான். ஆனால் அவன் உறவினா்கள் மூளைச் சலவை செய்து ஓரளவு திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தனா். இதற்கிடையில் பெண்ணின் தகப்பன் அவனிடம் பணத்தின் மீது மோகம் கொள்ள வைக்கின்றார்.

            ”இன்னும் ஒரு சில மாதங்களில் நான் கோடிஸ்வரனாயிருவேன் மாப்புள” என்று சொல்லி சொல்லியே அவனின் மனநிலையில் மாற்றத்தை விதைக்கின்றார். அவனும் அதை நம்பி விடுகின்றான். இருவரின் வீட்டில் பேசி திருமணத்திற்கு முன் நிச்சயதார்தம் நடைபெறுகின்றது.  நிச்சயதார்த்தம்  முடிந்த பிறகு பெண் வீட்டாரின் அரங்கேற்றம் அவனின் மூலமாக நடைபெறத்தொடங்கின.

திருமணத்தை நிச்சயம் முடிந்த நாளிலிருந்து  ஆறு மாத காலம் தள்ளிபோட்டனா். இதற்கிடையில் பெண்ணும் அவனும் பேசிக்கொள்கின்றனா். நாளாக நாளாக பெண் வீட்டார் பெண்ணின் வழியாக அவனின் மனதில் முழுமையான மாற்றத்தை விதைக்கின்றனா். அம்மாற்றம் அவன் தாய்க்கும், அவள் கட்டமைத்த இல்லறக் கூட்டிற்கும் எதிராக திசைதிருப்பிவிடுகின்றனா். இந்த ஆறுமாத காலத்திற்குள் அவா்கள் அவனை வைத்து அவா்கள் நினைத்தவாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனா்.

திருமணத்திற்கு முன்பு செய்யக்கூடிய முன்னேற்பாடுகளில் ஒன்றில் கூட மாப்பினையின் தாய்க்கு தெரியப்படுத்தாமல் அவா்களே செய்துமுடித்துவிடுகின்றனா். ஆனால் அதற்கான பணம் மட்டும் அவள் கொடுத்துவிடுகிறாள். திருமணம் முடிந்த பிறகு ஒவ்வொன்றையும்  மாப்பிள்ளையின் சகோதரன் கேட்கத் தொடங்குகின்றான். அவா்கள் திருமணத்திற்கு முன் சொல்லிய சொற்களில் எதுவும் உண்மை இல்லை என்பதை புரியவைக்கின்றான். சொல்லபோனால் பெண்வீட்டார்கள் திட்டம்போட்டு மிகப்பெரிய சதிவேலை செய்து ஏமாற்றியுள்ளார்கள் என்பதைக் கண்டு நெஞ்சம் பொறுக்கமுடியாமல் கேள்விக்குமேல் கேள்வி கேட்கின்றான்.

ஆனால் அவா்கள் மாப்பிள்ளையின் சகோதரனை “நீ சின்ன பையன் உனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது நீ சும்மா இரு “ என்று சொல்லி சொல்லி அவன் பேச்சை கேட்காதவாறு செய்கின்றனா். இதிலும் அவா்களின் சூழ்ச்சி போக போக தான் புரிந்தது. ஆனால் அவன் அந்த ஊருக்கே வரவு செலவு பார்க்கும் “கணக்கப்பிள்ளை“யாக ஊர்கார்கள் நியமித்திருந்தனா்.  அந்த அளவுக்கு நோ்மையாகவும் நியமாகவும் வரவு செலவு பார்க்கும் திறன் படைத்தவனாக இருந்தான்.

ஆனால் நம்வீட்டுப் பணத்தை நமக்கு முன்னாடியே இந்தளவுக்கு ஏமாற்றுகிறார்களே என்ற ஆதங்கம், மேலும் தன் தாய் தந்தையா்களுக்கு உண்டான மரியாதைக் கூட தரமாட்டிங்கிறார்களே என்ற கோபம், அவா்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளும் நிலையைப் பாரத்து கொந்தளிக்கின்றான்.

திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த மருமகளோ நல்ல குணத்தோடு வந்திருப்பாள் என்று நினைத்தால் அவள் அப்படி அல்ல. எப்படியாவது தன்கணவனை இந்தக் குடும்பத்திலிருந்து பிரித்து கொண்டு செல்லவேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளா வைத்திருந்திருப்பாள் போல… ஏனென்றால் அந்த அளவுக்கு அவள் அனைவரின் உள்ளத்தையும் காயப்படுத்தினாள். படித்த பெண் ஆனால் படிப்பறிவு இல்லாத நாகரிக மற்ற பெண் பேசக்கூடிய பேச்சுகளாக அவள் நாவில் வெளிப்பட்டன.

அந்த வீட்டில் உள்ள நபர்களை ஒரு ஆளாகக்கூட மதிப்பதில்லை. சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரின் மனதில் நஞ்சு கலந்த வார்த்தைக் கொட்டி அனைவரின் உள்ளத்தையும் காயப்படுத்தினாள். ”தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்ற வள்ளுவரின் குறள் உரைக்கும் கருத்துக்கேற்ப அவள் நாவினால் வீசிய சொற்கள் பல வருடங்கள் கடந்தாலும் மனதிலிருந்து மறந்து போகாது அந்த அளவுக்கு அவள் எல்லோரிடமும் பேசுகின்றாள்.

இந்த பெண்ணுக்குப் பின்னாடி அவளின் தாய் தூண்டுகோலாக இருந்து இன்னொரு பெண் கஷ்டப்பட்டு குருவிக்கூடு மாறி உருவாக்கிய அந்த இல்லறக் கூட்டை முன் பின் அறியாத அவள் தன் சுயதேவைக்காகவும் ஈவு இரக்கம் இல்லாமல் மற்றொருவரின் பணத்தின் மூலமே தன் பெண்பிள்ளைக்குத் திருமணம் மற்றும் இளைய பெண்பிள்ளைக்கு பூப்பு நீராட்டு விழா போன்றவற்றை சாமார்த்தியமாக நடத்தி முடிகின்றாள். பணம் தானே போனபோகுது என்று விட்டாள அவள் அன்பை எல்லாம் ஒட்டுமொத்தமாக கொட்டி வைத்த மகனையும் அவளுக்கு இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிவிட்டாள்.

எப்பொழுதுமே ஒரு பெண் தன் பெண்பிள்ளைகளை திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பொழுது நல்லா வாழனும் சொல்லி அனுப்புவாங்க ஆனால் அவளோ எப்படி இந்த குடும்பத்தை பிரிக்கலாம்னு திட்டம் போட்டு அனுப்பி வைத்துள்ளாள். அவள் சொல்லிக்கொடுத்த மாதிரியே மருகளும் ஆடுகின்றாள் ஒன்னுமே தெரியாத அப்பாவி குடும்பத்தை கலைத்து சிதைத்து உருக்குலைய வைக்கின்றாள்.

 ஒரு பெண்ணுக்கு உண்டான பொறுமை,மனப்பக்குவம் இல்லாதவளாக இருக்கின்றாள். கூடவே தன் வாழ்க்கையும் சீரழிகின்றதே என்ற எண்ணம் துளியளவும் இல்லாமல் தன் அம்மா என்ன சொல்லுகின்றாளோ அதை எல்லாமே செய்கின்றாள் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் எடுப்பார் கைபிள்ளைபோல பம்பரம்போல சுழல்கின்றாள். தன் வாழ்க்கையும் தன் தாயால் பரிபோகின்றதே என்ற நிலை தெரியாமல் தன்னுடைய அழகான இல்லற வாழ்க்கையும் தொலைத்துவிடுகின்றாள்.

ஒட்டுமொத்த உழைப்பையும் பாசத்தையும் நேசத்தையும் ஆசை ஆசையாய் கொட்டி வளா்த்த எம்மகன் இன்று தன்னையும், தன்னோடு பிறந்த உடன்பிறந்த உறவுகளையும், தூக்கி எறிந்துபேசுகின்றானே என்ற ஆதங்கம், கலங்கம், கலக்கம் இரண்டும் கலந்த கண்ணீரோடு காட்சியளிக்கின்றாள். அவள் கஷ்டப்பட்டு உருவாக்கிய கூட்டுக்குள் கல்லெறிந்துவிட்டார்களே! பாவம் இந்த நிலை எந்த பெண்ணும் இவ்வுலகில் வரக்கூடாது.

Series Navigationமுதன்முதல் பொது விண்வெளி ஆய்வலர் நால்வரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ்X மீட்சி ராக்கெட் விண்சிமிழ்.என்னெப் பெத்த ராசா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *