ஜனநேசன்
4
காலை 6 மணி ஆயிற்று. ரயிலுக்குள் சூரியவெளிச்சம் ஊடுருவியது. அக்கம் பக்கத்தில் எழுந்து பல்துலக்கியும், கழிவறைக்குப் போவதுமாக இருந்தார்கள். ஜன்னல் திரையை நன்றாக விலக்கிப் பார்த்தான். சிறுசிறு நிலையங்களில் நிற்காமல் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருப்பவரிடம் கேட்டான். இது எந்த “மாநிலம், எந்த ஊர்”, “ஊர் தெரியவில்லை. ஆனால் ஓரிசாவைக் கடந்து பீகார் மாநிலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார். இவனும் பல்துலக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு காலைக் கடமைகளை முடித்து வந்தான். ரயிலில் குளிக்கமுடியாமல் ஒரு கால் பங்கு குளியல் போட்டது போல் முகம், பிடறி, கை, கால் கழுவி வரும் சகப்பயணிகளைப் பார்த்தான். வியப்பாக இருந்தது.
ரயில் ஒவ்வொரு பெரிய நிலையத்தைக் கடக்கும் போதெல்லாம் சிறுவியாபாரிகள் ஏறினார்கள். புடவை, ஜமுக்காளம், கையுறை, காலுறை முதற்கொண்டு பிஸ்கட், சாக்லெட், உருளைக்கிழங்குசிப்ஸ், சிறுபிள்ளைகளுக்கான பொம்மைகள் என்று பல விதமான வியாபாரம் நடந்தது. நடைபாதை வியாபாரத்தை விட இந்த நடைவியாபாரம் களை கட்டியது. இவர்கள் போக வர சத்தம் எழுப்புவதையோ, டிக்கட் பரிசோதனைக்கு இடையூறாகக் குறுக்கே மறுக்கே வருவதையோ டிக்கட் பரிசோதகர் கண்டு கொள்ளவில்லை.
‘என்ன சார் ஏசி பெட்டியில் இப்படி வந்து தொல்லை கொடுக்கிறார்கள்” ஆங்கிலத்தில் தட்டு தடுமாறிக் கேட்டான்.
முதலில் முறைத்தவர், பின் பரிகாசமாகப் பார்த்து பதில் சொல்லாமல் டிக்கட் பரிசோதகர் நகர்ந்தார். இவனுக்குள் கோபம் எழுந்தது. “வியாபாரிகளிடம் புரிந்துணர்வா, பகிர்ந்துணர்வா? எல்லாம் பணம் தான்! நம்மைப் போலவோ…?” என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்
வண்டி இப்போது மேற்குவங்கத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு வயதான பெண் மஞ்சள் புடவை அணிந்து நெற்றியில் குங்குமப் பொட்டுமாய் பஜனைப் பாடல் பாடி ஒவ்வொரு இருக்கை நோக்கி நகர்ந்தார். பலர் பயபக்தியொடு காசு கொடுத்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். திருநங்கையர் சிலர் மிகை அலங்காரம் காட்டி கைதட்டி நடுத்தர மக்கள், சிறுவர்கள் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் பண்ணியும், இளைஞர்கள் கன்னத்தை தடவியும் கொஞ்சியும் பணம் கேட்டு கெஞ்சினர். சிலர் கொடுத்தனர். சிலர் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
வண்டி இப்போது பீகார் வழியே கடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஒரு பத்து வயது சிறுவன் மேல்சட்டை இல்லாமல் கையேந்தி வந்தான். அவனை எல்லாரும் முறைத்து அடிக்காத குறையாக விரட்டினார்கள். உடலெல்லாம் காவித்துணியும் நரைத்த முடியும் நெற்றியில் நீண்ட குங்குமக்கோடும் சிவந்த கண்களுமாய் இடக்கையில் கமண்டலமுமாய் வலக்கையை ஆசிர்வதிப்பது போல் காட்டி மௌனமாய் ஒவ்வொரு இருக்கை நோக்கி நகர்ந்தார். அக்கம் பக்கத்தார் அவரை வணங்கி பத்தும் இருபதுமாய் பணத்தைக் கொடுத்தனர். சாமியார் எந்தவித உணர்வையும் காட்டாதவாறு நகர்ந்தார்.
ஒரு பத்து நிமிடம் கழித்து முன்னர் வந்த அதே சிறுவன் ஒரு பாம்பை தோளில் போட்டபடி தலை அருகே பிடித்தபடி வந்தான். பாம்பு நீலக்கண்கள் மின்ன, நாக்கை நீட்டி நீட்டி வெளிக்காட்டியபடி இருந்தது. அந்தப் பாம்புப்பையனைப் பார்த்து “கிட்டே வராதே இந்தா பணம்” என்றபடி கையில் கிடைத்த பணத்தை தந்து விரட்டினர்.
விதவிதமான உணவுப் பொட்டலங்கள் வந்தன. அவரவர் தேவைக்கு வாங்கிக் கொண்டு சாப்பிட்டனர். இவனும் பூரி பொட்டலம் வாங்கிக் கொண்டான். அடுத்து டீ காபிக்காரர்கள் வந்தார்கள். அவரவர் தேவைக்கு வாங்கிக் குடித்தனர். இன்னொரு பெரிய நிலையத்தில் ஐந்து நிமிடம் வண்டி நின்றது ஒரு ஊனமுள்ள வாலிபன் ஒவ்வொரு சீட்டருகே உட்கார்ந்து நகர்ந்தபடியே கையிலுள்ள புருஸ் கொண்டு உணவு துணுக்குகள், சிந்தல் சிதறல்களைக் கூட்டி சுத்தம் செய்து கொண்டே ஒவ்வொரு இருக்கை முன் கையேந்தினான். சிலர் காசு கொடுத்தனர். பலர் கண்டு கொள்ளாமல் வேறெங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டனர்.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரயிலுக்குள் தனிஉலகம் இயங்கிக் கொண்டடே இருக்கிறது. வாழ்க்கையின் சகலதரப்பு மனிதர்களும் உலாவிக் கொண்டு தமது பிழைப்பை உறுதி செய்து கொள்கின்றனர். ரயில் வெறும் ரயிலல்ல. நகரும் வாழ்க்கைப்பாடுகள் கொண்ட சிற்றுலகம் என்று நினைத்துக் கொண்டான்.
நடப்புகளைக் கருதாமல் சிலர் மடிக்கணினி கொண்டு வணிக விவரங்கள் அலசுகின்றனர். சிலர் படம் பார்த்தக் கொண்டும், சிலர் சிறுவர் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
‘பொது வெளியிலும் அவரவர் சுயநலத்துடன் இயங்குகிறார்கள். நான் மட்டும் அம்மாவுக்கு கிடைக்க இருக்கும் சொத்தில் முழு உரிமை கொண்டாட நினைப்பது தவறாகுமா, என்ற எண்ணமும் அவ்வவ்போது எட்டிப் பார்த்தது.
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு புறம் நெல், மக்காச்சோளம், வாழை, உருளைக்கிழங்கு சாகுபடி என மக்கள் வெயிலில் உழன்று கொண்டிருந்தனர். குளிர்விப்பினை மீறி வண்டிக்குள் புழுக்கம் உணர முடிந்தது. ஏ.சியைக் கூட்டி வைக்கச் சொல்லி கத்திக் கொண்டே ஒரு வாலிபன், கணினியில் படம் பார்த்துக் கொண்டிருந்த சத்தம் மெலிதாகக் கேட்டது.
மதிய உணவுக்கான குரல்கள். ‘என்ன உணவு, எவ்வளவு’ என்ற வார்த்தை பரிமாறல்கள். வண்டி தற்போது மீண்டும் மேற்குவங்கத்தைக் கடந்து கொண்டிருந்தது. கங்கை பாசனம் தான். எங்கும் நீர் மிகுந்து தேங்கிக் கிடக்கவில்லை. ஆனால் அங்கங்கே வயல்களுக்கு மத்தியில் சிறு சிறு குளங்களாக நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. விவசாயம் செய்பவர்களில் நாற்பது வயதுக்கு குறைந்தவர்களைக் காணமுடியவில்லை.
நாடகக் காட்சிகள் போல் பொழுதுகள் மாறிக் கொண்டிருந்தன. மூன்று இரவு இரண்டு பகல் பயணத்தில் தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தான். தாம் இறங்க வேண்டிய இடத்திற்கு முன்னரே ஆயத்தமாகி பயணிகள் இறங்குவதும், புதியவர்கள் ஏறி புது ஜமுக்காளம், கம்பளிகளைக் கேட்பதும், சிலர் பக்கத்தில் இருப்பவர்களோடு உரையாடுவதும், சிலர் மௌனப் பயணிகளாய் இறங்கி விரைவதுமாக அவரவர் பயணம் முடிகிறது, தொடங்குகிறது. ஆனால் அந்த ரயில் நெடிய வாழ்க்கையின் கடைசி எல்லையைத் தொடர ஓடிக்கொண்டே இருக்கிறது. அங்கிருந்து இன்னொரு வண்டி புதிய பயணத்தைத் தொடங்கி ஓடுகிறது. இவனுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. பட்டும் படாமல் இருந்தவன் சகபயணிகளோடு நெருங்கி உட்காருகின்றான். அவர்களது மொழி புரியாவிட்டாலும் அவர்களது உடல்மொழி முகபாவங்கள் அவனுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித் தருவதாக இருந்தது. அம்மா தன்னை அனுப்பாவிட்டால் இத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்காதே. மூன்றாம் நாள் அதிகாலை 5 மணிக்கு வண்டி அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நின்றது. அதிகாலைப் பறவை போல் பரபரத்து தனது சகபயணிகளுக்கு மவுனப் புன்னகையை பரிமாறி இறங்கினான்.
மாமா லிங்டாங் அனுப்பியிருந்த தொலைபேசிக்கு பேசினான். “கவுஹாத்தி ரயில் நிலைய உள்நுழைவாயிலின் இடப்புறம் பச்சைநிற சட்டை அணிந்து நின்று”ள்ளதாக ஜெயக்கொடி சொன்னான். சொன்ன வாய் மூடுவதற்குள் லிங்டாங் இவனது கையைப் பிடித்துக் கொண்டார். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று ஆச்சரியத்தை கேட்பதற்குள் “தமிழ் முகம் தனியா தெரியுது. எங்க அக்கா ஜாடையும் எங்க மச்சான் ஜாடையும் கலந்த முகம்!” என்று மாமா சொல்லி இவனைக் கட்டிஅணைத்தார். அவரது கண்களில் தனது அக்காவை பார்த்துவிட்ட ஆனந்தபிரவாகம், காலை 5 மணிக்கே எட்டுமணியைப் போல சூரிய வெளிச்சம் பரவி இருந்தது.
இவனிடமிருந்து பைகளைப் பிடுங்கிக் கொண்டு தான் வந்திருந்த காரைநோக்கிச் சென்றார். அவன் பின் தொடர்ந்தான். கார் விருட்டென்று வேகமெடுத்து விடாமல் பாதையில் சதுரசதுரமாய்த் தடைகள். அதனைச் சுற்றிச் சுற்றி வளைந்து வளைந்து தான் போகமுடியும். ‘இது ஒரு வகையான தீவிரவாதத் தடுப்பு முயற்சியோ’… என்று எண்ணிக் கொண்டான்.
கார் ஒரு ஹோட்டலின் முன் நின்றது. “வாங்க! காலை உணவு சாப்பிட்டிடுவோம், நாம் வீடு போய்ச்சேர எப்படியும் இரண்டு மணி நேரமாகலாம்” இந்நேரம் எப்படி சாப்பிடுவது என்று கேட்பதற்குள் மாமா பதிலையும் சொல்லிவிட்டாரே. மாமாவைப் பார்த்தான் அவர் இவனின் தோள்பட்டை உயரம் தான் இருந்தார். அம்மா நாலரை அடி உயரம் என்றால் மாமா ஐந்தடி தான்! டிரைவரும், உணவகப் பணியாளர்களும் கல்லாப் பெட்டியில் இருப்பவர் வரை குள்ளமாகத் தான் இருந்தனர்.
ரஸகுல்லாவும், போகா என்று அவல் உப்புமாவும் வைத்தனர். அதுவும் தனிருசியாகத்தான் இருந்தது. மலையை வெட்டி சாலை அமைத்திருந்தனர். இன்னும் மலையைச் சுரண்டி சாலையை அகலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். மலைப்பாதையாக இருந்தாலும் இருவழிச்சாலையாக விசாலமாக இருந்தது. இவன் சாலையின் இருபக்கமும் கண்களை விரித்து பார்த்தபடி இருந்தான். மாமா லிங்டாங் பழைய நினைவுகள் நிழலாட இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். சிவந்த முகத்தில் நினைவு மேகங்கள் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருந்தன.
“முப்பது வருடத்திற்கு முன்னால் அக்காவும் அத்தானும் கைக்குழந்தையாக உன்னைத் தூக்கிக் கொண்டு மெட்ராஸ்க்கு கிளம்பினார்கள் அவர்களை வழி அனுப்ப கவுஹாட்டிக்கு வந்தேன். இப்போது உன்னை கவுஹாட்டியிலிருந்து ஷில்லாங்க்கு அழைத்துப்போகிறேன். முப்பது வருடத்தில் என்னவெல்லாம் மாறி இருக்கிறது. நீ முப்பது வயதிலும் நான் நாற்பத்து ஐந்திலும் இருக்கிறோம். அம்மா இல்லை, அப்பா இல்லை. அத்தானும் இல்லை. எங்கள் வீட்டுக்கு நான் உங்கள் வீட்டுக்கு நீ. வாழ்க்கை ஓடுகிறது இந்த மேகம் மாதிரி. ஆனால் நிகழ்வுகளின் நினைவுகள் தான் சந்திர, சூரிய நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. மறைகின்றன, மீண்டும் எழுகின்றன. மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன நினைவுகள் இல்லாட்டி மனிதனும் மிருகம் தானே”.
ஜெயக்கொடிக்கு ஆச்சர்யம் தூக்கி வாரிப்போட்டது. “மாமா நீங்கள் கவிதைகள் எழுதுவீர்களா,”
“இல்லை அந்த மாதிரி உணர்வுண்டு, எழுதுவதில்லை”
கார் உயரம் செல்ல மேகங்களுக்கு இடையில் ஊர்ந்து போவது போல உணர்வு. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி மேகத்தை தொட்டுவிடலாமா, கை நீட்டினான். ஈரத்தை பதித்து விட்டு மிதந்து போனது மேகம். ‘மேகம் சூழ்ந்த பகுதி என்பதால் தானே மேகாலாயா என்று சொல்லிக் கொண்டான். மலைகளை உடைத்து இருபுறமும் கட்டடங்கள் எழும்பி இருந்தன. ராணுவ பயிற்சி முகாம்களும் மத்திய அரசு நிறுவனங்களும் பளிச்சென்று நிமிர்ந்து நின்றன.
“என்ன ஜெய்க்கோ, இந்த சின்ன மாநிலத்தில் இவ்வளவு மத்திய நிறுவனங்களான்று யோசிக்கிறீங்களா. ஒரு காலத்தில் ஷில்லாங் அஸ்ஸாமின் முக்கிய நகரமாயிருந்தது. அதனால் தான் இவ்வளவு வசதி. ஆனால் இந்தியாவில் அதுதான் மெயின்லாண்டில் உங்களுக்கு இன்னும் கூடுதலா வசதி இருக்குமே”
“மெயின்லாண்டா, மேகாலாயாவும் இந்தியாவில் தானே இருக்கிறது”
“ஆமாம், அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உயர்கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புக்கு எல்லாம் நாங்கள் உங்களைத் தேடித்தானே வரவேண்டி இருக்கு!”
“மாமா, எங்களுக்கும் இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு!”
மாமா இவனைப் பார்த்து கேலியாக சிரித்தார்.
“இன்றைக்கு ஒருநாள் ஓய்வெடுங்கள். நாளை நாம் மேகாலாயவைச் சுற்றி பார்ப்போம்.
கார் நகருக்குள் வளைந்து சென்றது. அங்கங்கே கொத்து கொத்தாய் வீடுகள் கண்ணாடி கதவுகள் பளிச்சிட்டன. பார்க்கும் மனிதர்கள் எல்லாம் சிவப்பாய் குட்டையாக இருந்தார்கள். அவர்கள் சீனர்கள் மாதிரியும், மங்கோலியர்கள் மாதிரியும், நேபாளிகள் மாதிரியும் இல்லை. இவற்றின் கலவையாய் இருந்தார்கள். ஆடு, மாடு, நாய் முதலான விலங்குகளும் கூட குட்டையாக இருந்தன. உயரமான மலைப்பகுதியில் ஏற இறங்கத் தோதான உடல்வாகை இயற்கை வடிவமைத்திருக்கிறது. சமவெளி மனிதர்கள் ஐந்தடிக்கு மேல் உயரமாக இருக்கிறார்கள். மலை வாழ்மனிதர்கள் ஐந்தடிக்கு கீழே இருக்கிறார்கள்.
மாமாவிடம் கேட்டான். தகவல் பலகையில் சுவரொட்டிகளில் ஆங்கில எழுத்துக்களும் இந்தியுமே தெரிகின்றன. உங்களுக்கு மேகாலாயா மொழி இல்லையா!
“ஜெய்க்கோஜி, எங்களுக்கு ‘ஹாஸி’ என்னும் மொழி உண்டு. நாங்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் எங்களுக்கான எழுத்தை உருவாக்க முயல்வதை தடுத்து வெள்ளைக்காரர்கள் எங்கள் மொழியை அவர்களது லிபி எழுத்தில் எழுத பழக்கி விட்டார்கள். அதனால் எங்களுக்கான லிபி உருவாகாமல் போய்விட்டது. எங்களில் மொழி ஆளுமை மிக்க அறிவாளிகளும் உருவாகாமல் கூலிகளாகவே ஆக்கப்பட்டோம். எங்கள் ஆதிவாசி உடைகளைத் துறந்து வெள்ளைக்காரர்களைப் போலவே உடுத்துகிறோம். உண்கிறோம். ஆனால் எங்களில் பலர் வெள்ளைக்காரார் மதத்தை தழுவி விட்டாலும் பெரும்பாலும் எங்கள் ஆதிவாசி மத சடங்குகளையே செய்கிறோம். ஆதி நடுகல்தெய்வங்களை வணங்குகிறோம். சேவலை வணங்குகிறோம். உனக்கு கூட சேவலின் பெயர் முதலில் வைக்கப்பட்டதாக அக்கா கடிதம் எழுதி இருந்ததே!”
சேவல்கொடி என்ற ஜெயக்கொடிக்கு மனது பிசைந்தது. ஏதோ சொல்லமுடியாத இழப்பை உணர்ந்தது போல் மாமாவின் கைகளைப் பற்றினான்.
தெருமுன் கார் நின்றது. வண்டியில் இறங்கி மாமா முன் நடந்தார். ஜெயக்கொடி நிழலாகத் தொடர்ந்தார். டிரைவர் பைகளைக் கொண்டு வந்தார். சிறிய வீடு. குளிந்துதான் போகமுடியும் இவர்கள் நுழைவதற்கு முன் குட்டை குட்டையாக பெண்கள் வந்து மகிழ்ச்சி பொங்க கூவி வரவேற்றார்கள். ஒரு வயதான பெண்மணி இவனைக் கட்டி அணைத்து முகத்தை தடவினார். இவனது சித்தி என்றாள். எல்லோரும் கம்பளி விரிப்பில் அமர்ந்தார்கள்;. டீ கொண்டு வந்து தந்தார்கள். மாமா டிரைவரை அனுப்பி விட்டு வந்தார்.
மாமாவுக்கு 18, 16 வயதுகளில் இரு மகள்கள் 14 வயதில் ஒரு மகன், சித்தி அறிமுகம்; செய்து வைத்து அவர்களது பெயர்களைச் சொன்னாள். பெயர்கள் மனதில் பதியவில்லை. அவர்களது வாஞ்சையும் புன்னகையும் பூத்த முகங்கள் மனதில் ஒட்டிக்கொண்டன. மாமாவின் மனைவி அத்தை இனிப்பு வழங்கி உபசரித்தார்.
அவன் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மாமன் மகள்கள் இருவரும் வேலைக்கு கிளம்பினர். இருவரும் ஒரு மெகாமார்ட் விற்பனையகத்தில் பணியாற்றுகிறார்களாம். மாதம் ஐந்தாயிரம் சம்பளமாம். ஹாஸி திருவிழாவின் போது ஒரு மாத போனஸ{ம் ஒரு செட் துணிமணிகளும் கொடுப்பார்களாம். மகன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனாம். பெண்கள் பிள்ளைகள் பளிச்சென்று விகாரமில்லாமல் பனியன் ஷர்டும், ஜீன்ஸ்ம் அணிந்து வேலைக்கு போகிறார்கள். வயதான பெண்கள் வெளிரிய நிறங்களில் சேலைகட்டியிருந்தனர். நமது மலையாளப் பெண்கள் சேலை கட்டியது போல் இருந்தது.
“வெந்நீர் தயாராக இருக்கிறது. குளித்து சற்று ஓய்வெடு” என்று சித்தி சொன்னார். வீட்டில் முதல் அறை வரவேற்பறை அதன் பின் இடப்புறம் இரு சிறு அறைகள் பெண்கள் தங்க. வலப்புறம் அறையில் ஆண்கள் தங்க. அதனருகே சிறிய சமையல் கட்டு. அறைகளுக்கு நடுவே உணவு மேஜை ஆறுபேர் அமர்ந்து சாப்பிடலாம். பின்னால் கழிவறை, குளியலறை. ஒரு சிறு தோட்டம். சுரை, பூசணி, அவரை காய்த்திருந்தன. மாதுளை மரமொன்றிருந்தது. அணில்கள் இரண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. ரோஜாச் செடிகளில் பூக்கள் மகிழ்ச்சியில் தலையசைத்துக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் ரோஜாப்பூக்களை மையமாகக் கொண்டு ஓடிப்பிடித்து விளையாடுவது போல் பறந்தன.
நகராட்சி குடிநீர் குழாய் இணைப்ப இருந்தது. மின்சாரம் பகலில் நான்கு மணிநேரம் தவிர மற்ற நேரங்களில் தடை இருக்காது. பரவாயில்லை நல்ல நிர்வாகம். நல்ல மக்கள், குளித்து விட்டு வந்து படுத்தவன் தான் நான்கும
ணி வரை எழுந்திருக்க முடியவில்லை. மதிய உணவுக்கு சித்தி எழுப்பி இருக்கிறாள். அவன் எழுந்திருக்கவில்லை. ஐந்து மணிக்கு மாமா அலுவலகத்திலிருந்து வந்ததும் எழுப்பினார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
முகம் கழுவி தேநீர் சாப்பிட்டு விட்டு மாமாவுடன் வெளியே கிளம்பினான். வீட்டு முன் உள்ள நிறுத்தத்தில் ஒரு டாக்ஸியை வழிமறித்தார்கள். நகரின் மையப்பகுதிக்கு போய் இறங்கினார்கள். ஒரு நபருக்கு 10 ரூபாய்தான் கட்டணம். ஆச்சரியமாக இருந்தது. போலீஸ் பஜார் என்ற அவ்விடத்தில் வங்கிகள்; பெரிய பெரிய வணிக மால்கள், உணவகங்கள். சிறுசிறு துணியகங்கள், மருந்து, மளிகைக் கடைகள் என அனைத்தும் இருந்தன. சாலையிலேயே சிறு சிறு வியாபாரிகள் உணவுப்பொருள்கள் விற்றனர். வெண்பனி மேகங்கள் தழுவிச் சென்றன. மக்கள் திரள் திரளாக வந்து வாங்குவதும் செல்வதுமாக இருந்தனர். பெரும்பாலும் பெண்கள் தாம்! ஆண்களை கைவிரல்விட்டு எண்ணி விடலாம். பெண்களும் ஆண்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருந்தனர். பெண்கள் உழைக்க ஆண்கள் வம்பு பேசித் திரிவதை பார்க்க முடியவில்லை.
ஆண்கள் டாக்ஸி டிரைவர்களாகவோ,மெக்கானிக்காகவோ நிர்வாகிகளாகவோ இருந்தனர். குளிர்ந்த தேசம் தான். யாரும் குடித்துவிட்டு திரியவில்லை. ஆனால் பான்பராக் மென்று மென்று துப்பிக் கொண்டிருந்தனர்.
‘என்ன மாமா ஒரு பஸ்கூட காணவில்லை. இங்கு அரசாங்க பஸ் இல்லையா?”
“எங்கள் மாநில நிதி வசதியில் அரசாங்கம் பஸ் இயக்கக் கூடியதாக இல்லை. தனியாரும் அப்படித்தான். கல்வி நிறுவனங்கள் அரசு ஆலைகள் தமது ஊழியர்களுக்காக பஸ்களை இயக்குகின்றன. அஸ்ஸாமிலிருந்து மாநில அரசு பஸ்கள் சிலவும், தனியார் ஆம்னி பஸ்கள் சிலவும் இயங்குகின்றன. ஆனால் மக்கள் போக்குவரத்துக்கு கார்கள், டாக்ஸிகள் தாம். எங்களது ஆண்களில் அறுபது சதவீத்திற்கு மேல் டிரைவர்களாக இருக்கிறார்கள். பருவ காலத்தில் சுற்றுலா வேலைவாய்ப்பும் கார் ஓட்டுதலால் கிடைக்கிறது. எங்கள் மாநிலத்தில் உங்கள் மெயின்லாந்து போல வேலைவாய்ப்போ கல்வியோ இல்லை” மாமாவும் பான்பராக் எச்சிலைத் துப்பினார்.
“ஜெய்கோஜி, உங்களுக்கு மதரஸ் டிபன் வேணுமா, எங்க உணவு வேணுமா?” என்றார். இவன் பதில் செல்வதற்குள் ‘வாங்க எங்க மொமொ’ சாப்பிடுங்க. நல்லா இருக்கும்” என்று உணவகத்திற்கு அழைத்து
“நீங்க அசைவம் சாப்பிடுவிங்கல்ல”
அவன் தலை அசைத்தான்.
“இரண்டு பிளேட் சிக்கன் மொமொ” என்றார்
வெள்ளையா இரண்டு போண்டா உருண்டைகள், கொஞ்சம் மசாலாகிரேவியும் கொண்டு வந்தார் பரிமாறுநர். உங்கஊரு சிய்யம் உருண்டை மாதிரிதான். சியத்தில் இனிப்பு வைப்பிங்க. இதில் கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ, பன்றி, மாட்டுக்கறியோ கூட வைப்பதுண்டு. அவரவர் ருசிக்கு விருப்பத்திற்கு செய்யப்படும் என்றார்;. ஏதோ வித்தியாசமான ருசி தான். பசி ருசி அறியாது என்பது அனுபவம்.
அப்புறம் மேடும் பள்ளமுமாய் அமைந்த காங்கிரீட் சாலையில் நடந்து வீட்டுக்குப் போனார்கள். சாலையின் இருபுறம் உள்ள நிறுவனங்களை பற்றி சொல்லிக் கொண்டே மாமா நடந்தார்.
இவனுக்கு ஒரு சந்தேகம். “ஆமாம், மாமா கவுகத்தியிலிருந்து வரும் வழியில் எத்தனை நாய்களைப் பார்த்தோம். இங்க ஊருக்குள்ளே ஒரு நாயைக் கூடக் காணோமே. திருடர்கள் பயமில்லையா” மாமா வாயில் பான்பராக்கை ஒதுக்கியபடி வாயைத்திறக்காமல் சிரித்தார். அர்த்தம் புரியவில்லை.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது மணி ஒன்பதாயிற்று. வேலைக்குப் போன பெண்கள் வந்து விட்டார்கள். இவர்கள் வருகைக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர். அத்தை சாப்பிட அழைத்தார். சாப்பிட்டு விட்டோம் என்று சொல்லியும் அவர்கள் “எங்களுடன் சாப்பிடுங்கள்” என்று கட்டாயப் படுத்தினார்கள. அவர்கள் அன்பை மீற முடியவில்லை.
இவனும் மாமாவும் பையனும் ஒரு வரிசையில். எதிர்வரிசையில் மாமாவின் இரு பிள்ளைகளும் சித்தியும் அமர்ந்தார்கள். தட்டில் கோதுமை ரொட்டியும், அரிசிச்சோறும், பூசணி, உருளைக்கிழங்கு பருப்பு போட்ட குழம்பும் வைத்தார்கள். இவன் கொஞ்சமாக வாங்கி அதிலும் கொஞ்சம் மட்டும் எடுத்து ருசித்தான். எதிரில் மாமாவின் மகள்களும், சித்தியும் இவனையே கவனித்தபடி சாப்பிட்டார்கள். மாமன் மகள்கள் இவனைவிட இருபது வயது இளையவர்கள்தாம் என்றாலும் இவனுக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் இவனது அம்மாவின் ஒரு சாயலாக இருந்தார்கள்.
சாப்பிட்டவுடன் அவர்கள் அம்மாவைப் பற்றி விசாரித்தார்கள். இவன் ஆங்கிலத்தில் சொன்னதை மாமா அவர்களது மொழியில் சொன்னார். அவர்கள் உணர்ச்சிப் பிரவாகமாக இருந்தார்கள். முப்பது வருஷத்திற்கு முன் பிரிந்த அம்மாவின் நினைவுகள் காலம், தூர வர்த்தமானங்களைக் கடந்து அவர்கள் உணர்வில் மிக அருகே சஞ்சாரித்தார்கள். இவன் வாழ்நாளில் இத்தகைய உருகும் தருணத்தை எதிர்கொண்டதே இல்லை. இத்தனை உணர்வையும் அம்மாவும் தனக்குள் புதைந்து வைத்துதான் இருப்பாள். அவளையும் அழைத்து வந்திருந்தால், இந்த மகிழ்வில் அவள் உடல்நிலை தேறியிருக்கும். இவன்தான் சுயநலத்தில் தாயின் சொத்தை அபகரிக்க அவளை வராது செய்துவிட்டான். எண்ணி வருந்தினான்.
இவன் மனதை வாசித்தவர் போல் மாமா கேட்டார். “என்ன வருத்தமாக இருக்கிங்களே!” இவன் தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஒன்னுமில்லைங்க மாமா, அம்மா உங்களுக்காக கொடுத்துவிட்ட எங்கள் ஊர் பலகாரத்தை கொடுக்க மறந்துட்டேனே என்று தான் நினைத்தேன்” என்றவாறு தனது பையை எடுத்து வந்து அதிலிருந்த பலகார பொட்டலங்களை எடுத்துத் தந்தான். ஒன்றில் அரிசிமுறுக்கு. இன்னொன்றில் அதிரசம். இன்னொன்றில் கடலை தொக்குருண்டை. கடலை தொக்குருண்டையை இவன் எடுத்துக் கொடுக்கும் போதே வாயில் உமிழ்நீர் ஊற்றெடுத்தது. இவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
‘ஊருக்கு செல்வது என்று முடிவெடுத்த ஆறுமணிநேரத்த்தில் எப்போது நிலக்கடலை யாரிடம் சொல்லி வாங்கினாள். எப்போது எப்படி வறுத்து இடித்து பக்குவமாக வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்தாள்? உடல் நோவையும் மீறி உறவு நோய் அவளை இயக்கி இருக்கிறது. இத்தகைய அன்பான உறவுகளைப் பாராமல் மனதில் நினைக்க நினைக்க நோவுதானே? இந்த இடர்ப்பாடிலும் யார் மனமும் நோகாமல் எப்படி நடந்து கொண்டாள்.? அம்மா, அம்மாதான்!’ பெருமூச்சு விட்டான்.
அவர்கள் அந்த பலகாரங்களை ஒன்றொன்றாக எடுத்து ருசித்து குதூகலித்தனர்.
இந்த தருணத்தில் இன்னொன்றும் செய்தான். “அம்மா இந்த ஊர் வழக்கப்படி பாட்டி இறந்தபின் தங்கச்சிக்கு செய்ய வேண்டிய முறைக்காக ரூ.2000ஃ– கொடுத்து சித்திக்கு வேண்டிய துணி எடுத்துக் கொள்ளச் சொன்னாள். நான் எங்க ஊரு முறைப்படி தாய்மாமனுக்கு செய்ய வேண்டிய சம்பந்தகாரர் முறைக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன். பாட்டி இறந்த உடன் வர இயலாததுக்கு இரண்டு பக்கமும் காரணங்கள் இருந்தாலும், இந்த முறையை தயவு செய்து எங்களது குடும்பத்தின் சார்பாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றவாறு தனது பாக்கட்டில் தனியாக வைத்திருந்த பணத்திலிருந்து கொடுத்துவிட்டு விருட்டென்று எழுந்து மாமாவின் காலில் விழுந்தான்.
அந்தக் குடும்பமே உணர்ச்சியால் ததும்பி தவித்தது. இரண்டு நிமிடம் மவுனமும் விசும்பலும் தான். மாமா மின்னலாகக் குனிந்து அவனை எழப்பினார். சித்தியும் அத்தையும் ஏதோ மாமாவிடம் சொன்னார்கள். “ஜெய்கோஜீ நீங்கள் உங்கள் கடமையைச் செய்து விட்டீர்கள். எங்களது தயாhர் கட்டளையை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிமை செய்வோம்” என்றார் மாமா.
மாமாவின் மகன் கேப்டன் பாண்டுங் என்று சொல்லி அப்பாவின் வீரதீரங்களை அவரது ஆளுமைகளை தான் கேள்விபட்டதையும், அவர் அம்மா ‘ஹஸிமா’ கல்யாணம் பண்ணிய சாகசங்களையும் சொல்லி சிரிப்புகளை எழுப்பினான். “மணி பனிரெண்டாயிற்று போய் படுங்கள்” என்று சித்தி சொன்னது. இவனுக்கு ஒரு கம்பளியைக் கொண்டு வந்து கொடுத்து பகலில் படுத்திருந்த கட்டிலில் படுக்கச் சொன்னது. அவனது மனசு கழுவியது போல் சுத்தமாக இருந்தது. படுத்ததும் உறக்கம் தழுவிக் கொண்டது.
***********
- பூகோள ராகம்
- அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்
- பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
- ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்
- ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 10
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்
- லா.ச.ரா.
- பயணம் – 4