பாலினப் போர் 

author
0 minutes, 9 seconds Read
This entry is part 11 of 13 in the series 29 மே 2022

அழகர்சாமி சக்திவேல் 

பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான ஆண்கள் நினைத்த அந்த மூடநம்பிக்கையை உடைக்க, உலகத்துப் பெண்கள்,  பலவழிகளிலும் போராட வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்றுதான், பாலினப்போர் (Battle of Sexes) என்று சொல்லக்கூடிய, ஆணும் பெண்ணும், விளையாட்டுக் களத்திலே, நேருக்கு நேர் மோதும் பந்தயங்கள் ஆகும். இது போன்ற பாலினப் போர்ப் பந்தயங்களில், போராடி, பல பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படி, டென்னிஸ் பந்தயத்தில், பாலினப் போர் நடத்திய, இரு லெஸ்பியன் வீரப் பெண்மணிகளின் கதைகளைப் பேசும் கட்டுரையே, இந்தக் கட்டுரை. 

 

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்று கேலி செய்தவர்கள் நம்மவர்கள். இதையும்தாண்டி, இன்னும் ஒரு படி மேலே போய், “படுக்கையறைக்கும் அடுப்படிக்கும் மட்டுமே பெண்கள் லாயக்கு” என்று சொன்னவர்கள் மேற்கத்திய ஆண்கள். இப்படிப்பட்ட ஆணாதிக்க நிலை, கிபி 1970 வரை நீடித்து இருக்கிறது என்பது வரலாறு. ‘பெண் விடுதலை இயக்கம்” என்ற ஆண்-பெண் சமத்துவப் போர் துவங்குவதற்கு, மேலே சொன்ன ஆணாதிக்க நிலையே ஒரு முக்கியக் காரணம் ஆக இருந்தது. இப்படிப்பட்ட, ‘பெண் விடுதலை இயக்கம்”, பத்தொன்பதாம் நூற்றான்டிலேயே தொடங்கிவிட்டது, என்றாலும், பெண்விடுதலை இயக்கத்தின் முதல் அலை, பெண்களுக்கான ஓட்டுப் போடும் உரிமை போன்ற சில சட்ட உரிமைகள் குறித்தே போராடியது. ஆனாலும், 1970களில் உருவான, பெண்ணுரிமை இயக்கத்தின் இரண்டாம் அலை, அரசியல், வேலை வாய்ப்புக்கள், விளையாட்டு, குடும்பம், பாலியல் இன்பம் போன்ற பல பெண்ணுரிமைகளைக் குறிவைத்துப் போராடியது. பெண்ணுரிமை இயக்கத்தின் இரண்டாம் அலை தோன்றுவதற்கு முன், பெண்கள் பல விளையாட்டுக்களில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்ட போதும், பெண்களுக்கு அங்கே கிடைத்த மரியாதையும், வரவேற்பும், பெண்களுக்கான விளையாட்டு வெகுமதிகளும், ஆண்களோடு ஒப்பிடுகையில், சொற்பமாக இருந்து வந்து இருக்கிறது என்பது, ஒரு சமூகக் கொடுமை. இவைகளை உடைக்க, “ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை” என்று சமூகத்திற்குத் தெளிவாகச் சொல்ல, ஒரு சில பெண்கள், ஆண்களுடனேயே, விளையாட்டுப் போட்டிகளில், நேருக்கு நேர் போட்டி போட வேண்டியதாயிற்று. இந்தவகை சமூகப் போரே, பாலினப் போர் (Battle of Sexes) என்று அழைக்கப்படுகிறது. இந்தவகைப் பாலினப் போர் நடத்திய பெண்களில், பலரை நாம் இங்கே குறிப்பிடலாம் என்றாலும், பாலினப் போரில், முதன்முதலில் வெற்றி கண்ட லெஸ்பியன் டென்னிஸ் வீராங்கனை திருவாட்டி பில்லி ஜீன் கிங் குறித்தும், இன்னொரு லெஸ்பியன் டென்னிஸ் வீராங்கனை திருவாட்டி மார்ட்டினா நவராட்டிலோவா குறித்தும், இந்தக் கட்டுரை, சற்று விரிவாக அலசுகிறது. 

 

திருவாட்டி பில்லி ஜீன் கிங், ஒரு அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை. 1961-இல், விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் பிரிவில், இவர் வாகை சூடிய நாளில் இருந்து, டென்னிஸ் உலகின் கவனம், பில்லி ஜீன் கிங் மீது திரும்பத்தொடங்கியது. இந்த வெற்றிக்குப் பிறகு, புகழின் உச்சிக்குச் செல்லத் தொடங்கிய திருவாட்டி பில்லி ஜீன் கிங், பெண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் பிரிவு, ஆண்-பெண் கலப்புப் பிரிவு போன்ற இருபது விம்பிள்டன் டென்னிஸ் விருதுகளை வென்றார் இத்தோடு நிறுத்தாமல், அமெரிக்க டென்னிஸ் பெண்கள் விருது, பிரெஞ்சு பெண்கள் டென்னிஸ் விருது, ஆஸ்திரேலியப் பெண்கள் டென்னிஸ் விருது, போன்ற பல உலக டென்னிஸ் விருதுகளை வென்று, உலகின் முதல்தர டென்னிஸ் விளையாட்டு  வீராங்கனையாக பல காலம் நீடித்துப் புகழ் பெற்றார், திருவாட்டி பில்லி ஜீன் கிங். டென்னிஸ் உலகில், பெண்களுக்கு இழைக்கப்படும் சமத்துவ அநீதிகள் கண்டு வெகுண்ட திருவாட்டி பில்லி ஜீன் கிங், 1974-இல், பெண்கள் டென்னிஸ் கழகம் என்ற உலகப் பெண்கள் டென்னிஸ் கழகத்தைத் தோற்றுவித்து, அதன் முதல் தலைவர் ஆகவும் இருந்தார். பெண்ணுரிமை இயக்கத்தின் இரண்டாம் அலை தோன்ற, இவரது பாலினப் போர் (battle of sexes) ஒரு முக்கியக் காரணம் ஆக இருந்ததால், அந்தப் டென்னிஸ் விளையாட்டுப் போர் குறித்தும், அந்தப் போர் நிகழக் காரணம் ஆக இருந்த, ஆண் டென்னிஸ் வீரர், திருவாளர் பாபி ரிக்ஸ் குறித்தும் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

 

திருவாளர் பாபி ரிக்ஸ், ஒரு உலகப்புகழ் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீரர். 1946 மற்றும் 1947-இல், உலக டென்னிஸ் ஆண் வீரர்கள் தர வரிசையில், முதல் இடத்தில் இருந்தவர் பாபி ரிக்ஸ். மேலும், இவர், அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் விருதுகளையும் வென்றவர். இவ்வளவு புகழ் பெற்றவராக, திருவாளர் பாபி ரிக்ஸ் இருந்தபோதும், பெண்கள் மீதான அவரது மட்டரகமான சிந்தனைகள், அவரது புகழுக்கு ஒரு களங்கம் விளைவித்தது என்பது, ஒரு வரலாற்று உண்மை. டென்னிஸ் உலகில், பெண்களின் பங்கு குறித்து, பல முறை, கிண்டலும் கேலியும் கலந்த எதிர்மறை விமர்சனங்களை எழுப்பியவர் திருவாளர் பாபி ரிக்ஸ். “ஆண்தான் ராஜா. ஆண்தான் உயர்ந்தவன்” என்று பேசிய பாபி, அத்தோடு நிறுத்தவில்லை. “பெண்கள், படுக்கைக்கும், அடுக்களைக்குமே லாயக்கு” என்று பேசியதும் பாபி ரிக்ஸ்தான். டென்னிஸ் உலகில், பெண் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகை, ஆண் வீரர்களோடு ஒப்பிடுகையில், மிகக்குறைவாக இருப்பது கண்டு, பெண்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது, அதைக் கிண்டல் செய்து, “ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண் டென்னிஸ் வீராங்கனைகள், இருபத்தைந்து சதவிகிதமே, நல்ல டென்னிஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். அப்படி இருக்க, பெண்களுக்கு, ஆண்களோடு ஒப்பிடுகையில், இருபத்தைந்து சதவிகிதப் பணமே, பரிசுத் தொகை கொடுக்கப்பட வேண்டும்” என்று பேசியபோது, பெண்கள் டென்னிஸ் உலகம், கோபம் கொண்டது.  

 

இன்னும் ஒரு படி மேலே போன திருவாளர் பாபி ரிக்ஸ், “பெண்கள் டென்னிஸ் விளையாட்டில், குறைகள் பல இருக்கின்றன. சில பெண்கள், தங்களை ஆண்கள் போல நினைத்துக்கொண்டு, களத்தில் இறங்கி, அங்கேயும் இங்கேயும் பந்தடிப்பதை நிறுத்திவிட்டு, பெண்கள், பெண்கள் போல மட்டும் விளையாடவேண்டும்” என்று பேசி, பெண் விளையாட்டு வீராங்கனைகளின் வெறுப்பை, இன்னும் கூடுதலாக சம்பாதித்துக் கொண்டார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, “எனக்கு இப்போது 55 வயதாகிறது. கல்லறைக்குள், நான், ஒரு அடி இறங்கி நிற்கும், வயது இது. ஆனால், இப்போதும், உலகின் முதல் தர டென்னிஸ் வீராங்கனை என்று கூறிக்கொள்ளும், பெண் வீராங்கனைகளைத் தோற்கடித்து, ஆண்களின் பெருமையை, என்னால் நிலை நிறுத்த முடியும்” என்று பேசியபோது, அவரது சவாலை, சில டென்னிஸ் பெண் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டபோது, பாலினப்போர் துவங்கியது. 

 

பாலினப் போரில், முதலில் விளையாட அழைக்கப்பட்டவர் திருவாட்டி பில்லி ஜீன் கிங்க்தான் என்றாலும், பில்லி ஆரம்பத்தில் விளையாட மறுத்ததால், பாலினப்போரில் முதலில் பங்கேற்றவர், ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனையான, திருவாட்டி மார்கரட் கோர்ட் ஆவார். டென்னிஸ் உலகில், முதல் தர வீராங்கனை என்று புகழப்படும் திருவாட்டி மார்கரட் கோர்ட், உலகின் பல டென்னிஸ் விருதுகளை வென்றவர். டென்னிஸ் உலகில் மார்கரட் ஏற்படுத்திய, பல சாதனைகளை, இன்றளவும், யாராலும், உடைக்க முடியவில்லை. அப்படிப்பட்டவர், திருவாளர் பாபி ரிக்சின் சவாலை ஏற்றுக்கொண்டு, அவரை எதிர்த்துக் களம் இறங்கினார். ஆனால், 1973-இல், திருவாளர் பாபி ரிக்சிற்கும், திருவாட்டி மார்கரட் கோர்ட்டுக்கும் இடையே நடந்த டென்னிஸ் பாலினப் போரில், திருமதி மார்கரட் கோர்ட் தோற்றுப் போனார். வெற்றிக் களிப்பில் மிதந்த திருவாளர் பாபி ரிக்ஸ், இன்னொரு உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை ஆக இருந்த திருவாட்டி பில்லி ஜீன் கிங்கிற்கு, மறுபடியும் சவால் விடுத்தார்.  

 

முதலில், இந்தப் பாலினப் போர் சவாலை, மறுத்து இருந்த, திருவாட்டி பில்லி ஜீன் கிங், அதன் பிறகு அந்த சவாலினை ஏற்றுக்கொண்டார். நூறாயிரம் டாலர் பணத்துக்காக, 1973-இல் விளையாடப்பட்ட அந்த டென்னிஸ் விளையாட்டில், 29 வயதான திருவாட்டி பில்லி ஜீன் கிங்கும், 55 வயது நிரம்பிய பாபி ரிக்சும் களத்தில் இறங்கியபோது, பாபி ரிக்ஸ், பில்லி ஜீன் கிங்கின் பெண்மையை எள்ளி நகையாடும் விதமாக, ஒரு லாலி பாப்பினைப் பரிசாக அளிக்க, பதிலுக்கு திருவாட்டி பில்லி ஜீன் கிங், பாபி ரிக்சிற்கு, ஆணாதிக்கத்தை நினைவு படுத்தும், பன்றி வடிவ பொம்மையைப் பரிசாக அளிக்க, பாலினப் போர் ஆரம்பமானது. ஆரம்பத்தில், சற்றே தடுமாறிய திருவாட்டி பில்லி ஜீன் கிங், 6–4, 6–3, 6–3 என்ற நேர் செட்களில், ஆண் டென்னிஸ் வீரர் பாபி ரிக்சை தோற்கடிக்க, அரங்கம் அதிர்ந்தது. இந்த பாலினப் போரை, தொலைக்காட்சியில் கண்டுகளித்த மில்லியனுக்கும் மேலான அமெரிக்க மக்கள், திருவாட்டி பில்லி ஜீன் கிங்கை, புகழ்ந்து கொண்டாடினார்கள்.  

  

பில்லி ஜீன் கிங், பாலினப்போரில், ஒரு ஆணை எதிர்த்து வெற்றி பெற்ற அந்த நாளில் இருந்து, அமெரிக்காவிலும், உலகின் பல பகுதிகளிலும் பெண் விடுதலை இயக்கம், ஒரு உத்வேகத்துடன் முன்னேறத் துவங்கியது என்பது வரலாறு. இது குறித்துப் பின்னாளில் பேசிய பில்லி, “அன்று நான் வெற்றி பெற்று இராவிட்டால், விளையாட்டு உலகில், இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்தே, பெண் விளையாட்டு வீராங்கனைகள், ஆண் விளையாட்டு வீர்ர்களுக்கு இணையாக நடத்தப்பட்டு இருப்பர்”  என்று பேசி இருக்கிறார். திருவாட்டி பில்லி ஜீன் கிங்கிற்கும், திரு பாபி ரிக்சிற்கும் இடையே நடந்த, இந்த பாலினப்போர், பிறிதொரு நாளில், “பாலினப் போர்” (Battle of Sexes) என்ற பெயரிலேயே, திரைப்படமாக வெளிவந்து பெரும்பொருள் ஈட்டியது என்பது, ஒரு கொசுறுச் செய்தி. 

 

லெஸ்பியன் பெண்மணியான, பில்லி ஜீன் கிங்கிற்கு, இத்தோடு பிரச்சினைகள் நின்று போய் விடவில்லை. திருவாட்டி பில்லி ஜீனுக்கும் அவரது பெண் காரியதரிசி திருவாட்டி மர்லின் பார்னெட்டுக்கும் இடையில் இருந்த லெஸ்பியன் ஓரினக் காதலால், பல இன்னல்களுக்கு உள்ளானார் திருவாட்டி பில்லி ஜீன் கிங். பில்லி, புகழின் உச்சியில் இருந்த அந்தக் காலத்தில், ஓரினச்சேர்க்கை, டென்னிஸ் விளையாட்டுலகில், முழுமையாக அங்கீகரிக்கப் படவில்லை. இந்தச் சூழ்நிலையில், திரு லாரி கிங் என்பவரைக் கணவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அதே மாலிபு பங்களாவில், திருவாட்டி பில்லி ஜீன், தனது பெண் காதலி மர்லின் பார்னெட்டையும் குடியேறச் செய்தார். இருவரின் லெஸ்பியன் காதலும் எல்லை கடந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை, தனக்கு சாதகமாக்கிக் கொண்ட, லெஸ்பியன் காதலி மர்லின் பார்னெட், பில்லி ஜீன் கிங்கிற்கு பல நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்தார். பில்லி ஜீன் கிங்கின் சொத்துக்கள் மீது ஆசை கொண்ட மர்லின் பார்னெட், பில்லி மீது வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கால், பில்லி ஜீன் கிங், ஒரு லெஸ்பியன் பெண்மணி என்பது, வெளி உலகிற்குத் தெரியவர, டென்னிஸ் உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஆரம்பத்தில் இதை, பில்லி மறுத்தாலும், அவரால், ஊர் வாயை மூட முடியவில்லை. “பில்லி ஒரு லெஸ்பியன்” என்ற காரணத்தால், ஏற்கனவே பில்லி நடிக்க ஒப்புக்கொண்ட பல விளம்பரங்கள், பில்லியின் கையை விட்டுப் போனது. இதனால் பல கோடிகள் வருமானத்தை, பில்லி இழக்க வேண்டியதாயிற்று. லெஸ்பியன் என்ற ஒரே காரணத்தால், விளையாட்டு உலகத்தின் பலரின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், அவமானப்படுத்துதுதல்களுக்கும், திருவாட்டி பில்லி உள்ளாகவேண்டி இருந்தது. இதைபார்த்த பில்லி, ஒரு கட்டத்தில், மனம் குலைந்து போனாலும், தனி ஒரு பெண்ணாக, எல்லா விளையாட்டு நிந்தனைகளையும் எதிர்த்துப் போராடத் துவங்கினார். “நீங்கள் ஒரு லெஸ்பியன் பெண்மணி என்பதை ஒத்துக்கொள்ள வேண்டாம்” என்று அவர் சார்ந்த தனிப்பட்ட நண்பர்களும், பத்திரிகை உலகமும், பில்லிக்கு அறிவுரை சொன்னபோது, உலகிற்கு தான் ஒரு லெஸ்பியன் பெண்மணி என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனம் குழம்பிப்போனார் பில்லி.     

 

இருப்பினும், காதரின் போட்ட வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, பில்லிக்கு நிம்மதி பிறந்தது. தனது 51வது வயதில், “நான் ஒரு லெஸ்பியன்” என்று, வெளிப்படையாக அறிவித்தார் பில்லி. தனது கணவர் லாரி கிங்கை விவகாரத்து செய்த திருவாட்டி பில்லி, தன்னுடைய டென்னிஸ் இரட்டையர் விளையாட்டின், தன்னோடு விளையாடிய பெண்மணியான திருவாட்டி இளனா கிளாஸ் என்பவர் மீது லெஸ்பியன் காதல் கொண்டு, அவரையே கடைசியில் திருமணமும் செய்து கொண்டார். இப்போது, பில்லிக்கு 78 வயதாகிறது. இன்றும் புகழோடு வாழும் திருவாட்டி பில்லி பங்கேற்ற அந்த பாலினப் போர், பின்னாளில் திரைப்படமாக வெளிவந்து, பெரும்பணம் ஈட்டி இருக்கிறது. அவரின் தைரியம் குறித்த பல பாடல்கள், இசை வட்டுக்களின் வடிவில், இன்று உலகை வலம் வருகிறது. பாலினப் போரில், பில்லி பயன்படுத்திய உடை போன்ற உடைகள், இப்போது உடை விளம்பர உலகின் ஒரு அங்கமாக மாறிப்போனது. பாலினப் போர் நடத்திய பில்லியால், பெண்ணுரிமை இயக்கத்தின் இரண்டாம் அலை தோன்றி, இன்று பெண்கள், எல்லாத் துறைகளிலும், ஆண்களுக்கு இணையாக சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. 

 

இத்தோடு பில்லியின் புகழ் நின்று விடவில்லை. “உலகின் தலைசிறந்த பெண்மணிகள்” என்ற, உலகப்புகழ் பெற்ற செவென்டீன் பத்திரிகை, வருடாவருடம் நடத்தும் ஆய்வில்,  பில்லி, முதல் பெண்ணாக தேர்ந்து எடுக்கப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டார். அதே ஆய்வில், இரண்டாம் தலை சிறந்த பெண்ணாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர், அப்போதைய இஸ்ரேலின் பெண் பிரதமர், திருமதி கோல்டா மேயர் ஆவார். அரசியலில் உலகப்புகழ் பெற்ற, திருமதி கோல்டா மேயரின் புகழையும் தாண்டி, சிங்கப்பெண் பில்லியின் புகழ், உலகம் முழுவதும் பரவி இருந்தது என்ற உண்மை, நமக்கு இப்போது நன்கு புலப்படும்.  டென்னிஸ் புகழ் அரங்கம் (Tennis Hall of Fame) என்று சொல்லக்கூடிய, உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் பட்டியலில், பில்லியும் சேர்க்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டு இருக்கிறார். 

 

பில்லியைப் போல், பாலினப் போரில் போராடிய, இன்னொரு லெஸ்பியன் பெண்மணி, திருவாட்டி மார்ட்டினா நவரதிலோவா ஆவார். “நான் ஒரு இரும்புத்திரைக்குள் பின்னால் வாழ்ந்து இருக்கிறேன்” என்று, தனது லெஸ்பியன் வாழ்க்கை குறித்துப்பேசி இருக்கும் மார்ட்டினா, ஒரு செக்கோஸ்லோவேகியா மங்கை ஆவார். பன்னெடுங்காலமாகவே, மார்ட்டினா பிறந்த செக்கோஸ்லோவேகியா நாடு, கம்யுனிஸ நாடான, ரஷ்யாவின் பிடியில் இருந்து வந்த ஒரு நாடாகும். ஓரினச்சேர்க்கையை இன்றளவும் எதிர்க்கும் ரஷ்யாவின் ஆதிக்கத்துள் இருந்த செக்கோஸ்லோவேகியாவும், ஓரினச்சேர்க்கையை, ஆரம்பத்தில் எதிர்த்ததில், எந்தவித வியப்பும் இல்லை. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் பிறந்த, திருவாட்டி மார்ட்டினா, டென்னிஸ் உலகில் புகழ் பெரும் காரணத்துக்காக, தனது லெஸ்பியன் ஆசைகளை, மறைத்து வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. 1975-இல் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் பந்தயத்தில், கால் இறுதிவரை முன்னேறிய மார்ட்டினா, அதன் பிறகு நடந்த அமெரிக்க டென்னிஸ் விருதுப் போட்டியில் கலந்துகொள்ள, முதலில் செக்கோஸ்லோவேகியா கம்யுனிஸ்டுகள் அனுமதிக்கவில்லை. எனவே, அந்த இறுக்கமான சூழ்நிலையில், தைரியமான மார்ட்டினாவால், தனது லெஸ்பியன் ஆசைகளை வெளியில் சொல்ல முடியவில்லை. தான் ஒரு ;லெஸ்பியன் என்ற இந்த ஒரு முக்கியக் காரணத்தால், அதன்பிறகு, செக்கோஸ்லோவேகியா நாடு, மார்ட்டினாவை, அமெரிக்கப் டென்னிஸ் போட்டியில் விளையாட அனுமதித்தபோதும், மார்ட்டினா, அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட முடிவு செய்தார். 

 

இருப்பினும், அந்தக் காலத்தில், லெஸ்பியன் பழக்கம் உள்ள பெண்மணிகள், அமெரிக்கக் குடியுரிமை பெற, தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே, அமெரிக்காவுக்குள் காலடி எடுத்து வைத்த, மார்ட்டினா, அமெரிக்கக் குடியுரிமை பெறும் வரை, தனது லெஸ்பியன் ஆசைகளை, வெளி உலகிற்குச் சொல்லாமல், மறைத்து வைத்தார். அந்தக் காலகட்டத்தில்தான், நாம் முன்னர், இக்கட்டுரையில் பேசிய, திருவாட்டி பில்லி, “நான் ஒரு லெஸ்பியன் பெண்மணி” என்று வெளி உலகத்திற்குத் தெரிவித்தார். டென்னிஸ் உலகின் பேசுபொருளாக மாறிப்போன பில்லிக்கு, முதன் முதலில், வெளிப்படையாக ஆதரவு கொடுத்தவர், திருவாட்டி மார்ட்டினா நவரோடிலோவா ஆவார்.  

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மார்ட்டினா, அதன் பிறகு, தனது லெஸ்பியன் வாழ்க்கை குறித்து, தனக்கு மிக நெருங்கிய ஒரு பத்திரிகை நண்பரோடு மட்டும், அவ்வப்போது பகிர்ந்து கொண்டார்.  இருப்பினும், அந்தக் காலகட்டத்தில், உலகப் பெண்கள் டென்னிஸ் சங்கம் நடத்திய டென்னிஸ் சுற்றுப்போட்டிகள், மார்ட்டினாவையே, பெரிதும் நம்பி இருந்தன. போட்டிகள் நடத்த உதவிய ஒரு நிறுவனமும், மார்டினாவை நம்பியே, ஒரு பெருந்தொகை கொடுத்து ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், மார்ட்டினா ஒரு லெஸ்பியன் என்று தெரிந்தால், ஆதரவு கொடுத்த நிறுவனம், விலகிக் கொள்ள நேரிடலாம். இதனால், உலகப் பெண்கள் டென்னிஸ் சங்கமும், அதை நம்பியிருந்த பல விளையாட்டு வீராங்கனைகளும், பாதிக்கப்படலாம். இந்த காரணங்களுக்காக, மார்ட்டினா, தன்னை, லெஸ்பியன் என்று, உலகிற்கு சொல்லிக்கொள்ளாமலேயே, இன்னும் கொஞ்சம் நாள் தள்ளிப் போட நினைத்தார். ஆனால், அவர் சும்மா இருந்தாலும், அவரது பத்திரிகை நண்பர் சும்மா இல்லை. “மார்ட்டினா ஒரு லெஸ்பியன்” என்று, அவரது பத்திரிகையில் எழுத, ஒரு இக்கட்டான நிலைக்கு மார்ட்டினா தள்ளப்பட்டார். லெஸ்பியன் என்று உலகம் உணர்ந்த காரணத்தால், மார்ட்டினா, பல மில்லியன் டாலர் வருவாயை, இழக்க நேரிட்டது. கிட்டத்தட்ட, எல்லா நிறுவனங்களும், மார்டினாவுக்கு கொடுத்த ஆதரவை நிறுத்திக்கொண்டன. இருப்பினும் மனம் தளராது போராடினார் மார்ட்டினா.  

 

மூன்றாம் பாலினம் மீதான, உலகத்தின்  பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தபோது, மார்ட்டினாவும், மூன்றாம் பாலினத்துக்காக, தனது சேவைப் பங்களிப்பைக் கொடுக்க ஆரம்பித்தார். 1991-இல், உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரரான மேஜிக் ஜான்சனுக்கு, எய்ட்ஸ் நோய் இருப்பதாக உலகம் தெரிந்துகொண்டபோது, பல பத்திரிக்கைகளும், இன்ன பிற விமர்சகர்களும், மேஜிக் ஜான்சனின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கையை, விமர்சனம் செய்தனர். அதுகண்டு வெகுண்டு எழுந்த மார்ட்டினா, “எய்ட்ஸ் நோய் என்பது, பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வதால் வரக்கூடிய நோய். இந்த நோய், ஆண் பெண், மூன்றாம் பாலினம் என்ற அனைவருக்கும் பொதுவான நோய். அப்படி இருக்க, ஓரினச்சேர்க்கையாளரான மேஜிக் ஜான்சன் மீது மட்டும், கருணையில்லாமல் விமர்சனம் செய்யும் உலகம், கண்டனத்துக்குரியது” என, தனது உரிமைக்குரலைப் பதிவு செய்தார். அதே போல, 1992-இல் அமெரிக்காவின் கொலராடா மாநிலத்தில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தக் கொலராடா சட்டத்தின் படி, கொலராடா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் சமூக அமைப்புக்கள், மூன்றாம் பாலின உரிமைகளைப் பாதுகாப்பதற்காய் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும், தடை செய்யபட்டன. இது கண்டு பொங்கிய பல அமெரிக்க மக்களில், மார்ட்டினாவும் ஒருவர் ஆவார். அதே போல, அமெரிக்க இராணுவத்தில், அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் கொண்டு வரப்பட்ட, “கேட்காதே, சொல்லாதே” (Dont ask Dont tell) சட்டத்திற்கும், மார்ட்டினா எதிர்க்குரல் கொடுத்தார். பில் கிளின்டனின் இந்தச் சட்டத்தின்படி, அமெரிக்க ராணுவம், “நீ ஒரு ஒரு ஓரினச்சேர்க்கை செய்பவனா?” என்று எந்த அமெரிக்க இராணுவ வீர்ரகளையும் கேட்காது. ஆனால், அதே நேரத்தில், “நான் ஒரு ஓரினச்சேர்க்கை செய்பவன்” என்று எந்த அமெரிக்க வீரராவது, வெளிப்படையாக அறிவித்துக்கொண்டால், அததகைய வீரர்கள், பணிநீக்கம் செய்யப்படுவார்கள். மூன்றாம் பாலினத்துக்கு எதிரான சட்டம் குறித்து, உரிமைக்குரல் எழுப்பியவர்களில், முக்கியமான ஒருவர் மார்ட்டினா ஆவார்.  

 

மார்டினாவுக்கும், டென்னிஸ் ஆண் விளையாட்டு வீரரான ஜிம்மி கானர்சுவிற்கும், 1992-இல் நடந்த பாலினப்போரில், மார்ட்டினா தோற்றுப்போனார் என்றாலும், அவரது பெண்ணுரிமை குறித்த போரும், மூன்றாம்பாலின உரிமைகள் குறித்த போரும், தொடர்ந்த வண்ணமேயுள்ளது. அதன் பிறகு, நிறையப் பாலினப் போர்கள், உலகில் அங்கங்கே நடந்த வண்ணமே இருக்கிறது. ஆண்களை எதிர்த்துப் பெண்களும், பாலினப் போர் வடிவத்தில், போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது மூன்றாம் பாலின விளையாட்டு வீரர்களும், விளையாட்டு உலகில், வெளித்தெரிய ஆரம்பித்து விட்டார்கள். இனி, அவர்களும், ஆண்களுக்கு எதிரான பாலினப்போர் உருவாகக் காரணம் ஆக இருக்கலாம்.  

 

இந்தப் பாலினப்போர் எப்போது முடியும்? இனங்களில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் அனைவரும் சமமே என்று உலகம், மனதார ஒத்துக்கொள்ளும்போது, பாலினப்போர் ஒரு முடிவுக்கு வரும் என்பது திண்ணம். 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 11 சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *