வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 14 in the series 12 ஜூன் 2022

தேனி.சீருடையான்.

 

நூல் மதிப்புரை.

காத்திருப்பு.

ஜனநேசன்.

சிறுகதைத் தொகுப்பு.

அன்னம் பதிப்பகம்.

பக்கம் 160 விலை ரூ, 150/

 

எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய இதழ்களிலும் பிரசுரமாகி வாசகப் பரப்பைச் சென்றடைந்திருக்கின்றன. அதில் ஒரு கதை (காத்திருப்பு) இலக்கியச் சிந்தனைப் பரிசையும் வென்றிருக்கிறது. அவரின் முப்பதாண்டுகால எழுத்து இயக்கத்தில் ”ஏலோ….லம்” என்ற நாவலும் ஜனித்திருக்கிறது. வாழ்தலும் வாழ்தல் நோக்கமும் உள்ளடக்கப் பறவைகளாய்ச் சிறகு விரித்திருக்கின்றன.

பெரும்பாலான படைப்புகள் சாமான்ய மக்களின் சாமான்ய வாழ்க்கையை சித்தரித்திருக்கின்ற அதே வேளையில். சில கதைகள் நடுத்தர வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. அதில் முக்கியமானது “இளம் அதிகாரியின் நாள்குறிப்பு.”

மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவது அரசு. தேர்ந்தெடுக்கப் படாமல் மக்களை ஆள்வது அரசாங்கம். அரசாங்கம் என்றால் அதிகார வர்க்கம். அதிகாரிகள்தான் மக்கள் நலப் பணிகளுக்கான விதிகளை வகுத்தளிக்கிறார்கள். அந்த விதிகளின் வழியே அரசாங்கமும் சமுதாயமும் இயங்குகின்றன. மேடு பள்ளமான சமுதாயத்தின் போக்கை அந்த விதிகள் தீர்மானிக்கின்றன. ”அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி” என்ற பழைய முதுமொழியை ஒட்டி இன்று, ”அதிகாரிகள் எவ்வழி அவ்வழி ஆட்சி” என்று ஆகியிருக்கிறது. அவர்களின் சிந்தனையோட்டமும் செயல்திட்டமும் எந்த வர்க்கம் சார்ந்தது என்பதைக் கொண்டே, நடப்பது நல்லாட்சியா எதிர்வர்க்க சார்பு ஆட்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மாவட்டத்தில், புதுசாய் நியமனம் ஆகிற அதிகாரிகள், அதாவது மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வருவாய்த் துறை அலுவலர்கள் போன்றோர் பதவியேற்கும்போது, அந்த மாவட்டத்தின் செல்வந்தர்கள் அவர்களை மரியாதை நிமித்தம் கண்டு அன்பளிப்புச் செய்வது வாடிக்கையாக இருக்கிறது. பெரும்பாலும் வணிகத் தலைவர்கள், காண்ட்ராக்டர்கள், பெரிய நிலச் சுவாந்தார்கள் வரிசைகட்டி நின்று சந்திப்பார்கள். சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது என்ற சொல்லுக்குள் அடங்கியிருக்கிற “அதிகாரமற்ற பேரதிகாரி நான்” என்ற சுய கம்பீரத்தை உணர்த்துவதுதான். தங்களது மக்கள் விரோத நடவடிக்கைகளில் அதிகாரிகள் தலையிடக் கூடாது என்பதை மறைமுகமாக மிரட்டும் இயல்புடையவை அந்த சந்திப்புகள்..

ஓர் இளைஞர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கப் போகும் அந்த முதல் நாளில் அவரைச் சந்திக்க வருகிறார் வி. என். பாதக் என்ற நகரப் பிர்முகர். அவர் அந்த நகரத்தின் மிகப் பெரிய காண்ட்ராக்டர். அவர் தரும் அன்பளிப்பை ஏற்க மறுத்துவிடுகிறார் ஆட்சியர். “என்னை பகைத்துக் கொள்கிறாயா?” என்பதுபோல் பார்வை வீசிவிட்டு வெளியேறுகிறார் பாதக்.

அடுத்து ஆட்சியர் முடி திருத்துநரை வரச் சொல்கிறார். முடி திருத்துநர் வந்து அட்டன்ஷனில் நின்று இவருக்கு சல்யூட் அடிக்கிறார். முடி திருத்துநர்கள் இப்படியும் செய்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஆட்சியர் விசாரித்தபோது வந்தவர் ஹோம் கார்ட் என்றும் முடிதிருத்துவோர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் மேலதிகாரி இந்த வேலைக்குத் தன்னை ஏவியிருப்பதாகவும் சொன்னார். அதற்காக அவர் பெறும் சலுகை காவல் பணி எதற்கும் அவர் போகவேண்டியதில்லை என்பதுதான். மிலிட்டிரியிலும் இந்த மாதிரி நடைமுறை இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்த புது ஆட்சியர் அவரைப் போகச் சொல்லிவிட்டு, சுய சவரம் செய்துகொண்டு அலுவலகம் செல்கிறார். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டிய நாட்குறிப்பில் “பெரிய மனிதச் சந்திப்”பும் அதிகார மட்டத்தில் நிலவும் குலத் தொழில் அவக்கேடும் இடம்பெறுகின்றன. காவல் பணிக்கு வந்தவர் அந்தப் பணியைத்தான் செய்ய வேண்டும் எனப் பதிவிடுகிறார்.

இந்தச் சிறுகதை ஓர் அரிய படைப்பு என்றே சொல்லவேண்டும். ஓர் இலக்கியவாதியின் சமூகநோக்கம் பிரதிபலிக்கிறது. இப்படி நாள்குறிப்பு எழுதும் நிலை இன்றைய சமூக மற்றும் அரசியல் அமைப்பில் நிகழுமா என்ற கேள்வியைத் தாண்டி நிகழவேண்டும் என்பதே முக்கியம். இலக்கியவாதியின் இந்த விருப்பம் வாசக மனசில் உணர்ச்சி வெள்ளமாய்ப் பெருகி பௌதீக சக்தியாக மாறவேண்டும். அப்போதுதான்  சமுதாயப் புரட்சி நிகழும். வரலாற்றியல் பொருள்முதல் வாதக் கண்ணோட்டத்தின் வழியே இந்தச் சிறுகதை இயங்குகிறது.

இன்று உலமெங்கும் உலவிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சொல் “தீவிரவாதம்.” இது ஓர் அரசியல் சொல்லாகவும் மதம் மற்றும் ஜாதியச் சொல்லாடலாகவும் வேரூன்றி நிற்கிறது. அன்பின் விதைப்பைக் கெல்லி எறிந்து வெறுப்பின் பாலையை சிருஷ்டிக்கிறது இந்தச் சொல். இந்தியப் பிரதமர் உட்பட பெரும்பாலான நாட்டுத் தலைவர்களின் நாவுகளில் நிரந்தரமாய் நின்று ஒலித்துக் கொண்டிருக்கிறது “தீவிரவாதம்”. இந்தியாவைப் பொருத்தவரை கஷ்மீர் மாநிலத்தின் இஸ்லாமியர்களும் மலைவாழ் மக்களின் உரிமைக் குரலை எதிரொலிக்கும் மாவோயிஸ்டுகளும் முக்கியத் தீவிரவாதிகள்.

2008ஆம் ஆண்டு அக்டோபரில் சதீஸ்கர் மாநிலம் தண்டகாருண்யம் மலைப் பகுதியில் நிகழ்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 117 போலிசார் மாண்டு போயினர். அந்தத் தாக்குதலை நடத்தியது மாவோயிஸ்டுகள். அப்படியானால் அவர்கள் தீவிரவாதிகள்தானே?

அரசாங்கத்தின் ஏவலாளிகளான காவல் துறையினரைக் கொல்வது தவறு என்றால், மலைமக்கள் வாழும் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்கள்மேல் வறுமையை ஏவிக் கொல்வதும் தீவிரவாதம்தான் என்கிறார் கதாசிரியர். மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆதாரத்தைச் சீரழிக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை எந்த அரசும் ஏற்கவில்லை என்பதால் வந்த கோபத்தின் விளைவே இந்தத் தாக்குதல். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிறது இயக்கவியல் தத்துவம்.

சதீஸ்கர் மாநிலத்தை ஒட்டிய ஆந்திரப் பகுதியின் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்கும் அதிகாரியின் குடும்பத்தார் மாவோயிஸ்ட் பகுதிக்குச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். பாதையே கரடுமுரடாக இருக்கிறது. நாட்டு வாழ்க்கையின் பிரதிபலிப்பு காட்டு வாழ்க்கையில் இல்லை. அதாவது பிற பகுதிகளில் கிடைக்கும் சிறு வசதிகூட அங்கு கிடைப்ப்பதில்லை. மலைமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு எந்த வழிவகையும் செய்யாத அரசு, கார்ப்பரேட் முதலாளிக்காக அவர்களின் நிலத்தைப் பிடுங்குகிறது. அப்போது உண்டாகும் கோபம் நியாயமானதுதான் என்று உணரும்படி கதைப் போக்கு அமைந்திருக்கிறது. இவர்கள் செல்லும் வாகனம் சகதிக்குள் சிக்கிக் கொள்ளூம்போது அங்கு வரும் இளைஞர்கள் தங்களின் வாழ்வியல் அனுபவம் சார்ந்து வாகனத்தை மீட்டெடுக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகளில் அன்பின் நிழல் படிந்திருக்கிறது. இவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது நியாயமா எனக் கேட்காமல் கேட்கிறது கதை.

கார்ப்பரேட் முதலாளிகள் மலைமக்களின் உற்பத்தி மற்றும் குடியிருப்பு நிலங்களை அபகரிக்கும் போது அவர்களின் கோபம் உணர்ச்சிமயமானதாய் மாறுகிறது. கார்ப்பரேட்டுகளின் நில அபகரிப்பும் மக்களின் நில இழப்பும் மோதும்போது நிகழும் அசம்பாவிதமே இப்படியான வன்முறைகள். இதை மனித மோதல் என்று எடுத்துக் கொள்வதா? வாழ்க்கையை மீட்கும் உரிமைப் போராட்டம் என்று எடுத்துக் கொள்வதா? மாவோயிஸ்டுகள் இதை உரிமை மீட்புப் போராட்டம் என்கிறார்கள். ”தோட்டாவில் பூக்கும் மலர்கள்” என்ற சிறுகதை மாவோயிஸ்டுகளின்  வாதம் நியாயமானதுதான் என நிறுவுகிறது. இந்தத் தொகுப்பின் முக்கியமான கதை இது.

பல்வேறு தொழிலாளிகளின் வாழ்க்கை நிலையை ஆய்வு செயது எழுதியிருக்கிறார் ஜனநேசன். ரயில் காப்பாளர் என்று சொல்லப் படுகிற ’கார்ட்’ பற்றி இதுவரை வந்த கதைகள் மிகவும் அரிது. ரயிலில் பயணிக்கும் கோடிக்கணக்கான பயணிகள் பச்சை, சிவப்புக் கொடிகளைக் காட்டி ரயிலை இயக்கும் கார்டுகளைப் பற்ரி யோசித்திருக்கிறார்களா? கதாசிரியர் அவர்களைக் கூர்மையாய்க் கண்காணித்துக் “காத்திருப்பு” கதையில் பதிவு செய்திருக்கிறார். ரயில் காப்பாளர்களின் வாழ்க்கை வேறு எந்தத் தொழிலாளியின் வாழ்க்கையைவிடவும் மோசமானது. பயணிகள் ரயிலில் வேலை செய்பவர்கள் கூட அங்கங்கே நின்று இளைப்பாறிச் செல்ல முடியும். ஆனால் குட்ஸ் வண்டிகளில் இயங்குபவர்களின் நிலை மிகவும் மோசம். புறப்படும் வண்டி நூற்றுக் கணக்கான மைல்கள் தாண்டி எங்கோ ஓரிடத்தில் நிற்கும். அது வரையிலான உடல் உபாதைகள், பசி, தூக்கம் எல்லாம் உடம்பை உலரவைத்து மனசை உளைச்சல் படுத்துகின்றன. சிறைவாழ்க்கை போல அவர்களின் லௌகீக வாழ்க்கை வீணாகிப் போகிறது.

35 வருடங்களாக சுமைவண்டிக் காப்பாளனாக இருந்த சுந்தரம் பயணிகள் வண்டிக் காப்பாளனாகப் ‘பதவி உயர்வு’ பெறப்போகும் அந்த நாளை சக தொழிலாளிகளோடு மகிழ்ச்சியாய்க் கழிக்க நினைக்கிறான். “சாமான் வண்டி மாதிரி பயணிகள் வண்டியில் எந்த நேரமும் நிற்றல், குனிதல், நெளிதல் இல்லை. சிக்னல் சேம்பர் எனப்படும் சைகைக் கூடம் நெருங்குகையில் வெளியில் நின்று பச்சைக் கொடி காட்டினால் போதும். இரவில் நிற விளக்குகள் காட்ட வேண்டும்.” அதாவது நின்றுகொண்டே வழிநடத்தும் காப்பாளன் என்பதைவிட உட்கார்ந்தபடி வழிநடத்தும் காப்பாளன் என்பதுதான் “பதவி உயர்வு.”

பதவி உயர்வு பெற்ற முதல் நாளின் பணிநேரத்ஹில் சுந்தரம் தூக்கக் கலக்கத்தில் மயங்கிவிடுகிறார். திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு வரை எந்த ஸ்டேஷனிலும் சிக்னல் காட்டவில்லை. எழும்பூர் வந்து சேரும்போது அவர் மயங்கிய நிலையில் கிடக்கிறார். சக தொழிலாளிகள் மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கின்றனர். “பதவி உயர்வு பெறும் நாளில் அந்தத் தொழிலாளியின் உடல் அனைத்து சக்தியையும் இழந்து விடுகிறது. திடகாத்திரமான நேரங்களில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமலும் பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சித் தருணங்களில் அதைக் கொண்டாட முடியாமலும் தவிப்பதுதான் ரயில் கார்டுகளின் வாழ்க்கை.

இந்த அவக்கேடான வாழ்க்கைமுறையை யதார்த்தச் சிதைவில்லாமல் விவரிக்கிறது “காத்திருப்பு.”

“வேண்டுகை,” “கடிவாளமற்று,” “அமாவாசை,” ”மரண விரும்பி” உள்ளிட்ட பல கதைகள் தொகுப்பை சராசரிக்கும் மேலான உயர்நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அதே வேளையில் “ஜீவகாருண்யம்,” “ஆக வேண்டியதை” போன்ற சில கதைகளைத் தவிர்த்திருக்கலாம்; அல்லது மாற்றி எழுதியிருக்கலாம்.

ஆக, ஜனநேசனின் “காத்திருப்பு” ஒரு காத்திரமான படைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]சற்று யோசி
author

Similar Posts

Comments

  1. Avatar
    Jananesan says:

    புத்தகமதிபுரை வெளியிட்ட திண்ணை இணைய இதழ்குழுவினருக்கும் எழுதிய திரு தேனிசீருடையான் அவர்களுக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *