ஓர் இரவில்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 7 in the series 26 ஜூன் 2022

 

                                                          மீனாட்சி சுந்தரமூர்த்தி.


   இரவு இரண்டு மணிக்கு அந்த கிராமமே விழித்துக் கொண்டிருக்கிறது. சகுந்தலாம்மா வீட்டில் .

பொண்ணுக்கு,பையனுக்கு சொல்லியாச்சா,
இவங்களோட தம்பி திருமாணியில இருக்காரே அவுருக்கு சொல்லிட்டாங்களா?

நேத்து  வந்திட்டுப் போனாரே,  ரெண்டுல மூணுல  வந்து அக்காவப் பார்த்திட்டுப் போவாரு.
சொல்லிட்டிருப்பாங்க இந்நேரம்.
பாவம் ,நல்ல மனுஷி.

காலையில தோட்டத்தில இருந்து வரப்போ
ஏண்டி செம்பகம்,
இந்த கனகாம்பரத்த பறிச்சிட்டுப் போயேன்.னாங்க. பறிச்சிட்டு வந்து .கட்டினேன்  பத்து மொழம் வந்தது..
ஆமாங்கா நேத்து  ரோஜா, சாமந்திப் பூ  நான்தான் பறிச்சிட்டு வந்தேன். இது கனகா.
ஊர் கோடியில நெலத்துக்கு நடுவால
ஆத்தங்கரை பக்கத்துல  தனி வீடு. வெள்ளாமை பண்ண வசதியா இருக்கட்டும்னு பெரியவர் கட்டினது.
பிள்ளையார் கோயில் வீதி வீட்டில வெளைஞ்சது வைக்கறாங்க. அத்தனை பெரிய முற்றம், சின்னான்தான் குடும்பத்தோட அங்ஙன இருந்து பாத்துக்கறான். அவன் பொஞ்சாதி மல்லி
காலையில இங்க வந்து வாசல் தெளிச்சி,கோலம் போட்டு,வீடு கூட்டி,பாத்திரம் வெளக்கித் தந்துட்டு நல்ல தண்ணி பிடிச்சு வச்சிட்டுப்  போறா.
எழுபத்தைஞ்சு வயசு முடியுதாம், ஆடி மாசம் வந்தா,
சகுந்தலாம்மா  சொன்னாங்க.

அஞ்சல நீ எப்படி வந்த திருவண்ணாமல போனிய ,
ஆமாங்கா கிரிவலம் முடிச்சிட்டு ராவிக்கி எட்டு மணிக்குதான் வந்தேன். அசந்து தூங்கிட்டேன்.
இவுருதான் ஊரே அல்லோல கல்லோலப்படுதுனு வெரசா வந்தாரு 
நானும் வந்தேன்.

சின்னான எங்கடி காணோம்.
அவன் மச்சினிக்கு கண்ணாலம்.நேத்துதான் போனாங்க,
நாலு நாள் ஆவும் வாரதுக்குனு பெரிசு
சொல்லுச்சிக்கா.

நல்ல மனசு,பசினு யார் வந்தாலும்
இருக்கறதப் போட்டு சாப்பிடச் சொல்லும்.
தோட்டத்து கத்திரி,வெண்டை, தக்காளி பை நெறைய தந்து அனுப்பும்.

ஒரு கண்ணுல  பார்வை  சரியா தெரியாது,
அட நீ வேற, சக்கரையும் இருக்கு
ரெண்டு நேரமும்  இதுவே  ஊசி போட்டுக்கும்.
சும்மாவே இருக்காது. அந்த வீட்டுக்கும், கழனிக்கும் நடந்திட்டே இருக்கும்.

இப்படி ஊராரின் உரையாடல்கள் இருக்க,

கார் ஒன்று வேகமாய் வந்து நின்றது.
அம்மா என்று அலறிக் கொண்டு இறங்கி ஓடினாள் ஜெயந்தி. மகன்கள் இருவரும் கலவரத்தோடு வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு வர , ஊர்ப் பெரியவர்கள் தொடர்ந்தனர்.

சகுந்தலா ம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.  கழுத்தில் சுற்றியிருந்த வெள்ளைத் துணி இரத்தத்தில் நனைந்திருந்தது. ஆம்புலன்சும்
பெரிய சத்தத்தோடு வந்து விட்டது.
பேரன்கள் இருவரும்  கண்கள் குளமாக சகுந்தலாவைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.

ஒரு மாதத்திற்குப் பின்னர்,
  நாற்காலியில்  சாய்ந்திருந்த அம்மாவின் காலை நீவித் தைலம் தேய்த்துக் கொண்டிருந்த சுகந்தி கேட்டாள்.
ஏம்மா இப்படிப் பிடிவாதம் பிடிக்கற.
இங்க நான் உன்ன  நல்லா பாத்துக்கலயா,
எதுக்கு கிராமத்துக்குப் போகணும்.?.

ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் மகளைப் பரிவோடு பார்த்தாள்  சகுந்தலா.
அதே நேரம் நரம்பு நோயால் நடமாட முடியாமல் இருந்த வீரையன் குரல் கொடுக்க,
இதோ வந்திட்டேன் என்று தட்டில் உணவை
எடுத்துக் கொண்டு போனவள் கணவனுக்கு ஊட்டி ,துடைத்து , மாத்திரை
தந்து படுக்க வைத்து விட்டு வந்தாள்.

பாட்டி காயம் ஆறிடுச்சில்ல,இன்னும் வலிக்குதா என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலை முடிந்து வந்த ராம்.
வேலை தேடிக் கொண்டிருந்த மதன் காய்கறிப் பையோடு  உள்ளே வந்தான்.
ஜஸ்க்ரீமைப் பிரித்து
ஒண்ணும் பண்ணாது சாப்பிடு  என்று நீட்டினான்.

மகன் வீட்டுக்கு போக வேண்டியதெல்லாம் இங்க வந்து டேரா  போடுதுங்க,
இதென்ன சத்திரமா?, சாவடியா?-வீரையன்.

அப்பா நீ  உன் வேலையப் பாரு.
மரியாதையாப் பேசு.
எதிர்க் குரலெடுத்தனர் பிள்ளைகள்.

       என்னதான் நடந்தது அந்த இரவு,
மணி பன்னிரண்டு அடித்தது சுவர்க் கடிகாரம்.
கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் தடாலென்ற சத்தத்தில்
விழிக்கிறாள்
நெடுநெடுவென ஒரு உருவம் மாடிப் படியில். நின்றது. கன்னங்கரேலென்ற உருவம். கையில் ஸ்பேனர்,சுத்தியல்.

அடக்கடவுளே தாழ்ப்பாளை அறுத்தெடுத்து விட்டு வந்திருக்கிறான்.
வெலவெலத்தாள் சகுந்தலா.கண்களை மூடிக் கொண்டாள்..அருகில் வந்து  போர்வையை இழுத்து தூங்குகிறாளா என உறுதி செய்துகொண்டு  இவள் முகத்தை மூடினான் திருடன்.
       அலமாரியின் மீது தடவிப் பார்த்து சாவியை எடுத்துத் திறந்தான்.
வெண்பட்டு வேட்டியை விரித்து முப்பது பவுன் நகைகளை  அள்ளி வைத்தவன் உரம் வாங்க வைத்திருந்த நாற்பதாயிரம் ரூபாயையும்,வெள்ளி டம்ப்ளர் நாலு,குங்குமச் சிமிழ் மூன்று, வெள்ளிச் சாப்பாட்டுத் தட்டு, காமாட்சியம்மன் விளக்கு ரெண்டு,
குத்து விளக்கு ரெண்டு, சந்தனக் கிண்ணம் இவற்றையும் சேர்த்து மூட்டையாகக் கட்டினான்.பின் சகுந்தலாவின் அருகில் வந்தான்.அப்போதுதான் கிழவி விழித்துக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.அப்புறம் என்ன?
வைரத்தோடு,மூக்குத்தி ,கழுத்திலிருந்த பத்து பவுன் சங்கிலி் கைமாறியது.
சும்மா போக மனம் வராமல்,’ ,’சத்தம்,கித்தம்  போட்டே தொலைஞ்சே,
என்றவன்,
கையிலிருந்த கத்தியால் கழுத்தில் கோடு போட்டு விட்டுப் போகிறான்.
அதிர்ச்சியில் ,பயத்தில் உறைந்து  போனவள் அரைமணி நேரம் கழித்து
சத்தம் போட நிலத்திற்கு  தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இரத்தம் அதிகம் கொட்டினதில் மயங்கிச் சாய்ந்தாள்.

  பத்து நாட்கள் மருத்துவமனையில்  இருந்தாள் ஒன்பது தையல் போட்டுள்ளனர். நல்ல வேளை ஆழமான காயம் இல்லை, பிழைத்துக்கொண்டாள்.  இப்போது மகளின் வீட்டில்தான் இருக்கிறாள் .பேரன்களும், மகளும் பாசமாய் கவனிக்கின்றனர். ஆனால் மருமகனின் இயலாமை இவளின் இருப்பை நிராகரிக்கிறது. சமயத்தில்  பிள்ளைகளோடு உரசலாகிறது.

    மகன் விழுப்புரத்தில் வசதியாக இருக்கிறான்,பொதுப்பணித் துறையில் உயர் அதிகாரி. இரண்டு பெண்கள் கல்லூரிப் படிப்பில்.
மருமகளுக்கு மாமியாரை  வைத்துக் கொள்ளத் துளியும் விருப்பமில்லை.
இந்த கிழத்திற்கு உட்கார வெச்சு பணிவிடை செய்ய என்னால முடியாது
என்று சொல்லி விட்டாள். மகனும்  மருத்துவமனைச் செலவு வரை பார்த்துக் கொண்டான்.  அக்காவின் வீட்டில் விட்டுச் சென்றவன் எப்போதாவது நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை சகுந்தலா காலையிலேயே குளித்து ,சாமி கும்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்தாள்.
மகன் குடும்பத்தோடு வந்திருந்தான்,
முதல் நாள் பேரனோடு சென்று  லாக்கரிலிருந்து கொண்டு வந்திருந்த
65 பவுன் நகைகளில் முப்பது ,முப்பது சவரனை இருவருக்கும் பிரித்துத் தந்தாள்.
இரண்டு பவுன் சங்கிலிகள் இரண்டை  பேரன்களிடம் தந்தாள்.
ஒரு பவுன் ஜிமிக்கி தோடு   சின்னான் மகளுக்கெனச் சொல்லி எடுத்துக் கொண்டாள்.

மருமகள் ,’அத்தே எங்களோட வந்து இருங்கனு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க’

பத்திரமா இருங்க, எதுனாலும் சொல்லுங்க’ என்றாள்.

சரிமா ஒற்றைச் சொல் உதிர்த்தாள் சகுந்தலா.

    காரில் ஏறிக் கையசைத்து விடை பெற்றனர் மருமகளும் மகனும். . தெருமுனை திரும்பியதும் ,”ஆனாலும் உங்கம்மாவுக்கு ஓர வஞ்சனை போகாது”

என்ன என்று புருவம் உயர்த்தியவனிடம்,

பேரன்களுக்கு நாலு பவுன் தரணுமா?

பதிலே பேசாமல் தனது இயலாமையை  நொந்து கொண்டு காரை ஓட்டினான் அவன்.

 

..  அம்மா தனியா திரும்பவும்  எப்படிமா விடுவேன்,கண்கலங்கிய மகளிடம் ,

ஏற்கெனவே நாற்பது ஏக்கர் நெலத்த உங்கப்பா உங்களுக்குப் பிரிச்சுத் தந்திட்டாரு. நான் வச்சி வெவசாயம் பண்ணிட்டிருந்த அஞ்சு ஏக்கர இப்ப குத்தகைக்கு விட்டாச்சு. குத்தகைப் பணம் பேங்குல போட்டாச்சி, என்னிடம் இப்போது எதுவுமில்லை..

    வாராவாரம் பேரன்கள் வந்து பார்த்துக்கறாங்க கைச்செலவுக்கு பணம் எடுத்துட்டு வந்து தரப் போறாங்க,.உதவிக்கு சின்னான் இருக்கான்.

வேற என்ன வேணும். யாருக்கும்  பாரம் வேணாம் மா.
சிரித்துக் கொண்டே பெரியதன வீட்டுக்காரரின் மனைவி சகுந்தலாம்மா காதில்,மூக்கில்,கையில்,கழுத்தில் பொட்டுத் தங்கம் இல்லாமல்  நெஞ்சில் உரமுண்டு என்றே தள்ளாடி நடக்கிறாள்.
அவளைக் காரில் ஏற்றிக் கொண்டு் கிராமத்து வீட்டிற்குப் பெரியவனும்,
சின்னவனும் விரைந்தனர்.







 

Series Navigationசாம்பல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *