இது என்ன பார்வை?

This entry is part 9 of 14 in the series 3 ஜூலை 2022

 

 

                           ஜோதிர்லதா கிரிஜா      

 

(18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)

 

       ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை இல்லை. அவன் உடை மாற்றிக் கொள்ளுவதற்கு முன்னால் தன்னறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடிக்கு  முன்னால் நின்று தன்னைத்தானே ஒரு முறை நெடுமையாகப் பார்த்துக் கொண்டான். அன்று தான் அணிந்திருந்த கருநீலக் கால்சராயும் வெளிர்நீல முழுக்கைச் சட்டையும் கன கச்சிதமாய்த் தனக்குப் பொருந்தியிருந்ததாக அவனுக்குப் பட்டது. தன் முன்தோற்றத்தைச் சில வினாடிகள் ரசித்ததன் பிறகு அவன் தன் முதுகுப்புறத் தோற்றத்தை ஓரளவேனும் காணும் நிமித்தம் திரும்பி நின்றுகொண்டு கழுத்தை முறுக்கிச் சாய்த்துப் பார்த்தான். உடல் அளவுகளோடு கச்சிதமாகப் பொருந்தும்படி உடைகளைத் தைத்த தையல்காரரை மனத்துள் வாழ்த்திய வண்ணம் அவன் அவற்றைக் களைந்துவிட்டு லுங்கியையும் பனியனையும் அணிந்துகொண்டு காப்பி குடிக்கத் தயாரானான்.

       தலையைப் படிய வாரிவிட்டுக்கொண்டு அவன் சமையலறையை நோக்கி நடக்கத் தொடங்கிய போது அவன் மனைவி பத்மா ஆவி பறக்கும் காப்பியுடனும் சிற்றுண்டியுடனும் அவன் முன் எதிர்ப்பட்டாள். அவன் புன்னகையுடன் அவற்றை வாங்கிக்கொண்டு சாப்பிடலானான். பத்மா தானும் அடுக்களைக்குச் சென்று வழக்கம் போல் சிற்றுண்டியையும் காப்பியையும் எடுத்துக்கொண்டு வந்து அவனெதிரில் அமர்ந்தாள்.

       சாப்பிட்டுக்கொண்டே ஏதாவது பேசும் வழக்கமுள்ள ஞானப்பிரகாசம் ஒன்றும் பேசாமல் ஏதோ சிந்தனை வசப்பட்டவனாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு பத்மா வியப்படைந்தாள்.

       வீட்டுக்குள் நுழையும் போதே அவன் கேட்கும் முதல் கேள்வி, ‘லீலா எங்கே?’ என்கிற தங்கள் ஒரே மகளைப்பற்றிய கேள்விதான். அவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் போது லீலா கண்டிப்பாக வீட்டில் இருந்தாக வேண்டும். இல்லாமல் அக்கம்பக்கம் எங்கேயானும் விளையாடப் போயிருந்தால் பத்மா உடனே போய் அவளைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். அவள் வந்ததன் பிறகுதான் அவன் சிற்றுண்டி யருந்துவான். இன்று எதனாலோ அவன் லீலாவைத் தேடாததையும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டு பத்மா கவலையுற்றாள். ‘அலுவலகத்தில் ஏதேனும் தகராறோ?’ என்று எண்ணிக் கலக்கமுற்றாள்.

       சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாதவளாய், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? தலையை வலிக்கிறதா? இல்லாவிட்டால் ஆஃபீசில் ஏதேனுமா?” என்று அவள் கேட்டதும் ஏதோ தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டவனுக்குரிய பதற்றத்துடன் அவன் சற்றே பேந்தப் பேச்த  விழித்துவிட்டு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவைத்தான்.

        “ஒன்றுமில்லை, பத்மா. அலுவலகத்தில் இன்று வேலை சக்கைப்போடு போட்டுவிட்டது. அத்தோடு தலைவலி வேறு. … காப்பி சாப்பிட்டால் சரியாய்ப் போய்விடும்,” என்று அவன் சமாளித்துக் கொண்டாற்போன்ற குரலில் சொன்ன பதிலை முற்றும் நம்பாதவன் போல் அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

        “நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். … உங்களால் என்னிடம் பொய் சொல்ல முடியாது,” என்றாள் பத்மா. அவன் மறுபடியும் ஓர் அசட்டுச சிரிப்பை உதிர்த்தான்.

        “என்ன சிரிக்கிறீர்கள்? என்ன நடந்தது? உண்மையைச் சொல்லுங்கள்,” என்று அவள் வற்புறுத்தவும், அவன் தன்னையும் அறியாது தன் முகத்தில் பரவிய அசட்டுக்களையை மறைத்துக்கொள்ள முயன்றவண்ணம், “எதுவும் நடக்கவில்லை, பத்மா. வேலை ரொம்ப அதிகம். இலேசாகத் தலைவலி வேறு. வேறே எதுவும் இல்லை. என்னை நம்பு,” என்றான்.

        பத்மா பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனை முற்றும் நம்பாதவள் போன்று ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து உள்ளே போனாள்.  தான் செய்த தவறு சட்டென்று  ஞாபகம் வரப் பெற்றவனாய், “லீலா எங்கே?” என்று அவன் கேட்டான். பத்மா திரும்பி நின்று அவனை ஆழமாக நோக்கிவிட்டு, “குழந்தையின் ஞாபகம் கூட வராத அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?” என்று கேட்டாள்.

        “என்னை நம்பு, பத்மா. ஒன்றும் நடக்கவில்லை. மனிதனுடைய மூட் எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா? …அது சரி, லீலா எங்கே?” என்று அவன் சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்.

        “எதிர்வீட்டுக்குப் போயிருக்கிறாள்,” என்று பதில் சொல்லிவிட்டுப் பத்மா அடுக்களைக்குள் புகுந்து தன் வேலையில் ஈடுபட்டாள்.

        ஞானப்பிரகாசம் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வார இதழ் ஒன்றைப் புரட்டலானான். அதன் பக்கங்களுடன் அவன் சிந்தனையும் புரண்டது. ஒரு வாரத்துக்கு முன்னால் தன் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சுஜாதாவின் குண்டு முகம் அவன் மனக்கண்கள் முன் தோன்றியது. அலுவலகத்துக்குப் புதிதாக வந்த சுஜாதா தன் பிரிவிலேயே சேர்க்கப்படுவாள் என்பது அவன் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். ஏனென்றால் அவன் பிரிவில் இரண்டு காலியிடங்கள் இருந்தன. கடந்த ஆறு மாதங்களாக அவை நிரப்பப்படவில்லை. எனவே புதிதாக வந்த பெண் அங்கேதான் சேர்க்கப்படுவாள் என்பது ஏற்கெனவே  அவனுக்கும் அவன்  பிரிவில் இருந்த ஏனையோர்க்கும் தெரிந்துதான் இருந்தது.

       கடந்த வெள்ளிக்கிழமையன்று தலைமை எழுத்தரைப் பின்பற்றித் தன் பிரிவுக்குள் நுழைந்த சுஜாதாவின் தோற்றம் அவன் மனக்கண் முன் விரிந்தது. குனிந்த தலையுடன் பிரிவுக்குள் நுழைந்த சுஜாதாவின் பார்வை முதலாவதாகச் சந்தித்தது ஞானப்பிரகாசத்தின் பார்வையைத்தான். எல்லாருடைய பார்வையையும் போல் அவன் பார்வையும் புதியவளான அவள் மீது படர்ந்திருந்ததில் வியப்பில்லைதான். ஆனால் அவன் மேல் பதிந்திருந்த தன் பார்வையை அந்தப் பெண் சில விநாடி நேரம் வரை அகற்றாமலே அவனை விழுங்கிவிடுவாள் போலப் பார்த்ததுதான் வியப்புக்கு உரியது. பின்னர் சட்டென்று சுஜாதா  தன் கண்களைத் திசை திருப்பிக்கொண்டாள். திடீரென்று தன்னினைவு வரப்பெற்று அவள் அப்படிச் செய்தது மாதிரி அவனுக்குத் தோன்றியது.

       பக்கத்து இருக்கைக்காரன் பஞ்சவர்ணம், “உனக்கு இந்தப் பெண்ணை ஏற்கெனவே தெரியுமாடா?” என்று வினவியபோது அவள் கண்ணிமைக்காது தன்னை நோக்கியதைப் பஞ்சவர்ணமும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த உண்மை அவனுக்குப் புலனாகியது. ஞானப்பிரகாசம் முகம் சிவந்து போய் ஒரு வகைப் பெருமிதத்துடன் உதட்டைப் பிதுக்கி எதிர்மறையாகத் தலையசைத்தான். நண்பனின் முகத்தில் பொறாமை தோன்றியது அவனுக்குப் புரிந்தது.

       ஞானப்பிரகாசத்தின் கம்பீரமும் ஆண்மையும் நிறைந்த  தோற்றத்தின் மீது பஞ்சவர்ணத்துக்கு இருந்த பொறாமையை அவன் அறிவான்.  எலும்பும் தோலுமாக ஒட்டடைக்குச்சி மாதிரி இருந்த அவனது எரிச்சல் இவனுக்குப் புரிந்தது.  தலைமை எழுத்தர் காட்டிய இருக்கையில் உட்காருவதற்கு முன்னால் மறுபடியும் அவள் கடைக்கண்ணால் தற்செயலாக நோக்குவது போல் அவனைப் பார்த்துவிட்டுத்தான் உட்கார்ந்தாள். அவனுக்கு இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்தது – அவள் பிரிவுக்குள் நுழைந்த போது தன்னைப் பார்த்தவள் பார்த்தபடியே சில விநாடிகளுக்கு நின்றது தற்செயல் அன்று என்பது. இருக்கையில் உட்கார்வதற்கு முன்னால் ஒரக்கண்ணால் தன்னைப் பார்த்தது தற்செயலே அன்று என்பதோ எள்ளளவும் ஐயமின்றி அவனுக்குப் புலப்பட்டது. அவன் மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. ஞானப்பிரகாசம் இருபத்தைந்து வயது இளைஞனாகிப் போனான். காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கனைப்பதை அவனது  முப்பத்தாறு வயது தடுத்து நிறுத்தியதுதான்  அந்தச் சேட்டைகளில் அவன் ஈடுபடாததற்குக் காரணம். ஒருகால் மணமாகாதவனாக இருந்திருந்தால், வயதை மீறிய அந்தச் சேட்டைகளிலும் அவன் ஈடுபட்டிருப்பானோ என்னவோ! ஞானப்பிரகாசம் தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டு வேலையில் முனைப்பாக இறங்கினான்.  ஆனால் பளிச்சென்று துடைத்து ஏற்றி வைத்த குத்துவிளக்குப் போல் சுஜாதா எதிரில் உட்கார்ந்து அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தது அவன் மூளையை இயங்கவிடாமல் அடித்தது. பஞ்சவர்ணம் வேறு தன் கழுகுக் கண்களால் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது அவனைச் சங்கடத்துக்குள்ளாக்கியது.

       இடைவேளையில் சாப்பிடுவதற்காக எல்லாரும் எழுந்த போது அவளும் கிளம்பினாள். அந்தப் பிரிவில் வேலை செய்த அஞ்சுகமும் சுஜாதாவும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்கள்.

       அதற்கு மறு நாள் இரண்டாம் சனிக்கிழமை. அதற்கும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அதனால் இரண்டு நாள்கள் அவர்கள் ஒருவரை யொருவர் பார்க்க முடியவில்லை. திங்கள் கிழமையன்று  சுஜாதா பிரிவுக்குள் நுழைந்த போது சொல்லிவைத்தாற்போல் ஞானப்பிரகாசத்தைப் பார்த்தவாறுதான் வந்தாள். அவளது பார்வையைச் சந்தித்ததும் அவனுக்குப் படபடவென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. அன்று பிற்பகல் அலுவலக வேலையாக அவள் அவனது இருக்கைக்கு வந்த போதோ அவனது மார்பு தெறித்து விடுகிறாற்போல் துடித்தது. எல்லாரும் தன்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தாற்போல் அவனுக்குப் பட்டது. ‘இந்தப் பெண் கொஞ்சம் அடக்கமுள்ளவளாக இருக்கலாம். என்னதான் நான் அழகாக இருந்தாலும் இப்படியா அடிக்கடி ஓரக்கண்ணால் பார்ப்பது?’ என்று அவனுக்குத் தோன்றிற்று.

       அன்று மாலை பக்கத்து இருக்கைக்காரன் பஞ்சவர்ணம், “என்ன, ஞானப்பிரகாசம், ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கண்களைச் சிமிட்டியவாறு கேட்டபோது காரணமின்றி அவனுக்குச் சினம் பொங்கிற்று. மனத்தில் எதையோ நினைத்துக்கொண்டுதான் அவன் இலைமறைகாயாக அப்படிப் பேசினான் என்பது அவனுக்குத் தெரிந்த போது அவன் உள்ளம் சிறுமையில் தவித்தது. எனினும் எதையும் புரிந்து கொள்ளாதவன் போன்று, “தலையை வலிக்கிறது …” என்று சொல்லிவிட்டு அவன் கண்களை மூடிக்கொண்டான். பஞ்சவர்ணம் குறும்புத் தனமாகச் சிரித்துக்கொண்டதை அவன் கவனிக்காதவன் போல் இருந்துவிட்டான்.

       அடுத்த இரண்டு நாள்கள் அவன் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தான். வியாழனன்று அவன் அலுவலகம் சென்ற போது சுஜாதா மட்டும் பிரிவில் இருந்தாள்.  வேறு யாரும் வந்திருக்கவில்லை. சரியாக மணி பத்து. எல்லாரும் உடன் இருந்த போது அடங்கியிருந்த ஞானப்பிரகாசத்தின் மனம் தனிமையில் அவளுடன் இருந்த அந்த நேரத்தில் சண்டித்தனம் செய்தது. அவன் திருட்டுத்தனமாக அவளை அடிக்கடி ஓரக்கண்ணால் நோக்கினான். அவளும் அடிக்கடி அவனைப் பார்த்தாள். அவளுடன் பேச்சுக்கொடுத்துப் பார்க்க எண்ணி அவன் தொண்டையைக் கனைத்துக்கொண்ட போது பஞ்சவர்ணம் சதிகாரன் மாதிரி வந்து தொலைந்தான். அவன் முகத்தில் காணப்பட்ட புன்னகையின் பொருள் புரிந்ததும், ‘நீ நாசமாய்ப் போக!’ என்று மனத்துள் அவனைத் திட்டினான். அதன் பிறகு அவன் சுஜாதாவின் பக்கம் பார்க்காமல் தவிர்ப்பதில் கவனமாக இருந்தான்.

       அன்று மாலை அலுவலகம் முடிந்து எல்லாரும் கிளம்பிய பிறகு ஞானப்பிரகாசம் சற்றுத் தாமதமாகவே புறப்பட்டான். ஓர் அவசர வேலை இருந்ததுதான் காரணம். ஐந்தேகால் மணிக்கு அவன் பேருந்து நிலையத்தை யடைந்த போது அங்கே சுஜாதா நின்றிருந்தாள்.  பக்கத்தில் அலுவலகத்தைச் சேர்ந்த எவரும் இல்லை என்பதை உறுதி செய்துகொனடதன் பிறகு அவன் துணிவாக அவளை விழுங்கிவிடுபவன் போலப் பார்த்துச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.  அவளோடு ஏதாவது பேசலாமா – அவளை ஆழம் பார்க்கலாமா – என்று அவன் நினைத்தபோது வந்து தொலைந்த வண்டியில் ஏறிக்கொண்டு அவள் போய்விட்டாள். ஆனால் அவனிடம் விடை பெற்றுக்கொள்ள அவள் தவறவில்லை. அவள் போன பிறகு எதையோ தொலைத்துவிட்டவன் போல் அவன் வெறுமையாகிப் போன நெஞ்சுடன் அங்கே நின்றான்.

       பக்கத்தில் குழந்தை யொன்றின் மழலையும் அதனோடு கொஞ்சிக் கொண்டிருந்த தகப்பன் ஒருவனின் குரலும் அவன் செவிகளில் விழுந்ததும் அவன் சிலிர்த்தபடி தலையைக் குலுக்கிக்கொண்டான். தான் ஆறு வயசுக் குழந்தை ஒன்றுக்குத் தகப்பன் என்கிற நிலை நினைவுபடுத்தப்பட்டதால் விளைந்த குறுகுறுப்பில் அவன் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு மரம் போல் நின்றான். ‘அழகும் இளமையும் உள்ள இந்த சுஜாதா ஒருகால் அடக்கம் இல்லாத அசட்டுப் பெண்ணாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட அசடுகளிடம் கூட கவனமாகத்தான் பழகவேண்டும். வெளிக்குத் தெரிகிறதை மட்டும் வைத்துத் தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது’ என்று அவன் தனக்குள் எண்ணிக்கொண்டான். எது எப்படி இருந்தாலும், சுஜாதாவின் கண்கள் தன்னை நோக்குகையில் அவற்றில் கனிவு சொட்டுவது அவனுக்கு வெளிப்படையாய்த் தெரிந்தது. இதனால் அவன் தன் மனத்தில் விளைந்த தடுமாற்றத்துக்கு வடிகால் காணாமல் நிம்மதி காண முடியாது என்கிற முடிவுக்கு வந்தான். எனினும், தான் மணமானவன், ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பன் என்றெல்லாமெண்ணி அவன் தன் மனக்குதிரைக்கு லகான் போட்டு நிறுத்த முயன்றான்.

        … மறு நாள் மாலையும் அவன் பேருந்து நிறுத்தத்தில் அவளைச் சந்தித்தான். ‘பக்கத்து ஓட்டலுக்குப் போய் ஒரு காப்பி சாப்பிடலாம். வருகிறீர்களா?’ என்று அவளை அழைக்கத் திட்டமிட்டான். அவனைப் பார்த்துச் சிரித்த அவள், அவனுக்கு அருகில் வந்து நின்று, “எங்கள் வீட்டுக்கு நாளை மாலை வருகிறீர்களா?’ என்று கேட்டாள்.

      ஞானப்பிரகாசம் ஜிவ்வென்று பறந்தான். “எதற்கு?” என்று ஈனசுரத்தில் கேட்டான்.

       “நீங்கள் வாருங்களேன். உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது,” என்றாள் சுஜாதா. ஞானப்பிரகாசத்தால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. “ஆகட்டும், வருகிறேன்,” என்றவன் அவளது முகவரியைக் கேட்டுக் குறித்துக்கொண்டான். மேற்கொண்டு அவன் பேசுவதற்குள் பாழும் பேருந்து வந்துவிட்டது. அவள் கையை ஆட்டிவிட்டு அதில் ஏறிக்கொண்டாள். அவள் தன்னைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தது எதற்காக இருக்கும் என்பதை ஊகிக்க மாட்டாதவனாக ஞானப்பிரகாசம் மண்டையை உடைத்துக்கொண்டான். அவனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. யோசித்து யோசித்துக் குழம்பியபடி வீடு திரும்பிய போதுதான் மனைவி பத்மாவிடம் தலைவலி, வேலை மிகுதி என்றெல்லாம் புளுகி வைத்தான்….

       “கறிகாய் வாங்கி வருகிறீர்களா? என்ன பலத்த யோசனை? கூப்பிடக் கூப்பிடக் காதில் விழாத அளவுக்கு?” என்ற பத்மாவின் குரல் அவனது சிந்தனையைக்      கலைத்தது. அவன் பெருமூச்சுடன் – பத்மாவின் காதில் விழாத பெருமூச்சுடன்தான் – எழுந்தான்.

       மறு நாள் மாலைப் பொழுதை எதிர்நோக்கியபடி ஞானப்பிரகாசம் ஆவலுடன் காத்திருந்தான். ஆயிற்று. ஐந்து மணி அடித்ததும் அலுவலகம் காலியாகத் தொடங்கிற்று. நாலே முக்காலுக்கு அவளது இருக்கைக்குச் சென்ற அவன், “நீங்கள் பஸ் ஸ்டாப்பில் காத்திருங்கள். நான் வருகிறேன்,” என்று மெதுவாக சுஜாதாவிடம் சொல்லிவிட்டுத் தன்னிருக்கையில் வந்தமர்ந்தான். பஞ்சவர்ணத்தின் பார்வையைத் துணிச்சலாகச் சந்திக்கவும் செய்தான்.

      பேருந்து நிறுத்தத்தில் உடனேயே பேருந்து கிடைத்தது. இருவரும் ஏறிக்கொண்டார்கள். மயிலாப்பூரில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு போய்ச் சேரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. தனக்கு அவள் வீட்டில் காத்திருக்கும் ஆச்சரியம் யாதாக இருக்கும் என்கிற எண்ணத்தில் மூழ்கியவாறே அவன் நடந்து சென்றான்.

       :வாருங்கள். இதுதான் எங்கள் வீடு,” என்று அவள் குரல் காதில் விழுந்ததும் அவன் எண்ணங்கள் கலைந்தன. வாசலில் அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல்  நடுத்தர வயதுடைய ஒருவர், “வாருங்கள், சார்! சுஜாதா உங்களைப் பற்றிச் சொல்லி யிருக்கிறாள். … அப்படியே எங்கள் அண்ணாவை உரித்து வைத்தாற்போல் இருக்கிறீர்கள். இவ்வளவு உருவ ஒற்றுமை இருக்கும் என்று நான் கூட நம்பவில்லை!” என்று படபடவென்று பொரிந்து கொட்டினார். ஞானப்பிரகாசத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை.

       “இவர்தான் உங்கள் அப்பாவா? என்ன சொல்லுகிறார்?” என்று ஒன்றும் புரியாதவனாக ஞானப்பிரகாசம் கேட்டான்.

      ”என்ன சித்தப்பா இது?அவர் உள்ளே வருவதற்குள்ளேயே பொரிந்து தள்ளுகிறீர்களே? அவருக்கு நான் இன்னும் விஷயத்தையே சொல்லவில்லை. … அவர் விழிப்பதைப் பாருங்கள். அப்பா மாதிரியே இல்லை?” என்ற சுஜாதா இடிஇடியென்று சிரித்தாள்.

       “என்ன பேசிக்கொள்ளுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?” என்ற ஞானப்பிரகாசம் அவர்களைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றான்.

       “சொல்லுகிறேன் எல்லாம்,” என்ற சுஜாதா, “சித்தி! சித்தி!” என்று கூவியவாறு உள்ளே ஓடினாள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப்பார்த்த சித்தியம்மாள், “ஆமாம். அவர் மாதிரியேதான் இருக்கிறது,” என்று சுஜாதாவின் காதில் முணுமுணுத்ததும் அவனுக்கு நன்றாகக் கேட்டது.

       சுஜாதா கொண்டுவந்து வைத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டவண்ணம், “என்ன பேசிக்கொள்ளுகிறீர்கள் உங்களுக்குள்ளேயே? எனக்கும் கொஞ்சம் சொல்லக் கூடாதா?” என்றான்.

       “இதோ வந்துவிட்டேன், “ என்ற சுஜாதா மறுபடியும் உள்ளே ஓடினாள். சில வினாடிப் பொழுத்துக்குள் திரும்பிவந்த அவள் ஒரு பெரிய புகைப்படத்தை அவனிடம் நீட்டினாள். மார்பளவுப் புகைப்படம் அது. அதில் இருந்த உருவத்தைப் பார்த்து ஞானப்பிரகாசம் அதிர்ச்சி யடைந்தான். கிட்டத்தட்ட அவனைப் போன்றே ஒருவர் படத்தில் காணப்பட்டார்.  தன் புகைப்படமே அது என்பது போல் அவன் ஒரு சில வினாடிகளுக்குக் குழம்பிப் போனான்.

       “என்ன, சார்? உங்கள் நகல் மாதிரியே இல்லை? இவர்தான் எங்கள் அண்ணா. அதாவது சுஜாதாவின் தகப்பனார். அவர் இறந்த போது அவருக்கு முப்பத்தாறு வயசு. சுஜாதாவின் தாயாரும் அவளுக்கு மிகச் சிறு வயதிலேயே போய்விட்டாள். எங்களுக்குக் குழந்தை இல்லை. அதனால் நாங்களே எங்கள் மகளாக இவளை வளர்த்து வருகிறோம். … வேலையில் சேர்ந்த அன்றே சொன்னாள் – ’எங்கள் அலுவலகத்தில் அப்பா மாதிரியே ஒருவர் இருக்கிறார்’ என்று. அதுதான் உங்களை ஆசையோடு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். உங்களைப் பார்ப்பது இறந்து போன அப்பாவையே பார்ப்பது போல் அவளுக்கு இருக்கிறதாம்…” என்று அவளுடைய சித்தப்பா சொன்ன போது ஞானப்பிரகாசம் பாசம் ததும்பும் கண்களால் சுஜாதாவைப் பார்த்துப் புன்னகை செய்தான். அவன் கண்களில் நீர் ததும்பி யிருந்தது. ஞானப்பிரகாசத்தின் உள்ளத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த குழப்பம், கலக்கம், கள்ளம் யாவும் கண்ணிமைப் பொழுதில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தன. அவன் புது மனிதன் ஆனான். சுஜாதாவின் கலங்கிய கண்களில் அவன் தன் மகள் லீலாவின் கண்களைக் கண்டதுதான் அதற்குக் காரணம்.

…….

( ‘இது என்ன பார்வை?’ எனும் இந்தச் சிறுகதை 18.03.1973 கல்கி இதழில் வந்தது. இதன் ஆங்கில மொழியாக்கத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு வார இணைப்புக்கு 17.10.2001 இல் அனுப்பினேன். அது 4.11.2001  சண்டே எக்ஸ்பிரெஸ்-இல் வெளியானதாய் என் குறிப்போட்டில் தகவல் உள்ளது. எனினும் அது வெளிவந்த இதழ் எவ்வளவு தேடியும் காணப்படவில்லை. ஆனால் அது வெளிவந்து நீண்ட நாள் வரை அதற்குரிய சன்மானம் வரவில்லை.  நான் தொலைபேசியில் ஆசிரியர் குழுவை அழைத்து அது பற்றி விசாரித்த போது, பதிலளித்த ஒருவ (அவர் உதவி ஆசிரியர்களில் ஒருவராக இருக்கலாம்) ஆங்கிலத்தில், “The editor has not marked it for remuneration” என்றார். நான் அதற்கான காரணத்தைக் கேட்டிருந்திருக்க வேண்டும். கேட்கத் தயக்கமாக இருந்தது. ‘ஒருகால் பணப் பிரச்சினையோ என்னவோ?’ என்று தோன்றியதால் கேட்காதிருந்து விட்டேன். ஆனால் அது காரணமன்று என்று வெகுநாள் கழித்து ஊகிக்க நேர்ந்தது. திருவனந்தபுரம் வாசகர் ஒருவர் – நான் முன் பின் அறியாதவர் என்னோடு தொலைபேசினார். இண்டியன் எக்ஸ்பிரஸ் இணைப்பிதழில் தாம் படித்த  “THE LOST FATHER” எனும் என் ஆங்கிலச் சிறுகதையை வேறு ஏதோ தலைப்பில் ஏற்கெனவே ஃபெமினாவில் பல நாள் முன் படித்துள்ளதாய்த் தெரிவித்தார். ஆனால் என் தமிழ்க் கதையைத் தம் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே படித்துள்ளதாய்ச் சொல்லுவதாகவும் தெரிவித்து, ‘உங்கள் கதையை யாரோ காப்பி அடித்துள்ளார்கள் என்பது நிச்சயம்’என்று தம் மனைவி கூறுவதாகவும் தெரிவித்தார்.  ஆனால் எந்த இதழ் ஃபெமினா, எழுத்தாளர் பெயர் என்ன என்பதொன்றும் தமக்கு நினைவில்லை என்றார். இத் தகவல் எனக்குக் கிடைத்தபோது சில ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில் இண்டியன் எக்ஸ்ப்ரெசை அது பற்றிக் கேட்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதல்லவா? ஒரு வேளை இண்டியன் எக்ஸ்ப்ரசுக்கே யாரேனும் வாசகர்  ஒரிஜினல் எழுத்தாளரான நானே காப்பி யடித்து எழுதிவிட்டதாய் ஆசிரியருக்கு எழுதி அக்கடிதம் பிரசுரமாகி யிருந்திருக்கலாம்.  நான் தொடர்ந்து அந்நாளிதழை வாங்காததால் அக் கடிதத்தை நான் தவறவிட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அப்போது உதவி ஆசிரியர்களாக இருந்தவர்கள் யாரார் என்பதைக் கண்டறிந்து விசாரிக்கலாம். அதற்கும் வழி இல்லை! தவிர அவர்கள் பணி ஓய்வு பெற்றிருக்கவும் கூடும்தானே! இது போல் புகார் வந்தால் அவ்விதழ் ஆசிரியர் அதை எழுத்தாளருக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அப்படி என்னிடம் அவர்கள் தெரிவிக்கவும் இல்லை! 20 ஆண்டுகள் கழித்து என்ன செய்ய முடியும்?

       திண்ணை வாசகர்களில் எவரேனும் தகவல் அளிக்கக் கூடுமோ எனும் எண்ணத்தாலேயே இந்தப் புலம்பல்!)

…….

 

Series Navigationபெருமைகவிதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *