-முனைவர் என்.பத்ரி
தொழில் துறையினர் கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் “அரசு சொத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நமது பலமும் கூட. தற்போதைய வலுவிழந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் பல காணாமல் போய்விடும். வளர்ந்து வரும் இந்தியாவின் எதிர்கால விருப்பங்களை பூர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்களும் வளர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்’’ என்று கூறியுள்ளதை கவனிப்பில் கொள்ள வேண்டும். இவைகள் படித்த இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை நியாயமான ஊதியவிகிதத்தில், இணக்கமான பணிச்சூழலுடன் பன்மடங்கு தரவல்லன. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவற்றின் எண்ணிக்கை கூடவேண்டும்.ஆனால் குறைந்து வருவது சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு, “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்னும் முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்துவந்த காலம் மாறிவிட்ட நிலையில், தற்போது எல்லாத் துறைகளும் படிப்படியாக தனியார்மயமாகிவருவது வேதனைக்குரியது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் நாடு மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருட்கள்வரை, அனைத்தும் எல்லோருக்கும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதே பொதுத்துறை நிறுவனங்களின் முக்கிய நோக்கம்.
1951-ல் ஐந்து நிறுவனங்களே ரூ. 29 கோடி முதலீட்டுடன் பொதுத்துறையில் இயங்கி வந்தன. இவை 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250க்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடுகளும் கணிசமான அளவு கூடியுள்ளன.இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இறக்குமதியாகும் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை இவைகள் மிச்சப்படுத்துவதும் பாராட்டுக்குரியது.ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் சமீப காலமாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சில பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. நஷ்டம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டாய்ந்து அவற்றை சரிசெய்வது அரசு எந்திரத்தின் எளிதான செயலும், கடமையுமாகும்.மாறாக அவைகளை மூடுவதோ,தனியாருக்கு தாரைவார்ப்பதோ சரியான அணுகுமுறையல்ல.
பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்ட திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை காணாமல் போனால் ,அந்நிறுவனங்ளில் ஏற்படும் நஷ்டங்களும் காணாமல் போகும். இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறனை குறைத்து விட்டன.
பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல், உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல், தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல், தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல், ஊழியர்களின் ஊதியத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கும் நவீனமுறையில் வழிவகை காணுதல், ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்.
நிறுவனங்களின் தலைவர்களாக, இலட்சிய சிந்தனையும், மேலாண்மை படிப்பில் பயிற்சியும் கொண்டவர்களை நியமிப்பது பொருத்தமாக இருக்கும்.பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு, தொழிற்சாலையின் நஷ்டத்திற்கு சார்ந்த அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வைப்பது போன்றவற்றை மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் தர முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்.
அனைத்து துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் ஆரோக்கியமான வகையில் செலவிடப்படுவதை நாம் உறுதிசெய்ய முடியும். இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களான இந்திய ரயில்வேயும் துறைமுகமும் தனியாரிடம் ஒப்படைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.இத்துறைகளில் சாமான்ய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம். நகர்ப்புற போக்குவரத்து,விவசாயம், சமுதாய வளர்ச்சி, நீர்ப்பாசனம், மின்சக்தி, கனிமம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சமூகசேவைகள், வீட்டுவசதி, எரிவாயுக் குழாய்கள், மின்சாரம், ஆயுள்காப்பீடு, வங்கிகள் போன்ற மக்களின்அன்றாடத்தேவை துறைகள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்பட்டால்தான் மக்கள் நலன் காக்கும் அரசினை காணமுடியும். நாட்டு முன்னேற்றத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு ஏராளமானவை.அரசு எந்திரம் நாட்டில் எந்த தனிநபரை விடவும் அதிக வல்லமை படைத்தது. எனவெ பொதுத்துறை நிறுவனங்களை புணரமைத்து செயல்பட வைப்பது சாத்தியமே. அப்போதுதான் வீடும்,நாடும் வளம் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தொடர்புக்கு:
9443718043/7904130302nbadhri@gmail.com