குரல்

This entry is part 10 of 11 in the series 21 ஆகஸ்ட் 2022

 

              ஜனநேசன்

   கொரோனாவுக்கு  முந்திய  காலம். 2௦19 மார்கழியில் ஒரு  காலையில் நான் குளியலறையில் இருந்தேன்; படுக்கையில் கைப்பேசி ஒலித்துக் கொண்டேயிருந்தது . அணைந்து மறுநிமிடம்  மீண்டும் ஒலித்தது. காலைநேர கைப்பேசி அழைப்பென்றால்  துக்கச்செய்தியின் படபடப்பு தொற்றிக் கொள்கிறது. வெளியே  வந்ததும்  கைப்பேசியை  எடுக்கையில் மீண்டும்  அழைப்பு அதிர்ந்தது ; காரைக்குடியிலிருந்து சொக்கலிங்கத்தின்   எண். நொடியில்  எங்களிருவருக்கும்   நெருக்கமான வயசாளிகளின் முகங்கள்  மனதில் மின்னியது . மனதை ஒருநிலைப் படுத்தி ,என்ன விவரம் சார் என்றேன்.

  “ஒன்னுமில்லைங்க சார், சும்மா நலம்  விசாரிக்கத்தான் கூப்பிட்டேன்; நல்லா இருக்கீங்கல்ல . உடம்புக்கு எதுவும் பிரச்சினை இல்லையில்லை “ என்று அவர் பேசும்போது கோபம் பொங்கியது ;மனதை அடக்கிக் கொண்டேன் ;  நல்லாயிருக்கேன் சார், எதுவும் பிரச்சினையா என்றேன். அவர் ; மாதவன் சார் உங்ககிட்டப் பேசனுங்கிறார் என்று கைப்பேசியை  மாதவன் சாரிடம் கொடுத்தார்.

  மாதவன் ; ”சார், நல்லாயிருக்கீங்கில்ல  சார். சாரி சார்.காலையில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டோம். காலையில் ஆறுமணிக்கு நம்ம மெய்யப்பன் வந்து எங்களை கலக்கிட்டார் ;  நீங்க  மதுரை ஆஸ்பத்திரியில் இறந்துட்டாதாக   தகவல் வந்ததாகவும் , மாலை இங்கே வாங்குவமா, மதுரையில் போய் வாங்குவோமான்னார். உறுதிப்படுத்திட்டு சொல்றேன் ; எட்டுமணிக்கு வாங்கன்னு அனுப்பிட்டு, உங்களுக்கு  பேசினேன் . நீங்க போனை எடுக்கலை . பயம் கூடியிருச்சு; உங்க மனைவி, மகன் நம்பரும் எங்ககிட்ட இல்லை. வயிறு கலக்கிருச்சு; பாத்ரூம் போய் வந்து மறுபடியும்  கூப்பிட்டேன். நீங்க எடுக்கலை . அந்த சமயத்தில் வாக்கிங்க்கு    கூப்பிட  சொக்கலிங்கம்  வந்தார். முழுவிவரமும்  சொல்லாம உங்களுக்கு போன் போடச் சொன்னேன் ; உங்க குரலைக் கேட்டதும்  தான் எனக்கு உயிர் வந்துச்சு “ என்று குரலில் படபடப்பும், தழுதழுப்பும்    தொனிக்கப்  பேசினார்.

   எனக்குள்  சிரிப்பு முகிழ்த்தது ; கட்டுபடுத்திக் கொண்டு ,” சார், நான் நல்லா இருக்கேன் சார் ; எனக்கு உடம்பில் எந்த கோளாறும் இல்லை. பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது நேரில் பேசுவோம் சார்.மெய்யப்பனை  திட்டியிறாதீக. அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் ;என்மீதான அதீத பிரியத்தால  அப்படி சொல்லியிருக்கிறார். உங்ககிட்ட  சொன்னமாதிரி  இன்னும் எத்தனை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாரோ  தெரியலை.  இனி எல்லாருக்கும் பேசி எனது இருப்பை நயமாய் சொல்லணும் “

“என்ன சார், நான் கதிகலங்கி பேசுறேன்; நீங்க ஒண்ணுமே பாதிக்காத மாதிரி பேசுறீங்க.”                                                                                      “சார், நாம அதீத அன்புகொண்டவருக்கு ஏதும்  ஆகிறக்கூடாதுங்கிற கூடுதல் கரிசனம் தான். இதுமாதிரி எல்லாருக்கும் தோன்றும். நம்ம நல்ல மனநிலை  உள்ளவங்க, பிரியமானவருக்கு  எதுவும் நேர்ந்துறக் கூடாதுனு வேண்டுதலோடு  நமக்குள்ளே  வைத்துக் கொள்வோம். மெய்யப்பன் தற்போது மனநிலை குலைந்திருக்கிறார். மனசில தோனுனதைச்   சொல்லிட்டார். அதனால அவரை ஏதும் கண்டிச்சிறாதிக. நம்மலை விட்டா அவருக்கு உதவுவாரில்லை.                                                          நான் உயிரோடு இருக்கும்போதே  என் மரணத்தை பற்றி கலங்கும் உங்களைப் போன்ற  நண்பர்களை மெய்யப்பன் அடையாளம் காட்டிட்டார். அவரது மகனிடம் சொல்லி அவரை மனநோய் மருத்துவரிடம்  அழைச்சுப் போகச் சொல்லணும்.நன்றி சார். ஜெயராமன், ஜீவா அழைப்புகள் மாறிமாறி வந்துகிட்டிருக்கு.அப்புறம் பேசறேன் சார் .”                                                          அழைத்திருந்தவர்களிடம்  பேசி எனதிருப்பை காட்டிக்  கொண்டிருந்தேன். நான் வெளியே வந்து பேசும் தொனியிலிருந்து   அரைகுறையாக புரிந்து  மனைவி ,யாருக்கு, என்னாச்சுங்கனு வினவ , அப்புறமா  சொல்றேன்னு சமாளித்தேன்.

   மெய்யப்பன்  என்னைப்போல்  இன்னொரு நண்பரும்  சீரியஸாக  இருப்பதாகவும்   சொல்லி  கலக்கிவிட்டார். அந்த நண்பரும், நானும்                மெய்யப்பனுக்கு நெருக்கடியான  காலங்களில் உதவுபவர்கள். இது ,                        மெய்யப்பனுக்கு  மனநிலை குலைந்திருக்கிறதை  உறுதிபடுத்துகிறது .                   மெய்யப்பனுக்கு  போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. பலரிடம் விசாரித்து  அவரது மகனின் எண்ணைப் பெற்று விசாரித்தேன்.அப்பாவும் , மகனும் பேசிக்கொள்வதில்லையாம் .அவர் மகள் வீட்டுக்கு போயிருக்கலாம்  என்று விசாரித்தால்  அங்கும் அவரில்லை. குழப்பமாக  இருகிறது .

                                                                                                                                                                                                      ********* 

                                                                         மெய்யப்பன்  குடிமைப்பொருள் கொள்முதல் துறையில்  பணியாற்றியவர்; யாரிடமும்  லஞ்சமாக பொருளாகவோ, பணமாகவோ  பெறமாட்டார். அவர்மட்டும்  லஞ்சம்  பெறாததே  அவரது பலவீனம். இவரது  அலுவலகத்திற்கு  வரும் விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு  அரசுவிதிகளுக்கு ஏற்ப  உதவியாக இருப்பார். ஆகவே அவர்கள்  பிற ஊழியர்கள் இல்லாத  தருணங்களில் இவரை பெருமையாகப் பேசுவர். இவரது சகாக்ககள் இவரை ஒதுக்கி வைத்திருந்தனர் .  இவர் அவர்களை ஊழல் பெருச்சாளிகள்  என்பார். அவர்கள்  இவரை மறை கழன்றவன்  என்றனர். தான் ஒருவனே நேர்மையானவன் என்ற மிகை நினைப்பே  யாரோடும் ஒத்துப்போகாத மனநிலையை உருவாக்கி விட்டது.

   இவரை பிழைக்கத் தெரியாத ஜன்மமென்று முத்திரை குத்திய மனைவி மக்களுக்கு  எல்லாம்  இவர் பெயரளவில் தான்.எனினும் இவர்  வாங்கிய சம்பளத்தில்   அன்றாட கைச்செலவுக்கு  எடுத்துக் கொண்டதுபோக  அப்படியே வீட்டில் கொடுத்து விடுவார். பண்டிகை முன்பனம், பிள்ளைகள் படிப்புச் செலவுக்கு வருசாந்திரம் பொதுவைப்பு நிதியிலிருந்து கடன்கள் பெற்று  அப்படியே  மனைவியிடம் கொடுத்து விடுவார். புண்ணியவதி மனைவி இருந்தவரை   இவருக்கு  பிரச்சினைகள்  தெரியவில்லை. கல்யாணமாகி தனித்தனியே போன மகளும், மகனும் இவரைக் கண்டு கொள்வதில்லை. அலுவலகம் விட்டால்  சங்க அலுவலகம்; சங்கவேலை இல்லாவிட்டால் வீடு என்று இயங்குபவருக்கு  சங்க நண்பர்களும், மகள்வழி பேரப்பிள்ளைகளுமே ஆறுதலைத் தருபவர்கள் .

  தன்னைச்சுற்றி நடக்கும் தவறுகளை சகிக்காத குணம் கொண்ட                 மெய்யப்பனுக்கு மொட்டைப்பெட்டிசன் போடும் வழக்கமுண்டு போலும். நெல்கொண்டு வரும் விவசாயிகளிடம்  அலுவலர்கள் கையூட்டு பெறுகிறார்கள் என்ற புகாரை விசாரிக்க வந்த மண்டல அலுவலர்கள் ,முடிவில் ,குடோனிலுள்ள பழைய காலி சாக்குகளின்  இருப்பில் பத்து சாக்குகள் குறைகிறது   என்றும் இந்த இழப்புக்கு மெய்யப்பனே பொறுப்பு என்று  மண்டல அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பிவிட்டனர்.  

  தன்னை  பழிவாங்கவே  பத்துசாக்குகளை  ஒளித்துவைத்துவிட்டு  குற்றம் சாட்டுகின்றனர்  என்று மறுத்தார்.இவரது  மறுப்பை  ஏற்காமல்  பட்டுக்கோட்டைக்கு மாற்றிவிட்டனர். இவரால் அரசுக்கு 250 ரூபாய்   வருவாயிழப்பு என்று 250 ரூபாயை கட்டச் சொல்ல்லவும் , என்னால் ஏற்படாத இழப்புக்கு நான் பணம் கட்டினால் நான் குற்றவாளி என்று ஒப்புக்கொண்டது போலாகும்  என்று  மறுத்துவிட்டார்.  அரசுவிதிகளுக்கு  கீழ்படியவில்லை என்று மெய்யப்பன் ஓய்வுபெறுவதற்கு ஒருநாள் முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

   சங்கத்துக்காரங்க இருதரப்பாரிடமும் பேசினதில்  இருதரப்பினரும்  ஒத்துக் கொள்ளவில்லை. ஆறுமாதம் கழித்து  இவரது  பணியிடை நீக்கத்தை இரத்து செய்து முழு ஓய்வூதியம் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். எந்த பலனும் கிட்டவில்லை. நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். வழக்கு இழுபட்டுக்கொண்டு இருக்கிறது. இவரது செலவு களுக்காக ரியல்எஸ்டேட்  தரகர்களோடு  சேர்ந்து  திரிந்தார்.

 இரநூற்றைம்பது ரூபாய் கட்டிவிட்டு  முழுபென்ஷனை  வாங்குறதை விட்டுட்டு  ,பொய்யையே  மூலதனமாகக் கொண்டவர்களுடன்  இப்படி அலைந்து , உடலைக் கெடுத்து அலைகிறீர்களே  என்று கேட்டோம்.                  சோத்துக்கில்லாம  செத்தாலும் சாவேனே ஒழிய ஊழல்பெருச்சாளிக கிட்ட குற்றவாளின்னு  ஒப்புக்கொள்ளமாட்டேன். கோர்ட் தீர்ப்பு சொல்லட்டும். என்று ஆவேசமாகப் பேசுவார். மெய்யப்பனிடம் வறட்டுபிடிவாதம் இருக்குமே தவிர  சின்னப்பிள்ளை மாதிரி சுறுசுறுப்பா  சங்கவேலைகள்   செய்வார். அவரை ஒதுக்க மனம் வராது.

             **********

 இப்போது மெய்யப்பனைக்  காணவில்லை. போனையும் எடுக்கவில்லை .  ரெண்டுநாள் கழித்து போனில்  அழைத்தேன் . போனை எடுத்தார்.  எப்படியிருக்கீங்க , எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன்.அவர், “தோழரே , நல்லா  இருக்கீங்களா , நீங்களும், ஆர்ஜெயும் சீரியஸா இருக்கிறதா தாக்கல் வந்தது. எனக்கு மனசு சரியில்லை.ரியல் எஸ்டேட் கமிஷன் பத்துலட்சம்  கிடைக்கணும்; அதுவும்  லேட்டாகவும்  நிம்மதியில்லாம திருச்செங்கோட்டில  தங்கச்சி வீட்டுக்கு வந்திட்டேன். உங்க குரலைக் கேட்டதும் தான் எனக்கு உயிர் வந்தமாதிரி இருக்கு .” என்று சோகம் இழையோடிய குரலிலும்  உற்சாகம்  தென்பட்டது.

 மெய்யப்பனிடமிருந்து  கைப்பேசியை வாங்கி அவரது  தங்கை பேசினார்; “சார், நல்லாருப்பீங்க ,ரெண்டுநாளா சரியா சாப்பிடாம  சீக்குகோழியாட்டம்  சொணங்கி படுத்துக் கிடந்தவர் உங்க குரலைக் கேட்டதும் துள்ளி எந்திருச்சு பேசறார். அப்பப்ப பேசி அவருக்கு நல்லவார்த்தை சொல்லி தேர்த்தி விடுங்க சார்.”

  மெய்யப்பனிடம் ஆறுதலா பேசினேன் .பொங்கலுக்கு  நீங்க ஊருக்கு வரும்போது , நான் உங்களைப் பார்க்க வர்றேன் என்றார்.இதற்குப்பின்  மெய்யப்பனை  நேரில் பார்க்கவில்லை. வாரம் ஒருமுறையாவது பேசுவேன் ; ’முதியவர்கள், தளர்ந்தவர்களிடம்  பேசுவது என்பது உயிரை மீட்டுவது ‘ எனும் பாடத்தை மெய்யப்பன் மூலம்  கற்றுக்கொண்டேன் . நானறிந்த  அனைத்து முதியவர்களிடமும்  தொடர்ந்து  பலவற்றைப் பேசி பரஸ்பரம் உயிர்ப்பித்து கொள்கிறோம் .தக்கமருந்து கண்டுபிடிக்காத கொரோனா காலத்தில் தளர்ந்தவர்களிடம் பேசுவது அருமருந்தாக  இருக்கிறது.

 மேமாத  நடுஇரவில்  மெய்யப்பனின்  தங்கை பேசினார்;”அண்ணனுக்கு கொரோனா வந்து பெரியாஸ்பத்திரியில்  சேர்த்திருக்கோம். உங்ககிட்ட பேசனுமுன்னு  எழுதிக் காட்டினார் ; ஆக்ஸிஜன் ஏறிகிட்டிருக்கு;அவரு காதுகிட்ட போனை வைக்கிறேன்; உங்க குரலைக் கேட்டா  அவரு தெம்பாயிருவார் .நீங்க இதமா பேசி தெம்பூட்டுங்கண்ணே”

 மெய்யப்பனிடம்  பேசினேன் , கடைசியாக.

               *****

    

Series Navigationஅணுப்பிணைவு முறை மின்சக்தி உற்பத்திக்கு கட்டுப்பாட்டுத் தூண்டியக்கம் முதன்முதல் கண்டுபிடிப்பு.வாசிப்பு அனுபவப்பகிர்வு : எழுத்தாளர் நடேசனின்  புதிய நாவல்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *