ப.அ.ஈ.ஈ.அய்யனார்
கிளைமுறிந்த சோகத்தோடு
ஊர் திரும்புகிறது
கூடற்ற வலசைகள்…
கோடாரியோடு வந்தவனுக்கும்
அட்சதை தூவுகிறது
உச்சிக்கிளைகள்…
பீறிட்டுச் சாய்ந்தது
முதல் வெட்டிலே
அழகிய ஒத்த மரம்…
நிர்வாண வீட்டுக்கு
ஆடை உடுத்திய மரம்
நிர்வாணமாகிறது இன்றோடு…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
கிணற்றடியில் ஓர் நீரூற்று
வெடித்துச் சிதறிய மரத்தில்
உதிரும் பூக்கள்
முத்திய நெற்றோடு
புடைத்த குழைகள்
ஒத்த வீட்டில்
அழுகும் மழலையின் குரல்
மூலையிடுக்கினுள் நிமிரும் மாடம்
தும்பு தெறித்த
சினைக்கிடாரியின் செருமல்
நிலவை உமிழும் பூவானம்
பூந்தென்றலை விழுங்கும் இரவு
பாதை வடிக்கும் மின்மினி
கட்டற்ற வெளியில்
ஆழத்துயிலும் உயிரற்ற உடல்கள்
யாவும் இவைகள்
கிழிந்த இதயத்தை
தைத்து விடுகின்றன…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
அகலப் பட்டியக்கல்லின் மேல்
நெத்தி நீர் பூக்க
நுரை பொங்கி வடிய
துவைத்துக் கொண்டிருந்தேன்
கிளை வளைந்த
இரட்டைக் கொய்யா மரத்தை
கொஞ்சி மகிழும்
கரிச்சான் குருவிகளின்
க்ரீச் க்ரீச் என்ற ரீங்காரம்
மணற்படுகையில்
நெடிய பாயும்
கடலலையாய்
சிறுநாளிகை
வறண்ட போன
இருண்ட காதினில்
தழும்ப பாய்கிறது…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
கட்டற்ற வெளியில்
பெய்திடும் வெந்நுரை பனி
அலகை நீட்டும்
வானம்பாடியிடம்
மெல்ல திறந்து விடுகிறது
பூப்பெய்திய
பொன் வானத்தின்
மார்கழி வாசலை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
கதிரறுத்து சூடடித்து வந்தவள்
மீண்டும் செல்கிறாள்
சண்டு புடைக்க
கூலிக்காக அல்ல
கூப்பாடு போடும்
கூட்டுப் பறவைகளுக்காக…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
புதையுண்ட அடிசகதியில்
பூத்து மேலெழும்
செங்காந்தள்களின் முகத்தில்
வீசும் பிறையின்
இரவின் திசையில்
காய்ந்து உறைந்தன
இரத்தத்தின் பிசுபிசுப்புக்கள்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
காலாறிவிட்டுச் செல்லும்
கூடுகள் இழந்த பறவைகளோடு
மஞ்சள் வடியும்
மங்கையர் மாலையில்
பிடிச்சோற்று
கிண்ணத்துப் பருக்கையில்
பசியாற்றிச் செல்கிறது
தாயில்லா பிள்ளை
நதிக்கரை படியில்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
சாய்த்துவிட்டுப்போனது
பூவரும்பிய மரத்தை
வேரோடு புழுதிவார் காற்று
எனினும்
மார்பிலே தாங்கி
மடியிலே வாங்கி
மறுபூக்கச் செய்தாள்
நிறைசூல் பூமித்தாய்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
முண்டித்தவிக்கிறது நாக்கு
பல்லிடுக்கினுள் சிக்கிய
வெள்ளாட்டு எலும்புடன்…
கிடத்தி அமர்கிறாள்
மீண்டும் எழும்புகிறது
மழலையின் குரல்…
கெழக்கு வானம்
திறந்து விடுகிறது
கூரையின் ஒத்த வாசலை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
நதிகள் மடியமர்த்தும்
மணல் வெளியில்
புதைந்து கிடக்கிறது
மெல்லிய பூங்கண்கள்
கசிய சிவந்து
கீச்சிடும் உதடுகள்
வெடித்துச் சிதறிய
ஈரமான அன்பின் சொற்கள்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
விருட்டெனப் பறக்கிறது
காய்ந்த புற்றை கரைக்கும்
ஈர மழை
நெடிய வகுடெடுக்கிறது
பந்தற்கொடி
பூக்கும் காலம்
ஊற்றிக் கொண்டிருக்கிறது
கண்களின் தீராத ஊற்று
அலைபாயும் மேகங்கள்
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
வெய்யில் உச்சத்தின்
மாந்தோப்பில்
இளைப்பாறும்
தேன் சிட்டுக்கள்
உதிர்த்து விட்ட
மெல்லிய இறகொன்று
பிரபஞ்சத்தின் திறவுகோலாய்
திறந்து விடுகிறது
மௌனிக்கும் பூங்கண்களை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
ஊர் கூடி பார்த்த முகம்
முச்சந்தியோடு திரும்புகிறது
இறுதி ஊர்வலம்…
சுண்டி இழுக்கிறது
இலவம் பஞ்சு
நிமிரும் மாடத்தீபம்…
கேட்டு அழுதன
அணில் குஞ்சுகள்
வாய் திறக்கும் தாழிப்பானை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
அவள்
உரித்து தொங்கவிட்ட
சொற்களின்
நிர்வாணத்தை
நிலைக்கண்ணாடியில் பார்த்தேன்
எதிர்மறை பிம்பமாய்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
பெண்மையெங்கே
தெரியப்போகிறது
வடுக்கள் சிதறிய
பொந்துகளில்
ஆழப்புணரும்
ஆண்கத்திகளுக்கு…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
நீட்டியமர்ந்த தாழ்வாரத்தை
நிலைகுலைத்து விட்ட
பெருங்காற்றின் அபத்தம்
நகக்கனுவிலேறிய முட்களாய்
மென்மார்பில்
துடிக்கும் வலியாய்
விடாமல் தொடர்கிறது
இழந்த குடிசைகளை நினைத்து…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
நிர்வாண முள்வேலியில்
நிலைதொங்கிய
கள்ளிப்பழங்கள்
நுகர்கிறது
தொட்டழையும்
ஈரமார்பின்
முத்தக்காற்றை
ஒவ்வொரு முறையும்
இவள் சீலை துவைத்து
காயப்போடும் போதெல்லாம்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
இடைமச்சங்களின்
நிரம்பல்களாய்
உரிக்கப்பட்ட சொற்கள்
திமிறிக்கொண்ட களத்தில்
சுரக்கும் தேனாய்
அகல இதழ் வடிக்கும்
கிண்ணத்து பாலாய்
வழிந்து கொழியும்
நிரம்பல்களை
ஏந்தி வருடுகிறது
மெல்லிய நா…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
பறவையின் எச்சம்
தாளப் பறக்கிறது
ஏந்தும் கிளைகள்…
பூச்சொரியும் மழையில்
புன்னகைக்கிறது
மற்றுமோர் வானவில்…
கூழாங்கற்களை
காற்சிலம்பாக்கியது
சுழலும் ஓடைநீர்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
தீண்டிச்செல்லும் காற்றுடன்
தலைநீட்டியது
அழகிய
பூவனங்கள் மட்டுமல்ல
முற்றிலும் உதிர்ந்த
மொட்டையில்
மிச்சமிருக்கும்
மயிரிழைகளும் கூட
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
சாயும் மரத்தின்
இறுதி மூச்சு
சடசட ரீங்காரம்…
கான்கிரீட் கரையால்
தடமாறிப்போனது
ஊர்மெச்சிக்குளம்…
வெந்த பிறகு
உயர்ந்தாள் மலமலவென
குட்டைப் பொன்னி…
சாரல் மழையிலும்
திக்கு முக்காடியது
சன்னதி வீதி…
வெள்ளாடு வாங்கப் போய்
வெடக்கோழி வாங்கி வந்தான்
வெசமான விலையேற்றம்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
சிதலமடைந்த
மேனிபிளந்த
காரைச் சுவர்களில்
நெடிய சுவரெழுப்பும்
வலைச் சிலந்திகளோடு
முட்டி மோதிக்கொண்டு
குடி புகுந்தன
நீர் வற்றிய
பெரும்பூசணிக் கொடிகள்
அனாதையாகிப் போன
அறிவுக்கொடியின்
சொப்பன வீட்டில்
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
தலைகவுந்த
வெண்கல
சருவபானையில்
சடசடவென
கொட்டித்தீர்த்த
கொழுவங்கெணத்து தண்ணீரில்
ஒத்தையடி அகல வரப்பில்
நிலைக்குத்தி நிற்கிறது
வாசனைப் புல்கள்
புனையப்பட்ட
மயிர்க்காம்புகளாய்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
செங்கனல் முற்றித் ததும்பும்
செந்தீப் பொறியாய்
சுதந்திர தீ
சுரந்து கொண்டிருக்கிறது
இரத்தநாளங்களிலும்
இதயத்தின் சுவடுகளிலும்
இன்று புன்னகைக்கும்
நம் மௌன உதடுகளுக்காக
சிந்திப் பாய்ந்த
குருதி ஓடைகள்
எத்தனையோ
எழுவோம் உணர்வோம்
அமுதமெனும் சுதந்திரத்தை
ஏந்தி மகிழ்வோம்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
அதே வீதி
ஆழ்ந்துறங்கும் திண்ணை
தேய்ந்த செருப்பின் சவுக்கடி சத்தம்
மீன்கொச்சையில்
வத்திப் போன கூக்குரலுடன்
வியர்வை படிந்த வடுக்களுடன்
அரைபடி மீனுடன்
அள்ளிமுடிஞ்ச
கிளிக்கொண்டையுடன்
கூடையை இறக்குமவளுக்கு
ஒத்தடங்கொடுக்கிறது
கடைசி படி
இளைப்பாற்றும்
உப்புக்காற்றைப்போல…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
உப்புக்கள் படிந்த
வடியாற்றினை
கிடத்தியமர்த்தும்
இளமித தென்றலாய்
தாயின் ஈர முத்தங்கள்
கரிசக் காட்டில்
தொட்டிலில் கிடக்கும் பிள்ளையை
மணிக்கொருமுறை
இளைப்பாறும் பொழுதெல்லாம்
கிடத்தி அமர்த்துகிறது…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
காட்டுக் கருவை தூரைப்போல
கனத்திருச்சு அவள் கெண்டகாலு
கருவேலம் பூ போல
விரிஞ்சுருச்சு அவள் மொகம்
அஞ்சுமொக வெளக்கு போல
அஞ்சி அஞ்சி எரிகிறாள்
போர் தொடுத்த வேம்பு
வேரோடு சாய்கிறது
வலுவடைந்த புயலால்…
கிணற்றின் மடியை
முண்டிக்குடிக்கிறது
கீற்றின் நிழல்…
ஈர முந்தாங்கியில் வந்தது
களையெடுப்பில் மிஞ்சிப்போன
அத்தக்குழி பனியாரம்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
இவள் முகம்
ஈரச்சுவடுகளின்
இடையில் தளிர்க்கும்
காய்ந்த வேர்கள்போல
நீண்ட இடைவெளிக்குப்பின்
கருவறையில் தரிக்கும் செம்முட்டை
மலடியென்ற
நாற்றம்வீசும்
கொடுஞ்சொல்லை
வேரறுக்கிறது
காத்துக்கிடந்த
கருப்பாயிக்கு
ஏந்தும் மரக்காலில்
சிதறும் நெல்மணிகளய்
பொக்கைச் சிரிப்பும்
பொங்கும் அலையும்
எங்கும் திக்கெட்டும்
இவள் முகத்தில் இன்று…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
அன்னையின் மடியில்
ஆழத்துயிலும்
இதயச்சுவடுகளின்
ஈரத்தின்
உவகையே அன்பு
ஊர்க்குருவிகளாய்
எல்லையற்று
ஏந்திய வானத்தில்
ஐம்பெருங்கடல் தாண்டி
ஒய்யாரத்தில்
ஓங்கியடிக்கும்
ஔவையின் சிறகே
அன்பின் கீற்று…
அன்புடன்
அய்யனார் ஈடாடி…
மூன்று வரி ஐக்கூ
மேலத்தெருவும்
கீழத்தெருவும்
ஒன்றாக கலந்தன அன்பில்…
நிலைக்குத்தி நிற்கும்
சம்பை அப்பிக் கொண்ட
நாற்றங்காலில்
மரங்கொத்தி
உதிர்த்துவிடும்
தூவும் கருவேலம் பூக்கள்
சேற்றில் புரண்டன
கிழிந்த கொடிச்சீலைகள்
உயரப் பறந்த வலசைகளை
அணைத்துக் கொண்டது
அரை வானில்
கிணத்தைப் பருகும்
அகல வாளியாய்
பருகிக்கொண்டிருக்கும்
செங்கதிர்
விரலொன்றில்
சுரையிரண்டும்
மேவிய முகடில்
தொலைத்து விட்டு வந்தேன்
வெறுங்கையோடு…
ப.அ.ஈ.ஈ.அய்யனார்
- பிரபஞ்சத்தின் வயது என்ன ?
- சித்தரும் ராவணனும்
- தேமல்கள்
- ஒரு வழிப்பாதை
- கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிகிறார்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்
- கவிதை
- பூவம்மா
- மெட்ராஸ் டூ தில்லி
- உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3
- சிமோன் அப்பா
- கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
- கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்
- மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின் பங்கு