சியாமளா கோபு
“என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே” என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள். எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை அதக்கிய வாயோடு இவள் பேசுவதை புரிந்து கொள்வது கேக்கறவங்க பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. மென்னு மென்னு சாரற்ற வெத்திலையை விட இந்த சங்கதி அதி முக்கியம். ஆட்டைப் பிடித்துக் கொண்டு போகும் பூவம்மாவை கேட்டாள் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த செல்லம்மா பாட்டி. “போயிட்டு வரையில மறக்காம எனக்கு ஒரு தைல குப்பி வாங்கியா பூவு. முட்டுவலி ஆளைக் கொல்லுது”
“உக்கும். இங்கே போவறதுக்கே அடி வயிறு கலக்குது” என்று நொடித்துக் கொண்டு நடந்தாள் பூவம்மா.
கொஞ்ச நிலபுலமும் ஆடு மாடு கோழிகளும்..ஆங் ஒரே ஒரு மகளும் உள்ளது பூவம்மா மணியன் தம்பதிகளுக்கு. இவர்கள் மகள் கண்மணி படிப்பிலும் அறிவிலும் மகா கெட்டி. அழகிலும் அம்சமானவள் தான். படித்து விட்டு சென்னைக்கு போனாள். இவர்கள் கல்லுவூடு கட்டி பெரிய தொலைகாட்சி பெட்டி வைத்து என்று அடுத்தகட்ட வசதி வாய்ப்புகள் உண்டாயிற்று. மகளைப் பார்க்க ரயிலேறி சென்னை போய் ஊரை சுற்றிப் பார்த்து பரவசப்பட்டு வந்தவர்களுக்கு அந்த கதையை அக்கம்பக்கத்தில் சொல்லி முடிக்க ஒரு வருஷம் ஆச்சு. அவ்வளவு கதைகள். அவ்வளவு அதிசயங்கள்.
கண்மணிக்கு கல்யாணம் செய்யணும். உள்ளூரில் இருக்கும் சொந்தக்காரர்களில் நல்ல வசதியான வூட்டுக்காரவக நடையா நடந்தும் ஒருத்தருக்கு கொடுத்தால் மற்றவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளனும் என்று நேக்காக முடிவெடுக்கும் பொறுப்பை “எங்க மவளுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கணும்” என்று மகள் பக்கம் படகை தள்ளி விட்டார்கள்.
நந்தகுமாரை போட்டோவில் பார்த்ததுமே கண்மணிக்கு பிடித்துப் போய் விட்டது. எஞ்சினியரிங் படித்த கண்மணிக்கு பிடித்தவனையே வெளிநாட்டில் வேலை செய்யும் எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அம்மாம் தொலவுல பிள்ளையைக் கொடுக்கறியே. ஒரு அவசர ஆத்திரம்னா பட்டுன்னு போய் பார்க்க முடியுமா? இல்லே நீ தான் இங்கன மொட்டு மொட்டுன்னு தனியா இருக்க முடியுமா? என்று உடன்பிறந்தவர்கள் சொந்தபந்தம் தோழர்கள் பயமுறுத்தினார்கள். புள்ளைய பாக்க முடியாதுங்கிறத விட புருஷனும் பொண்டாட்டியுமா தனியா இருக்கணுமே என்ற நினைப்பே சங்கடப்படுத்தியது.
பூவம்மாவின் ஒரு தோழி மட்டும் உன் மகளுக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தால் தைரியமா குடு. அதும் வாழ்க்கை தான் முக்கியம். பொண்ணா பிறந்தா ஒரு நாள் பிறந்த வீட்டை விட்டு போவது கட்டாயம் என்றான பின்பு அமிஞ்சிக்கரையா அமெரிக்காவான்னு பார்க்க முடியாது என்றாள். உம்மவ பக்கத்து வூட்லயே இருந்துட்டா மட்டும் தினப்படி அவ வூட்டு வாசல போய் நிப்பியா என்ன? இல்லே உம்மவ தான் பொழுது வெடிஞ்சா இங்க வந்து நிக்கப் போறாளா? என்று கேட்டு பூவம்மாவை யோசிக்க வைத்தாள். அதானே!
மகளும் யம்மா, யம்மா நான் ஒரு பத்து வருஷம் வெளிநாட்ல இருந்துட்டு வரேனே என்று கெஞ்சுவது போல சொல்லவும் மனசார சந்தோஷமாக கட்டி வைத்தாள்.
திருமணம் முடிந்து நல்லவிதமாக குடும்பம் நடத்தி கருவுற்ற மகளை பார்க்கப் போக வேண்டும். மணியனுக்கு வெளிநாட்டுக்குப் போகிறோம். ஒரு வருஷமா மகளைப் பாக்காம கண்ணு பூத்துப் போயிருக்கு. பிள்ளையைப் பார்த்தா தான் மனசு சரிப்படும். அதனால் அவன் பயணத்துக்கு தயாராகத் தான் இருந்தான்.
ஆனால் பூவு..பூவம்மா…?
முதல் விமானப்பயணம்.
நினைத்தாலே இனிக்கும் இல்லையா!
இல்லை.
மகளை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட விமானத்தில் போக வேண்டும் என்ற அதிர்ச்சி வயிற்றில் புளியை கரைத்தது. உள்ளூர் திருவிழாவில ரங்கராட்டினம் ஏறினாலே தலை சுத்தி அலறி ஆர்ப்பாட்டம் செய்பவள் அவள்.
விமான நிலைய நடபடிகள் முடித்து இருக்கையில் அமர்ந்து விட்டார்கள். அதிகாலை நேரம். எதிகாட் பணிப்பெண்கள் அழகு தேவதைகளாக இளவரசிகளைப் போல மிடுக்காக வந்தார்கள். அதை விட பைலட்டுகள். ச்சே. ச்சே. இவர்கள் தினமும் விமானப்பயணம் செய்கிறார்கள். நாம் பயப்பட தேவையில்லை என்று தைரியமானாள். அவர்கள் இவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து வரவேற்கும் விதமாக தலையசைத்தது இன்னும் தெம்பாயிற்று பூவுக்கு. மணியனோ பரவச நிலையில் இருந்தான்..
விமானம் ஒடுபாதையில் நகர தொடங்கும் போதே இங்கு பூவின் இதயம் தடதடக்க ஆரம்பித்து விட்டது. கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் இறுகி அமர்ந்து “காது வலி எடுக்கும். தாடையை அசைத்துக் கொண்டிரு” என்று யாரோ சொன்னார்கள் என்று, நீருக்குள் மீன் வாயை வாயைத் திறந்து மூடுவதைப் போல வாயை திறந்து மூடிக் கொண்டிருந்தாள்.
மணியன் மெல்ல அவள் கையை சுரண்டி “கண்ணைத் திறந்து பாரு புள்ள. ஊரே வைரமணி இறைச்சதைப் போல மினுக்குதுன்னு” சொன்னான். ஊஹூம். அதிகாலை நேரம் ஏசியின் குளிர் விமானப் பெண்களின் மிடுக்கு வண்டி கிளம்பும் முன் மெல்லிய குரலில் அரபு மொழியில் சொல்லும் பிரார்த்தனை என மொத்தத்தில் நல்லவைகள் கூட பீதியைக் கூட்டியிருந்தது. சின்ன வயதிலிருந்து இதுவரை பார்த்திருந்த சினிமா படங்களில் வந்த விமான விபத்து காட்சிகள் கண்முன் வந்து உடம்பை கிடுகிடுக்க வைத்தது. என்ன புள்ள என்று மணியன் கேட்க குளுருதுங்க என்றாள்.
விமானத்திலிருந்து இறங்கி அந்த ஊர் மக்களுக்கும் மொழிக்கும் சுத்தத்திற்கும் கெடுபிடிக்கும் பயந்து ஒருவழியாக வெளியே வந்தாள் பூவம்மா. வாசலில் கருவுற்ற வயிற்றுடன் நின்று கொண்டிருந்த மகளைக் கண்டதும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒவென்று அழுதாள்.
உங்க அம்மா பாவம். உன்னை பிரிஞ்சிருந்து பாத்ததில தாங்க முடியலை அவுங்களுக்கு என்றான் நந்தகுமார்.
தன் தாயின் மனநிலை அறிந்த கண்மணி அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டாள். அம்மா கூல். இங்கே பாரு. நீ ஊருக்கு வந்துட்டே. என்னோட இருக்கே. சும்மாயிரு என்று காதில் மெல்ல சொல்லி தேற்றினாள்.
மகளை நிமிர்ந்து பார்த்த பூவம்மா ம்ம். என்று மகளின் தோள் மீது சாய்ந்து கொண்டாள். ஆரம்ப அக்கப்போர் அடங்கி இத்தனை மாதங்கள் பிரிந்திருந்த மகளைப் பார்த்த பூர்ண திருப்தி கண்களில் இருந்தது.
கப்பல் போல சொகுசான வண்டி எர்போர்ட்டை விட்டு வெளியே போனது. பின்பக்க கண்ணாடியில் பார்த்த போது பட்டப்பகலைப் போல வெளிச்சமாக இருந்த ஏர்போர்ட் ஒரு பெரிய பறவை ரெக்கையை விரித்துக் கொண்டு நிற்பதை போலிருந்தது. . ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வந்த பூவம்மாவுக்கு இன்னும் மூணு மாசம் கழிச்சி திரும்ப இங்கே வரணுமே என்று சிறு திடுக்கிடல் மனதின் மூலையில் வந்து போனது. அதையும் உணர்ந்தவளாக கண்மணி தன் தாயை அணைத்துக் கொண்டாள்.
இப்போ பூவம்மா வருசாவருசம் விமானம் ஏறுகிறாள். விமானப்பெண்களை முந்திக் கொண்டு இவள் அவர்களுக்கு வணக்கம் வைக்கிறாள்.
ஊரில் துபாய் போய் வந்த பெருமை சொல்லி முடித்தபாடில்லை. முதன்முதலில் எஸ்கலேட்டரில் ஏறி இறங்க பட்டபாடு தனிக் கதை.”அங்கே கக்கூஸ்ல கூட இலையை போட்டு உக்காந்து சாப்டலாம்”
அப்படி போட்டா நீ அங்கே உக்காந்து சாப்பிடுவியான்னு எதிர் கேள்வி கேக்காம அவள் சொன்னதை ஆங்..ஆஹா…அப்படியா என்று கேட்டு வியந்தது கூட்டம்.
அக்கம்பக்கத்தினருக்கு வெட்டுக்காயம் தலைவலி முட்டுவலி உடம்புவலி எல்லாத்துக்கும் பூவம்மா வூட்டு தைலம் தான். ‘உன்கிட்ட குடுக்க முடியாது. உங்க அப்பூச்சிய இங்கன வந்து தடவினு போ சொல்லு.”
“எந்நேரமும் ஜேஜேன்னு மனுஷாளுங்க. அஞ்சு நிமிஷம் ஒத்தையல இருக்க முடியல”
மகளிடம் பெருமையோடு அலுத்துக் கொள்கிறாள் ஒற்றை பிள்ளையை பெற்று எடுத்த பூவம்மா.
- பிரபஞ்சத்தின் வயது என்ன ?
- சித்தரும் ராவணனும்
- தேமல்கள்
- ஒரு வழிப்பாதை
- கூந்தல் உள்ளவர்கள் அள்ளி முடிகிறார்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்
- கவிதை
- பூவம்மா
- மெட்ராஸ் டூ தில்லி
- உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3
- சிமோன் அப்பா
- கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
- கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்
- மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின் பங்கு