கவலைப்படாதே

author
0 minutes, 17 seconds Read
This entry is part 1 of 9 in the series 2 அக்டோபர் 2022

 

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                                           

      அன்றுதான் கடைசி நாள் மரகதத்திற்கு ஆம்  சிறப்பாக வழியனுப்பும் விழா ஏற்பாடாகியிருந்தது அலுவலகத்தில் வேண்டிய சொந்தங்களை அழைத்து வரச் சொல்லியிருந்தார்கள்.இவள்  மகனையும், மருமகளையும், பேரக் குழந்தைகளையும்  வரச் சொல்லியிருந்தாள். மிகவும் பிரபலமான ஹோட்டலுக்கு மதிய உணவுக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். இவள் கணவன் இறந்தபின் கருணை அடிப்படையில் குமாஸ்தாவாகச் சேர்ந்து இன்று ஒரு பிரிவின் மேற்பார்வையாளராக ஓய்வு பெறுகிறாள். முப்பது வயதில் இரண்டு குழந்தைகளோடு விட்டு விட்டு விபத்து ஒன்றில் இறந்து போனான் ராஜேந்திரன்.

இருபத்தெட்டு ஆண்டுகள்  வேகமாக ஓடிவிட்டது.

       ‘சக்தி வாங்க ( எட்டு ஆண்டுகளாக சிவப்பு வண்ணத்தில் வகைவகை சேலைகள்தான் உடுத்துகிறாள்) என்று அழைத்தார்கள். கான்பரன்ஸ் ஹாலில்தான் விழா. ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருந்தார்கள். சந்தனமாலையும், ஒருபவுன் மோதிரமும் போட்டார்கள். அத்தனை பேரும் மனதார வாழ்த்தி நின்றார்கள். மேலதிகாரிகள் இவளுடைய பணிவு, நேர்த்தி,கடின உழைப்பைப் பாராட்டினார்கள். உடன் பணியாற்றுபவர்கள் இவளின் உதவும் குணம், அன்பு , கருணை பற்றி வியந்தார்கள். அத்தனை பேரின் மனமும் பிரிவுத் துயரில் இருப்பதை கலங்கிய கண்ணும் ,உடைந்த குரலும்  காட்டியது.  மேலதிகாரி ஒருவர் விழா முடியும் தருவாயில் மீண்டும் ஒலிவாங்கியை வாங்கி ‘

‘சக்தி ஒரே ஒரு வேண்டுகோள் மா. கிடைக்கிற பணத்தை எல்லாம் உடனே கொடுத்து விடாதீர்கள்.அது ஒன்றுதான் இனி உங்களின் ஆதாரம் என்றார்.மகனின் முகமும், மருமகளின் முகமும் மாறித்தான் போனது.

        ஒரு வருடம் ஓடிப்போனது. வரவேண்டிய பணம் முழுவதும் எந்தத் தடையுமில்லாமல் வந்து விட்டது. நாற்பது இலட்சத்திற்கு மேல் வந்தது. அதில் பாதியை மகனுக்கும் மகளுக்கும் தந்துவிட்டாள்.

   அன்று கல்லும், மண்ணும், சிமென்ட்டும் வந்து இறங்கியது.இருக்கின்ற வீடு அப்பா கட்டிக் கொடுத்தது, முப்பது வருடமாகி விட்டது, அங்கங்கே தரை பெயர்ந்து விட்டது, திண்டுக்கல்லில் வங்கி ஒன்றில்  பணிபுரியும் மகன் ஒருவார விடுமுறையில் வந்திருக்கிறான் .அவனது மேற்பார்வையில் ஒரு வாரத்தில் வீடு புது வண்ணத்துடன் பொலிவு பெற்றது.

‘தம்பி இன்னக்கே கெளம்பறியா’

‘ ஆமாம்மா சாயந்திரம்  கிளம்பினா சரியா இருக்கும்,’

‘பிள்ளைகளையும், வேதாவையும் எப்ப அழச்சிட்டு வர?

‘தீபாவளிக்கு வந்திடறோம், நீ பத்திரமாயிரு.’

மாலையில் மகன் விடைபெற்றான்.

காரை மெதுவா ஓட்டிட்டுப் போ தம்பி.’

 ‘ சரிமா, போன் பண்றேன், வீட்டிற்குப் போனதும்’

              சொன்னது போலவே தீபாவளிக்கு குடும்பத்தை அழைத்து வந்தான் சந்துரு. .மகனும், பேரக் குழந்தைகளும், மருமகளும் வந்ததில் நான்கு நாள் வீடே களைகட்டியது

‘என்னங்க சொன்னீங்களா அம்மாகிட்ட?

‘இன்னும் இல்லடி, சொல்றேன்’

ஹாலில் குழந்தைகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.மரகதம்.

‘பத்துமணியாகுதுடா போய் படுங்க, ‘

‘நாளைக்கு ஊருக்குக் கெளம்பணும்’

‘சரிபா, பாட்டி வாங்க’

பாட்டி  கொஞ்ச நேரம் பொறுத்து வருவாங்கடா’

‘என்ன விஷயம் சந்துரு?

ரெண்டாவது மாடியில ரெண்டு ரூம் கட்டலாம்னு நினைக்கிறோம்மா

சரி,

‘ அத்தை அது உங்களுக்காகதான், நீங்க எதுக்கு இங்க தனியா இருக்கணும்?

‘பிள்ளைங்க உம்மேல உயிரா இருக்காங்கம்மா’

வேண்டாமென மறுத்தவள் தொடர் வற்புறுத்தலில் சரி எனச் சம்மதித்தாள்.

அதோடு லண்டனிலிருந்த மகளும் சரியான முடிவுதான் என்று சொன்னாள்,

கட்டட வேலை துவங்கினான் சந்துரு , பணம் பற்றாக்குறை என்று

இவள் கணக்கிலிருந்த இருபத்து மூன்று இலட்சமும் எடுத்துச் சென்றான்.                  .                                    

                மரகதம் கடலூரிலிருந்து திண்டுக்கல் வந்து ஆறுமாதமாகி விட்டது.

வேலைக்குப் போகாத மருமகள் மாமியாரைக் கண்ணாகப் பார்த்துக் கொண்டாள். நேரத்திற்கு சாப்பாடு, பொழுதுபோகப் பத்திரிகை, தொலைக்காட்சி, தினம் மாலையில் தேவாரம் படிக்க சிவன் கோவில். புதிய நட்பு வட்டம்.’இதுதானே சொர்கம், தனியான வாழ்க்கை ஒரு வாழ்வா?’ சந்தோஷத்தில் மிதந்தாள்.

                                                   கணவனின் ஓய்வூதியமும், இவளுடையதும் சேர்ந்து இருபத்தைந்தாயிரம் வந்தது. ஏ.டி.எம் கார்டை மகனிடம் தந்து தேவையான பணத்தை எடுத்து வரச்சொல்வாள்.நாளடைவில் அது அவனிடமே தங்கி விட்டது.

ஒருநாள் ‘அம்மா நானும் வேதாவும் ஒரு கல்யாணத்துக்குப் போறோம் பசங்களப் பார்த்துக்கணும்.’

‘அதனாலென்ன பார்த்துக்கறேன் தம்பி.’

மெதுமெதுவாக சமையலறை வேலைகள் இவளிடம் வந்தது. நாளாக, நாளாக வேதாவின் அலட்சியம் பேச்சில் தொனித்தது. மகன் பாராமுகமாயிருந்தான்.சொல்லப் போனால் ஒரு வேலைக்காரியின் நிலைதான். பிள்ளைகள் கூட மதிப்பதில்லை, இவளுடைய அலைபேசி பெரியவனுக்குத் தேவை என்றானது.தங்கை, தம்பியிடம் பேசவோ, மகளிடம் பேசவோ முடியவில்லை. மகனிடம் அலைபேசி வேண்டுமென்றதற்கு

 ‘உனக்கு எதற்குமா  செல்போன் வேலைக்கா போற’ என்றான்.

இவர்கள் பேசும்போது தந்தால் மட்டுமே மகளிடமும் பேச முடிந்தது.

‘ சொல்லுங்க அண்ணி, அத்தையா நல்லா இருக்காங்க, இதோ தரேன் பேசுங்க’

ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் மகளிடம் என்ன சொல்வது?

‘ அசோக்கை கேட்டதா சொல்லு,குழந்தைய பத்திரமா பார்த்துக்க, நான் நல்லா சந்தோஷமா இருக்கம்மா’

அலைபேசியை வேதாவிடம் தந்தாள்.

அன்று ஒரே தலைவலி, கோவிலுக்குச் சென்று திரும்புகையில் ( இது ஒன்றுதான் இப்போது ஆறுதல்)மாத்திரை வாங்க நினைத்தாள்.ஆனால் ஒத்த ரூபா கூட இல்லை.

வீட்டிற்கு வந்தபின் ‘வேதா எனக்குத் தலைவலி மா’

‘சரி அதுக்கென்ன இப்போ, எனக்குந்தான் தலவலி.’

‘மாத்திரை வாங்கணும் ஒரு பத்து ரூபா தாம்மா’

‘எங்கிட்ட ஏது?  அறைக் கதவைப் படாரெனச் சாத்திக் கொண்டாள்.

வெந்நீர் குடித்துவிட்டுச் சுருண்டாள் மரகதம்.

அன்று இரவு இவளால் சமைக்க முடியவில்லை, வீட்டில் ஒரு ப்ரளயமே வந்துவிட்டது.

தலைவலி என்று வேஷம் போடுவதாக மருமகள் சொல்ல மகன் ‘எப்படிமா இந்தமாதிரி உன்னால முடியது’  முடியலனா முன்னாடியே சொல்லக் கூடாதா?

“சொன்னேனே”

“நான் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திட்டிருந்தேனே அத்தை  சும்மாவா இருந்தேன்.”

சந்துரு ஹோட்டலுக்குச் சென்று தோசை, பரோட்டா வாங்கி வந்தான்.மரகதம் ஒன்றும் வேண்டாமெனப் படுத்து விட்டாள்.

மறுநாள் மாலை கோவிலுக்குச் சென்றவள் தெரிந்த பெண்ணிடம் அலைபேசியை வாங்கித் தங்கையிடம் அனைத்தையும் சொல்லிக் கலங்கினாள்..

‘ நீ எதுக்கும் கவலைப்படாதே, நான் இருக்கேன் கிளம்பி வா’ என்றாள் தங்கை.

மரகதம் அன்றிரவு மகனிடம்’

‘சந்துரு நான் நாளைக்கு ஊருக்குப் போறேன்’ நம்ம வீட்ல இருக்கறவங்கள ஒருமாசத்தில காலிபண்ணச் சொல்லு’.. 

ரெண்டு ஏ.டி.எம் கார்டையும் எடுத்துக் கொடு’ அவளின் குரலின் தெளிவில் அதிர்ந்து,’சரிமா’ என்றான்.

                    மறுநாள் மதியம் பேருந்திலிருந்து இறங்கிய மரகதத்தை காத்திருந்த தங்கை கட்டிக்கொண்டாள் விழி நான்கிலும் கரை தொட்டது நீர்.

 

 

 

 

Series Navigationநாசா ஏவிய விண்வெளிக் கணை திமார்போஸ் விண்பாறை மேல் மோதி சுற்றுப் பாதை மாறியுள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *