- சோம. அழகு
[இக்கட்டுரை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கனவுகள். சால்வடோரின் ஓவியங்களைப் போல் ஏன் வந்தனவோ?]
ஒரு ஊர்ல நெறைய காடு இருந்துச்சாம். அதில் ஒன்று செங்காடு. கரிய மண்ணில் ஆழமாக வேரூன்றிய சிவந்த மரங்களால் ஆன அழகிய அடவி அது. காற்றை அனேகமாக இடப்பக்கமாகவே வீசும் வனம். அங்குள்ள மரங்களின் கிளைகள் மேல் நோக்கி உயர்ந்து நின்றன, புரட்சியை எதிர்நோக்கி உயரும் கைகளைப் போல. அங்கு ஒரு செங்காந்தள் செடி துளிர் விட்டதாம். மண்ணின் மணமும் மரங்களின் நிறமும் பலவற்றை உணர்த்தின அச்செடிக்கு. செங்காந்தள் வேர் பிடித்து நிலைபெறத் துவங்கியது. அவ்வனத்தின் வனப்பு அதன் செம்மலர்களிலும் குடியேறியது. அனைத்து சிறப்புகளும் வாய்க்கப் பெற்ற அவ்வனத்தில் நிலைகொண்டதற்காய்ப் பூரித்துப் பூத்துக் குலுங்கியது அச்செடி.
திடீரென்று அதன் தாய்மண் கொஞ்சம் சேர்த்து எடுத்து வரப்பட்டு வேறொரு முளரிக்கு மாற்றப்பட்டு ஒரு பைன் மரத்தின் அருகில் நட்டு வைக்கப்பட்டது. இந்த முளரியில் பெரும்பாலும் புல்லுருவிச் செடிகளாகவும் கழுதைப் புலிகளாகவும் இருந்தன. கழுதைப் புலிகளை எவ்வளவு விரட்டினாலும் தம் இனத்திற்கே உரிய புத்தியை இன்னும் மேம்படுத்தி (அதாவது மிச்ச மிஞ்சாடிக்கெல்லாம் காத்திராமல் அடுத்த மிருகம் வேட்டையாடியதை அடித்துப் பிடுங்கின!) அக்காட்டையே சுற்றி சுற்றி வந்தன. தனது வலிமை மொத்தத்தையும் திரட்டித் தனது கொப்புகளினால் பலங்கொண்ட மட்டும் ஒவ்வொரு புல்லுருவியையும் இழுத்துப் பிய்த்துப் பிடுங்கிக் களைய எத்தனித்தது அச்சிறிய செங்காந்தள் செடி. தனியொருவன் உலகை மாற்றக் கிளம்பிய கதைதான். விவரம் தெரியாமல் அல்லது உண்மையை உணர விரும்பாமல் அவைகளுக்குச் சத்துக்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த மரங்களை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை அச்செடிக்கு. செங்காந்தளின் நியாயமான பேச்சு, கேள்விகள், பகுத்தறிவு (அட! அறிவே இருக்கக்கூடாதாம் இந்த காட்டில் சஞ்சரிக்க!) என எதற்கும் தன்னிடம் சரியான பதில் இல்லாத காரணத்தால் ‘புண்படுகிறது’ என்ற கொடியை உயர்த்திப் பிடித்தவாறு அனைத்துக்கும் தடை விதித்தது அக்காடு. தங்களைச் செங்காட்டின் மரங்களைப் போல முற்போக்காளர்களாக வரித்துக் கொள்ள முயன்றாலும் தங்களின் உண்மையான நிறத்தை மறைக்க இயலாது இம்முளரியின் ஒவ்வொரு மரமும் செடியும் தோல்வியுற்று நின்றது.
நல்லதோர் செங்காந்தள் செய்தே அதை நலங்கெடாமல், புழுதியில் எறியாமல் இருக்க இயலாதா? எவ்வளவு முயன்றும் அம்மண் செங்காந்தளுக்கு ஒட்டவே இல்லை. ஒரு கணம் தான் சாலமன் தீவுகளில் இருப்பதாகவே உணர்ந்தது செங்காந்தள். எனினும் கொழுந்து விட்டு எரியும் செந்தழலைப் போன்ற தன் மலர்களை மென்மேலும் பூக்கச் செய்து மணம் பரப்பும் முயற்சியைக் கைவிடுவதாய் இல்லை. செங்காந்தளின் இருத்தலுக்கான நோக்கமும் அர்த்தமும் அதில் மட்டும்தானே இருக்கின்றன.
வீடாக இருந்தால் என்ன? நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால்தான் என்ன? பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தென்படவில்லை.
செம்மை நிறக்கதைகள் எவ்வாறு எதிர்காலத்திற்குரிய நம்பிக்கையோடு முடிவுறுமோ அவ்விலக்கணமே இங்கும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
*******************
அவ்வழகிய புலரியில் இனிய கனவுகள் கலைத்துச் சோம்பல் முறித்து இமை திறந்து பார்த்தால்… அறையெங்கும் கால் வைக்க இயலாத அளவிற்குச் சிதறிக் கிடந்தன… மூக்குகள் ! நீளமான மூக்கு, அகலமான மூக்கு, கூர்மையான மூக்கு, மழுங்கிய மூக்கு, சிவப்பான மூக்கு, கறுப்பான மூக்கு, மாநிறமான மூக்கு… எத்தனை எத்தனை விதம்? மனிதர்களைப் போலவே ! ஒவ்வொன்றும் சுருங்கியும் விரிந்தும் மிகுந்த ஆவேசத்துடன் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டிருந்தன. அப்படித்தான் நம்ப முற்பட்டேன். ஆனாலும் இதில் ஏதோ ஒரு வித்தியாசம்… ஒரு நெருடலான வித்தியாசம். அப்போதுதான் உன்னிப்பாகக் கவனித்ததில் அவை சுவாசிப்பதல்லாமல் மோப்பம் பிடிப்பதை உணர்ந்தேன். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்தும் இன்ன பிற கோள்களிலிருந்தும் இவை வந்து விழுந்ததைப் போல், இவ்வளவு உயர்வு நவிற்சிக்கோ தற்குறிப்பேற்றத்திற்கோ தகுதியற்ற மூக்குகள்தாம். ‘என் பணி அடுத்தவர் வெளியினுள் மூக்கை நுழைப்பதே’ என இன்புற்றிருக்கும் இம்மூக்குகளுக்கு சூர்ப்பனகையின் பரிபூரண ஆசி கிட்டுவதாக! ஆமென்!
****************
ஒரு கிராமம் இருந்துச்சாம். அங்க எல்லாரும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே சுத்தீட்டு இருந்ததால அந்த கிராமத்த இஞ்சிகிராமம்னு கூப்பிட ஆரம்பிச்சாங்களாம். அந்தக் குரங்குகளுக்கு… மன்னிக்கவும்! மனிதர்களுக்கு பொஸ்தகம் ஒண்ணு கெடச்சுதாம். அதுல நெறைய முசரக்கட்டைகள் இருந்ததால அந்தப் புத்தகத்திற்கு மூஞ்சிபொஸ்தகம்னு பேரு வந்துச்சாம். கிராமமும் பொஸ்தகமும் குரங்குகளின் பிடியில் அல்லோலகல்லோலப் பட்டன.
“இந்தப் பயலுகளுக்கு வேற வேலை மண்ணாங்கட்டியே கிடையாது போல! எந்நேரமும் இங்கயே சுத்திட்டு இருக்குதுகள்” – அலங்கலாய்த்தது கிராமம்.
“இங்க மட்டும் என்ன வாழுதாம்? மண்டை எப்போ பாரு பொஸ்தகத்துக்குள்ளவேதான் கெடக்கு”
“சோத்த ஆக்குனா தின்னுத் தொலைக்குறதுதான? கச்சக் கச்சக்குனு கிளிக்கித் தள்ளி எங்கிட்ட ஏத்தித் தள்ளணுமாக்கும்” – மீண்டும் கிராமம்.
“அதேதான்… இந்தத் தறுதல எங்கன ஊரு சுத்துனா எனக்கென்ன? எங்கிட்ட வந்து அவ்வளவையும் கொட்டுதான்”
“சுத்தி சுத்திதான் ஒரு வெட்டி கும்பல் இருக்குல்ல… ‘என்ன கருமமமா இருந்தாலும் பரவா இல்ல… நாங்க இருக்கோம் கட்டை விரலை உயர்த்திப் பிடிக்க’னு”
“நீயாவது பரவாயில்ல சகோ… கொஞ்சம் உருப்படியானவங்களும் உன் பக்கத்துல இருக்காங்க. ஆனா எங்கிட்ட பாரு… ச்சை! வெறும் பெரும பீத்தக்கலைகள்!”
“ஆமா தோழர்! ஆனா ரொம்ப கொஞ்சம்தான்… இதுல என்ன ஒரு பிரச்சனைனா அவங்களுக்கு உள்ள மாதிரியே கருத்து சுதந்திரம் எங்களுக்கும் உண்டுன்னு வலப்புறமா இருந்து ஒரு கும்பல் கிளம்பும் பாரு… அதான் கடுப்பு!”
“அட என்னயும் கொஞ்சம் கவனிங்க… மனசுல பெரிய கமலஹாசன் ஜோதிகான்னு நெனப்பு மண்ணாங்கட்டி… டொக்கு டொக்குன்னு என்னைய போட்டு பாடா படுத்திட்டு இருக்குதுகள் எல்லாம்” – புதிதாக ஒரு குரல்
“அடேய்! ஒன்ன தான்டா தேடிட்டு இருந்தேன் இவ்ளோ நாளா… ஒன்ன ஊர விட்டு தள்ளி வச்சதும்தான் வச்சாங்க… எல்லா பக்கிகளும் இங்க வந்து என் உசுர எடுக்குது” – கிராமம் குமுறியது.
“என் நெலமைய யாராச்சும் நெனச்சு பாத்தீங்களா? மனுசன் காலைல எந்திரிச்சா என்னங்க பண்ணுவான்? குளிச்சு கெளம்பி பொழப்பப் பாக்க போவான்னு பாத்தா கண்ண அரைகொறையா தொறந்து வச்சுட்டே ‘என்ன? என்ன? வேறென்ன? மேல என்ன? பக்கவாட்டுல என்ன?’னு ஒரே நைநை…” – இன்னுமொரு புதிய குரல். இந்தக் குரலுக்கு ‘இன்னாவாம்?’னு நாமளே இப்போதைக்கு ஒரு பேரு வச்சுக்குவோம்.
“தோழர்காள்! ஒண்ணு கவனிச்சீங்களா? மொதல்ல என்னை(பொஸ்தகத்தை) எழுதுனவன் அப்புறம் கிராமத்த வெலைக்கு வாங்குனான். வரிசையா ஒவ்வொண்ணா வாங்குனான். ஆனா அவன் நம்ம பக்கம் கூட எட்டிப் பாக்குறதில்ல… அப்போவாது இவங்களுக்குப் புரிய வேண்டாமா? இவங்க பொழப்பத்துப் போய் இங்கனயே உலாவிட்டு இருக்குறத வச்சு அவன் அழகா தன் பொழப்ப ஓட்டுறான்”
“என்னதான் சொல்லு… ’நட்பு’ங்கிற சொல்லோட பொருளையே மாத்துன புரட்சியாளனாச்சே நீ”
“’புரட்சி?’ அட போங்க தோழர்! ஒரு நல்ல நாள் பொல்லாத நாள்ல நான் படுற பாடு இருக்கே… “
“அன்னிக்கு மட்டுந்தானாக்கும்?” என்றவாறே நமட்டுச் சிரிப்பு சிரித்தது கிராமம்.
அலுத்துக் கொண்டே பதிலளிக்கத் துவங்கியது பொஸ்தகம். “இப்போ ஓர் அற்(ப)புத கலாச்சாரம் பெருகி வருது. பிறந்தநாள், தவழ்ந்த நாள், தடுக்கி விழுந்த நாள்னு எதுனாலும் அதை நாசூக்காக என் மூலமா உலகிற்கு அறிவிப்பது… பச்சை பசேல்னு சொல்லனும்னா ‘வாழ்த்துகளைப் பிச்சையெடுப்பது’”
“இங்கதான் நான் உள்ள வரேன். அறிவிப்பைப் பார்த்துட்டுக் கொட்டித் தொலையும் பாராட்டுகளுக்கு நன்றி சொல்லி எங்கிட்ட இரயில் விடுறது; இது ‘பாருங்க மக்களே… எவ்ளோ பேர் எனக்கு வாழ்த்து சொல்லிருக்காங்க’ என்ற பீற்றலின் நவீன வடிவம் என்றறிக. அதுக்கு இப்ப ‘இன்னாவாம்?’னு நெறைய தடவ கேக்கத் தோணுது எனக்கு”
“ஒரு சொடுக்குல பொசுக்கு பொசுக்குனு ‘நட்பே!’, ‘ஒறவே!’, ‘ஃப்ராண்ச்’னு இவனுங்க அலப்பறை இருக்கே… யப்பா! இந்த லட்சணத்துல வண்டி வண்டியா வாழ்த்து வழியுது… கொத்து கொத்தா கொண்டாட்டம் கொட்டுதுனு கொக்கரிப்புப் பெருமை வேற… இந்தா இதை எழுதிட்டு இருக்குதே… இதுலாம் ரொம்ப நெருக்கமில்லாதவங்களுக்கு ‘பிரெட் சாப்பிட்டேன்’ங்குற தொனியிலதான் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’னு தட்டச்சு செஞ்சு அனுப்பும். ரொம்ப மெனெக்கெடாம உணர்வே இல்லாம வந்து விழுற வார்த்தைய வச்சுட்டு நெறைய மனுசங்கள சம்பாதிச்சுட்டதா அவங்களுக்குத் தம்பட்டம் வேற… கருமத்த..” – பொஸ்தகம்
“எங்கேயாவது இருந்து எதையாவது சுட்டு எடுத்துட்டு வந்து தானே மூளைய கிண்டிக் கிளறி கொட்டுன மாதிரி ஒரு பாவ்லா… நானே நெறைய பேர பாத்து ‘பரவாயில்லியே! என்னா மொழியறிவு! என்னா ரசனை!’னு ஆச்சர்யம்லாம் பட்டு ஏமாந்துருக்கேன்” – கிராமம் பரிதாபமாகக் கூறியது.
“இங்க பெரும்பாலானோர் தன்னோட மனதிருப்திக்கெல்லாம் நல்லது செய்யுற மாதிரி தெரியல. தப்பித்தவறி ஒரு உதவி செஞ்சுட்டா கூட உடனுக்குடனே அதை கிராமத்து சுவரில் ஒட்டியும் பொஸ்தகத்தின் பக்கங்களில் இட்டும் தன் egoவுக்கு தீனி போட்டுக்குறாங்க”
“எல்லாமே கட்டை விரல்களின் எண்ணிக்கைக்காகத்தான். இவர்கள் உலகமே அதில்தான் இயங்குகிறது”
“‘தான் அந்த நொடியில் எங்கே இருக்கிறோம்?’, ‘எதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்?’, ‘என்ன மனநிலையில் இருக்கிறோம்?’ என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஊருக்கு தண்டோரா போடுவதன் பின் உள்ள உளவியல் புரியவில்லை. சதா சர்வ காலமும் தன் இருப்பை உலகிற்கு அறிவித்துக் கொண்டே இருப்பது என்ன மாதிரியான மனநிலை?”
“மக்கள் திரளில் தொலைஞ்சு போய்டுவோம் அல்லது மறக்கப்படுவோம் என்ற பயமாகவும் இருக்கலாம்”
“தொலைஞ்சு போனவங்கள உங்கிட்டயும்(கிராமம்) எங்கிட்டயும்(பொஸ்தகம்) தேடி கண்டுபிடிக்குறாங்க… எனக்கு எங்கயாவது தொலைஞ்சு போலாம் போல இருக்கு”
“ஒன்ன தூக்கி அப்பிடியே தூரமா இருக்குற HD1 பால்வெளியில கடாசீருவோம்… நான் என்ன செய்யுறது? அப்படியே மண்ணுகுள்ளதான் போகணும்”
“ததாஸ்து” என்று வானில் இருந்து ஒரு குரல் ஒலிக்க, முகங்களை வெளியே கக்கியவாறு பொஸ்தகமும் இஞ்சி தின்ன குரங்குகளை நிஜ குரங்குகளாக்கி தன்னில் இருந்து பிய்த்து எறிந்து வீசிய கிராமமும் தம் விருப்பம் நிறைவேறப் பெற்ற திருப்தியில் ஜீவ சமாதியடைந்தன. பரிணாம வளர்ச்சி எடுத்துக் கொண்ட மில்லியன் ஆண்டுகளை ஒரு நொடியில் பொய்யாக்கி, சட்டென குரங்குகள் அனைத்தும் மனிதர்களாவதைக் கண்டு வியப்பில் உறைந்தது உலகம்.
*******************
- சோம. அழகு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று
- ஸ்ரீரங்கம் பூங்கா !
- நாட்டுப்புற பாடல் – இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க
- வைதீஸ்வரனின் ஆவணப்படம்….
- அச்சம்(La Peur)
- தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்
- பூவம்மா
- தொடரும்…..!!!!
- உறவே! கலங்காதிரு…
- இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு
- மழைப்பொழியா மேகங்கள்
- காற்றுவெளி ஐப்பசி 2022
- 2 கவிதைகள்
- கபுக்கி என்றோர் நாடகக்கலை
- அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்
- கனா கண்டேன்!
- அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்