ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை

This entry is part 7 of 7 in the series 16 அக்டோபர் 2022

 

 

கே.எஸ்.சுதாகர்

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங் விமான நிலையத்தில் காத்திருந்தார். புது தில்லியில், கரோல் பா நகரில் அமைந்திருக்கும் `இரும்புக் கோட்டை’ ஹோட்டலுக்குப் போய் சேருவதற்கிடையில் புது தில்லியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லிவிட்டார் பிரதாப்சிங்.

மெல்லிய செயற்கை வெளிச்சத்தில் வீதிகள் அழகாக இருந்தன. அமைதியாகவும் இருந்தன.

“இப்போது மயான அமைதியாக இருக்கும் இந்தப் பிரதேசங்கள் எல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் விழிப்படைந்துவிடும். அதன் பின்னர் மனிதர்களே நகர்ந்துகொள்ள முடியாதவாறு நெரிசலாகவிடும்.” சொல்லிவிட்டு கண்ணைச் சுழற்றி எல்லாரையும் பார்த்துவிட்டு, “மிகவும் அவதானமாக இருங்கள்” என்று தாழ்ந்த குரலில் எச்சரிக்கையும் செய்தார். காரின் கதவுக் கண்ணாடிகளில் ஒன்று சிறிது பதிந்திருக்க வேண்டும். இரவுக்காற்று காரிற்குள் விசில் அடித்து அவரது எச்சரிக்கையை ஆமோதித்தது.

ஹோட்டலை அண்மித்ததும், `கேற்’ பூட்டியிருக்கின்றது எனச் சொல்லிவிட்டு ஹோட்டல்காரருக்கு ரெலிபோன் செய்தார் பிரதாப்சிங். அப்போதுதான் வீதியின் குறுக்கே இரும்பாலான ஒரு கடவை முளைத்திருந்ததை அனைவரும் பார்த்தார்கள்.

“இங்கே வீதியின் இருபுறமும் குடிமனைகள் இருப்பதால், பாதுகாப்புக் கருதி வீதிக்கு வீதி குறுக்கேயுள்ள பாதுகாப்புக்கடவைகளை இரவில் பூட்டி வைப்பார்கள்.”

சற்று நேரத்தில் ஹோட்டலில் இருந்துவந்த ஒரு `உம்மாண்டி’ கதவைத் திறந்துவிட்டு, அவர்களின் பொதிகள் இரண்டினைப் பறித்துக் கொண்டார்.

“பயப்படாதீர்கள். அவர் கொண்டுவந்து தருவார்” பிரதாப்சிங் சொல்ல, உம்மாண்டியின் பின்னால் அவர்கள் எஞ்சிய பொதிகளை இழுத்துக் கொண்டு போனார்கள்.

கடவைக்கும் ஹோட்டலுக்குமிடையே ஏழெட்டு நாய்கள் ஏதோ ஊசி போட்டு படுக்க வைத்தது போல புழுதி மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தன. ஒரு நாயும் தனது இருப்பிடத்தை விட்டு எழவும் இல்லை, குரைக்கவும் இல்லை.

ஹோட்டலில் ஒரு இளைஞர் மேசை மீது முகத்தைக் குப்புறக் கவிழ்த்து உறக்கம் கொண்டிருந்தார். அவர்தான் இரவு நேரத்திற்குப் பொறுப்பானவர். `உம்மாண்டி’ அவரின் உதவியாளர். ஆக மொத்தம் இரவு இரண்டு பேர்கள், பகலிற்கு இரண்டு பேர்கள் என அங்கே வேலை செய்கின்றார்கள். தவிர ஒரு சமையல்காரர். அவ்வப்போது சுத்தம் செய்ய ஒருவர் வந்துவிட்டுப் போவார்.

பிரதாப் சிங் தனது கூலிப்பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். “மூன்றாவது மாடியில் உங்கள் அறை இருக்கின்றது” என்று சொன்னார் இளைஞர்.

“லிவ்ற் எந்தப்பக்கம்?” என்று விமல் கேட்டபோது, இளைஞரும் உம்மாண்டியும் ஆளை ஆள் பார்த்துச் சிரித்தார்கள். இல்லாததை அவர்களால் எப்படிக் காட்டமுடியும்! ஏமாற்றத்தைத் தவிர்க்க, அவர்களின் பொதிகளில் ஒன்றைத் தலையிலும் மற்றதைக் கையிலுமாகச் சுமந்துகொண்டு உம்மாண்டி விறுவிறெண்டு படிகளின் வழியே ஏறினார். இவர்கள் ஆளுக்கொரு பொதியுடன் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அறை ஓரளவிற்குப் பரவாயில்லாமல் இருந்தது.  “காலை சந்திப்போம்” உம்மாண்டி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

காலை பத்து மணியளவில் தான் அவர்களால் எழும்பக் கூடியதாக இருந்தது. எழுந்ததும் ‘சிற்றி வியூ’வைப் பார்ப்பதற்காக ஜன்னல் சீலையை நீக்கினாள் பாவனி.

“சிற்றியைக் காணவில்லை.”

“இது வடிவேலுவின் `கிணத்தைக் காணவில்லை’ என்ற கதைதான்” என்றான் விமல். எல்லாரும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஜன்னலருகே சென்றார்கள். அங்கே இருமருங்கிலுமுள்ள கட்டடத்தொகுதிகளும் அதனூடாக அவர்கள் நேற்றிரவு வந்த பாதையும் தான் தெரிந்தன. ஒரு சிலர் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

காலை உணவு ஹோட்டலில் இலவசம் என்பதால் கீழே இறங்கினார்கள். இரவு வேலையில் இருந்தவர்கள் போய், இரண்டு புதியவர்கள் வந்திருந்தார்கள். வயதில் முதிர்ந்தவர் மனேஜர் இருக்கையில் இருக்க, துடிப்பான இளைஞன் ஒருவன் அவர் அருகே ஏவலுக்காகக் காத்திருந்தான். காலை உணவாக சப்பாத்தியும் கறியும் அல்லது ஆலுபராத்தா என்று சொன்னார்கள். அத்துடன் தேநீர், கோப்பி இலவசம். ஒரு கிழமை அங்கே தங்குவதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தபடியால், அன்று சப்பாத்தியும் கறியும் உண்டார்கள். ஆலுபராத்தாவின் சுவையை மறுநாள் பார்க்கலாம் என்று விட்டு வைத்தார்கள்.

அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, ஒரு புதியவர் வந்து மனேஜர் அருகே அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு வெள்ளையினத் தம்பதியினர் ஹோட்டலின் உள்ளிருந்து வெளியே வந்தார்கள். வெள்ளையினத் தம்பதியினர் அந்தப் புதிய மனிதருடன் டொலரை மாற்றுவதற்கான பேரத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தங்கள் காரியம் முடிவடைந்து கலைந்த பின்னர், விமல் மனேஜருடன் பேச்சுக் குடுத்தான்.

“ஒரு அவுஸ்திரேலியன் டொலர் இந்தியப் பெறுமதியில் எவ்வளவு போகின்றது?”

“நீங்கள் வெளியே கடையில் மாற்றிக் கொண்டால் உங்களுக்கு கூடப் பணம் கிடைக்கும். இப்போது வந்துவிட்டுப் போனவரிடம் மாற்றுவதென்றால் டொலருக்கு நாற்பது இந்திய ரூபாய்களுக்கு மேல் தரமாட்டார். வெளியே என்றால் ஐம்பதுக்கும் மேல் பெற்றுக் கொள்ளலாம்” என்றார் மனேஜர்.

“இன்று எங்கு எல்லாம் போக இருக்கின்றீர்கள்?”

“இன்று பெரிதாக ஒரு இடமும் நாங்கள் செல்லவில்லை. கரோல் பாவின் நகரப்பகுதிக்குள் சென்று, நாளை பயணம் செய்வதற்கான பயணமுகவர் இருக்குமிடத்தைப் பார்த்து வரலாம் என்று இருக்கின்றோம்.” – விமல்.

“அப்படியென்றால் நீங்கள் கரோல் பாவில் காசு மாற்றிக் கொள்ளலாம்” – மனேஜர்.

ஹோட்டலை விட்டு வெளியே இறங்கினார்கள். பூட்டியிருந்த கடவைகள் எல்லாம் திறந்திருந்தன. உயரிய கட்டடங்களின் நிழல்கள் வீதியில் விழுந்து, இடமில்லாது போக எதிர்ப்புறமாகவிருந்த கட்டடங்களில் தாவி எழும்பியிருந்தன. பழைய கட்டிடங்களில் காயப்போடப்பட்ட துணிமணிகள் மீது அவை வர்ணஞாலம் காட்டின. சில வீடுகளின் முன்னால் புழுதி அடங்க நீர் தெளித்திருந்தார்கள். வீதியில் ஒருவன் மரநிழலின் கீழ் ஆடைகளை அயன் செய்து கொண்டிருந்தான். சன நெரிசல் வேறு. தெருவைக் குறுக்காகக் கடப்பது அங்கே தனிப் பெருங்கலை. அதைப் பயில்வதற்கு அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. தெருவெங்கும் புழுதிப்படலம் நிறைத்திருந்தது. பல இடங்களில் ரிக்‌ஷா வண்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது அவர்களுக்கு வியப்பளித்தது. மனிதரை வைத்து மனிதர் இழுக்கும் காலம் இன்னும் மறையவில்லையே என்ற கவலையும் வந்து போனது.

ஒரு இடத்தில் காசை மாற்றிவிட்டுக் கீழ் இறங்கும்போது, ஒரு பறட்டைத்தலையன் பாக்கு வெற்றிலை போட்ட எச்சிலைத் துப்பிவிட்டு, அவர்களைப் பார்த்து ஆங்கிலத்தில் கூப்பிட்டான்.

“சார்…. எங்கு போக வேண்டும்? நான் ரக்‌சியில் கூட்டிக்கொண்டு போறன்.”

“ஒரு இடமும் நாங்கள் போகவில்லை” சொல்லிவிட்டு பயண முகவர் இருக்குமிடம் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள்.

அவன் ரக்சியை விட்டுவிட்டு, இடமும் வலமுமாக அரக்கி அரக்கி அவர்களைத் துரத்தி வந்தான்.

“நீங்கள் போகும் பாதை மூடப்பட்டுள்ளது. எங்கே போகவேண்டும் என்று சொல்லுங்கள். நான் கூட்டிச் செல்கின்றேன்.”

அவர்கள் ரக்‌சி சாரதி சொல்வதைச் செவிமடுக்காமல் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். அவன் தொடர்ந்தும் அவர்களைத் துரத்தியபடி வந்தான்.

“பாதை புளொக் எண்டு சொன்னால் கேட்கின்றீர்கள் இல்லை. திரும்பி வரப் போகின்றீர்கள்.”

அவர்கள் நடையை எட்டி வேகமாக வைத்தார்கள். அங்கே பாதை ஒன்றும் மூடப்பட்டிருக்கவில்லை. பயண முகவரின் இருப்பிடத்தை அடைந்ததும் மூச்சு விட்டுக் கொண்டார்கள். காசு மாற்றும் இடங்கள் (Money exchange) எல்லாம் கொள்ளையர்கள் முகாமிட்டிருகின்றார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். வெவ்வேறு போர்வைகளில் அவர்கள் அங்கே நடமாடுகின்றார்கள் என்பதை அறிந்தார்கள். பயண முகவரிடம் கதைத்துவிட்டு மீண்டும் திரும்பும் வழியில், முன்னர் கண்ட அதே இடத்தில் அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான். அவன் அவர்களைப் பார்த்து முழுசிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் ரக்‌சி ஓடுபவன் போல் தெரியவில்லை. நாள் முழுவதும் அந்தக் காசு மாற்றும் கடையருகே முகாமிட்டிருப்பதாகத் தெரிந்தது. அவனின் பின்னால், அவனின் கூட்டத்தவர்கள் சிலர் சற்றுத் தள்ளி நின்று அவர்களைப் பார்த்தபடி நின்றார்கள்.

அந்தச் சம்பவத்தின் பின்னர், அவர்கள் முகத்திற்குப் போடும் மாஸ்க் நான்கு வாங்கிக் கொண்டார்கள். அது தூசியில் இருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றும் என நம்பினார்கள்.

இவர்கள் அந்நியர்கள் என்று எப்படிப் புரிந்து கொண்டார்கள்?

புதிய தொழில்நுட்பம், கூகிள் மப், ஊபர் என்று இல்லாவிட்டால் தில்லியில் இவர்கள் எல்லாருக்கும் சங்கு தான்.

“அவங்கள் எங்களை அடிச்சுப் பறிச்சிருக்கலாம். ஏன் அப்படிச் செய்யேல்லைத் தெரியுமா? அவங்களின்ரை திட்டம் எங்களைத் தங்கட வலைக்குள்ளை விழுத்துறதுதான்” என்றான் விமல்.

“ஹோட்டலிலை சொல்லலாம் தான். அவங்கள் பொலிஷிட்டைப் போகச் சொல்லுவாங்கள். அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்” என்று பதிலுக்குச் சொன்னார் குணசேகரன்.

மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்து, ஹோட்டலை விட்டு வெளியேறியபோது, வீதியில் நடமாட்டம் இருக்கவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் ஆரவாரம் தொடங்கிவிடும். நேற்றுப் பூச்சாண்டி காட்டிய மனிதர்கள் எந்தப்பக்கத்தில் இருந்தும் தோன்றக்கூடும்.

அன்று `தங்க முக்கோணம்’ என்று சொல்லப்படும் ஜெய்ப்பூர், அக்ரா, மதுரா போவதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பயண முகவரின் அலுவலகத்திற்கு முன்னால் புறப்படவேண்டிய சொகுசு வாகனம் நின்றது. சரியாக காலை ஆறு மணிக்கு முப்பதுபேரைத் தாங்கிய வண்ணம் வாகனம் புறப்பட்டுவிட்டது. புதனும் வியாழனும் அவர்களின் பொழுது சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது.

வெள்ளிக்கிழமை காலை உணவாக அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, ஆலுபராத்தா கிடைத்தது. ஆலு என்றால் ஹிந்தியில் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கில் செய்த சுவையான கறியைச் சப்பாத்திக்குள் திணித்து செய்யப்படும் உணவு ஆலுபராத்தா. மிகவும் மெல்லிய தட்டையான ஆலுப்பராத்தாவிற்கு தொட்டுக்க ஊறுகாய், தயிர் தந்தார்கள். மசாலா சாய் அருந்திவிட்டு, முதல் இரண்டு நாட்கள் கொண்ட அலுப்பில் பகல் உறக்கம் கொண்டார்கள். மதியம் புறப்பட்டு உணவுக்காக அலைந்து திரிந்தார்கள். ஹோட்டலுக்கு அண்மையாக நல்ல ரக சாப்பாட்டுக்கடைகள் இல்லாதபடியால் கூகிளில் தேடுதல் வேட்டை செய்தார்கள். சற்றுத் தூரத்தில் நல்லதொரு சாப்பாட்டுக்கடை திறந்திருப்பதைக் கூகிள் காட்டியது. தொழில்நுட்பம் அவ்வளவு வேகத்திற்கு வளர்ந்துவிட்டது. திக்குத்தெரியாத காட்டிலும் திசையைத் தெரிவிக்கும் கருவிகள் வந்துவிட்டன.

மூக்கை விரித்து வேட்டையாடும் நாய்களைப் பற்றிய கரிசனையோடு, ஒரு ரக்சியை அணுகினார்கள். அவனுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பறட்டைத்தலையன் எங்கிருந்தோ திடுதிப்பென முளைத்து அவ்விடம் வந்து சேர்ந்தான். தன் பீரங்கி மூக்கைத் திறந்து பொடியை உறிஞ்சிவிட்டு, இவனிடம் ஏதோ ரகசியம் பேசினான்.

ரக்சியில் போய்க்கொண்டிருக்கும்போது, “சார்… நீங்கள் சொல்லுகின்ற ரெஸ்ரோரன்ட் மதியச்சாப்பாடு முடிவடைந்ததும் மூடி விடுவார்கள். திரும்ப ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். இப்ப நேரம் மூன்று மணியாகிவிட்டது. நான் உங்களை இன்னொரு திறமான இடத்திற்குக் கூட்டிப் போகட்டா?” என்று கேட்டான். விமலுக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்துவிட்டது.

“நீங்கள் எங்களை இந்த இடத்திலேயே இறக்கிவிடுங்கள். நாங்கள் போய்க் கொள்ளுகின்றோம்” விமல் சொல்ல ரக்சியை ஓரம் கட்டனான் சாரதி. அவனுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, இவர்கள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். அவன் இவர்கள் போவதையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். ஐந்து நிமிட நடையில் போகவேண்டிய சாப்பாட்டுக்கடை வந்தது. அங்கே மக்கள் வெள்ளத்தில் பிதுங்கியபடி வியாபாரம் களைகட்டி இருந்தது.

“எல்லாருமே கூட்டுக் களவாணிகள். பறட்டையன் தான் தலைவன் போல. நல்லகாலம்… தறுதலை எங்களை ஏமாத்தப் பாத்திட்டான்” என்றார் கமலா.

”அம்மா… இப்ப இருக்கிற தொழில்நுட்பத்தாலை, அவங்களாலை முந்தியைப்போல அவ்வளவு சுலபமாக மனிசர்களை ஏமாற்றிவிட முடியாது” என்றாள் பாவனி.

சாப்பிட்டு முடிவடைந்ததும் ஊபர் ஒன்றில் `இரும்புக்கோட்டை’ ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டார்கள். ஊபர்காரனுக்கு இடம் பிடிபடவில்லை. ஹோட்டலின் எதிர்ப்புறத்தில் நின்றுகொண்டு அங்கும் இங்கும் சுற்றினான். விமல் கூகிள் மப்பைப் போட்டு அவனுக்குப் பாதையைக் காட்டினான். ஒற்றையடிப் பாதையான ஒரு குறுக்குப்பாதை இருப்பதைக் கூகிள் காட்டியது.

“இதிலை நிற்பாட்டுங்கள். நாங்கள் போய்க் கொள்வோம்.”

எல்லோரும் ஊபரை விட்டு இறங்கினார்கள். குறுக்குப் பாதைக்குள் காலை வைக்கும்போது, “அங்கை பாருங்கோ… பறட்டையன் நிக்கிறான்” என்றாள் கமலா. அவள் காட்டிய திக்கில் பறட்டையனும் வேறு சிலரும் நின்று சிரித்துக் கதைத்தபடி நின்றார்கள்.

“இவன் என்னப்பா தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் போல!” சலித்துக் கொண்டார் குணசேகரன். பாவனிக்கும் விமலுக்கும் சற்றே பயம் பிடிக்கத் தொடங்கியது.

“நாங்கள் கொஞ்சம் அவதானமாக இருக்கவேணும்” என்றான் விமல்.

சனிக்கிழமை தில்லி – புது தில்லியில் அமைந்திருக்கும் இந்தியாவின் நுழைவாயில், தாமரைக்கோயில், குதுப்மினார், இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்கள், மகாத்மா காந்தி சமாதி என்பவற்றைப் பார்வையிட இருந்தார்கள். பிரயாணம் ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் என்பதால், அன்று ஹோட்டலிலிருந்து ஊபர் எடுத்து பஸ் புறப்படும் இடத்திற்குச் சென்றார்கள். ரக்‌சி, ஓட்டோவை விட ஊபர் மிகவும் மலிவானது என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

`இரும்புக்கோட்டை’யின் பகலுக்குப் பொறுப்பானவர் தாராளமான பொது அறிவு கொண்டவர். இடையிடையே எங்கெல்லாம் போனீர்கள்? போக இருக்கின்றீர்கள்? என்று கேட்டறிந்தார். சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிய தகவல்களையும் சொன்னார். அவர் சொன்னதன்படி ஞாயிற்றுக்கிழமை பல்பொருள் அங்காடி ஒன்றை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். குணசேகரன் தனக்கு உடம்பு சரியில்லை என்று அன்றைய பிரயாணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

“இரவு ஒன்பது நாப்பத்தைந்துக்கு ஃபிளையிற்… சீக்கிரம் வரப் பாருங்கள்.”

ஏனைய மூவரும் அங்காடிக்குச் செல்வதற்காக நகரத்திற்குச் சென்று, அங்கிருந்து புகையிரதத்தில் ஏறிக்கொண்டார்கள். வரும்போது கை நிறையப் பொதிகளுடன் புகையிரதத்தில் இருந்து இறங்கினார்கள்.

தாங்கள் இருக்கும் ஹோட்டலை யாருக்கும் காட்டிக் கொள்ளக்கூடாது என்று, ஆரம்பத்தில் இருந்தே விமல் கரிசனையாக இருந்தான். கூகிளில் தேடிப் பார்த்து, இரும்புக்கோட்டைக்கு அருகே பொடி நடை தூரத்தில் இருக்கும் இன்னொரு ஹோட்டல் முகவரிக்கு செல்லும்படி இந்தத்தடவை ரக்சி சாரதிக்குச் சொன்னான். ஹோட்டலை அண்மித்ததும் இறங்கிக் கொண்டார்கள். பொதிகளைச் சுமந்தவண்ணம் உள்ளே சென்றார்கள். விமல் ஹோட்டல் கவுண்டரில் இருக்கும் பெண்ணிடம் பேச்சுக் குடுத்து நேரத்தைக் கடத்தினான். பாவனி இடையிடையே வெளியே எட்டிப் பார்த்தாள். ரக்சி சாரதி போயிருந்தது கண்டு, மெதுவாக விமலுக்குக் கிட்டப் போய் முதுகைச் சுரண்டினாள். விமல் பேச்சை நிறுத்தி அந்தப் பெண்மணிக்கு `நன்றி’ சொன்னான். மூவரும் பொதிகளை சுமந்துகொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினார்கள். சில அடிகள் எடுத்து வைத்திருக்கமாட்டார்கள், “சார்… எங்கே போக வேண்டும்?” இவர்களை இறக்கிவிட்ட அதே சாரதி சிரித்தபடி ஒரு வளைவில் நின்றான். விமல் `தேவையில்லை’ என்று கையால் சாடை செய்தான்

“அவனைப் பாக்காமல் நடவுங்கோ” கட்டளையிட்டாள் கமலா.

கண் மூடி விழிப்பதற்குள், எங்கிருந்தோ பறந்து வந்த மூவர் அவர்களின் கைகளில் இருந்தவற்றைப் பறித்துக் கொண்டார்கள். திடீரென்று ஒரு கார், ரயர்கள் சுவிங்கம் போல் இழுபட, கிரீச்சிட்டு அவர்களுக்கு அண்மையாகத் திரும்பி நின்றது. கண்ணாடிச் சட்டம் பதிய, பீரங்கி மூக்கு வெளியே நீண்டது. “கமோன்… ஃகுவிக்…”

ஒருவன் காரின் டிக்கியைத் திறக்க, பறித்தவற்றை அதனுள் எறிந்துவிட்டு பாய்ந்து காரிற்குள் ஏறிக்கொண்டனர். என்ன ஏது என்று தெரியாமல் அவர்கள் பதறிப் போனார்கள். சத்தம் கூட ஒருவர் வாயில் இருந்தும் எழவில்லை. தங்களைச் சுற்றி நாலா திக்கிலும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை.

“சரி… இந்த மட்டிலை தப்பினோம்” கவலையுடன், தனது பொருட்கள் பறி போய்விட்டனே என்ற ஏக்கத்துடன் பாவனி முணுமுணுத்தாள். கமலாவினதும் பாவனியினதும் ஹாண்ட் பாக்குகளும் பறிபோய் விட்டன. மொபைல்போன்கள் பொக்கற்றுக்குள் இருந்தபடியால் தப்பிக் கொண்டன.

“நல்ல காலம். அப்பா ஹோட்டலிலை நிண்டதாலை பாஸ்போர்ட், நகை, பணம் எல்லாம் தப்பிச்சுது.”

இரவு ஏழு மணியளவில், அவர்கள் நால்வரும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஊபரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஊபர்காரன் அடிக்கடி `பான் பராக்’ போடுவதும், ஜன்னல் கண்ணாடியைத் திறந்து துப்புவதுமாக இருந்தான்.

“தம்பி… கொஞ்சம் சீக்கிரம் போப்பா… ஃபிளையிற்றுக்கு நேரமாச்சு” என்றார் குணசேகரன். அவன் ஜன்னலை மூடிவிட்டு அக்சிலேற்ரரை அழுத்தத் தொடங்கினான். அது கடபுடா என்று சத்தம் எழுப்ப, கார் விரைந்தது.

பாவனி எல்லாரையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்தாள். ஊபர்காரனுக்குப் பக்கத்தில் இருந்த விமலும், தன் அருகருகே இருந்த அப்பாவும் அம்மாவும் – காரின் உட்புறமாக மேல் இருந்த கைபிடிகளில் கைகள் தொங்கி நிற்க அந்தரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணா… நீ கார் ஓடேக்கை ஆராவது ஜீசஸ் ஹாண்டிலிலை கையைத் தொங்கப் போட்டாப் பேசுவாயே! இப்ப நீயே தொங்கிக் கொண்டு வாறியே!”

“பாவனி… நீயூடெல்கிப் பிரயாணம் அப்பிடி என்னைத் தொங்க வைச்சிட்டுது.”

“என்ன இருந்தாலும் முன்பின் அறியாத இடங்களுக்கு, நண்பர்களுமில்லாத நிலையில் வந்து பார்த்துவிட்டுத் திரும்பியதில் மகிழ்ச்சிதான்” என்றார் அம்மா.

“அம்மா… எல்லாக் குளறுபடிகளுக்கும் காரணம் `இரும்புக் கோட்டை’ தான். அங்கே வேலை செய்பவர்களுக்கும், அந்தக் கும்பலுக்கும் தொடர்பு இருக்கு” என்று விமல் சொல்ல, பின் சீற்றில் இருந்த மூவரும் அவனைப் பார்த்தார்கள். கடந்த ஒரு கிழமையில் நடந்தவற்றை, ஆரம்பம் முதல் கொண்டு மீண்டும் அசை போடத் தொடங்கினார்கள்

°

Series Navigationநாவல் பயிற்சிப் பட்டறை
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *