பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

படித்தோம் சொல்கின்றோம்:

பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !!

                                                                   முருகபூபதி

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை.

அந்தவகையில் இலங்கையில் வீரகேசரி நாளிதழில் நீண்டகாலமும் பின்னர் தமிழ்நாட்டில் தினமணி நாளிதழில் பல வருடங்களும் பணியாற்றியவரான எஸ். எம்.   கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கும் இந்த நூலை வெளிக்கொணர்ந்துள்ள ஊடகம், பொது வாழ்க்கை  சார்ந்து அயராமல் இயங்கிவரும் எச். எச். விக்கிரமசிங்க பாராட்டுக்குரியவர்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது.  கார்மேகம் அவர்களை நன்கறிந்த பலரது நினைவுப்பகிர்வு முதல் பகுதியாகவும், அஞ்சலிக்குறிப்புகள் சார்ந்த பகிர்வு  இரண்டாவது பகுதியாகவும்,  ஒளிப்படங்களின் தொகுப்பாக மூன்றாவது பகுதியும் இடம்பெற்றிருக்கின்றமையால்,  இந்நூல்  கார்மேகம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகள் என்பதற்கும் அப்பால் சென்று, இலங்கையின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் குறித்தும், இலங்கைப் பொருளாதாரத்தில் கூடுதல் அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த மலையக இந்திய வம்சாவளி மக்களின் முன்னேற்றத்தில் கார்மேகம் அவர்களின் வகிபாகம் எத்தகையது?  என்பது பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறது.

இந்நூலுக்கு தமிழ்நாடு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், முன்னுரையை பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியும், வெளியீட்டுரையை நூலின் தொகுப்பாளர் எச். எச். விக்கிரமசிங்கவும் எழுதியுள்ளனர்.

முதல் பகுதியில் இங்கிலாந்தில் வதியும் பேராசிரியர் மு. நித்தியானந்தன் முதல் அவுஸ்திரேலியாவில் வதியும் கார்மேகம் அவர்களின் செல்வப்புதல்வி கலை, இலக்கிய ஆர்வலர் திருமதி கனகா கணேஷ் வரையில் மொத்தம் 45 பேர் எழுதியிருக்கின்றனர்.

மூன்றாம் பகுதியில் ஏராளமான அபூர்வமான படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.  இவற்றை சேகரித்து ஆவணப்படுத்துவதற்கு தொகுப்பாளர் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கும் கடின உழைப்பும் போற்றுதலுக்குரியது.

ஒன்பது தசாப்பதங்களை கடந்து வெளியாகிக்கொண்டிருக்கும் வீரகேசரி பத்திரிகை அமைந்துள்ள கட்டிடத்தில்தான் ( 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு – 14 ) முன்னாள்  ஜனாதிபதி  ஜே.ஆர். ஜெயவர்தனா 1906 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்ற செய்தியையோ,  மகாகவி பாரதியாரின் அருமை நண்பர் வ. ராமசாமி வீரகேசரியில் அதன்  தொடக்க  காலத்தில் ஆசிரியராக பணியாற்றினார் என்பதையோ இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்த வரலாற்றுக் குறிப்புகளையெல்லாம் உள்ளடக்கித்தான் கார்மேகம் அவர்கள்  ஒரு நாளிதழின் நெடும்பயணம் என்ற நூலையும் எழுதியிருந்தார்.

கார்மேகம் செய்தியாளராக மாத்திரம் இயங்கவில்லை. அவ்வாறு செயற்பட்டிருப்பின் சமூகத்தில் பேசப்படாமல்  காலப்போக்கில் காணாமல்போன பல பத்திரிகையாளர்களின் பட்டியலில் இணைந்திருப்பார்.

இந்தப்பதிவின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டிருந்ததைப்போன்று அவர் சமூகத்திற்காக குறிப்பாக நலிவுற்ற மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப்  பேசினார்.  அவர்கள் தரப்பிலிருந்து தோன்றிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அனைவரையும் பேசவைத்தார். இயங்கவைத்தார்.

மலையகத்தில் விழிப்புணர்வை தோற்றுவிக்க தனது எழுத்தாயுதத்தை பயன்படுத்தினார். அதனால்தான் ஏனைய பல பத்திரிகையாளர்களிலிருந்து கார்மேகம் வேறுபடுகிறார்.

அவர் எழுதிய ஈழத்தமிழர் எழுச்சி  என்ற நூல் அரசியல் ஆய்வாளர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் உசாத்துணையாகியது. கண்டி மன்னர்கள் என்ற நூலையும் வரவாக்கி,  இலங்கை அரசியலில் இம்மன்னர்களின் வகிபாகத்தையும் பதிவுசெய்தவர்தான் கார்மேகம்.

நெருப்பிலிருந்து பிறக்கும் ஃபீனிக்ஸ் பறவையாகவே கார்மேகம்  வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக பேராசிரியர் மு. நித்தியானந்தனின் நீண்ட கட்டுரை பேசுகிறது.

அவரது ஆக்கத்தின் தலைப்பு மலையகத் தமிழர் விரோத அரசியலின் சிருஷ்டி என்றே அமைந்திருப்பதிலிருந்து உள்ளடகத்தை புரிந்துகொள்ள முடியும்.

மலையகத்தின் வரலாற்றையே நித்தியானந்தன் இக்கட்டுரையில் முடிந்தவரையில் பதிவுசெய்திருக்கிறார். அதனால், அந்த வரலாற்றுடன் பயணித்தவராக கார்மேகம் திகழ்ந்திருக்கிறார் என்பதையும் இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது.

பேராசிரியர் மு. நித்தியானந்தன், தெளிவத்தை ஜோசப், எம். வாமதேவன், அன்னலட்சுமி ராஜதுரை, சந்திரா, மாத்தளை கார்த்திகேசு, ஏ. கே. சுப்பையா, சிவா. சிவப்பிரகாசம், ஆர். பிரபாகர், வீ. தனபாலசிங்கம், எஸ். திருச்செல்வம், கே. எஸ். சிவகுமாரன், எச். எச். விக்கிரமசிங்க, முருகபூபதி, வீரகேசரி மூர்த்தி, எஸ். கிருஷ்ணன், ஶ்ரீஸ்கந்தராஜா, மல்லிகை சி. குமார், மு. சிவலிங்கம். ஏ. கே. எம். பிள்ளை, சிவலிங்கம் சிவகுமாரன், அருள். சத்தியநாதன், என். எம். அமீன், இ. தம்பையா, கே. வி. எஸ். மோகன், பி. எம். லிங்கம், மாத்தளை வடிவேலன், கே. நித்தியானந்தன், ரா. மு. நாகலிங்கம், கந்தையா சற்குணம்,             ஏ. கே. விஜயபாலன், வேல். அமுதன், மா. சந்திரசேகரன்,                        பி. சுந்தர்ராஜன், இ.கோபாலன், மலரன்பன், மாத்தளை சோமு, கே. கோவிந்தராஜ், கே. வேலாயுதம், அல். அஸுமத், பேராசிரியர் சோ. சந்திரசேகரம், மானா. மக்கீன், பேராசிரியர் ஶ்ரீ பிரசாந்தன், கனகா. கணேஷ் ஆகியோரின் பதிவுகள் இடம்பெற்றுள்ள இந்த நூலில்  அமரர் கார்மேகம் அவர்களின் வாழ்க்கை சமூகத்திற்கு எத்தகைய வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது என்ற அழுத்தமான செய்தியையும் சொல்லியிருக்கிறது.

இந்தப்பதிவுகளை எழுதியவர்கள், இலங்கை, தமிழகம், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா முதலான நாடுகளில் வதிபவர்கள்.  சிலர் மறைந்துவிட்டனர்.

எனினும் இவர்களும் கார்மேகத்துடன் பயணித்தவர்களே!

மலையக மக்களை கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, இலக்கியத்துறையில் ஈடுபடச்செய்வதற்காக சில சமயங்களில் One man army ஆகவும், சிலவேளைகளில் அனைவரையும் அணைத்துக்கொண்டு கூட்டாகவும் இயங்கியவர் கார்மேகம் என்பதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

கார்மேகம் அவர்களின் திருமண வரவேற்பு ( 1968 ) நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம் முதல் சுமார் 75 படங்கள் ஆவணமாக தொகுக்கப்பட்டிருப்பதும் இந்நூலுக்கு மகுடமாகியிருக்கிறது.

தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மலையக மக்களுக்காகவும், ஊடகத்துறைக்காக செலவிட்டிருக்கும் கார்மேகம்,  தனது குடும்ப விடயத்தில் எத்தகைய சிறந்த தலைவனாகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதை அவரின் புதல்வி திருமதி கனகா. கணேஷ் நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்.

புதிய தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் கார்மேகத்தின் வாழ்வும் பணிகளும் முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்ற செய்தியையும் இந்நூல் இழையோட விட்டிருக்கிறது.

தொகுப்பாளர் எச். எச். விக்கிரமசிங்கவுக்கு எமது வாழ்த்துக்கள்.

—0—

 

Series Navigationவைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *