ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 14 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 

  1. புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்

 

 

ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே

அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய்

பின் அதை நான் பார்த்த விதம்

சரியில்லை என்கிறாய்

புரிந்துகொண்ட விதம்

சரியில்லை என்கிறாய்

பயன்படுத்திய விதம்

சரியில்லை என்கிறாய்.

வா, வந்து உட்கார் என்னெதிரே –

கற்பிக்கிறேன்’ என்கிறாய்

’வித்தகனாக்குகிறேன் பார் உன்னை

வார்த்தை விளையாட்டில்’ என்கிறாய்

கல்லைச் சிலையாக்குவதாய்

சொல்லைக் கற்றுத்தருகிறேன்’’

என்கிறாய்

நில்லாமல் மேற்செல்கிறேன்.

 

*** ***

வார்த்தைகளைக்கொண்டு நான் செய்யும்

கழித்தலிலும் கூட்டலிலும்

நீட்டலிலும் பெருக்கலிலும்

குற்றங் காண்பதிலேயே கவனமாயிருக்கும்

உன் சொற்குவியல்களெங்கும்

கரையான் புற்று வளர்ந்தவாறு.

 

*** ***

குழந்தையா நான்

ஒரு சொல்லை கைபோன போக்கில்

இறைத்துவிட?

அல்லது முழுப் பிச்சியா

உச்சியை அடிவாரம் என்று அறைகூவ?

அழிச்சாட்டியம் செய்ய?

அப்படித்தான் என்று

உன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளும்

முனைப்பில்

நீ கூறத் துணிந்தால்

உனை வேரறுக்க என்னிடம்

வேறு நிறைய நிறைய வார்த்தைகள்

உண்டு.

 

*** ***

உன்னிடமுள்ள வார்த்தைகளையெல்லாம்

துலாக்கோலின் ஒரு பக்கத் தட்டில்

கொட்டி

கைதட்டி யெனை அழைத்து

அதட்டலாய்க் கூறுகிறாய்:

“வை உன்வசமிருப்பதை –

யாருடையது அதிக கனமென்று

பார்த்துவிடலாம்”

_ பாவம் நீ

வார்த்தைகள் சிறகு முளைத்தவை என்பதை

உன் அகங்காரத்தில்

அறவே மறந்துவிட்டாய்.

 

*** ***

மனதில் ததும்பும் வார்த்தைகள்

ஒவ்வொன்றும்

மென்மலர் போல்

வானவில் போல்

தண்காற்று போல்

தருநிழல் போல்

எரி தழல் போல்

பெருவரம் போல்

அற்புதப் பொற்பதம்போல்

கற்சிலையுருகுகலைபோல்……

கொஞ்சமும் இரக்கமின்றி

மளமளவென்று பிய்த்தெடுத்து

வெளியே கடைபரப்பி

என் கைத்தட்டலையும் கண்ணீரையும்

விலையாகக் கேட்டதும்

விதிர்த்துப்போனேன்

 

*** ***

உன்னைச் சுற்றி உதிரிப்பூக்கள்

மலையாய்க் குவிந்திருப்பதாய்

பீற்றிக்கொள்கிறாய்.

சரமாய்த் தொடுக்க

நாரும் விரல்களும் அவசியம்தானே.

காற்றில் பறந்துவரும் வாசமுள்ள

மலர்கள்

எல்லோருடைய பார்வைக்கும்

தெரிந்துவிடுவதில்லை.

ஒரு சிறு பூவே பெருங்குவியலாக மாறும்

சூட்சுமம்

உனக்குப் புரியாதவரை

என் விரல்களும் நாரும் வீண் என்கிறாய்.

அதனாலென்ன பரவாயில்லை.

“உன் கண்கள் இரண்டு புண்களாகாமல்

பார்த்துக்கொள்”

என்று சொல்லிச் செல்கிறேன்.

அப்பாலுக்கப்பால்……

 

*** ***

எனக்கான மொழிநிழலை

நானே தேடிக்கொள்வேன்.

நான் வாசிக்கும் ஒவ்வொரு நூலும்

எனக்குக் கற்றுத்தரும்

நாலும் நாலாயிரமும்.

வல்லவனாகவே இரு –

முடிந்தால் நல்லவனாகவும்.

எனில்

சொல்லுக்கும் எனக்கும்

அணுக்கமான பந்தம்

எல்லாம் தெரிந்தும்

நடுவே இடைத்தரகர் நீயெதற்கு?

விலகிச்செல் மரியாதையாய்.

மூக்கை நுழைக்கப் பார்க்காதே.

இது முதுபெரும் முதலைகள் உள்ள அகழி.

 

***   ***

  1. ரௌத்ரம் பழகுதல்

ஓரமாக ஒதுங்கியிருக்கவே விரும்புவேன்

அதையே காரணங்காட்டி

நீ ஒதுக்கித் தள்ள நினைத்தால்

ஓர் உதை விட்டு மையத்திற்கு வந்துவிடுவேன்.

 

சாமரங்கள் தேவையில்லை யென்றால்

சாமரம் வீசத் தயார் என்றா பொருள்?

 

தெரியாததை தெரியாதென்றுரைக்க

மனத்தெம்பு வேண்டும்

உலகிலுள்ள எல்லாமும் நல்லாத் தெரிந்ததாக

நாளெல்லாம் பாவனை செய்யும் உனக்கு

அது நிச்சயமாக இல்லைதான்.

பாவம் நீ.

 

ஆனால், பாவம்பார்ப்பதால்

என்னை பிடித்துத் தள்ளி விட அனுமதிப்பேன்

என்று நீ நினைத்தால்

உன்னை மோதி மிதிப்பதென் அறமெனத்

தெரிந்துகொள்.

 

இருளிலிருக்கப் பிடிக்கும் என்று சொன்னால்

அதற்காக என்னை குகைக்குள் தள்ளிவிட்டு

நன்மை செய்ததாக

ஊருக்குள் தம்பட்டமடித்துத் திரிந்தால்

விசுவரூபமெடுத்துவந்துன்னை

நார்நாராய்க் கிழித்தெறிய

தாராளமாய் முடியும் என்னால்.

 

பேர் பேராய்ப் போய் புலம்பியழக்கூடும்

உன்னை யொரு புழுவினும் கீழாய்ப்

பார்த்து

என் வழி நடப்பேன்.

என்ன செய்ய இயலும் உன்னால்?

 

ஒரு கூட்டத்தில் தனித்துத் தெரிய நான்

பிரயத்தனம் எதையும் செய்வதில்லை.

அதற்காய்

அடையாளம் அழித்து என்னையொரு

மொந்தைக்குள் திணிக்க முயற்சித்தால்

முற்றிலுமாய் இல்லாமலாக்க முனைந்தால்

மறுகணம் உன் கையை

முறித்துப்போடவும் தயங்க மாட்டேன்.

 

 

***  ***

Series Navigationபத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !முதுமையை போற்றுவோம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *