‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

3
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 7 in the series 6 நவம்பர் 2022

(1)

புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி

அந்தவொரு புகைப்படத்தில்

உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி

உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம்.

அது உண்மையான கண்ணீர்த்துளிதானா

என்பதே சந்தேகம்…..

இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில்

இதுவும் ஒன்றாயிருக்கலாம்;

அல்லது

இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;

அல்லது

கவனமாய் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாலையோர கொத்துபராத்தாக் கடையில்

காமராக்கள் காணத் தோதாய் நின்றவண்ணம்

சற்றுமுன் சாப்பிட்ட கொத்துபராத்தாவின் காரம் காரணமாயிருக்கலாம்;

அல்லது நடக்கையில் ஏற்பட்ட சன்ன தூசிப்படலத்தின் ஓர் அணுத்துகள் பறந்துவந்து நாசித்துவாரத்தில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கலாம்;

அல்லது

அவசர அவசரமாய்க் குடித்த தண்ணீரின் ஒரு துளி வாய்க்குள் புகத் தவறியிருக்கலாம்;

அல்லது

சிறிதாய்த் திரளச்செய்து உருளும்போது அதைப் படம் பிடித்துப் பல கால விம்மலாக்கத்

தம்மாலான தொழில் நுட்ப நுணுக்கங்கள் கையாளப்பட்டிருக்கலாம்;

அல்லது

குடிநீர்க்கோப்பையிலிருந்து ஒரு துளியைக்

கன்னத்தில் வாகாய் ஒட்டவைத்துப் படம்பிடித்திருக்கலாம்.

அல்லது….. அல்லது…… அல்லது…… அல்லது……

நல்லது _

உள்ளது உள்ளபடி யெனில்

இருட்டறைகளில் பெருகும் கண்ணீர் புகைப்படத்தில் தெரிவதில்லை.

கருணையின் செயல்வடிவம் பெறாக் கண்ணீர் விரயமாகும் நீர்த்துளிகளன்றி வேறில்லை.

திரும்பிப்பார்க்கும்போது அவருக்கே கூடத் தெரியக்கூடும்

அவருடைய புகைப்படத்தில் அவருடைய கண்களிலிருந்து உருளும் நீர்த்துளி எத்தனை கலப்படமானது என்று;

அன்றாடம் பார்த்துப்பார்த்து அரற்றியழும்

அந்தக் கண்ணீர்த்துளி யுருள்

கன்னத்துக்குரியவர்

‘என்னமாய் நடித்தேன் என்று புன்முறுவலித்திருக்கக்கூடும்….

உதட்டளவாகுமாம் சிலர் சொற்கள்

ஊறுங் கண்ணீரும் அம்மட்டே

சிலரிடத்து….

சின்னத்திரை வெள்ளித்திரையோடு முடிந்துபோய்விடுவதில்லை

மெகா சீரியல்கள்

என்றுணர்தலே ஏற்புடைத்து.

 (2)

நல்லுள்ளமும் நானும்

மந்திரமாகும் சொல் மனதுள் செல்லச்செல்ல

கனத்துப் படிந்திருக்கும் அழுக்குப் படலமழிந்து

சுந்தரமாகும் உள்.

சுதந்திரம் கள்ளமில்லாப்

பேருவகை கொள்வதாம்.

தாறுமாறாய் இறுகியுள பாசிபடர் பாறைகள்

ஊறிய நீரில் நெகிழ்வதொரு

வந்தனையாய்

அந்தரத்தொலித்த அருள்வாக்காயவ்

வொரு சொல்

’எந்தரோ மகானுபாவுலு’வுக்கு எனைச்

சொந்தக்காரியாக்க,

உள்ளுறை யாங்கார

நிந்தனைகள் நீங்க,

இத்தருணம் மின்னும் இன்னுமின்னும்

பத்தரைமாற்றுத் துலக்கம் நாடும்

நல்லுள்ளம் நானாக

காடாறு மாதம் நாடாறு மாதம்

காடு நாடாகும் நாடு காடாகும்

ஆறாக் காட்சிமயக்கம் கவினுறு வாழ்வாக

கவி பிரம்மராஜனின்

’வெல்லும் வெல்லுமென நிற்கிறேன்

என் சொல்லும் சொல்’

புவிமிசை இன்று மென்றும்

தீராக் கவிதையாக….

Series Navigationபெண் விடுதலை – நூல் அறிமுகம்
author

ரிஷி

Similar Posts

3 Comments

 1. Avatar
  S. Jayabarathan says:

  கவிதாயினி ரிஷி லதாவுக்கு,

  கவிஞானி பிரம்மராஜனின் கவிதைகளைப் பற்றி மீண்டும் திண்ணையில் எழுத வேண்டுகிறேன்.

  சி. ஜெயபாரதன்

  1. Avatar
   latha ramakrishnan says:

   நிறைய எழுதியாயிற்று. கவி பிரம்மராஜனின் கவித்துவம் மீது மரியாதை கொண்டவர்களின் கட்டுரைகள், அவருடைய எழுத்தாக்கங்கள் என ஒரு தொகுப்பையும் என் ANAAMIKAA ALPHABETS மூலம் வெளியிட்டிருக்கிறேன். (சொல்லும் சொல் பிரம்மராஜனின் என்ற தலைப்பில்). மொழிபெயர்ப்புப் பணியில் அவருடைய பங்களிப்பு அளப்பரியது என்றாலும் நான் அவரைப் பிரதானமாக தமிழின் நவீன கவிதை முன்னோடியாகவே பார்க்கிறேன். அவரை மொழிபெயர்ப்பாளராக மதிக்கிறோம் ஆனால் கவிஞராக அவர் போலி, மோசமான முன்னுதாரணம் என்று இலக்கியத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் self-appointed champions ஆகத் தம்மைதாமே வரித்துக்கொண்டு பெரியமனித பாவனையில் பேசும் பென்னம்பெரிய படைப்பாளிகளும், இன்று அவர் எழுதிய கவிதைகள் பிரசுரமாகவில்லையென்பதால் அவரை காலாவதி யாகிவிட்ட கவிஞர் என்று கூசாமல் பழிப்பவர்களும் இங்கே நிறையவே இருக்கிறார்கள் என்றாலும் அதைவிட அதிகமாய் ஒரு கவிஞராக பிரம்மராஜனை மதிப்பவர்களும் இங்கேயுண்டு என்ற அறிதல் பெரும் ஆறுதல்.

 2. Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *