அய்யனார் ஈடாடி
1.குழிமேடு
திறந்திருக்கும் வாசல்
சுழட்டிப் பெய்யும் மழை
கட்டற்ற வெளியில்
கட்டியணைக்கும் இருள்
யானைக் காதின்
மடல் அது போல
வீசும் காற்றில்
வருடும் மேனியில்
முளைவிடும் வித்துக்கள்
வேர்களை ஆழ ஊன்றுகிறது
ஒத்த வீட்டின்
மேவிய குழிமேட்டில்…
2.ஆளாங்குளத்தி
எத்தனிக்கும்
களைந்த மதியத்தில்
இளைப்பாறும் கனத்தில்
கிணத்து மேட்டில்
கீற்றசைக்கும் தென்னை
விரித்துகாயும்
அவள் நரையை
அள்ளி வருடியது
புற்றிலிருந்து
தப்பிவந்து
அசந்துறங்கும்
நடைஎறும்பாய்
முற்றிலும் துறவு பூண்ட
புத்தனைப் போல
ஆழ்ந்துறங்குகிறாள்
ஆளாங்குளத்தி
3.
இடையபட்டியில்
கிடையமர்த்தியவனுக்கு
உடைந்தது மண்டை
அடைக்கலம் கேட்டதனால்…
ஒரே வழித்தட பேருந்து
இனம் பிரித்தது
மகளிருக்காக மட்டுமென்று…
சாக்கடையிலும் கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்…
பாவம் என்ன செய்தது
குடிசை வீடு
உறங்கும் நெடிய இரவில்
பற்ற வைத்தது
சிறகில்லாத மின்மினி…
4.கதகதப்பு
கதவு திறக்கையில்
தலை தட்டும்
மிளகாய் கொத்தும்
வேம்புக் கரித்துண்டும்
நிதம் தூவுகிறது அட்சதை….
துவைத்து போட்ட
அம்மாவின் நூற்சேலை
உறங்குகிறது அலமாரியில்
நீள் நாட்களாக
அணைத்துப் போர்த்தினேன்
அம்மாவின் கதகதப்பு
ஒட்டிக் கொண்டது
அவளின் நினைவு நாளில்…
5.
வெட்டிவைத்த வாழைத்தார்
ஊதிப் பழுக்கிறது
மூடிய உழவர் சந்தையால்…
நிரம்பி வழிகிறது
கழணித் தண்ணீர்
சந்தைக்குப் போகும் வத்துபால்மாடு…
நடைஎறும்பின் வழியே
நானும் சென்றேன்
பக்கத்தில் புற்று…
நேற்று மேய்ந்த ஆடு
வத்தலாய் காய்கிறது இன்று
ஊர் பொங்கல்…
6.தேர்வு முடிவு
அடைக்கட்டி வைத்த
முட்டைக் கோழியை
நிதம் நிதம்
திறந்துபார்க்கும்
சிறு குழந்தையென
திறந்து பார்க்கிறேன்
மடிக்கணினியை
கல்லூரி தேர்வு முடிவிற்காக…
7.தாகப்பசி
எழுது கோல்
கக்கி யெடுக்கும்
வண்ண மைகளில்
எழுந்து வரும்
விதைச் சொற்கள்
புரட்சியை விதைக்கின்றன
காகித தாளினை
புரட்டியெடுக்கும்
விரல் நுனிகள்
கொஞ்சமள்ளி ஏந்துகின்றன
தாகப் பசியில்…
8.அறியாமை
ஆட்டுக்காரன் தூக்குச்சட்டியில்
மோதி யலைகின்றன
பழய கஞ்சியும் பாகத்துவயலும்
மேலூரு தடமழியே
கீலூரு போக வேண்டும்
ஆடு போட்ட புழுக்கையெல்லாம்
ஆளக்கூட்டி அள்ளுறவ
ஆட்டுக்காரன் கொச்சைக்கு
நாசியத்தான் மூடுறாளே
எக்கு போடும் கிடாக்களை
பத்தி பத்தி
வத்தி போன குரலுக்கு
வாநீர் பத்தவில்லை
வாய்க்கால தண்ணியில்லை
ஊரடிக்கு வந்த போது
ஊரு சனங்கூடியிருக்க
உமிழ்நீரும் வத்திப் போச்சு
அடிச்ச குழாய்
பொங்கி வழிய
நனச்சுப் பிட்டான்
நா வறட்சியை
தெறிச்ச தண்ணி பட்டிடும்னு
தள்ளிப் போகும் சனங்களுக்கு
தீட்டு வந்து சேருமின்னு
தினித்து விட்ட அறியாமையை
உடைக்கிற தெப்போதோ ?
9.குறி காணிக்கை
களவு குறி பார்க்க போன இடத்தில்
தொலைத்து விட்டாள்
சுண்டுவிரல் மோதிரத்தை
வீடுவந்து சேர்ந்த போது
விரல் நுனிகள் கேட்டு விட்டது
மார்பிலே அடித்துக் கொண்டு
மந்தைவெளி சுற்றி வந்தாள்
மாரியாத்தா போல வந்து
மோதிரத்தை மாட்டிவிட
மாநகர காவலுக்கு
மண்டியிட்டு
செலுத்தி வந்தாள்
குறி காணிக்கை….
- “மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20
- இருப்பதெல்லாம் அப்படியே …
- நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.
- நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை
- வித்தியாசமான கதை…
- வீரமறவன்
- எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்
- இலக்கியப்பூக்கள் 268
- புகுந்த வீடு
- அய்யனார் ஈடாடி கவிதைகள்
- ஆன்ம தொப்புள்கொடி
- முகவரி
- துபாய் முருங்கை