சோம. அழகு
சமூக வலைதளங்களின் இரைச்சல், அலுத்து உளுத்துப் போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் (intolerable mindless TV shows) ஓலம் – இவற்றைச் சிலாகிக்கும் வேடிக்கை விந்தை மனிதர்களால் ஆன புறச் சூழல், அன்றாடம் ஒரு மாற்றமும் இல்லாமல் நகரும் வாழ்க்கை, மிகச் சாதாரண விஷயத்தையும் பெரிய போராட்டம் நடத்திப் பெற வேண்டிய கட்டாயம், மீண்டும் மீண்டும் நம் வெளியில் அத்துமீறி நுழைபவர்கள், வழமையான ஆர்வம் பொங்கி வழியும் உசாவல்கள், நம்மீது அடுக்கி வைக்கப்படும் எதிர்பார்ப்புகள், அர்த்தமற்ற முடிவிலியாகச் செல்லும் சடங்கு சம்பிரதாயங்கள் (‘அர்த்தமற்ற’ – வார்த்தை விரயம்!), அநேக நேரம் கேட்க நேரும் (நேர்மையற்றோரின்) வாய்ச்சவடால்கள், ….. இவை தரும் எரிச்சலே வாடிக்கையாகிப் போனால்….!
உலகின் அத்தனை உணர்வுகளையும் அவற்றின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்து முடித்து விட்டதைப் போல ‘இனி புதிதாக ஒன்றுமே இல்லை; இருக்கப் போவதும் இல்லை’ என வெளிப்படும் அபாயகரமானதொரு உணர்வால் ஆக்கிரமிக்கப்படுவோம். நல்லன நம் வழியில் வரும் போது கூட அதைப் பாராட்டவோ கொண்டாடவோ இயலாத அயர்ச்சி ஆட்கொண்டுவிடும். உலகையும் வாழ்வையும் அதீத புரிதலுடன் உணர்ந்து கொள்ள வாய்ப்பது கொடுஞ்சாபம். சேலை, நகை நட்டு, ஒப்பனை, கைப்பை – ஒழுங்காக இந்தக் குண்டுச்சட்டிக்குள் உழலத் தெரிந்திருந்தால் வாழ்வு எளிதாயிருக்கும் போலும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ தூரத்தில் கண் காணாத இடத்தில் ஓர் அமைதியான அழகான சூழல் நமக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அது வரை வாழ்க்கையைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்பது போலவும் நகரும் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? நம் கற்பனையில் மட்டுமே உயிர்த்திருக்கும் வானவில்லைத் தாங்கிய அவ்விடம் தரும் ஆறுதலைப் பொய் என ஆழ்மனது உணர்ந்திருந்தும் அதை ஏற்க மறுத்து அந்நொடியைக் கடத்துவதில் நீடிக்கிறது வாழ்வின் மீதான நம்பிக்கை.
நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகள் செலவு செய்யப்படாமலே கரைந்து போய் எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் அளவிற்கு அதிகமாக மீந்து கிடப்பதாக ஓர் உணர்வு. ஒரு முறை… ஒரே ஒரு முறை… கடைசியாக ஒரு முறை உடல் அதிர உலகம் அதிர குரல் நாண்களை வெடித்துச் சிதற விட்டு பின் ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக் கொள்ள வேண்டும் (One last scream from the top of lungs and then go mute forever). வேறு எப்படித்தான் வெளிப்படுத்துவது தேக்க மனநிலையை?
இடைவிடாது கேட்கும் அலைகளின் இரைச்சலில் அது அமிழ்ந்து போகட்டும். ஆர்கலியின் ஆழத்தில் நிலவும் அமைதியைப் பற்றி ஒரு போதும் அலைகள் கரையிடம் கதைத்ததாகத் தெரியவில்லை. அல்லது அந்நிசப்தத்திற்கும் சேர்த்துதான் பேரொலி எழுப்பியவாறே கரையத் தொட்டுச் செல்கிறதோ? ஓயாமல் வந்து செல்லும் அலைகளை கரைக்கு அலுத்திருக்காதா?
“உலகில் எத்தனை பேர் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள் தெரியுமா? கண் இல்லாம, கை கால் இல்லாம, சாப்பாடு இல்லாம, ஆதரவுக்கென ஒருத்தரும் இல்லாம….. அதையெல்லாம் பார்க்கும்போது இதுலாம் ஒண்ணுமே இல்லாத தேவையில்லாத மனக்கஷ்டம். தூக்கிப் போடுவியா….” – ஒப்பீடுகளில் கிடைக்கும் இது போன்ற குரூரமான ஆறுதல்கள் தேவையில்லை எனக்கு. முதலில் இது எப்படி ஆறுதலாய் அமையும்? இல்லாதோரைப் பார்த்து நம் மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருக்கும் sadism சிறிதே மேலேழுந்து மகிழ்ந்து கொள்ள கொடுக்கும் அருவருக்கத்தக்க வாய்ப்பு. Those who walk away from Omelas சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது.
சலிப்பு… எதை/யாரைப் பார்த்தாலும்/கேட்டாலும் சலிப்பே மேலிடும் மனநிலையில் இருந்திருக்கிறீர்களா? எல்லா உணர்வுகளும் மறந்தும் மரத்தும் போன நிலை. நிம்மதியைத் தொலைத்த ஏதோ ஒரு மனது அமைதியையும் தெளிவையும் தேடி நம்மை நாடி வரும் என அறிந்து பின்னிரவில் நமக்காக விழித்திருந்து காத்திருக்கும் பி(நி)றைநிலாவால் கூட சரிசெய்ய இயலாத சலிப்பு. நட்சத்திரங்களுக்கு இடையே இரைந்தும் விரவியும் கிடக்கும் இருளில் மறைந்து கிடக்கிறது போலும் நமக்கான ஆறுதல். இரவு எவ்வளவு அழகானதோ அவ்வளவு கொடூரமானதும் கூட.
சலிப்பு தீவிரமடைந்து பரிணாம வளர்ச்சியில் அடுத்த உச்சத்தை எட்டும் போது வெளிப்படும் வெறுப்பு…. அற்புதமான சொற்களினால் கோர்க்கப்பட்ட கவிதையினால் கூட ஆற்றுப்படுத்த இயலாத வெறுப்பு. சலிப்பும் வெறுப்பும் மேலோங்க வாழ்க்கையின் மீதான பிடிப்பு, புலரியில் மெல்ல மெல்ல உறங்கச் சென்று மறையும் நட்சத்திரங்களைப் போல, தளரத் துவங்கிய தருணம் நினைவிருக்கிறதா உங்களுக்கு? அதில் எத்தனை காலம் தேங்கிக் கிடந்தீர்கள் அல்லது கிடத்தப்பட்டீர்கள்? அதிலிருந்து எது மீட்டெடுத்தது? சித்தார்த்தனைப் போல் அல்லாமல் நல்ல வழிமுறையைப் பின்பற்றி மீண்டு விட்டிருப்பீர்கள் என்றே நம்ப விழைகிறேன். இந்த இடத்தில் ஒரு சின்ன சம்பந்தம் இல்லாத கேள்வி. ‘புத்தனை ஏன் கொண்டாடுகிறீர்கள்?’ எனக் கேட்கவில்லை; ‘சித்தார்த்தனை ஏன் கடிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?’ என்றே கேட்கிறேன். சித்தார்த்தனின் பொறுப்பற்றத்தனத்தையும் தப்பிச் செல்லும் மனோபாவத்தையும்(escapism) புத்தனின் மோன நிலை கொண்டு சமன்படுத்தும் அல்லது மறக்கடிக்கும் நியாயம் புரியவில்லை; தேவையுமில்லை. சடங்கு சம்பிரதாயங்களை உள்ளடக்கிய வழிபாட்டு முறைகளுக்கு சிறந்ததொரு மாற்றை புத்தன் தந்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நான் பௌத்தத்தைச் சாடவில்லை; புத்தனையும் சாடவில்லை. சரி! வாருங்கள். மீண்டும் சலித்துக் கொள்வோம்.
சமீபமாக புறக்கணிப்புகள் யாவும் வரங்களாகிப் போகின்றன. யாருடனும் நெருக்கமில்லாமல் இருப்பது ஏதோ கண்ணுக்குப் புலப்படாத தளைகளினின்று விடுபட்டதைப் போல அப்படி ஒரு நிம்மதியைத் தருகிறது. எதிர்ப்பார்ப்பு என்னும் வார்த்தைக்கு இடமில்லாமல் போகும் வகையில் உறவுகளை சில பல மைல்களுக்கு அப்பால் நிறுத்துவது அளவற்ற சுதந்திரத்தைத் தருவதாக அவதானிக்கிறேன். ‘யார் வேண்டும்?’ என்பதை விட ‘யாரெல்லாம் வேண்டாம்?’ என்னும் தெளிவில் மறைந்துக் கிடக்கிறது மன அமைதி. என்ன கார்மேகக்குழலுக்கு சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்? உடல்நலமும் மனநலமும் முக்கியம் அல்லவோ? எனவே வலுக்கட்டாயமாகப் புன்னகையைப் பூசிக் கொள்ளாமலிருப்பது நலம் போலும்.
என் கவலைகள் புலம்பல்கள் குற்றச்சாட்டுகள்… நியாயமானவையாக இருந்தாலும் கூட இவற்றை விழுங்க முயன்று முயன்று தோற்றிருக்கிறேன், அனைவரையும் போல. வார்த்தைகள் பீரங்கிக் குண்டுகளாய் வெளியே வந்து விழுந்து வெடிக்கும் வரை மனதினுள் எத்தனை எத்தனை ஒத்திகைப் புயல்கள், போராட்ட சுனாமிகள்?
இப்போதெல்லாம் என்னைப் பற்றிய தவறான புரிதல்களை விளக்க மெனக்கிடுவதே இல்லை. ஏனெனில் மெனக்கெடல்கள் எல்லாம் யார் நினைவிலோ நிலைத்திருப்பதற்காக அல்லது உறவுகளைச் சுமூகமாகக் கொண்டு செல்ல மேற்கொள்ளும் வீண் முயற்சிகள் அல்லவோ? அவ்வாறெல்லாம் பிறரது நினைவுகளில் அகப்பட்டுக் கட்டுண்டு கிடக்க விருப்பம் இல்லை. உறவுகளை இழுத்துப் பிடித்து வைத்துதான் என்ன ஆகப் போகிறது. புரிதல் பிழைகளைப் பொருத்த வரை, ‘அப்படியும் எனக்கொரு பிம்பம் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே’ என்ற குறுகுறுப்பு; அல்லது ‘புரிய வைத்துதான் என்ன ஆகப் போகிறது?’ என்ற அலட்சியம் தரும் துணிவு. என்னை விளக்கத் தேவைப்படும் வார்த்தைகளுக்கு மௌனத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். விளக்கங்களைக் கொடுப்பதற்கான திராணியும் பொறுமையான மனநிலையும் அருகாமையில் நிற்கின்றன. அதுமட்டுமல்லாது அவ்வார்த்தைகள்தாம் என்னைச் சிறையிட்டு வைத்திருக்கின்றனவோ என்ற ஐயம். உலகை நமட்டுச் சிரிப்புடன் கண்டு களித்துக் கொண்டிருக்கும் அந்த மௌனம் மாபெரும் விடுதலையாகத் தோன்றுகிறது. ‘So what?’ – தயக்கங்கள் குழப்பங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து அளப்பரிய தைரியத்தை ஊற்றெடுக்க வைக்கும் இவ்வார்த்தைகள் அனிச்சையாக முதுகில் சிறகுகளைப் பொருத்திச் செல்கின்றன. விளக்கங்களைத் தாண்டிய புரிதலோடு இளவேனிற்கால இதத்தைத் தரும் வெகு சில நமக்கானவர்களை மட்டும் நம்மைச் சுற்றி வைத்திருக்க முடிந்தால் ஒருவேளை மனது சோர்வடையாமல் இருக்குமோ?
இம்தியாஸ் அலியின் ‘தமாஷா’ திரைப்படத்தில் வரும் ரன்பீரின் கதாபாத்திரம் சமூகத்தின் சலிப்பூட்டும் சக்கரத்தை உடைத்து அதிலிருந்து வெளியேறும் அந்த ‘சஃபர்னாமா’ தருணம் மனதோடு அவ்வளவு நெருக்கமாகிப் போனது. ‘நம் கண்களின் உள் அமிழ்ந்து கிடக்கும் சிக்கலான மனநிலையை யாரேனும் கண்டு உணர மட்டார்களா? அதிலிருந்து நம்மை மீட்டெடுக்க மாட்டார்களா?’ என்னும் சோர்வு குடிகொள்ளத் துவங்கும் போதே ‘யாரேனும் கண்டுபிடித்து விடுவார்களோ? அதற்கு இடம் தராமல் கண்களில் மைக்குப் பதில் துணிவை எழுதி மிடுக்கியாய் முன்னேறிச் செல்ல வேண்டும்’ என்னும் உத்வேகமும் வந்து செல்கிறது. ஏனெனில் எந்த தாராவுக்கும் (அப்படத்தில் தீபிகாவின் கதாபாத்திரம்) காத்திருக்கத் தயாரில்லை நான். போகும் வழியில் ஆழமான உரையாடலுக்கென யாரேனும் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். மற்றபடி ‘பேசுவதற்கு என்ன இருக்கின்றது? பேசிப் பேசித்தான் என்ன ஆகப்போகிறது?’ என்ற எரிச்சல் மேலிடும் மனநிலையே நிரந்தரமாகிப் போய்விட்டதைப் போன்ற உணர்வு. வழக்கமான அளவளாவல்கள், உரையாடல்கள், நல விசாரிப்புகள், கேள்விகள், பதில்கள், பறைதல் என அனைத்து உருவிலான கதைத்தலும் கடின முயற்சியும் அளப்பரிய சக்தியும் வேண்டுவதாக உள்ளது. ஒருவேளை நமக்குத்தான் பொறுமை இல்லையோ?
எல்லோரிடமும் அல்லது யாரோ ஒருவரிடம் கூட எல்லாவற்றையும் கொட்டி விட முடிவதில்லை. நம்மைத் தாண்டி வேறு யாரிடம் எதைப் பகிர்ந்தாலும் அது நிச்சயம் பின்னொரு காலத்தில் நமக்கெதிரான ஆயுதமாகக் கையிலேந்தப்பட்டு கத்தியின்றி ரத்தமின்றி வார்த்தைகளால் நம் மனதின் ஒரு பகுதி சுக்கு நூறாக்கப்பட்டு ஒரு சிறிய கொலை அரங்கேற்றப்படும். அதற்குப் பேசாமல் நம்முள்ளே அனைத்தையும் அழுந்தப் புதைத்து, (முட்டி மோதும் உணர்வுகளை napalm போல வெடித்துச் சிதற விட்டு) இன்னவென்று தெரியாத வெறுமையைக் குடி கொள்ள அனுமதித்து, அழவும் வராத நிலையில் உணர்வற்று ஜீவித்திருப்பது எவ்வளவோ மேல். எந்த ஒரு விஷயம் நம்மைப் பாதிக்கிறதோ நம்மைக் கவலைக்குள்ளாக்குகிறதோ, மரத்துப் போகும் வரை அது தரும் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
திடீரென ஓர் அவதானிப்பு. என்னிலிருந்து வெகு தூரம் வந்து விட்டேன். திரும்பி என்னிடமே செல்வதற்கான பாதை மிகத் தெளிவாகத்தான் தெரிகிறது. இருந்தும் கால்கள் நகர மறுக்கின்றன. வழியில் ஆங்காங்கே சிந்தியும் சிதறியும் கிடக்கும் என்னைப் பத்திரமாய்ச் சேகரித்துக் கொண்டே என்னிடம் செல்ல வேண்டும். அந்தப் பளுவை இப்போதிருக்கும் என்னால் தாங்க இயலுமா? ஏன் என்னிடம் திரும்பிப் போக வேண்டும்? இந்த என்னைக் கட்டமைப்பதற்குக் காலம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஏளனம் செய்வதாக அமையும் அல்லவா? இந்த என்னை இப்படியே ஏற்றுக் கொண்டு இன்னும் மெருகேற்ற வேண்டி மீண்டும் மீண்டும் இரைஞ்சுகிறது காலமும் மனமும்.
உலகின் மீதான வாழ்க்கையின் மீதான இடைவிடாத ரசித்தலும் வியத்தலுமே நம்மை உயிர்ப்புடன் இருத்தி வைக்கவும் இயங்கவும் செய்வன. ஆனால் அதற்காக எந்தச் சூழ்நிலையிலும் ஒரு நல்ல இசை/கவிதை/புத்தகம்/திரைப்படம் நம்மை ஆற்றுப்படுத்தும், குளம் வெட்டும், கடல் சேரும் என்பதிலும் நம்பிக்கை இல்லை. எந்த ஒன்றையும் ரசிப்பதற்குக் கூட ஒரு மனநிலை வேண்டும். ஓரளவு அமைதி வாய்க்கப்பெற்ற மனநிலைதான் ரசிக்கப்படும் கலை கடத்தும் உணர்வுகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. வலுக்கட்டாயமாக அவற்றிடம் ஆறுதலுக்கென தஞ்சம் புகுந்ததில் இசை இரைச்சலாகவும் கவிதைகள் பிதற்றலாகவும் தோன்றி அவற்றுக்கு வெறுப்பைச் சாற்ற வேண்டிய சூழலும் அமைந்திருக்கிறது. ‘எப்பவும் வாழ்க்கயை ரசிச்சுட்டே இருக்கணும்; ஆனால் அதற்குக் கூட ஒரு மனநிலை வேண்டும்’ – இப்படியான முரண்களில் கூட பொதிந்து கிடக்கும் அழகியலை உணர்ந்து குறுநகை பூத்திடும் மனம் வேண்டும்.
தஸ்தயேவ்ஸ்கி கூறுவதைப் போல இன்னும் ஒட்டுமொத்த மானுடத்தின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் நான் இன்னும் இழக்கவில்லை. தனி மனிதர்கள் மீதுதான் அது சாத்தியப்பட மாட்டேன் என்கிறது. நான் நூறு வார்த்தைகள் கதைக்கும் போது ஆயிரம் வார்த்தைகளை விழுங்கி இடையிடையே சத்தமாக வந்து விழும் மௌனத்தை(க் கூட) சரியாக மொழிபெயர்க்கத் தெரிந்த ஒரு தோழமையிடம் கொட்ட முற்பட்டால், அது எழுதுகோலின் கூர்மையான முனையிலிருந்து கசியும் வழியையே தேர்வு செய்கின்றது.
ஒவ்வோர் இரவிலும் எனக்காகச் சிரித்திருக்கும் ஒரு நட்சத்திரம்; ஒவ்வொரு பகலும் என்னுள் கவிந்திருக்கும் இருளில் ஊற்றிச் செல்லும் சிறுவெயில்; ஒவ்வொரு மழையிலும் எனக்கென பெய்யும் ஒற்றை மழைத்துளி; ஒவ்வொரு கடலும் எனக்காக அனுப்பும் ஓர் அலை; ஒவ்வொரு நாளும் எனக்காகவே மலர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் மணம் பரப்பும் மலர்; ஒவ்வொரு புத்தகத்திலும் என் மனதைத் தொட்டுச் செல்லவென ஒளிந்திருக்கும் வரிகள்; எல்லா நாளிலும் மகிழ்ந்திருக்கவும் மனஅமைதியைத் தேடித் தரவும் எனக்கே எனக்கான சில நிமிடங்கள் – இவற்றுக்கான தேடலில் பிழைத்துக் கிடக்கிறது வாழ்க்கை.
உடைந்து அழுவதற்குக் கூட ஏதோ ஒரு கலை வடிவத்தின் உந்துதல் தேவைப்படும் மனநிலையில் இருக்கும் போது திடீரென எந்த உந்துதலும் இன்றி மனதினுள் ‘ABRACADABRA’வாக ஒரு வெளிச்சம் பாய்ந்து கீறிச் செல்லும். புதியன காணவும் வாசிக்கவும் வேண்டி எழும் ஆவல். அதைச் சிறிது நேரம் பற்றியிருக்கச் சொல்லி மனம் கெஞ்சும். என்னுள் எங்கோ ஓர் ஓரமாக ஒளிந்து உறைந்து கிடக்கும் சிறுமியை மீட்டெடுப்பதற்கான நினைவூட்டல் அது. மீண்டும் எல்லாவற்றையும் கண்கள் விரிய ஆச்சரியத்துடன் அணுக மழலை மனம் வேண்டி ஓர் யாசகம். செவிமடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். பிழைத்திருப்பதற்கான வழியும் அதுதானே!
– சோம. அழகு
- கவிதைத் தொகுப்பு நூல்கள் 3
- வனம்
- பயத்தை உண்டாக்கு
- கனவு
- தாயகக் கனவுடன்…
- குடும்பம்
- உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022
- மழை
- ஊமைகளின் உலகம்..!
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்
- மக்கள் படும் பாடு
- நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்
- குவிகம் இணையவழி அளவளாவல்
- குக்குறுங்கவிதைக்கதைகள் – 12
- பிழைத்திருப்போம் !
- திப்பு சுல்தான் 273வது பிறந்த நாள் விழா
- மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய