ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்

This entry is part 7 of 9 in the series 4 டிசம்பர் 2022
குரு அரவிந்தன்
 
 
சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன. இதில் மாலை 6 மணிக்குத் தொடங்கி டெரிகிறிஸ்ட் ட்ரைவில் நடக்கும் மின்விளக்கு அலங்காரக் காட்சி 2023 ஐனவரி மாதம் வரையும் நீடிக்கும் என்று அறிவித்திருந்தார்கள். விவசாயக் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவெம்பர் மாதத்தில் 2 வாரங்களுக்கு நடைபெறுவதாக அறிவித்தார்கள். இந்த இரண்டு காட்சிகளுமே பிள்ளைகளுக்கு ஏற்றதாக, அவர்கள் பார்த்து மகிழக்கூடியதாக அமைந்திருந்தது மட்டுமல்ல, பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களும் இவற்றில் அடங்கி இருப்பதைக் காணமுடிந்தது.
 
முதலாவதாக விவசாயக் கண்காட்சியை எடுத்துக் கொள்வோம். ஒன்ராறியோவின் பல பாகங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து கலந்து கொண்டார்கள். உள்ளகக் கண்காட்சி என்பதால் குளிருக்குப் பாதுகாப்பாக இருந்தது. விவசாயப் பொருட்களும், விவசாயத்திற்கு உதவும் பொருட்களும் மற்றும் உயிருள்ள பண்ணை மிருகங்கள், பறவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள பழங்குடி மக்களும், பல வருடங்களுக்கு முன் இங்கு வந்து குடியேறிய அனேகமான குடும்பங்களும் விவசாயத்தில்தான் ஈடுபட்டார்கள். அதனால் அவர்களின் பரம்பரையினர் பலர் குடும்பத்தோடு அங்கு வந்து போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்ததைக் காணமுடிந்தது.
 
மாடுகள், ஆடுகள், குதிரைகள், செம்மறிகள், பன்றிகள், நாய்கள், வாத்துக்கள், கோழி வகைகள், முயல்கள், கினிக்கோழிகள் போன்றவைகளும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. மாடுகளில் இருந்து எப்படிப் பால் கறப்பது போன்ற செய்கை முறைகளும் செய்து காட்டினார்கள். விவசாயிகளின் பாரம்பரிய உணவு வகைகளும் விற்பனைக்கு இருந்தன. குறிப்பாக மேபிள்சிறெப், தேன், தயிர், வெண்ணெய் மற்றும், அரிசி, சோளம், மாவகைகள், உருளைக்கிழங்கு உணவுகள், அப்பிள் உணவுகள், மரக்கறிகள், கிராமத்து மருத்துவ இயற்கைத் தாவரவகைகள் போன்றவைகளும் இருந்தன. பூசணிக் கொடி வளர்க்கும் போட்டியில் பரிசு பெற்ற பூசணிக்காய்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பரிசு பெற்ற மொத்தம் ஐந்து பூசணிக்காய்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் பரிசு பெற்ற பூசணிக்காய் 1634.2 இறாத்தல் நிறையுள்ளதாக இருந்தது. நோமன் கைய்லி என்ற ஒன்ராறியோ விவசாயிக்கு இந்தப் பரிசு கிடைத்தது. உலகிலே அதிக நிறைகொண்ட பரிசு பெற்ற பூசணிக்காய் 2,702 இறாத்தல் நிறையுள்ள இத்தாலியில் விளைந்த பூசணிக்காயாகும்.
தினமும் நாங்கள் உண்ணும் உணவு வீடு தேடிவருவதற்கு இந்த விவசாயிகள் வியர்வை சிந்துவதுதான் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள். மனிதன் வாழ்வதற்குத் தேவையான முக்கியமான பொருட்களில் உணவும் ஒன்று. அவர்கள் வெய்யில், மழை மட்டுமல்ல, இங்கே பனிக்குளிரில் நின்று பாடுபடாவிட்டால் எங்களுக்கு உணவு கிடைக்காது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்;தான பசுப்பால் கிடைக்காது. ஆனாலும் அவர்கள் தங்கள் கஷ்டத்தை எடுத்துச் சொல்லவில்லை, எங்கள் மண்ணில் விளைந்ததைக் கொண்டு வந்திருக்கின்றோம், வந்து பாருங்கள் என்றுதான் உங்களை அன்போடு அழைத்து அதைக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். இதை நாங்கள் மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் உங்கள் குடும்பத்தை அழைத்துச் சென்று எங்களைச் சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள். இந்த நாட்டிற்கு எங்களை வரவேற்று, எங்களை இங்கே வாழவைப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நிகழ்வுகளில் எம்மவர்களில் ஒருசிலரைத் தவிர வேறு எம்மவரின் முகங்களை நான் காணவேவில்லை. அடுத்த வருடமும் நவெம்பர் மாதம் இது போன்ற விவசாயக் கண்காட்சி நிகழ்வு நடக்க இருக்கின்றது.
 
அடுத்து நான் பார்த்தது மின்விளக்கு அலங்காரம். மின் விளக்குகளைக் கொண்டு எப்படி எல்லாம் அலங்காரம் செய்யலாம் என்பதை அங்கே சென்று பார்த்த போது, எனக்கு ஆச்சரியாக இருந்தது. பல இடங்களில் இது போன்ற சில மின்விளக்கு அலங்காரங்களைப் பார்த்திருந்தாலும், இது போன்று ஓரிடத்தில் எல்லாவற்றையும் நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலே வெசாக் பந்தல்களில் மின்விளக்குகளைப் பார்த்து வியந்திருக்கின்றேன், ஆனால் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியை இங்கே நேரடியாகக் காணமுடிந்தது. காட்சிப் பொருட்களை, கண்டங்களுக்கு ஏற்பப் பதின்நான்கு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதிலும் ஆபிரிக்க மிருகங்கள்,  பாலைவன மிருகங்கள், பனிப்பிரதேச மிருகங்கள், டைனஸோக்கள், பெங்குவின்கள், திமிங்கிலங்கள், கலோவீன், கிறிஸ்மஸ், மற்றும் முக்கியமான நினைவுச் சின்னங்கள் என்று பலவிதமான பிரிவுகள் இங்கே இருக்கின்றன. பிள்ளைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் புரிந்து கொள்ளவேண்டிய பல விடயங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன.
 
சுமார் 600,000 ஆயிரம் சதுர அடிப்பரப்பில், அதாவது 10 உதைபந்தாட்ட மைதானமளவு இடத்தில் இந்த மின்விளக்கு அலங்காரம் காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றது. இதற்காகச் சுமார் 20 மில்லியன் சிறிய எல்ஈடி மின் விளக்குகள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 40,000 மின்னலங்கார காட்சிப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. அனிமல் கிங்டம், கிட்ஸ் பரடைஸ், ரனல் ஆவ் லவ், பயங்கரமான சிலந்திகள், கவாலியா குதிரைகள், பனிபடர்ந்த துருவம், மந்திர விளக்குகள், டைனஸோக்கள் என்று சிறுவர், சிறுமியர் பார்த்து மகிழ்வதற்கான இடமாக மட்டுமல்ல, அறிவூட்டும் இடமாகவும் இதை மாற்றி இருக்கிறார்கள்.
மின்விளக்குக் காட்சி என்பதால் இருட்டும் போதுதான் ஆரம்பிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்பதால், அக்கறை உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து அவர்களுடன் பார்த்து, ரசித்து, குடும்பமாக நின்று புகைப்படங்களும் எடுத்து தாங்களும் மகிழும் காட்சிகளை அங்கே கண்டேன். குழந்தைகள் வளர்ந்ததும், தங்களை எங்கெல்லாம் அழைத்துச் சென்றீர்கள் என்று கட்டாயம் உங்களிடம் கேட்பார்கள், அப்பொழுது எடுத்துக் காட்ட இதுபோன்ற அரிய படங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் யுத்தம் காரணமாக இது போன்ற ஆவணங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தோம், அந்த வலியும், குறையும் உங்கள் குழந்தைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
‘நான் பெற்ற இன்பம் பெறுக வையகமே’ என்பது போல நான் பார்த்த, ரசித்த இடங்களை மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கட்டுரைகளை எழுதுகின்றேன். பிள்ளைகளுக்குப் பொது அறிவு முக்கியமானது மட்டுமல்ல, மகிழ்ச்சியான சூழ்நிலையிலும் அவர்கள் வளரவும் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உடல், உள ஆரோக்கியமாக வளர்வார்கள். அவர்களின் அறிவை ஆரோக்கியமான முறையில் தூண்டுவதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் காரணியாக அமையலாம். அப்படி வளரும் பிள்ளைகள்தான் இந்த நாட்டின் சிறந்த பிரசைகளாக எதிர்காலத்தில் வரமுடியும். பொதுவாக இப்படியான இடங்களை நாங்கள் தான் பல மைல்கள் தேடிச் சென்றுதான் பார்க்க வேண்டும், ஆனால் அவர்களே உங்கள் வசதிக்காக இங்கே அருகே கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இப்படியான நிகழ்வுகளைக் காட்டுங்கள். கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்!
 
 
Series Navigationகுழந்தைகளை கொண்டாடுவோம்யாருக்கு மாப்பிள்ளை யாரோ…
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *