பெரிய நாயகி

author
0 minutes, 15 seconds Read
This entry is part 3 of 7 in the series 11 டிசம்பர் 2022

 

மீனாட்சி சுந்தரமூர்த்தி

 
 

அதிகாலை வேளையில் எழுந்து வாசல் தெளித்து அரிசி மணிகளைப் போல் புள்ளி வைத்துக் கோலம்  போட்டு அதைப் பார்த்து இரசிக்கும் சுகமே தனிதான். மேகலா கோலப் பொடி டப்பாவை மாடத்தில் வைத்து விட்டு உள்ளே வந்தாள். ஆறு மணி ஆகியிருந்தது. மெகா டி.வி யின்  பக்திப் பாடல்கள் கூடமெங்கும்  நிறைந்து கொண்டிருந்தது. பாலை அடுப்பில் ஏற்றி தாஜ்மகால்  தேயிலைத் தூளைச் சேர்த்தாள், கூடவே ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இரண்டு ஏலக்காய்களைச் சேர்த்துத் தட்டி  அதில் இட்டாள். எத்தனை வகைகள் விற்பனையில் இருந்தாலும் இவளுக்குப் பிடித்தது தாஜ் மகால் மட்டும்தான். இரண்டு பீங்கான் கோப்பைகளில் தேனீரை நிறைத்துக் கொண்டு சென்று கணவனை எழுப்பினாள். வண்ணமயமான அழகான அந்த கோப்பைகள் ஜெர்மனி சென்றபோது மகள் வாங்கித் தந்தது ,’ அம்மா ஊருக்குச் சென்ற பிறகு தினமும் இதில்தான் நீங்களும் அப்பாவும்  தேனீர் அருந்த வேண்டும்’ என்று  சொல்லியிருந்தாள். மகளின்  நினைவுகளோடு காலைத் தேனீர் இனித்தது. ஆண்டாளும் வந்து விட்டாள். கடிகாரம் கூடத் தவறு செய்வதுண்டு. ஆனால் சொன்னால் சொன்ன நேரத்திற்கு வந்து விடுவாள். பரபரவென்று பாத்திரங்களை எடுத்துச் சென்று வேலையை ஆரம்பித்தாள். அவளுக்கு பிடித்தது காபிதான் . அதனால் மேகலா  அவளுக்கு ப்ரூ தூளைக் கலந்து கொடுத்தாள். டம்ப்ளரை வாங்கும் போதுதான் கையில் காயத்தைப் பார்த்தாள். ‘

‘ என்ன காயம் இது எப்படி?’

‘நேத்து சோறாக்கும் போது முந்தானையில பத்திகிச்சி’

‘அடக்கடவுளே பார்த்து செய்ய மாட்டியா?

‘என் நாத்தனார்  வாளித் தண்ணிய எடுத்து கொட்டி அணைச்சிட்டா’

‘யாரு சாந்தியா  நல்லாயிருக்கட்டும்’

‘ நல்ல வேளைக்கா வூட்டுல வேற ஆம்பளைங்க யாருமே இல்ல.’

‘ என்னோட மட்டும் போகாது, பக்கத்து குடிசைங்களும் பத்திகினு இருக்கும்.’

‘ உன்னோட நல்ல மனசுக்கு எந்த குறையும் வராதுடி’

 

பேப்பர் போடும் பையனைத் திட்டிக் கொண்டே  வாசலிலிருந்த  செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வந்தாள் ஆண்டாள். ‘அக்கா அவன  நிதானமா கேட்டுல சொருகி வச்சிட்டுப் போகச்சொல்லு. தெனமுந் தண்ணியில வீசிட்டுப் போறான்’,

‘சரிடி , இந்த மாசம் பணம் வாங்க வரும் போது சொல்றேன்’

 மோகன் நடைப் பயிற்சிக்குச் செல்ல, மேகலா சோபாவில் அமர்ந்து செய்தித் தாளைப் புரட்டினாள்.செய்தித் தாளின் கடைசி இரண்டு தாள்கள் நனைந்து போயிருந்தன. பிரபலமான நகைக்கடை ஒன்றில் நாகரீகமான தோற்றத்தில் வந்த இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல்  மோதிரம் ஒன்றைத் திருடி பிடிபட்டார்கள் என்ற செய்தியைப்  படித்துக் கொண்டிருந்த மேகலாவின் நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்தன.

அன்று வெள்ளிக் கிழமை, தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு விடைத்தாள் மையமான புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. துரித கதியில் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. சமையலை முடித்து தனக்கும் கணவருக்கும் கேரியரில் எடுத்து வைத்து விட்டு , தோடு, மூக்குத்தி, மோதிரத்தைக் கழற்றி  காலண்டர் தாளைக் கிழித்துச் சுற்றி டீ பாயின் மீது வைத்து விட்டு குளிக்கச் சென்றாள் மேகலா. குளித்து வந்து தயாராகிக் கிளம்பினாள்.

அவளை அழைத்துச் சென்று விட்டுவிட்டு அலுவலகம் செல்வான் மோகன், ஸ்கூட்டரில் ஏறும்போதுதான் கவனித்தான். ‘என்னடி தோடு, மூக்குத்தி எங்கே?’

‘இதோ ஒரு நிமிஷங்க’ சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் ,  டீ பாயில் வைத்திருந்தது  காணவில்லை.

‘என்னங்க இங்கே வச்ச தோடு மூக்குத்தி பார்த்தீங்களா?’

‘இல்லையே, சரியா பாரு’

‘பார்த்துட்டேன் அந்த பேப்பரே காணோம்’

‘எந்த பேப்பர்?’,

‘ காலண்டர் தாள்ல சுத்தி வச்சேன்’

‘ யாராவது இப்படி வைப்பாங்களா? பொறுப்பே இல்லை” என்று தேடியவன்

.

‘அடக் கடவுளே நான்தான்  வெறும்தாள்னு  எடுத்து  குப்பை எடுக்க வந்த செல்வாம்பாகிட்ட  போட்டுட்டேன்.

‘ஏங்க எதையும் பார்க்க மாட்டீங்களா’

‘ நீ அதில வச்சிருப்பேன்னு எனக்கு எப்படித் தெரியும்?

என்ன செய்வதெனப் புரியாமல் கலக்கம் வந்தது.  மோகன், ‘சரிவா உன்னை விட்டுட்டு வந்து அவங்களத் தேடிப் பார்க்கிறேன். வேற தோடு மூக்குத்தி போட்டுட்டு கிளம்பு’

இடிந்து போயிருந்தவளைத் தேற்றி.

பதறாதே, நிதானமா தேர்வுத்தாள் திருத்து’ என்று சொல்லி அவளை மையத்தில் விட்டான்.

குப்பை எடுத்துச் சென்றவர்கள்  பக்கத்து  தெருக்களில் எங்காவது தென்படுகிறார்களா என்று தேடினான் கிடைக்கவில்லை. மனைவிக்குத் தைரியம் சொன்னானே தவிர கடின உழைப்பில் வாங்கின பொருட்களைக் கவனமின்றித் தொலைத்து விட்டோமே என்று வருந்தினான்.

எதிரிலிருந்த கணேஷ் நகரில் சுற்றிய போது வேறு இரண்டு பெண்கள் குப்பை வண்டியைத் தள்ளிக் கொண்டு போவதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தான் அதற்குள் மணி பதினொன்று ஆகிவிட்டது. காலை எட்டு மணிக்கு  எடுத்துச் சென்றவர்களை எங்கே தேடுவது? அவர்கள் குப்பைகளைக் கொட்டும் ஆற்றோரத்திற்குப் போயிருப்பார்கள் என்று சொல்ல அங்கே சென்று தேடினான் மோகன்.

பதற்றத்தில் தலை சுற்றுவது போலிருந்தது.

‘சார் இங்க எங்க வந்தீங்க?’ செல்வாம்பா தான்.

‘டீச்சர் தோடு மூக்குத்திய கழட்டி தாள்ள சுத்தி  வச்சிருந்தாங்க,  நான் தெரியாம குப்பை கவர்ல  போட்டுட்டேன்.’

‘குப்பைங்கள கொட்டிட்டோமே, இன்னா கவரு சொல்லுங்க’

‘சுமங்கலி துணிக்கடை கவருமா’

இன்னும் இரண்டு பெண்மணிகளும் சேர்ந்து தேடலானார்கள். மோகனும் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு தேடினான்.

ஒருமணி நேரத்திற்கும் மேலானது, திடீரெனச் செல்வாம்பா இதா பாருங்க என்று கொடுத்தாள்.

யார் செய்த புண்ணியமோ மெல்லிய  நாட்காட்டித் தாளில் வைரத்தோடும், வைரமூக்குத்தியும் , பச்சைக்கல் மோதிரமும் மின்னின.

கையில் கிடைத்த விலையுயர்ந்த பொருளைத் தராமல் எடுத்துக் கொண்டிருக்கலாம் வருமானமில்லாத கண்ணிழந்த கணவன், மூன்று பிள்ளைகளோடு வறுமையின் பிடியில் திண்டாடுபவள்,

நல்ல நெஞ்சம் இவரிடம்தான் என்ற எல்லையின்றி எவரிடமும் உண்டு. விழிநீர்ப் பெருக  செல்வாம்பாவின் கரங்களைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான் மோகன், .பாடலீசனின் பக்கத்தில் நிற்கும் பெரிய நாயகியாகவேத் தெரிந்தாள் அவள்.

Series Navigationஇறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *