குரு அரவிந்தன்
1 – காட்டுப் பன்றிகள்
யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. பாடசாலை விடுமுறையாகையால், வழமைபோல அவர்கள் தங்கள் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சிறுவர்களாக இருந்தாலும், அன்று பயிற்சி நாள் என்பதால் உதைபந்தாட்டக் குழுவினரான அவர்களின் பயிற்றுநரின் வீட்டிற்குச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விளையாட்டுப் பிடிக்கும், அதுமாதிரி இவர்களுக்குக் உதைபந்தாட்டம் பிடித்திருந்தது, பிடித்திருந்தது என்று சொல்வதைவிட உதைபந்தாட்டத்தில் பயித்தியமாய் இருந்தார்கள் என்றே சொல்லலாம். பயிற்றுநரின் வீட்டை அடைந்தபோது, வாசலில் பயிற்றுநரின் சகோதரி நிற்பதைக் கண்டார்கள்.
‘ஆன்ரி நாங்கள் ரெடி, அங்கிள் ரெடியா?’ என்றான் டோம். அவன்தான் இந்த உதைபந்தாட்டக் குழவின் தலைவனாக இருந்தான்.
இந்த சிறுவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவர்களின் துடிப்புத் தனத்தில் ஆர்வம் வரும், திருமணத்திற்கு முன் இப்படித்தான் உதைபந்தாட்ட வீராங்கனை என்று சொல்லி தாம்மா அலைந்த காலங்கள் உண்டு. திருமணதின் பின் குடும்பப் பொறுப்பால் ஒதுங்கியிருந்தாள்.
சகோதரன் சன்ராவொங்கும் (Chantawong) சிறந்த உதைபந்தாட்ட வீரனாக இருந்ததால் அவன் இந்தச் சிறுவர்களின் பயிற்றுநராக மாறி இருந்தான். சிறுவயதில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க பௌத்த துறவியாக மாறி இருந்த அவன் ஒரு சந்தர்ப்பத்தில் அதிலிருந்து விலகி உதைபந்தாட்டப் பயிற்றுநராக மாறியிருந்தான்.
சன்ராவொங் புறப்படும் போது சகோதரனைப் பார்த்து ‘பயிற்சி முடிந்ததும் சீக்கிரம் வந்திடு’ என்றாள் தாம்மா.
‘சீக்கிரமே வந்திர்றேன் அக்கா,’ என்று விடைபெற்றான் சன்ராவொங்.
காட்டுப்பன்றிகள் (Wild Boars) என்ற பெயரில் ஒரு உதைபந்தாட்டக் குழுவை அவர்கள் உருவாக்கி இருந்தார்கள். அந்த வட்டாரத்தில் உதைபந்தாட்டத்தில் ஆர்வமுள்ள பல இளைஞர்கள் இருந்தாலும், திறமை மிக்க சிறுவர்களை மட்டும் தெரிவு செய்து உள்ளுர் போட்டிகளில் பங்கு பற்றச் செய்தார்கள்.
இந்தக் குழுவில் அங்கம் வகித்தவர்களில் ரிரான், இவன்தான் இந்தக் குழுவிலேயே வயதில் குறைந்தவன். மிக், டோம், பொங், மாக், இந்த நாலு பேரும் 13 வயது நிரம்பியவர்கள். ரேர்ன், பிவ், டல், இந்த மூவரும் 14 வயது நிரம்பியவர்கள். நோட், நிக், சில் இந்த மூவரும் 15 வயது நிரம்பியவர்கள். ரீ, நைட், இந்த இருவரும் 16 வயது நிரம்பியவர்கள். ஏக் என்று அழைக்கப்படும் சன்ராவொங் 25 வயது நிரம்பியவர், இந்தக் குழுவின் பயிற்றுணராக இருக்கின்றார். குழுவின் வளர்ச்சியே முக்கியமானது என்பதால் எல்லோரும் தினமும் பயிற்சி எடுத்து ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள்.
இந்தக் குழுவினரும் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்தார்கள். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவும், தோல்விகளைத் தாங்கிக் கொள்ளவும் பயிற்சி பெற்றார்கள். நடந்ததை நினைத்துக் கலங்கிப் போகாமல், தவறுகளை எப்படித் திருத்திக் கொள்ளலாம், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் பழகிக் கொண்டார்கள்.
இராணுவக் கட்டுப்பாடு போல, ஒரு குழுவாக எப்படி இயங்குவது, தலைவரின் ஆணைக்கு எப்படிக் கட்டுப்பட்டு நடப்பது என்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை இந்தக் குழுவில் இருந்ததன் மூலம் சிறுவயதிலேயே அனுபவமாகப் பெற்றுக் கொண்டார்கள். சிறுவர்களான அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடும், குழுநிலை இயக்கமும் தான் ஒருநாள் தங்கள் உயிரைக் காப்பாற்றும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் பயிற்றுனருமாகப் பதின்மூன்று பேரும் உதைபந்தாட்டப் பயிற்சி எடுப்பதற்காகப் பயிற்சித் திடல் நோக்கிச் சைக்கிளில் சென்றார்கள்.
எல்லோரும் சேர்ந்து காலையில் பயிற்சி எடுத்ததில் களைத்துப் போயிருந்தார்கள். அந்தக் குழுவில் வயதில் குறைந்தவனாகப் பதினொரு வயதுப் பையனும், வயதில் கூடியவனாக பதினாறு வயதுப் பையனும் இருந்தார்கள். ஏனையோர் இடைப்பட்ட வயதினராக இருந்தார்கள்.
எதிர்கொள்ள இருக்கும் உதைபந்தாட்டப் போட்டிக்குப் போதுமானதாகப் பயிற்சி இருந்ததால் அத்துடன் நிறுத்திவிட்டு அருகே இருந்த உணவு விடுதியில் குளிர்பானம் அருந்தினார்கள். எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பிய போதுதான் ‘நாங்கதான் விரைவாகப் பயிற்சியை முடித்து விட்டோமே, எங்கேயாவது சற்று நேரம் ஓவ்வெடுத்துவிட்டுச் செல்வோமா’ என்றான் நிக். முதலில் தயங்கினாலும் ஒரு சிலர் எங்கேயாவது சென்று பொழுது போக்குவதை விரும்பினார்கள்.
‘எங்கே போவது அருகில் இருக்கும் பாக்கிற்குச் செல்வோமா?’ என்றான் நைட்.
‘இல்லை, வேண்டாம். எல்லாரும் வீட்டிற்கே போங்க, வீட்டில தேடுவாங்க.’ என்றான் இருபத்தைந்தே வயதான பயிற்றுநர் சன்ராவொங்.
‘இல்லை மாஸ்டர் இன்று விடுமுறைதானே, கொஞ்ச நேரம் நாங்க எல்லோரும் ஜாலியாய் இருப்போமே பிளீஸ்..!’என்றார்கள் எல்லோரும் ஒன்றாக.
‘எனக்குத் தெரிந்த ஒரு இடம் இருக்கிறது, அங்கே போகலாம், கொஞ்சத் தூரம் மலை ஏறவேண்டும்’ என்றான் மற்றவன்.
‘கொஞ்ச நேரம்தானே’ என்று எல்லோரும் கிளம்பினார்கள்.
‘நான் வரவில்லை’ என்றான் சில்.
‘ஏன்டா கொஞ்ச நேரம்தானே எல்லோருமாய் போனால் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்றான் மாக்.
‘இல்லை உனக்குத் தெரியும்தானே, எனக்கும் ஆசைதான் ஆனால் பிந்திப் போனால், அதுவும் சொல்லாமல் போனால் வீட்டிலே பிரளயமே நடக்கும்’ என்றான் சில்.
‘சரி உன்னுடைய விருப்பம் நாளை சந்திப்போம்!’ அவனை அனுப்பிவிட்டு எல்லோரும் சைக்கிளில் புறப்பட்டார்கள்.
காட்டுப் பன்றிகள் குழுவில் ஒருவனான சில் என்ற பையன் மட்டும் இவர்களுடன் செல்லாமல், அவனது வீட்டிலே கட்டுப்பாடு கொஞ்சம் அதிகம் என்பதால் உடனே வீடு திரும்பினான்.
ஆவர்கள் கூட்டமாகக் காட்டு வழிப் பாதையூடாக அங்கு சென்றடைந்த போது வடக்கே வானம் கறுத்திருந்தது.
‘மழை பெய்யும்போல இருக்கு, அதற்கு முதல் வீட்டிற்குப் போயிடலாம் வாங்க.’ என்றார் மீண்டும் பயிற்றுநர்.
‘அங்கே பூங்காவிற்குப் பின்னால் ஒரு குகை இருக்கிறது, ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவோம்’ என்று எல்லோரும் விரைவாக சைக்கிளைச் செலுத்தினார்கள்.
பூங்காவைச் சுற்றி வலம் வரும்போதுதான் ஒரு பக்கத்தில் இருந்த குன்றுகளும் அதில் இருந்த குகையும் அவர்களின் கண்ணில் பட்டது. அருகே சென்று பார்த்தார்கள். சுற்றுலாப் பயணிகள் சிலர் கையில் கமெராவுடன் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாய் இருந்தார்கள். கொஞ்சத்தூரம் உள்ளே சென்று குகைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தால் என்ன என்ற ஆர்வம் இவர்களுக்கு ஏற்பட்டது.
‘உள்ளே போய்ப் பார்ப்போமா?’ என்றான் நைட்.
பயிற்றுநர் சன்ராவொங் சற்றுத் தயங்கினான், காரணம் தன்னுடைய பொறுப்பில் வந்த இவர்களை நேரத்திற்கு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு அவனிடம் இருந்தது.
‘இவ்வளவு தூரம் வந்து விட்டோம், உள்ளே சென்று பார்த்தால் என்ன?’ மற்ற எல்லோரும் உள்ளே சென்று பார்ப்பதில் ஆர்வமாக இருந்தனர்.
குகை வாசலில் உள்ள சுவரில், வெட்கப்பட்டுச் சிரித்தபடி ஜோடி ஒன்று இதயத்தின் படத்தை வரைந்து அதில் மன்மத அம்பு தைப்பதுபோலத் தங்கள் பெயர்களைப் பதித்துக் கொண்டிருந்தது இவர்களின் கண்ணில் பட்டது. நல்ல ஓவியர்களாக இவர்கள் இருக்கலாம் என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.
‘உள்ளே போய் குகையின் சுவரில் எங்கள் பெயர்களையும் பதிப்போமா?’ என்றான் ஒருவன் ஆர்வத்தோடு.
பள்ளிக் கழிவறை சுவரில் பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து தங்களுக்குப் பிடிக்காத ஆசிரியரின் பெயரை வேறு ஒரு ஆசிரியையின் பெயரோடு தொடுத்து எழுதித் திருப்திப்பட்டதை நினைத்து, நோட்டும் நிக்கும் தங்களுக்குள் சைகைகாட்டிச் சிரித்துக் கொண்டார்கள்.
‘பத்து நிமிடத்தில் திரும்பி வந்திடலாம்’ என்று பயிற்றுநரிடம் கெஞ்சி மன்றாடி சம்மதம் பெற்று உள்ளே சென்றார்கள்.
சற்றுத் தூரம் சென்றதும் பாதை குறுகலானது. சைக்கிளை உள்ளே கொண்டு செல்ல முடியாததால், வாசலில் இருந்த வேலியோடு சேர்த்து சைக்கிள்களைப் பூட்டிவிட்டு அவசரமாக உள்ளே சென்றார்கள்.
தனியே அவர்களை உள்ளே அனுப்புவது நல்லதல்ல என்பதை உணர்ந்த பயிற்றுநர் சன்ராவொங் வேறு வழியில்லாமல் அவர்களுடன் தானும் உள்ளே செல்ல வேண்டி வந்தது. விரைவாகப் பார்த்துவிட்டு இவர்களை வீடுகளில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற நினைவோடு பயிற்றுநரும் அவர்களைத் தொடர்ந்தான்.
சற்றுத் தூரம் குகையின் உள்ளே சென்றதும், மேடும் பள்ளமுமாய் இருட்டாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடமாட்டம் தெரிந்தது. இருட்டிவிடும் என்பதால் அவர்கள் திரும்பி வாசற்பக்கம் சென்று கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் வேடிக்கையாகக் கதைகள் சொல்லிச் சிரித்து மகிழ்ந்தபடி, பாதை சற்று உயரச் சென்றாலும் தயங்காது மேலே ஏறி நடந்தார்கள்.
இளம் கன்று பயமறியாது என்பது போல குகைக்குள் பிராணவாயு குறைவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது சுண்ணக் கற்பாறைகளின் மேலே ஏறி உள்நோக்கிச் சென்றார்கள். ஆங்காங்கே மேடு பள்ளமாக இருந்ததால் உள்ளே செல்லும் போது ஏறி, இறங்கிச் செல்ல வேண்டி இருந்தது.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்ததால், ‘மேற்கொண்டு உள்ளே செல்ல வேண்டாம், பாதுகாப்பற்ற பகுதி என்ற வாசகம்’ தாங்கிய பதாதை வாசலில் இருந்ததை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. குகை வாசலில் பல காலமாக அந்தப் பதாதை தூங்கி வழிந்தாலும், புதியவர்களுக்கு மட்டும் கண்ணில் படும் அந்தப் பதாதையை உள்ளுர் மக்கள் பொருட்படுத்துவது இல்லை. அதனால் தான் அவர்கள் விரும்பிய நேரமெல்லாம் குகைக்குள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தார்கள்.
ஒருசில சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் செல்பி எடுத்தார்கள். மேடும் பள்ளமுமாக, சில இடங்களில் ஒடுங்கிக் குறுகலாகவும் குகை நீண்டு கொண்டே இருந்தது. வேடிக்கையாகப் பேசிச்சிரித்துக் கொண்டு வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. குகையின் சுவரில் தங்கள் பெயர்களைப் பதிக்க வேண்டும் என்று குழுவினர் முடிவெடுத்ததால் அதற்காகவே நீண்ட தூரம் உள்ளே சென்றனர்.
நீண்ட தூரம் நடந்துவிட்டோம் என்பது திடீரென நினைவில் வந்தது. ‘போதும் நாங்க திரும்புவோம்’ என்று சொல்லிய பயிற்றுநர் அவர்களையும் அழைத்துக் கொண்டு குகை வாசலின் திசை நோக்கித் திரும்பி நடந்தார்.
திரும்பி நடந்து வரும்போது சுற்றுவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் யாரும் கண்ணில் படவில்லை என்பதையும், அதிக நேரம் உள்ளே செலவிட்டு விட்டதையும் சட்டென்று உணர்ந்தார். காலடியில் சலசலப்புச் சத்தம் கேட்கவே காது கொடுத்துக் கேட்டார். குனிந்து பார்த்போது பூட்சுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதை உணர்ந்தார்.
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் முன்னபாகவே, ‘மாஸ்டர் வெள்ளம் உள்ளே வேகமாக ஓடி வருகிறது’ என்ற குரல் முன்னால் சென்ற மார்க்கிடம் இருந்து வெளியே வந்து குகைக்குள் எதிரொலித்தது. உள்ளே வெள்ளம் வருகிறதா? எதிர்பாராமல் சட்டென்று எல்லாம் நடந்துவிட்டதால், நிலமையைப் புரிந்து கொண்ட சன்ராவொங் ஒரு கணம் அப்படியே உறைந்து போய் நின்றான்.
(தொடரும்)
- அகழ்நானூறு 15
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
- வரிதான் நாட்டின் வருமானம்
- அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
- ஹைக்கூக்கள்
- மாலை நேரத்து தேநீர்
- கடவுளின் வடிவம் யாது ?
- பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
- பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
- நாவல் தினை – அத்தியாயம் மூன்று
- எலுமிச்சை ஆர்ஸோ