இரா முருகன்
CE 300,
CE 5000
கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும் எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய மாவுத் துகள்களைத் தேடிக் கருநீல எறும்புகள் மொய்க்கத் தொடங்கின.
சீனர், ஆட்டத்தையும் பாட்டையும் அணுவணுவாக ரசித்துப் பார்த்து அந்த அனுபவத்திலேயே மனம் தொடர்ந்து சஞ்சரிக்கக் கொஞ்சம் கண்மூடி மரத் துண்டில் அமர்ந்திருந்தார். அவர் முன்னும் இரண்டு இலைத் தொன்னைகள் நீட்டப்பட்டன.
மலை காண வந்த அந்தப் பெண்கள் அப்புறம் எடுத்துக் கொள்ளலாமா என்று மலைகிழவோனின் அனுமதி கேட்க அவர் பல் உதிர்ந்த வாய்வெளி முழுக்கக் குகைபோல் தெரியச் சிரித்தார்.
”நீங்கள் ரெண்டு பேரும் மாநகரத்துச் சிறுமியரா”?
முதியோன் துணைவி கேட்டாள். சிறுமி என்ற சொற்பயன்பாடு ஏற்படுத்திய உவகை அப்பெண்டிரின் முகத்தில் தெரிந்தது.
ஏதாவது பேச வேண்டியிருக்கிறது.
”ஆமாம், உங்கள் காலமாகிய இந்த நாள், நட்சத்திரம், நேரம் இப்போது நடக்கிறதல்லவா? இதற்கு அப்புறம் பல நூறு வருஷம் கழித்து ஜீவிக்கிறவர்கள் நாங்கள். பழைய மாநகரம் நாலாயிரத்து ஐநூறு வருடமாக இன்னும் சீரும் சிறப்பாக இருக்கிறது என்பதால் இப்படி காலத்தில் பின்னால் போய் அங்கே வந்து சேர எளிதாக இருந்தது. மாமன்னரின் அனுமதியும் இங்கே சுற்றித் திரியக் கிடைத்திருக்கிறது. அனுமதி ஓலை நறுக்கு இதோ”.
எழுந்து மரியாதையோடு கிழவோனிடம் அளித்தனர்.
”வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சிரித்தபடி சொன்னார் முதுகிழவோர்.
“நான்காயிரத்து ஐநூறு வருஷம் மாநகரத்தில் இருக்க முடியும் என்றால் எங்கள் பெய்ஜங்க் சீன மாநகரில் ஆறாயிரம் வருஷம் உயிர்த்து சந்தோஷமாக இருக்கலாம்” என்றார் சீன விருந்தாளி. ”சஞ்சீவனி கொடையை விட அதி உன்னதம்” என்று அந்தப் பெண்டிரைப் பார்த்துச் சொன்னார் தொடர்ந்து. புரியவில்லை என்றாள் அவர்களில் ஒருத்தி. ”எம் மொழியில் ஆச்சரியப்படுதல் அப்படி” என்று கடந்து போனார் அவர். மொழிபெயர்ப்பாளர் சீனரைக் கவலையோடு பார்த்தார்.
”நான் சொன்னதை இன்னும் விளக்குகிறேன். நாங்கள் ஐயாயிரம் வருடமாக ஜீவித்துக் கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐயாயிரம் வருடம் கழித்துப் பிறக்கப் போகிறவர்கள். ஐயாயிரமோ நாலாயிரத்து எழுநூறு வருஷமோ ஜீவித்திருக்க விரும்பவில்லை. எண்பது அல்லது நூறு வருடம் இருந்தால் போதும்”.
சிரித்தபடி கைநீட்டினாள் அந்தப் பெண். மலைமுது கிழவியும் சிரித்து ஆமோதித்தாள். இரண்டு பெண்களும் அவளருகே வந்தார்கள்.
”இன்னொரு முறை அறிமுகம் செய்து கொள்கிறோம். நான் வானம்பாடி” என்றாள் உயரமான பெண். ”நான் குயிலி” என்று சற்று உயரம் குறைந்த பெண் வணங்கிச் சொன்னாள்.
“இவள் மாடத்தி”. ஆடி முடித்து வியர்வை பூத்து வந்திருந்தவளைச் சுட்டிச் சொன்னாள் அவளோடு சிரித்தபடி வந்த இன்னொரு கன்னி. “இவள் குறிஞ்சி” என்றாள் மாடத்தி அவள் சிரத்தில் மெல்லத் தட்டி.
முதுகிழவோனுக்கு யார் வணக்கம் சொன்னாலும் புறத்தில் நாட்டிய வேலைத் துடைத்த பச்சை இலை ஒன்றையும் சுக்காக உலர்ந்த ஓர் இலைச் சருகையும் அன்பளிப்பாக அளிப்பது அவர் வழக்கம்.
அம்முதியோன் அமர்ந்திருந்த பாறைக்கல்லுக்கு அடுத்து இட்டிருந்த இலைதழை வேய்ந்து மூங்கிலால் வனைந்த ஆசனத்துக் கீழே இருந்து இலைகளை காடன் எடுத்து அவரிடம் கொடுத்தான்.
வேல் பக்கம் நின்று இலைகளால் தடவி அப்பெண்களிடம் கொடுத்தார். இது எதற்கு என்று புரியாமல் அவர்கள் பார்க்க, ’உங்கள் நல்லூழ் இந்த இலைகளை நீங்கள் பத்திரமாக வைத்திருக்கும்போது அமோகமாக இருப்பீர்கள், மேலும் இது நோய் தீர்க்கும்’ என்று சுருக்கமாகச் சொன்னார்.
புலவர் அருகே வந்து புன்னகைத்தார். ’ஆற்றிடைக் காட்சி உழறத் தோன்றி பெற்ற பேரிலை பெறாதவர்க்கு’. ஏதோ ஓலையைப் பார்த்து வேகமாகப் படித்தார்.
“செய்யுள் வடிவான புறப்பாட்டு என்று புதியதாக வரப்போகிற பாக்களின் பெரிய தொகுப்பில் சேர்க்கக் கூல வாணிகரும் அந்தணப் புலவரும் கேட்டபடி இருக்கிறார்கள். தரமான குறிஞ்சித் திணைப் பாடல்கள் கணிசமாகத் தேறவில்லையாம். இந்தப் பாடல் தொகுப்புக்குப் போக வாய்ப்பு உண்டு. எட்டுச் சீர் கொண்ட இரண்டு அளவடியாக மலைவளம் சேர்க்க வேண்டுமாம். போன கூட்டத்தில் சொன்னார்கள். மலைவளம் வேறு பாவில் உண்டு. எடுத்துப் பகர்த்தெழுதிக் கொள்கிறேன் என்றேன். செய்மின் என்றனர்”.
அவன் சொல்லச் சொல்ல முதியோன் குனிந்து வேலை வணங்கி, ”குன்றுதோறும் ஆடுவோனே, இந்தப் புலவன் புரியும் வண்ணம் இனியாவது பேசட்டுமென, கவிதையெழுதட்டுமென அருளுக முருக” என்று ஏற்ற இறக்கத்தோடு குரல் மடித்துச் சொன்னான்.
பக்கத்தில் மர உரலில் யானைத் தந்தத்தால் மூங்கில் நெல்லைக் குத்தி இடித்துக்கொண்டிருந்த முதுபெண்டிர் முருக முருக என்று பாடத் தொடங்கினார்கள். புலவன் அதைக் கேட்டபடி நின்றிருந்தான்.
”அடுத்த வெள்ளி தை வெள்ளியன்றோ, சிறு தெய்வம் பேணும் நாள். நீங்கள் சுனையில் நீராடித் தவக் கோலத்தில் சிறு முத்தனைப் போற்றி வழிபட்டு வர இருக்கிறீர்களா”? புலவன் கேட்டான்.
”அந்தத் தெய்வத்தை ஐந்நூறு வருஷம் முன் குறிஞ்சி, என்றால் இந்தச் சிறுமி இல்லை, குறிஞ்சி நிலமே வழிபட்டது. இப்போது கோவிலே இல்லையே?”. மலைக்கிழத்தி கேட்டாள்.
எழுத்து பொய்யாகுமோ? புலவன் எழுத்தாணியால் தலையில் தட்டிக்கொண்டு வினவினான். ”இந்த வருடம் பொங்கலைக்கூட மூங்கிலரிசி சமைத்துக் கோலாகலமாகக் கொண்டாடி விட்டோம். சிறு முத்தனைப் போற்றி வழிபடுதல் கடினமானதா என்ன? தேனும் தினையும் கொண்டு முத்தனை உருவாக்கி வழிபடுவீர்”.
குறிஞ்சி அடக்க முடியாமல் சிரித்தாள். புலவனிடம் அவள் பேசிக் கொண்டிருந்ததை எல்லோரும் பார்த்திருந்ததால் அவன் பகடி ஏதும் சொல்லியிருப்பான் அவள் இன்னும் சிரித்திருக்க என்று தோன்றியது.
சக வயதுத் தோழியர் எல்லோரும் குறிஞ்சியைச் சுற்றி மண் தரையில் அமர அவள் சிரித்தபடி குரல் தாழ்த்திச் சொல்லத் தொடங்கினாள்.
”நான் காடனை எதிர்பார்த்து அவன் முன்னிரவில் எலியும் பெருச்சாளியும் பாம்பும் வராமல் காக்கும் புனத்துக்குப் போனேன். கால் முடமான ஒரு வயோதிகன் கருப்புக் கம்பளிப் போர்வையைப் போர்த்தியபடி தள்ளாடித் தள்ளாடி பரணுக்குக் கீழே வந்து நின்றான். நரி ஒன்று குறுக்கே ஓடி ஊளையிட்டது. ”.
முன்னிரவில் அலையும் பிசாசாக இருந்திருக்கும். நீ பயப்படவில்லையா?
”ஒரு பயமுமில்லை. அஞ்சல் அறிவார் தொழில். நான் அறியாத மடந்தையாச்சே!”
அப்புறம்? ஒருமித்துக் கேட்டார்கள்.
”முதியவன் பரணில் ஏறித் தப்ப முயன்றான். கை நீட்டு கை நீட்டு என்று என்னைப் பார்த்து கத்தியபோது நரியும் காலை எனக்கு முன்னால் அதேபடி நீட்டியது. நான் முதியவனிடம் பயப்படாதே நரியை ஓட்டுகிறேன் என்று கவணை எய்ய, அந்தக் கல் பாய்ந்து அவன் உயிர்த்தலத்தில் அடித்துக் கீழே விழுந்தது. நரியை விட தீனமாக அவன் ஊளையிட்டு ஓடிப் போக நரி வந்த திசையில் திரும்பப் போனது”.
குறிஞ்சி முதியவன் நரியாக ஓலமிட்டதைப் போலி செய்தபோது அதேபோல் எல்லோரும் கூவினர். அழகுப்பெண் உதிர்த்த பகடியாச்சே.
”குறிஞ்சி, இதில் பகடி இன்னும் தீவிரமாக வரவேணும். நான் சொல்கிறேன் கேள். அப்படியே எல்லோருக்கும் இனிச் சொல்” என்மனான் புலவன்.
புலவனும் மலைகிழவோனும் வானம் பச்சை என்று சொன்னால் கூட மறுத்துச் சொல்ல குறிஞ்சியோ மற்ற மலைபடு மக்களோ முற்பட மாட்டார்கள். எனவே புலவன் சொல்லக் காத்திருந்தார்கள்.
புலவன் ஏட்டுத் தூக்கில் இருந்து கீழே இருந்த ஏட்டை எடுத்து ராகம் போட்டுப் படிப்பது போல் வாசிக்க ஆரம்பித்தான்.
”முட முதிர் பார்ப்பான் நடு ராத்திரி பாதையில் இப்படியும் அப்படியும் ஆடியபடி நடந்தபடி இருந்தான்”.
முதுகிழவோன் வெள்ளந்தியாகப் புலவனைக் கேட்டான் – ”காட்டில் வசிக்கிற பார்ப்பான் யாருண்டு?”.
“நானும் முது பார்ப்பான் தான். பிழைப்புக்காகப் பார்ப்பானைப் பகடி செய்யும் கோமாளி வேடம் புனைந்தாக வேண்டியுள்ளதே”?
புலவன் தலையசைத்து குயிலியிடம் இரைஞ்சுவது போல் கேட்டான்.
”இதுவரை உடலை, வயதைப் பகடி செய்யும் பாடல் இல்லை என்றால் இனி இருக்கட்டும். நான் கலிப்பாவாக எழுதுகிறேன். முட முதிர் பார்ப்பானை பகடி செய்வது ரொம்ப எளியது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பகடி செய்யலாம். பிறந்த குழந்தை கூட முடமுது பார்ப்பான் தூக்கினால் கவண் நிமிர்த்தி சிறுநீர் முகத்தில் பாய்ச்சும்”.
இதற்கு அதிகமான சிரிப்பு மறுமொழியாக வந்தது,
புலவன் தொடர்ந்தான்.
”தலைவி தலைவனிடம் ஏற்கனவே பேசிவைத்தபடி சந்திக்க முச்சந்திக்கு வந்தாள். இரவுக்குறி என்பர் இவ்விடத்தை”.
“காட்டிலும் மலையிலும் ஏது முச்சந்தி புலவரே”? கிழவோன் கேட்டான் தாடையைத் தடவிக் கொண்டு.
“என் பா மெய்யானது. இன்று இல்லாவிட்டால் பின்னொரு காலம் காடு, மலையெலாம் தெருவும், முச்சந்தியும், குன்றிலும், இரவுக்குறியும், பகல்குறியும் ஏற்படும். பார்த்துக் கொள்மின்”.
புலவன் மூக்குச் சிவந்து மொழிந்தான். முது பார்ப்பான் கண்ணில் மெய்யாகவே தலைவி மண்ணை வாரித் தூவுகிறாள். அவள் யட்சி என முடமுது பார்ப்பான் அகன்று ஓடுகிறான். இந்தப் பகடிக் காட்சியைத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.
சொல்லி முடித்ததும் சீனப் பயணி மொழிபெயர்ப்பில் ஐந்து நிமிடம் கேட்டு அரைமணி நேரம் யோசித்து முதுபார்ப்பான் குடுமி வைத்திருப்பது அறிந்து கைகொட்டி ரசித்தான். முடமுது பார்ப்பான் என்பதில் முடமா, முதிய கோலமா, பார்ப்பனனா எதற்குச் சிரிக்க வேண்டும் என்று புரியவில்லை என்றான். எல்லாவற்றுக்கும் தான் தனித்தனியாகவும், சேர்த்தும் நகைக்க வேண்டும் என்று சொன்னான் புலவன்.
பிற்காலப் பெண்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் புட்டும் குடிநீரும் கேட்டபடி மெல்ல ஓரமாக அமர்ந்தார்கள்.
குறிஞ்சி மாடத்திக்குச் சொன்ன பகடியாக இது நவிலப்பட்டது என உற்சாகத்தோடு மொழிந்து புலவன் இன்னும் இரண்டு செய்யுள்களோடு அடுத்த வாரம் வருவேன் என்றுரைத்துப் போனான்.
அவன் மலை இறங்க முற்படும்போது துணி மூட்டையைத் தலையிலும், கூழச்சக்கைப் பலாப்பழத்தை கையிடுக்கிலும் இடுக்கியபடி காடன் புலவன்கூட நடந்தான். முடமுதுப் பார்ப்பான் மலைகிழவோனைப் பார்த்துப் பகடியாக உருவாக்கப்பட்டவனா என்று கேட்க நினைத்து வாயைத் திறந்து, வேண்டாம் என்று மூடிக் கொண்டான் அவன்.
”காடா, காதலியிடம் காதல் சொல்ல நினைத்து இப்போது வேண்டாம் என்று வைத்து மறுபடி சொல்ல உத்தேசித்து, தண்ணீரைவிட்டு எந்நேரத்திலும் கரைக்கு எறியப்படப் போகும் மீன்போல் வாயைத் திறந்து திறந்து மூடினான் தலைவன் என்ற உவமை எப்படி இருக்கிறது” எனக் கேட்டான் புலவன்.
”மிக்க நன்று. நான் மாலை நேரத்தில் நண்பர்களோடு அதுவும் இதுவும் உதுவும் பேசும்போது சேர்த்துக் கொள்கிறேன்” என உற்சாகமாகச் சொன்னபடி காடன் நடந்தான் புலவனோடு.
”அடுத்த கூத்துக்குக் கரு உருவாக்கி விட்டேன். நீயும் குறிஞ்சியும் ஆட வேணும்” என்றான் புலவன்.
“புலவர் பெருமானே, அதென்ன மலைவாழ் மக்கள் என்றால் சதா சர்வகாலமும் பறவை மாமிசம் சுட்டுத் தின்றபடி கூத்தாடிக் கொண்டிருப்பது தான் வேலையா? வயிறு வாட இதெல்லாம் செய்ய முடியுமா? நான் தேன் எடுத்துப் போய் சமதரை கிராமங்களில் விற்று வருகிறேன். மாடத்தி காட்டு மூலிகை கொண்டு போய்க் கிராமம் தோறும் கூவிக்கூவி விற்கிறாள். குறிஞ்சிக்கு தினைப் புனம் காப்பதே முழுநேர வேலையாகியுள்ளது. இதில் நானும் அவளும் தழுவி ராத்திரியில் காதல் செய்துகொண்டு உடம்பில் பசலை படர்ந்திருக்க கள்ளு மாந்தி, மாமை படர்ந்த உடம்பைச் சொரிந்து சொரிந்து நினைவு கூர என்ன இருக்கு? மாமை விஷயமெல்லாம் நீர் ஏற்கனவே உரைத்தது. ஓலைத் தூக்கைத் தாரும். கீழே போட்டுவிடப் போகிறீர்”.
அவன் சிரித்தபடி கேட்க புலவன் அவன் கையில் ஓலைத் தூக்கைக் கொடுத்து விட்டு சரிவான ஒற்றையடிப் பாதையில் இறங்கலானான்.
“மாமையும் பசலையும் ஒண்ணுதானப்பா”.
மலை இறங்கும், ஏறும் அனுமதி வாங்குவதற்கான இடத்தில் ஏற மட்டும் வரி பெற்றுக் கொண்டிருந்த அரசு அதிகாரி தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.
தஞ்சையிலும் குடந்தையிலும் சுங்கச் சாவடியே கிடையாது என்றான் காடன். சுங்கம் தவிர்த்த சோழன் மாதிரி இதரரும் இருக்கக் கூடாதா? அவன் புலவனைக் கேட்க அவன் காதில் விழாதது போல் நின்றான்,
காடன் வியர்வை பூசிய உடல் மின்ன மறுபடி மலை ஏறியபோது சீனத்து விருந்தாளியை பகல் உணவு கொடுத்து உபசரித்துப் பரணில் இளைப்பாற்ற ஆண்கள் கூட்டம் மும்முரமாகப் பணியெடுத்துக் கொண்டிருந்தது.
அவர் கொண்டு வந்திருந்த மாவுக் குழல்களை வென்னீரில் கொதிக்க வைத்து, உலர்ந்த மீனைத் தூளாக்கிக் கலந்து, அவருக்கு இலைத் தட்டிலும் வழங்கப்பட்டது. மலைபடு கிழவோருக்கு சீனர் விருப்பப்படி இரண்டு அகப்பை அந்தச் சீன உணவு அளிக்கப்பட்டது.
கிழவோர் பல் விழுந்துபட்ட வாய்க்கு அருமையான ஆகாரம் கண்டு கொண்டேன் கொண்டேன் என்று மகிழ்ந்து உண்டார்.
தினைமாவைத் தேனில் பிசைந்த கலவையை வேகவைத்து உலர்த்தி மூங்கில் அச்சுகளில் குழலாகத் திரித்து நீட்டி நறுக்கினால் சீனர் உணவுக்குக் கிட்டத்தட்ட அருகில் வரும் என்று பெண்கள் சொல்ல அதை உடனே நடப்பாக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்தார் முதுகிழவோர்.
இந்தக் களேபரத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த இரண்டு பெண்களை யாரும் கவனிக்கவில்லை. சுனைக்கு அருகே நகைப்பு ஒலி கேட்க, சன்னமான அந்தச் சத்தத்தையும் உடனே காதேற்று காடன் என்ன விஷயம் என்று பார்க்க அங்கே ஓட்டமும் நடையுமாகப் போனான்.
என்ன சொல்ல. அங்கே சுனையிலிருந்து பொங்கும் நீரின் வேகத்தில் துணி துறந்த அந்த இரண்டு பெண்களும் குழந்தைகள் போல் நீர்விளையாடிக் களித்திருந்தார்கள்.
காடனுக்கு வியப்பாக இருந்தது. அதைவிட சங்கடமாக இருந்தது. நேற்று மாடத்தி, இன்று வருங்காலப் பெண்கள். பார்க்கக் கூடாததை ஒன்றுக்கு மூன்று தடவை பார்த்தாகி விட்டது. குறிஞ்சி என்ன நினைப்பாள் இது தெரிந்தால்.
மனதிலொரு பகுதி சொன்னது – ”மடையா, எதிர்காலத்திலிருந்து வந்த மனிதர் குலப் பெண்களைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறாய். வியப்புத் தரும் இப்படியான ஒன்றை அனுபவித்தது உன் நல்லூழ் என்று உன் சிறு நெல்லியளவு மூளைக்குப் படவில்லையா”?
முதுகிழவோனிடம் சொன்னால் என்ன? அவர் கூவிக் கூவிக் கெடுத்து வைப்பார் விடயத்தை. வேட்டை முடிந்து வந்திருந்த இளம்தாரி நண்பர்கள் ஓரியும் பாரியும் அவன் பார்வை எங்கே போகிறது என்று கவனித்தபடி அவனை நெருங்கி வந்தார்கள். அவன் மாடத்தியைக் கவனித்துக் கொண்டிருந்ததாகப்பட ஒரே வினாடியில் வெளியே பார்வையை நிலைக்க வைத்தான். அவர்களும் திரும்ப, அங்கே அந்த இரண்டு பெண்களும் நீரில் கழுத்து வரை அமிழ்ந்து நீர்ப் பெருக்கோடு முன்னே செல்லத் தொடங்கியிருந்தார்கள்.
”காடா, தேவதைகள் நீராடுவதைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா”?
காரி கேட்க, பாரி சொன்னான் – ”என்ன ஆகும்? நெற்றியில் விரல் முளைக்கும். உடும்பாகக் கனத்த குறி எலியாகும். அவ்வளவுதான்”.
”ஐயோ, அதைக் குணமாக்கும் மருந்துண்டா”?
”இல்லாமல் என்ன? அந்தத் தேவதைகள் நீராடிச் சிறகு உலர்த்துவதையும் பார்த்தால் நெற்றியில் விரல் முளைக்காது. மற்றது ஏற்கனவே கூறியபடிக்குத்தான்.”
யார் கவனத்தையும் ஈர்க்காமல் இருவரும் சிரித்தார்கள்.
ஓரி அவன் பக்கம் வந்து யார் இந்த தேவதைகள் என்று சுனையைச் சுட்டிக் கேட்டான்.
“விடு, நான் சொன்னாலும் நம்பப் போவதில்லை நீ. ஆனால் அது உண்மை” என்றான் காடன்.
என்ன உண்மை?
”இவர்கள் நமக்கு நாலாயிரம் வருடத்துக்கு அப்புறம் உலகில் வாழ்கிறவர்கள். மன்னன் இம்மலை ஏறி நம்மோடு ஓரிரு நாள் தங்கியிருக்க இவர்களுக்கு அனுமதி நல்கி இருக்கிறான்”.
“அவர்கள் தேவதைகள் தாம். உடுப்பின்றி நீந்தும் தேவதைகள். இளையவர்கள்”.
காடனுக்கு வாத்சல்யம் மனதில் தளும்பியது. அடுத்துக் காமமும் கட்டற்றுப் பெருகியது. அவன் திரும்பிப் பார்க்க அப்பெண்கள் எங்கே?
மழை மேகங்கள் குன்றின் உச்சியில் சூழ மெல்ல ஒரு சிறு தூறல் மழை வருது என்று கூவியபடி உதிர்ந்தது. மழை பெய்யும்போது சிறு சுனையிலும், அதற்கு நீர் வரத்து நடத்தத் தொடங்கும் மலை அருவியிலும், அருவியின் உற்பத்தி இடமான மலை ஊற்றிலும் நீர்ப் பெருக்கு திரண்டு பொங்கத் தொடங்கிவிடும்.
”மலைச் சுனையிலும் அருவியின் கீழ் நின்றும் நீராட உகந்த நேரமில்லை இது. கிட்டத்தட்ட ஐயாயிரம் வருஷம் பின்னால் வரும் இச்சிறு பெண்கள் ஈதொன்றும் அறியாதிருப்பர். எனின் சென்று கண்டு அவர்க்கு மதியுரைத்தல் தகுமன்றோ”.
கள்ளன் காடன் சிரிக்காமல் சொன்னான்.
பெண்கள் அடுத்து ஆடத்துவங்க நிற்கும் இடத்தில் குறிஞ்சி இருக்கிறாளா என்று காடன் பார்வையை ஒட்டினான். அவளைக் காணோம்.
வந்த பெண்கள் நீராடும் இடத்துக்கு அருகே கற்பரப்பில் அவர்கள் வைத்திருந்த குழல்கள் மெல்ல ஆடின. பின்னர் அவை ஒலியெழுப்பின. இனிய இசை அவற்றை யாரும் இசைக்காமலே மேலெழுந்து வந்து இதமான மலைக் காற்றில் கலந்தது.
தொடரும்
- அகழ்நானூறு 15
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
- வரிதான் நாட்டின் வருமானம்
- அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
- ஹைக்கூக்கள்
- மாலை நேரத்து தேநீர்
- கடவுளின் வடிவம் யாது ?
- பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
- பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
- நாவல் தினை – அத்தியாயம் மூன்று
- எலுமிச்சை ஆர்ஸோ