குரு அரவிந்தன்.
பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.
ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த எனது குறுநாவலான ‘நீர்மூழ்கி’ பற்றிக் குறிப்பிட்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். சிற்றுண்டி நேரத்தின் போது இவர் என்னிடம் நேரே வந்து கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நீங்கள் தான் அந்தக் கதையின் ஆசிரியர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். விகடன் பவழவிழா ஆண்டு மலரில் உங்கள் ‘விகடனும் நானும்’ என்ற கட்டுரையை வாசித்திருந்தேன், அதன்பின் தான் ஆர்வம் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கதையை வாசித்தேன் என்றார். கதையின் முக்கியமான இடங்களை அப்படியே எடுத்துச் சொன்னார். 2001 ஆம் ஆண்டு விகடனில் வெளிவந்த கதையை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர் தனது பொழுது போக்கே வாசிப்புத்தான் என்றும், அறிவியல் கதை என்பது மட்டுமல்ல, இந்தக் கதை மனதில் பதிந்ததற்கு இன்னுமொரு காரணம் அதற்குப் படம் வரைந்த அந்த ஓவியர்கள்தான் என்றும், தனக்கு ஓவியங்களில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுவரை விகடனில் இதுபோல, ஐந்து ஓவியர்கள் எந்தவொரு கதைக்கும் படம் வரைந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டார். என்னைப் போன்ற ஒரு வாசகர்தான் அவரும் என்பது அப்போது எனக்கும் புரிந்தது, காரணம் நானும் தொடக்க காலத்தில் ஓவியங்களைப் பார்த்துத்தான் வாசிப்பதற்கான கதைகளைத் தெரிவு செய்தேன். ஆனால் இவர் ஓவியர் ராமு, ஜெயராஜ், மாருதி, அர்ஸ் என்று அந்த நாட்களில் பிரபலமான அந்த ஓவியர்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாக நினைவு படுத்திச் சொன்னார். இன்னும் ஒருவரின் பெயர் நினைவுக்கு வரவில்லை என்றார், நான் ஓவியர் ‘பாண்டியன்’ என்று சொன்னேன்.
அதேபோல தீபாவளி மலரில் ‘நங்கூரி’ என்ற எனது கதைக்கு ஓவியம் வரைந்த கண்பார்வையை இழந்த ‘ஓவியர் மனோகர்’ பற்றியும் சில தகவல்கள் சொன்னார். உண்மையிலே இந்த ஓவியர்கள் மீது அதிக அக்கறை கொண்டு, அவர்களைப் பற்றி அறிந்தும் வைத்திருந்தார். அவர்கள் எனது கதைக்கு வரைந்த படங்கள் என்னிடம் இருந்தால் அனுப்பி விடமுடியுமா என்று கேட்டார், அவற்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வருடாவருடம் வாழ்நாள் சாதனையாளர்களைக் கௌரவிப்பது வழக்கமான ஒன்றாகும். இணையத்தின் தலைவராக நான் இருந்த போது, வாழ்நாள் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுக்கு 2019 ஆம் ஆண்டு இருவரைத் தெரிவு செய்திருந்தோம், அவர்களில் ஒருவர் பேராசிரியர் எஸ். பசுபதியாவார். விபரத்தை அவருக்குத் தெரிவித்த போது, கனடாவில் 25 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட எழுத்தாளர் இணையம் தனக்கு மதிப்பளிப்பதைப் பெருமையாகக் கொள்வதாக அறிவித்திருந்தார், ஆனால் ‘எதுவுமே சொல்ல முடியாது, உடல் நலம் நன்றாக இருந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்’ என்று உறுதி அளித்திருந்தார்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயற்பட்ட எனக்கு, அவரது அந்த வார்த்தை ஏதோ ஒன்றை அவர் சொல்ல நினைப்பது போன்ற தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதனால் அவசரமாக இந்த விழாவுக்காக ஐயப்பன் கோயில் மண்டபத்தை நாங்கள் தெரிவு செய்து, முற்பணமும் கொடுத்து விழாவுக்கான திகதியையும் அறிவித்திருந்தோம். திரும்பவும் அவருக்கு விழா பற்றிய விபரங்களை தொலைபேசியில் அறிவித்திருந்தேன். ஆனால் கோவிட் – 19 காரணமாக எதிர்பாராத விதமாக மண்டபங்கள் எல்லாம் மூடப்பட்டு, ஒன்று கூடுதல் எல்லாம் தவிர்க்கப்பட்டதால், மேற்கொண்டு விழாவை எம்மால் முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அவரைக் கௌரவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்.
பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் இழப்புக் கனடிய தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். பேராசிரியரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு பற்றி, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
- அகழ்நானூறு 15
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
- வரிதான் நாட்டின் வருமானம்
- அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
- ஹைக்கூக்கள்
- மாலை நேரத்து தேநீர்
- கடவுளின் வடிவம் யாது ?
- பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
- பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
- நாவல் தினை – அத்தியாயம் மூன்று
- எலுமிச்சை ஆர்ஸோ