ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

This entry is part 15 of 15 in the series 26 பெப்ருவரி 2023
  1. நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில

ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக

இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய்

தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள்

ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு

கிட்டாரை வாசிக்கிறார்கள்.

அல்லது கிட்டார் வாசித்த கையோடு

காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை

கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள்.

தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா

தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை.

தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங்காய்ச்சிகளின் சிரசுகளில்

கிரீடங்களைப் பொருத்துகிறார்கள்

கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள்

கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில்

அவர்களைத் தெருவோரமாக அமரவைத்து சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கான ஒத்திகையும் முன்னேற்பாடுகளுமே அது

என்று திரும்பத்திரும்பச் சொல்லுகிறார்கள்.

தவறாமல் இடையிடையே கிட்டாரை வாசித்து

மகுடம் அணிந்தவர்களின் மனதில் கிளர்ந்தெழும் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் அகற்றுகிறார்கள்

அல்லது அவற்றின் அடர்வைக் குறைக்கிறார்கள்.

அத்தனை காலமும் அவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்

அநீதிகளைக் களைய

சில தலைகளைத் துண்டித்தாகவேண்டியது அவசியம் என்கிறார்கள்.

அது கொலையல்ல – காருண்ய அலை என்கிறார்கள்

அவர்களுடைய தர்க்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அவ்வப்போது கிட்டாரை அருமையாக வாசித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அங்கங்கே யவ்வாறு அனுதினமும் அவர்கள் கொய்தெடுக்கும் தலைகளையெல்லாம் கணக்கெடுத்துப் பூரித்துப்போகும்

அன்னாடங்காய்ச்சிகளுக்குக் காலதாமதமாகவே புரிகிறது.

தங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருப்பது அட்டைக்கிரீடங்கள் என்பதும்

அவர்கள் கைகளிலுள்ளவை நிஜமான கொடுவாள் என்பதும்.

அதற்குள்

அவர்கள் பெயரால் மரகத மாணிக்க ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட மெய்க்கிரீடங்களை அணிந்துகொண்டு

அவரவருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துவிடும்

அந்த கிட்டார் – கோடரி கலவையாளர்கள்

ஆற்றலாகும் ஒரே சமூகமாற்ற அரும்பணியாய்

கிட்டாரை வாசிக்கவும் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கவும்

அரைகுறைப் பயிற்சிவகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் –

அதற்குப் பிறகும் அன்னாடங்காய்ச்சிகளாகவே நீடிப்போருக்கு

 

  •  
  • அன்பு செய்தலின் அனேக பாவனைகள்

இந்தா வாங்கிக்கொள் சுளீரென்றொரு கத்திக்குத்து

அதே கத்தியால் உனக்கொரு நல்ல ஆப்பிள் நறுக்கித் தருவேன்

அத்தனை அன்போடு

மாட்டேனென்று சொல்லாமல் முழுங்கிவிடு.

நறுக்கலுக்கும் வெட்டலுக்கும் வேறுபாடு

உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை

மனசாட்சி மட்டுமா தொல்லை…..

நான் உளறுவதாய்ச் சொன்னாயே _

உள்ளுக்குள் உன்னுடைய முப்பத்தியிரண்டு பற்களைப்

பத்துமடங்காக்கி

ஓங்கிக்குத்துவிட்டு அத்தனையையும் பேத்துப்போட்டபின்

எதிர்பாராத விதமாய் நீ எதிர்ப்பட்டபோது

எத்தனை அருளோடு சிரித்தேன் பார்த்தாயல்லவா?

பேதை நான் உனக்கு

பெத்தப் பேதை நீ யெனக்கு.

காற்றடைத்த பையானாலும்

மெய்யாகவே வலிக்கும் காயங்களை

விழுப்புண்களாகக் கொள்ளும்

மீமெய்யியல் மனிதராய்வாழ்ந்துகாட்டுவதாக

மார்தட்டிக்கொள்.

மிதப்போடு கடந்துசெல்.

வழியில் தென்படும் அயோக்கியசிகாமணிகளுக்கும்

ஆன்ற பெருமக்களுக்கும் அதேயளவான சிரிப்பையும் வரவேற்பையும் நல்கி

அதனாலேயே உன்னை அற்புதமனிதராகக் காண்பிக்கும் முனைப்பில்

உன்னை அழகாகக் காட்டிக்கொள்ளும் அதியார்வத்தின்

அவலட்சணத்தைக் காட்ட உனக்கொரு

ஏற்ற ஆடியை எங்கிருந்து கொண்டுவர இயலுமென்னால், சொல்?

நாதியில்லாத கவிக்கு வீடளிப்பதைக் காட்டிலும்

நாலு ஊரில் நாலு வீடு ஏற்கெனவே இருப்பவர்க்கு

இன்னுமொன்றை அளித்தலே கனிவின் உன்னதநிலை

என்று ஓதிக்கொண்டிருப்பதே அரசநீதியென்றாக _

Selectiveவ்வாக சீறு;

Selectiveவ்வாக மீறு;

Selectiveவ்வாகவே அன்புசெய்தலே சகலரிடமும் அன்புசெய்தல் என்று

கூற முடியுமானால் கூறு.

பாரு பாரு நல்லாப் பாரு

பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

  •  
Series Navigationநூல் அறிமுகம் – 2 CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE By Dr.K.S. SUBRAMANIAN
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *