நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

This entry is part 9 of 13 in the series 12 மார்ச் 2023

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த  ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது.

ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.

 குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக வழி செய்தனர். செந்தேளர் 2345 என்று பெயர் எழுதிய உடல், போன ஏதோ நூற்றாண்டு விமான சேவை நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விமானம் போல்   பிரமிப்பும்   அச்சமுமூட்டியது.

கொடுக்கையும் பிருஷ்டத்தையும் மரியாதை நிமித்தம் பின்னால் இழுத்துக்கொண்டு குயிலிக்கும் வானம்பாடிக்கும் வரவேற்பு நல்கும் விதமாகத் தலையைக் குனிந்து நிமிர்த்தி பெருந்தேளர், துயிலரங்கின் பிரம்மாண்டமான  கதவுகளுக்கு நேரே நின்றது, எனில் நின்றார்.

பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக் காத்திருக்கும் பேராசான் பெருந்தேளர். கோகர் மலைநாட்டின் என்றென்றைக்குமான, மாபெரும் தலைவர் பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர். பெருந்தேளர்.

குயிலியும் வானம்பாடியும் தேளசைவு போல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செலுத்தி, உக் உக் உக் என்று அரசு மொழியான  தேள்மொழியில் பெருந்தேளரிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அரசுமொழியான தேள்மொழியில்தான் அரசு நடவடிக்கைகள் நடத்தப்படும். அரசுமொழியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளே வாருங்கள். இந்தக் கதவை ஒரு தடவை திறந்தால் எத்தனை கஷ்டப்பட்டாலும் அடுத்த பத்து நிமிடம் மூடாது என்பது தெரியும்தானே.

தடித்த முன் காலை அன்போடு குயிலிக்கு முன் உயர்த்தினார் பெருந்தேளர். சொல்லி வைத்தாற்போல் அந்தப் பெண்கள் மானுடச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தார்கள்.

 தான் சொன்ன நகைச்சுவைத் துணுக்கு அவர்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அடைந்த பெருந்தேளர் கதவு திறந்ததும் ’ஏமப் பெருந்துயில் நிகழ்வும் நிர்வாகமும்’ பகுதிக்குள் நுழைந்தார்.

இது தேள்களின் மேட்டிமை துலங்கித் தெரியும் அலுவலகப் பகுதி என்பதால் பொறுப்பில்  இருக்கும் தேளர்கள் எல்லோரையும் கண்டதுமே குயிலியும் வானம்பாடியும் மரியாதை செலுத்த பதிலுக்கு அமுக்கமாக ஒரு தலையாட்டு மட்டும் செய்து அவர்கள் உள்ளே வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். 

மிடுக்காக உடையணிந்த காவல் கரப்புகள் முதல் தடவையாகக் கண்ணில் பட்டன. சராசரி மூன்றடி உயரமும், ஐந்து அடி நீளமும், இரண்டடி அகலமுமான அந்தக் கரப்புகளின் பலம் வாய்ந்த இறக்கைகள் இரண்டரை அடி உடலின் இரண்டு பக்கத்திலும் பறக்கத் தயாராக வெளியே துருத்திக் கொண்டிருந்தன.

தேளர்களைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்காத கரப்பர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மரியாதையில் திருப்தி அடைந்திருந்தனர்.    உரிமை, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கிடைத்த சந்தோஷம் கரப்பர்களுக்கு.    மானுடர்களைவிட மேலான இடம் கிடைத்த சமூக அமைப்பில் உயிர்த்திருப்பதில் பெருமை கொண்டவை கரப்பர்கள். அடுத்து இன்னும் மேலான விருதுகளும் உரிமைகளும் கிடைக்கப் போவதை எதிர்பார்த்துப் பரபரவென்று நகர்ந்து கொண்டிருந்தன அவை.

குயிலி வாயில் காவலர் கரப்பருக்கும் தலைக்கு மேல் வலது கையை உயர்த்தி மடக்கி மரியாதை செய்ய அது லட்சியமே செய்யவில்லை.  

அங்கங்கே அறிவிப்புப் பலகைகள் வெண்மை நிறத்தில் ‘மேலதிகப் பாதுகாப்பு வெளி. வரவு தடை செய்யப்பட்டுள்ளது’ என்று எச்சரித்தன.

மனிதர் உலகில் சிவப்பு எச்சரிக்கும் நிறம் என்றால் தேளுலகில் வெண்மை அப்படி அச்சப்படுத்துவதாகும். இன்னும் ஆறு மாதத்தில் மாற்றுப் பிரபஞ்சம் மேல் மட்டத்தில் ஆட்சி மாறி, அடுத்த ஆறு மாதம் தொடங்கும்போது அதுவும் மாறக் கூடும். ஆட்சி மாற்றம் அறிவிக்கப்படாது. பழக்க வழக்கங்களில் நுண்ணிய வித்தியாசங்கள்  எதிர்ப்படுவதை வைத்துத்தான் அது ஊகித்தறியப் படுகிறது.

பெருந்தேளருக்குக் கீழ்ப்பட்ட, ராணுவ உடுப்பணிந்த, ஆத்திர அவசரத்துக்குப் பறக்க இறகு கொண்ட செந்தேளர் ஒருவரும் அவரை மரியாதைக்குரிய இடைவெளியில் தொடர்கின்ற கீழ்ப்பட்ட நிலை அதிகாரர்களும், அவர்களின் பின்னால், மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் கரப்பு அதிகாரிகளும் வந்து சேர, மேடையில் பதினைந்து  பேரும், அரங்கில் முப்பது பேருமாக மண்டபம் நிரம்பி வழிந்தது.

அறைக்கு வெளியே இரட்டைக் கதவுகளுக்கு சிறு தொலைவில் இரண்டு சாதாரண இருக்கைகள் போட்டுக் குயிலியும் வானம்பாடியும் அமர்ந்திருந்தனர். அந்த அமைப்பிலேயே மனுஷப் பிராணிகள் அவர்கள் இருவர் மட்டும்தான்.

ஒவ்வொரு தலைமுறை மனுஷ ஜாதியிலும், பதிமூன்று விழுக்காடு பேர், உயர் மனிதர் என்ற மேட்டிமை சொல்லும் தோளில் அணியும் பட்டி மூலம் அடையாளம் கண்டு அதிக சலுகைகளோடு ஆதரிக்கப் படுகிறார்கள்.

குயிலி, வானம்பாடி இருவருமே உயர் மனிதர்கள் என்பதால் அவர்களுக்கு அரசு ஓருரு அமைப்பில் பணி நிரந்தரமாக்கப் பட்டிருக்கிறது.

பின் வரிசையில் நின்ற இரு கரப்பு அதிகாரிகள் உரக்கச் சொன்னது இப்படியாக இருந்தது –மரியாதைக்குரிய பெருந்தேளர் உலகப் பெருந்தலைவரின் அவை தொடங்குகிறது. எல்லோரும் வணக்கம் செய்ய உத்தரவாகியுள்ளது.

தேளர்கள் நின்று சேர்ந்து கைதட்டி மரியாதை செலுத்தினர். கரப்பர்களோ இடுப்பு வளையக் குனிந்து வணங்கினார்கள்.   மரியாதை செலுத்துதலுக்கு பத்து நிமிடம் சென்றது. அடுத்து கூட்டத்தைக் கூட்ட வேண்டிய காரணத்தை ஓர் உயர் தேளதிகாரி விளக்கினார். அதன் மானுட மொழி  வடிவம் இப்படி இருந்தது –

பொது யுகம் 325 தமிழ் மாநகரில் புலவர் நீலன் என்ற மருத்துவர் நீலன் மானுட இனத்தின் வாழ்க்கைக் காலத்தை நானூறு ஆண்டுகளாக நீட்டிக்க மூலிகை அடிப்படையில் மருந்து இருப்பதைக் கண்டுபிடித்தார். அவருக்கும் ஐநூறு ஆண்டு முன் ஆக்கப்பட்ட மருந்து. மனித மொழியில் மருந்து என்பது அமிர்தமாகும்.  அமுதமேதான் இது.

இந்த மருந்து பழக்கத்துக்கு வந்தால் இந்தப் பிரபஞ்சம் மட்டுமில்லை, கவனத்திற்குட்பட்ட எல்லா பிரபஞ்சங்களிலும் மானுடர் கை ஓங்கிவிடலாம் என்று உயிரினங்கள் அஞ்ச வேண்டும். அஞ்சும்.

நீலனை இல்லாமல் ஆக்கிவிடலாம் தான். அது கால வெளியில்   சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். நீலன் இறந்து போனால் அவரோடு மருந்து ரகசியமும் இல்லாது ஒழிந்து விடும்.

மானுட ஜாதியின் உயிர்க்கும் காலத்தை நீட்டிக்கும் மருந்து கொண்டு தக்க வேதியியல்  மாற்றங்களோடு மற்ற இனங்களுக்கும் அவரவர் வாழ்க்கைக் கோட்டை அதே போல் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால் நல்லூழ் இல்லாமல் அவர் மருந்தை அவருக்குக் கிடைத்த, அவர் வாழும் மூன்றாம் நூற்றாண்டில் சோதனை செய்ய முற்பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. விரக்தி அடைந்து குகைகளுக்குள் வழி தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறார். அவரை அந்த இடம், காலத்திலிருந்து, இங்கே, நம் காலத்துக்கு அழைத்துவர வேண்டும்.  என்றால் எங்கே அவர் போனாலும் மூலிகை இருக்கும், அவர் இருப்பார், மருந்து செயல்முறை இருக்கும்.  .  

மருந்து உண்டாக்க முக்கியமாகப் பயனாகும், ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை பூக்கும் மூலிகைச் செடி இன்னும் ஒரு மாதம் கழித்துப் பூக்கும்.

அதுவரை அவரை காலத்தில் முன்னால் எடுத்து வந்து ஏமப் பெருந்துயில் என்ற cryostasis நிலையில் துயிலரங்கில் இருத்தலாம் என முடிவானது.

துயில் எழுவார். மானுட ஆயுள் கூட்ட முயற்சியை முதலில்  தொடங்குவார்.  அவர் வெற்றி பெற்றால் நமக்கும் வெற்றி.

நம் பிரபஞ்சத்திலே இல்லை என்றாலும் வேறு பிரபஞ்சத்து மானுடர் நீலனோடு தொடர்பு கொண்டு மூலிகை மருந்து விவரம் வாங்கிவிட முயலலாம்.

முக்கியமான ஒரு விஷயம் – மருந்து விவரம் மருத்துவரின் நரம்பு வலையமைப்பு, என்றால், ந்யூரல் நெட் ஒர்க்கில் பதிவாகி இருக்கிறது. அதற்கு வேறு பிரதி கிடையாது. அந்த நினைவு வலைப் பின்னலைப் பிரதி செய்யவும் இயலாது.

இந்தச் சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது இதுதான் – செய்முறையை, மூலிகை, வேதியியப்பொருள் விவரங்களை எப்படியாவது மருத்துவனிடமிருந்து  வாங்கி விட வேண்டும். அப்புறம் வேதியியல் படி மருந்தை உருவாக்கி விடலாம். அதன் பின், அவன் நினைவு அறிவை எல்லாம் போகிற போக்கில் நீக்கி எங்கிருந்து வந்தானோ அந்தக் காலத்துக்கே கொண்டு போய் விடலாம்.

பழமைக்கும் பழையதான பழங்காலப் பெரும் மறதியாளன். உடுக்க மறந்தவன், உண்ண மறந்தவன், வீட்டுக்கு வழி மறந்தவன். உண்ணுவதும் கழிவதும் எப்படிச் செய்ய வேண்டும் எங்கே செய்ய வேண்டும் என்று மறந்தவன்.

செந்தேளர் சொல்ல மனப் பிறழ்வு என்று மற்றவர்கள் சிரித்தார்கள்.

மிக அற்புதமான விவரணைகள். நன்றி என்றார் பெருந்தேளர். அற்புத விவரணை அளிக்கும் பலதுறை அறிவின் காவலர் தலைவர் பெருந்தேளர் வாழ்க என்று வாழ்த்துக் குரல்கள் உயர்ந்தன.

குயிலியையும் வானம்பாடியையும் உள்ளே அழைக்க விளக்கு எரிந்தது. அந்தப் பெண்கள் உள்ளே வந்தார்கள்.  அவர்கள் தலைவர் முன் விழுந்து வணங்கினார்கள். அவர் கால்களை முத்தமிட்டு அவற்றில்   பூசியிருந்த தூசித் துகளை எடுத்துத் தலைமுடியில் பூசிக் கொண்டார்கள். 

எழச் சொன்னார் தலைவர். எழுந்து நின்றார்கள் குயிலியும், வானம்பாடியும். நாற்காலி என்று யாரோ சொல்ல, அதற்கான தகுதி வேண்டாமா என்று கரப்பர் பிரதிநிதி அருவருப்பாக இளித்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி சொன்னார்.

வேண்டுமானால் இரண்டு பெண்களையும்  இரண்டு மடியிலும் இருத்திக் கொள்ளலாம் என்று மற்றொரு கரப்பன் சொல்ல தேளர் ஒருவர் கொடுக்கால் தண்டனை கொடுத்து அவரைச் செயலின்றி ஆக்கித் தரையில் கிடத்தினார். நேரம் கெட்ட நேரத்தில் இடம் பொருள் ஏவல் புரியாமல் பகடி செய்தால் இதுதான் இனி தண்டனை என்று சகலரும் அறியச் சொல்லப்பட்டது.

எப்படி இருக்கிறார்கள் சங்க கால மக்கள் என்று பெருந்தேளர் வினவியபடி நாற்காலிகளுக்காகக் கை காட்டினார்.

”மகா ப்ரபு, சங்க காலம் யார் போனது? அந்தக் காலத்தைப் பகுதி வனைந்த நிகர்மெய் வெளியில் அல்லவோ எங்களை அனுப்பி வைத்தீர்கள்”.

குயிலி சிரித்தபடி அமர்ந்தாள். பெருந்தேளர் சிரிக்க அவையே நகைத்தது.

“சுனையும், மலையும், கூத்துப் பரம்பும் பகுதி உண்மை. மற்றபடி அங்கே இருந்தவர்கள் சிலர் உண்மை மனிதர்கள். மற்ற சிலர் செயற்கையாக வனைந்து ஊடாட அனுப்பப்பட்டவர்கள். எல்லாமே புது அனுபவம்”.  வானம்பாடி பெருந்தேளரை நோக்கிக் கூறினாள்.

நீங்கள் பறந்தது? பெருந்தேளர் அவளை உற்று நோக்கியபடி கேட்டார்.

தற்காலிகமாக எங்களுக்குக் கிட்டிய கொடை.

கண்கள் நனையப் பார்த்தாள் குயிலி.

அந்தக் குழல்களோ?

எங்களுக்கான இசையை, கலையை, இலக்கியத்தை நீங்கள் எப்போதும் மதிப்பீர்கள் என்பதற்கான அழுத்தமான அடையாளம். கூடவே தொழில்நுட்பத்தையும். அவை காலம், வெளி கடந்து ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதி நேரத்தில் தொடர்பு ஏற்படுத்தித் தரும் அற்புதமான ட்ரான்ஸீவர்களன்றோ.

அதேதான்.  குழலில் மேலும் என்ன புதுமை கண்டீர் சிறுமியரே?

அவை தம்மைத் தாமே இசைத்துக்கொண்டன, நல்ல இலக்கியம் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பது போல்.

வானம்பாடி சொல்ல குயிலி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் – இது இன்னும் எவ்வளவு காலம் சொல்லிப் போக வேண்டும்? நல்ல சிற்பம் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும். நல்ல ஓவியம் தன்னைத்தானே வரைந்து கொள்ளும். நல்ல உணவு தன்னைத்தானே சமைத்துக் கொள்ளும். நல்ல மது தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும். நல்ல கலவி தன்னைத்தானே புணர்ந்து கொள்ளும்.

பெருந்தேளர் அடுத்து அந்த இளம்பெண் குறிஞ்சி பற்றி விசாரித்தார்.

இவ்வளவு இனியவளாக, விளையாட்டும், சீரான வேலையாற்றுதலுமாக, குழுவில் செயல்படுகிறவளாக தேன் ஈ போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண் குறிஞ்சி இங்கே நான்கைந்து மானுட ஆளுமைகளை இணைத்து செய்யப்பட்ட செய்மனுஷி ஹுமனாய்ட் தானே?

தலைவர் தன் கரக் கால்களால் குயிலியைத் தடவி அன்பு கூறினார்.

அவளுக்கு உயிர் போய்த் திரும்ப வந்தது.

குயிலி, இங்கே நீ என்னிடம் தோற்று விட்டாய் என்று பெருந்தோளர் வாயைப் பாழடைந்த கட்டடம் போல் பயப்படுத்தத் திறந்து மூடிச் சொன்னார்.

குறிஞ்சி பொது சகாப்தம் 333இல் உயிர்த்திருந்த பெண். அவள் மட்டுமில்லை, அவள் மேல் மையல் கொண்டு துடித்துச் சாடி ஓடி அலையும் காடனும் தான். காடன் ஒரு இருநூறு வருடம் பின்னால் இருந்து அதாவது பொது சதாப்தம் 533இல் இருந்து அங்கே காலம் கடத்தப்பட்டவன். காலம் கடத்தி வாழச் செய்வதில் வெற்றி பெறுவது எவ்வளவு இருக்கும் என்று கவனிக்க நான் என் அலுவலகத்துக்குக் கொடுத்த பணி அது.

காடன் வளர்க்கும் நாய் அதுவும் காலம் கடத்தப்பட்டு வந்ததா? வானம்பாடி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

இல்லை. முதுகிழவன் காலத்துக் குக்கல்.  பொது சகாப்தம் 233இல் உயிர்த்தவர்கள். அதாவது நூறு வருடம் முந்தியவர்கள். ஆக 233 முதல் 533 வரை உயிர்த்தவர்கள் 233இல் சந்தித்து நெருடல் இன்றிப் பழக முடிந்தது தானே? மனிதர்கள்  அப்போது சற்று நல்லவர்களாக இருந்தார்கள் தானே?

ஆம் என்றாள் குயிலி. அவள் சுனையில் நீராடும்போது இடுப்புக்குக் கீழ் நெகிழ்த்திய சீலை இன்னும் நெகிழக் காடன் காத்திருந்ததைச் சொல்லலாமா என்று யோசித்தாள்.

வேணாம், மனுஷப் பிறவிகளின் மேம்பட்ட அறிவும், உழைப்பும், அனுபவமும் இந்த அரசாங்கத்துக்கு வேண்டும். புகார் சொன்னால், அவர்களை சிறு மீறல்களுக்கு எல்லாம் வெறுக்கத் தக்க வண்ணம் சித்தரித்து விடுவார்கள் தேளர்கள்.

”மலைபடு கிழவோனாக வந்தவன் கடைச்சங்கப் பெரும் புலவன் நக்கீரன். பாட்டு எழுதாத நேரத்தில் அங்கம் பழுதுபட அரிவாளை நெய்பூசி பங்கம் பட இரண்டு கால் பரப்பி சங்கதனை கீறுகீறென்று அறுக்க வைத்திருந்தேன். அது சமூக நோக்கில் சரியானதன்று என்று பிற்கால சமூக விமர்சகர் பொது யுகம் 2024இல் திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் சொன்னதால்   நீக்கம் செய்து விட்டேன். உங்கள் மானுட இனத்தின் பிரச்சனைகள் ஒன்றும் புரிபடுவதே இல்லை.” பெருந்தேளர் அலுத்துக் கொண்டார்.

வேறு என்ன சிறப்புச் செய்தி? செந்தேளர் அடுத்துக் கேட்டார்.

குயிலி சொன்னாள் –

“நான் கவிதையின் மூலத்தை அறியத் தனிப்படப் பேசியபோது புலவரும் அன்போடு பேசினார். எப்படி கவிதை உருவாகிறது என்பதை அவர் எழுதுவது கொண்டு நேரடியாக அறிய நேர்த்தியாக இருந்தது. அவர் பாடல் அகநானூறில் ஒன்றாகவோ கொஞ்சம் மாற்றி புறநானூறில் ஒன்றாகவோ தொகுக்கப் பட இருக்கிறதாகச் சொன்னார். புரியாமல் எழுதிவைத்தால் இரண்டிலுமே வருமா என்ற என் கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லை. அவருக்குக் கவிதை எழுதுவதைவிட அது இலக்கணப்படி இருக்கிறதா என்று சோதிப்பதுதான் கடினமான பணி என்றார்.”.

ரொம்ப மகிழ்ச்சி. பெருந்தேளர் காலனைத்தும் உயர்த்திக் கூப்பினார். போலி மரியாதை என்று புரியாத அவையோர் அனைவரும் கால் உயர்த்த இட நெருக்கடி உண்டாகித் தெளிந்தது.

குயிலி பக்கம் மெல்ல நகர்ந்து வந்தார் பெருந்தேளர். அவள் பயந்து வியர்ப்பு நுதலில் தோன்ற சற்றே நடுங்கினாள். தவிரவும் நக்னமான தேளுடல் ஏற்படுத்திய அருவருப்பு மேலெழுந்து வந்து மடிந்தது.

பெருந்தேளர் அருகில் நின்று கைகொட்டினார். ”குறிஞ்சி பாடிய புலவனா நன்று நன்று” என்று மானுடப் பேச்சை நகலெடுத்துப் பகடி செய்வதில் தொடங்கினார் அவர்.

””அறிவிலிப் பெண்ணே, அந்தப் புலவன் ஒரு ஹோலோகிராம். நம் ஓருரு அலுவலகத்தில் கன்றுக்குட்டிகளுக்கும். சிறு  பன்றிகளுக்கும் தீவனம் சீராக அளிக்கும் மின்சிப்பந்தி. அவனைப் புலவனாக்கியது உங்களுக்குப் பிடித்தது கேட்க நன்று. விலங்கு மேய்ப்பானுக்கு இலக்கணம் கற்றுத் தருவது தான் சற்றே கடினமாக அமைந்து போனது. சரியாகச் சொன்னாய், உண்மையான புலவர்களுக்கே இந்த இலக்கணம் கஷ்டமான விஷயமாம். இவன் எங்கே தேறப் போகிறான் என்று நினைத்தேன். தேறிவிட்டது அந்த ஹோலோகிராம்”. பெருந்தேளர் நகைத்தபடி சொன்னார்.

அப்புறம் அந்த சீனாக்காரர்? அந்த அருவி, சுனை எல்லாம்?.

கரப்பு அதிகாரி ஈயென இளித்தபடி கேட்டான். குயிலியும் வானம்பாடியும் மலையும் மலை சார்ந்த இடமும் கண்டதை ஒரு வினாடி தவறவிடாது தொலைக் காட்சியாகப் பார்த்திருந்தவன் அந்தக் கரப்பு அதிகாரி. சுனை நீராடிய கோலம் கண்டிருப்பான் கடையன்.

“சீனர்கள் சாப்பிடாத உணவா? சோற்றை வடித்து புளிப்பு ஏறி  பூஞ்சைக் காளன் படர அதை ஈர மணலில் புதைத்து வைத்து இன்னும் மண்புழுவும், தரை வண்டுகளும் அடைய அப்படியே அதை எடுத்து உண்பது போல் ரசனைக்கு உரிய ருசியான ஆகாரம் ஏதும் உண்டா”?

அவர் அடுத்துச் சொல்ல, கரப்பு அதிகாரிகள் ரசிக்க, தேளர்கள் அருவருப்பு காட்டும் கால் சைகைகள் காட்டி பெருந்தேளரை நோக்கி இருந்தார்கள்.

“கரப்பு சகோதரர்களே உங்கள் ஆகாரப் பழக்கத்தை மதிக்கிறேன். எனில் இது அதை ரசித்து மகிழும் அவை இல்லை. இந்தப் பெண்களை ஒரு அரசுப் பணிக்காக பல நூறு ஆண்டுகள் பின்நோக்கி அனுப்பி வைத்திருந்தோம். அவர்களின் அனுபவங்களைக் கேட்கக் கூடி இருக்கிறோம். அது எல்லோருக்குமே பயன்படுவதாக இருக்கும். சொல்லம்மா, அந்த சீனர் பற்றி என்ன நினைக்கிறாய்?”

”அவர் கட்டாயம் மனுஷர் தான். வலிப்பு நோய் கண்டு விழுந்து உடல் துண்டாடியது போல் துடிக்க அவர் துன்பப்பட்டது துயரமானது. எனக்கு அவர் எந்தக் காலத்திலிருந்து வந்தார் என்று தான் தெரியவில்லை. நம் காலத்தில் இருந்து போனவரா அல்லது பொது சகாப்தம் 333இல் இருந்தவர்தானா”?

“சரியாகச் சொன்னாய் குயிலி. உன் கவனமான பார்வையை மெச்சுகிறேன். அவர் நூறு ஆண்டு பின்னால், 433இல் வந்தவர்”.

“அந்த மொழிபெயர்ப்பாளர் ஹுமனைட் என்று அவர் முகம் பார்த்ததுமே புரிந்து விட்டது. கண்கள் செயற்கையாகச் சிமிட்ட வைத்தது தெரிந்தது”- வானம்பாடி சொன்னாள்.

”அதுதான் இல்லை, சீனர்கள் அதிவேகமாகக் கண் சிமிட்டுவார்கள். எனவே ஹுமனாய்ட் ஆக இருந்தாலும் கண் சிமிட்டலைக் கவனித்துப் போட்டிருந்தோம்”.

தேள் அதிகாரிகள் களி கூர்ந்து கையொலிக்க பெருந்தேளர் ”இந்தப் பெண்கள் திறமையானவர்கள். புனைவாகச் சமைத்த மலைச் சூழல். வெவ்வேறு காலத்து மனிதர்கள், ஹோலோகிராம், ஹுமனைட் ஆகியவர்கள் பங்கு பெறும் அந்த மெய்யான, பகுதி காட்சி ரூபமான சித்தரிப்பு நிகழும் சூழலில் யார், எது, எங்கே என்று இனம் கண்டு இடைகலந்து பழகவும். ஒரே அமைப்பாக இந்த நிகழ்வைக் காணவும் திறமை மிக்கவர்கள்”  என்று சொல்ல, இரண்டு பெண்களும் கை கூப்பி வணங்கினார்கள்.

சற்று நேரம் வெளியே இருங்கள். மீண்டும் அழைக்கிறோம் என்றார் பெருந்தேளர்.

கூட்டத்துக்கு முதுகு காட்டாமல் வாசலுக்கு மேடையைப் பார்த்தபடி பின்வாங்கி கதவை முதுகால் மோதித் திறந்து வெளியேறினார்கள்.

(தொடரும்)

Series Navigationபிரபஞ்சத்தின் வயதென்ன ?ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *