K N வெங்கடேஷ்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (திருக்குறள்-102)
திருக்குறள் விளக்கம் – நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
நம் நாட்டில் அரசியல் தலைவரின் மறைவு என்றால் பேருந்துகள் ஓடாது. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விடும். வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் மறைவினை அதிகாலையிலே அறிவிப்பார்கள். அந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் அனைவரும் வீட்டில் இருப்பர். வெளியூரிலிருந்து இரவு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மட்டுமே பாதிக்கப்படுவர். அப்படிப்பட்ட வெளியூரிலிருந்து பயணம் செய்யும் இருவரின் கதையே இது. இந்த கதை சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்படுகிறது.
குமாரும், ராமனும் தங்கள் பாட்டி தாத்தா வீட்டில் சென்னையில் முறையே 5 மற்றும் 12 ஆம் வகுப்புபடித்து வந்தனர். அவர்களுடைய பெற்றோர் மயிலாடுதுறை அருகில் இருக்கும் பேரளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். ராமனுடைய தந்தை தமிழ்நாடு மாநில அரசு பணியில் இருந்தார். தன் வேலை பொருட்டு அவர் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பேரளம், குடவாசல் போன்ற வேறு வேறு ஊர்களில் பணி செய்து வந்தார். தங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடாமல் இருக்க தன் இரு மகன்களை சென்னையில் உள்ள தன் மாமனார் வீட்டில் படிக்க வைத்தார். காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுப்பில் அவர்கள் பெற்றோர் இருக்கும் ஊருக்கு வந்து செல்வர். பெரும்பாலும் அவர்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் செங்கோட்டை வண்டியில் ஊருக்கு செல்வர்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17ஆவது கிலோ மீட்டரில் பேரளம் என்ற அழகான கிராமம் உள்ளது. கிராமத்தின் தொடக்கத்தில் வாஞ்சியார் என்று ஒரு சிறு வாய்க்கால் உள்ளது. தென்னை மரங்கள் பனை மரங்கள் சூழ்ந்த அழகான கிராமம் ஆகும். நெல், கரும்பு இவைகள் இங்கு பயிரிடப்படுகின்றன. இந்த ஊரில் அந்த காலகட்டத்தில் அனைத்து பிள்ளைகளும் அரசு பள்ளியில் பயின்றனர். இப்பொழுது அங்கு நிறைய தனியார் பள்ளிகள் வந்துவிட்டன.
பேரளம் வடை மிகவும் பிரசித்தி பெற்றது. ரயில் நிலையத்தில் பயணிகள் அதை வாங்கி உண்பர். அந்த காலத்தில் ஒரு ராயர் மாமா தினமும் போலியும் வடையும் ரயில் நிலையத்தில் விற்பார். ஒரு சிறிய மரப்பெட்டியில் ஒருபுறம் சூடான போலி அடுக்கப்பட்டு இருக்கும். மறுமுனையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நெய்யுடன் ஒரு சிறு கரண்டியும் இருக்கும். பயணிகளுக்கு வாழை இலையில் போலியை வைத்து அதன் மேல் நெய்யை தடவி கொடுப்பார். இந்த பேரளம் வடையில் நிறைய முந்திரிப் பருப்பு சேர்த்து செய்யப்படும்.
மதியம் 11 மணி முதல் 3 மணி வரை அந்த கிராமத்தில் ஐஸ் வண்டி மிகவும் பிரபலமானது. சிறுவர்கள் தனது பெற்றோர்கள் கொடுக்கும் சில்லறை காசுகளை சேமித்து குச்சி ஐசை வாங்கி உண்டு மகிழ்வர். திராட்சை பழ குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், பஞ்சாமிர்த ஐஸ் ஆரஞ்சு ஐஸ் இப்படி எல்லாம் 15 பைசாவிலிருந்து ஒரு ரூபாய் வரை அந்த காலகட்டத்தில் கிடைக்கும். சிறுவர்கள் அந்த குச்சி ஐஸ் களை வாங்கி ஒரு சிறிய டம்ப்ளரில் வைத்து(ஐஸ் கீழே விழாமல் இருக்க) ஐசய் உறிஞ்சி மகிழ்வர்.
பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் மாடு கன்றுகள், மாட்டு தொழுவம் பெரிய வைக்கோல் போர் இவை எல்லாம் இருக்கும். குமார் வசித்த வீட்டின் அருகில் உள்ள வீட்டில் அந்த காலத்திலேயே பயோ கேஸ் இருந்தது. குமார் இருந்த வீடு ஒரு பெரிய வீடு. கிட்டத்தட்ட பத்து குடித்தனம் இருக்கக்கூடிய அந்த வீட்டில் அருகருகில் நடுத்தர குடும்பங்கள் வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வாழ்ந்து வந்தனர். ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், தங்கள் பிள்ளைகளை அடுத்த குடித்தனத்தில இருக்கும் பெரியவர்களிடம் விட்டுச் சென்றனர். அவர்களும் அந்த குழந்தைகளை தங்கள் குழந்தைகள் போல் பாவித்து அன்புடன் பார்த்துக் கொண்டனர். அப்படி இருக்கும் அந்த 10 குடியிருப்பில் ஒருவர் அரசு வேலை செய்வார்; மற்றொருவர் பள்ளி ஆசிரியர்; ஒருவர் தபால் ஆபீசில் வேலை செய்பவர்; ஒருவர் வங்கியில் வேலை செய்பவர்; ஒருவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்பவர்; இப்படி வேறு வேறு துறையில் பணிகளில் இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து இருந்தனர்.
அந்த கிராமத்தில் சிவன் கோவில், அனுமார் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் காளி கோவில் உள்ளது ஆங்காங்கே குளங்களும் வயல்வெளிகளும் நிறைந்திருக்கும். வயலில் மோட்டார் பம்ப் செட் பொருத்தப்பட்டு நீர் பாய்ச்சப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த தண்ணீர் தொட்டியில் குளித்து மகிழ்வர்.
1987 செப்டம்பர் 23ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிந்து குமாரும் ராமனும் சென்னையிலிருந்து பேரளம் புறப்பட்டனர். 23ஆம் தேதி இரவு செங்கோட்டை ரயில் மூலம் 24 ஆம் தேதி அதிகாலை 6:00 மணி அளவில் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைந்தனர் இப்பொழுது மயிலாடுதுறை ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேரளத்திற்கு போக வேண்டும். ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரிக்ஷா வண்டி மூலம் இருவரும் பேருந்து நிலையம் நோக்கி சென்றனர். இவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதால் ஒரு பெரியவர் அவர்களுடன் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார். பேருந்து நிலையத்திற்கு முன் அந்த பெரியவரின் வீடு இருந்தது அதனால் அவர் அந்த ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு மூவரும் புறப்பட்டார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த வானொலி மூலம் ஒரு துக்கமான செய்தியை கேட்டனர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதிகாலையில் இறந்துவிட்டார் என்ற செய்தி தான் அது. தலைவரின் மறைவை முன்னிட்டு எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. அப்பொழுது அவர்கள் இருவருக்கும் எப்படி ஊருக்கு போவது என்று தெரியவில்லை. தன்னுடன் வந்த பெரியவர் ஒரு யோசனை கூறினார். அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவர்கள் பெற்றோரும் குழந்தைகளின் வரவினை எதிர்நோக்கி காத்திருந்தனர். தலைவரின் மறைவு செய்தி கேட்டதும் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று அவர்களால் ஊகிக்க கூட முடியவில்லை. தந்தை சீனிவாசனும் தாய் ருக்மணியும் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட்டனர். அருகில் இருக்கும் குடும்பத்தினரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தனர். சீனிவாசனின் அலுவலகத்தில் வேலை செய்யும் செல்வராஜ் என்ற உதவி பணியாளரும் அவர் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார்.
பிள்ளைகள் அந்தப் பெரியவரின் வீட்டிற்கு சென் று காலை பல் துலக்கி விட்டு காபி குடித்தனர். அங்கேயே குளித்து விட்டு உணவும் அருந்தினர். அந்தப் பெரியவரின் வீட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருவரிடமும் பாசமாக இருந்தனர். அன்பாக உபசரித்தனர். சிறுவர்கள் இருவருக்கும் அங்கு தங்குவது சற்று கூச்சமாக இருந்தது. இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ? எப்படி நாம் ஊர் செல்வது? என்று இருவரும் வருந்தினர். பேரளத்தில் இருக்கும் தனது பெற்றோருக்கு அவர்கள் தந்தி மூலம் தாங்கள் இருக்கும் விலாசத்தை அனுப்பினர். மாலை 4 மணிக்கு மேல் ஊர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
குமாரின் தந்தை சீனிவாசன் இவர்கள் இருக்கும் விலாசத்திற்கு பேரளத்தில் இருந்து மயிலாடுதுறை வரை மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார். சீனிவாசன் அந்த பெரியவரின் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு, தனது இரண்டு மகன்களையும் பெரிய கண்ணாரத் தெருவில் உள்ள தன து நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களின் வீட்டில் அன்று இரவு உணவு அருந்தி விட்டு அனைவரும் தூங்கினர். அதிகாலையில் சுமார் ஆறு மணிக்கு சீனிவாசன், குமார் இருவரும் பேரளத்திற்கு மிதிவண்டியில் புறப்பட்டனர்.
அப்பாவும் பிள்ளையும் மிதிவண்டியில் மயிலாடுதுறையில் இருந்து பேரளம் நோக்கி புறப்பட்டனர். அதிகாலையில் புறப்பட்டதால் அவ்வளவு வெயில் தெரியவில்லை. எனினும் அவ்வளவு தூரம் மிதிவண்டியில் பயணிப்பது சீனிவாசனுக்கு சற்று கடினமாக இருந்தது. பாதி தூரம் சென்றவுடன் அவர்கள் ஒரு சிறு உணவகத்தில் பயணத்தை நிறுத்தினர். அங்கு அவர்கள் உப்புமாவும் டீயும் அருந்தினர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு வீடு நோக்கி வந்தனர். வரும் வழியில் அழகான வயல்வெளிகளும் சுத்தமான காற்றும் அவர்களை வரவேற்றது.
சுமார் ஏழு முப்பது மணிக்கு சீனிவாசனும் குமாரும் வீட்டை அடைந்தனர். குமாரை கண்டவுடன் ருக்கு மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் குளித்துவிட்டு காலை சிற்றுண்டி உண்டனர். சீனிவாசன் மிகவும் களைப்புடன் காணப்பட்டான். இரண்டு நாட்களாக மிதிவண்டியில் பயணம் செய்ததால் அன்று மதியம் முழுவதும் அவன் உறங்கினான்.
மிதிவண்டியில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். ஆதலால் அவருடைய மூத்த மகன் அவர் நண்பர் வீட்டில் தங்கி அன்று இரவு பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகு ஊருக்கு வந்தான்.
அப்பொழுது நவராத்திரி சமயம் என்பதால் பிள்ளைகள் தங்கள் வீட்டில் கொலு வைப்பதற்கு தனது அம்மாவிற்கு உதவினர். ருக்குவும் பண்டிகையை முன்னிட்டு வடை,பாயசம், அதிரசம், முறுக்கு இவைகளை செய்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்தார். அப்பாவும் இந்த பத்து நாட்களில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்பொழுது குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தார். பிள்ளைகள் தங்கள் பக்கத்தில் இருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
நவராத்திரியை முன்னிட்டு அங்கு சிறு சிறு கடைகள் திறக்கப்பட்டன. குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், இனிப்பு பலகாரங்கள், பரிசுப் பொருட்கள் இப்படி நிறைய கடைகள் இருந்தன. குடும்பத்துடன் அவர்கள் இந்த கடை வீதிக்கு சென்றனர். அங்கு நன்னாரி சர்பத்குடித்து மகிழ்ந்தனர், அப்பா தங்கள் இரு குழந்தைகளுக்கும் கை கடிகாரம் வாங்கிக் கொடுத்தார்.
சரஸ்வதி பூஜை தினத்தன்று அவர்கள் குடும்பத்துடன் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூர் என்ற ஊரில் உள்ள சரஸ்வதி அம்மனை தரிசிக்க சென்றனர். சுவாமி தரிசனம் முடித்து அவர்கள் அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்றனர். நண்பர்கள் வீட்டில் பொழுதினை கழித்து அன்று இரவு பேரளத்திற்கு திருப்பினர்.
அவர்கள் இருவரும் 10 நாட்கள் தங்கள் பெற்றோருடன் பொழுதினை இன்பமாக கழித்தனர். பிறகு அவர்கள் விடுப்பு முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.
இந்த கதையின் மூலம் நாம் தெரிவிப்பது என்னவென்றால் நமக்கு எதிர்பாராத உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நாமும் பிறருக்கு எந்த பலனும் இல்லாமல் உதவிகள் செய்ய வேண்டும். இந்த இரு சிறுவர்களுக்கும் அந்த பெரியவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியது.
******************************************************************************************************
- கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்
- ஏகாந்தம்
- மௌனம் – 2 கவிதைகள்
- நேர்மையான மௌனம்
- இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
- எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி
- சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3
- இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு
- ஆறுதல்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2
- முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
- நாவல் தினை – அத்தியாயம் எட்டு CE 5000 CE 1800