மீனாட்சி சுந்தரமூர்த்தி.
பனித் தூவல் வாங்கி வியர்த்திருந்தன தோட்டத்து ரோஜாக்கள். வெற்றிலைக் கொடிக்குப் பக்கத்தில் தன் பங்குக்கு மதிலை வளைத்திருந்த நீலச் சங்குப் பூக்களின் பனித்துளிகள் அருகிலிருந்த வாழை இலையில் வழிந்தோடி சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தன. ஐந்து மணிக்கே எழுந்து விட்ட பாமா குளித்து முடித்து, லலிதா நவரத்தினமாலை பாடி விளக்கேற்றி வழிபாடு முடித்து விட்டாள். கூடத்து கடிகாரத்தில் சிட்டுகள் மூடி திறந்து ஆறுமுறை ஒலித்து விட்டு உள்ளே சென்று விட்டன. புழக்கடைத் தோட்டத்துக் கதவு திறந்து மெல்ல வந்த பாமா துணி துவைக்கும் கல்லில் உட்காரவும் (மலர்க்கொடி) காபிக் குவளையோடு வரவும் சரியாக இருந்தது. எத்தனையோ வகைகள் அறிமுகமாகியும் இந்த வீட்டில் இன்னும் நரசுஸ் காபியின் அதிகாரம்தான். .’அக்கா நான் பாத்திரம் தேய்க்கப் போறேன் எதுனா வேணுன்னா கூப்பிடு’ என்றாள் மலர், சரி என்று தலையசைத்தாள் பாமா.
மழை பெய்தபின் ஆற்றில் நுரைத்துக் கொண்டு ஓடி வரும் புதுவெள்ளம் போல் மனம் நினைவலைகளில் மூழ்கியது.
கடலூரிலிருந்து செஞ்சிக்கு மருமகளானாள் பாமா. தந்தையை இளம் வயதிலேயே இழந்து விட்டிருந்தததால் இரண்டு அண்ணன்களும் ஒரே தங்கைக்கு வெகு விமரிசையாகத் திருமணம் நடத்தினர். முத்தாலம்மன் கோவில் தெருவே அசந்து போனது. சம்பந்தியம்மா ஒரு வெள்ளித்தட்டுதான் பட்டியலில் எழுதியிருந்தாள். மாப்பிள்ளை மட்டும்தான் வெள்ளித்தட்டில் சாப்பிடுவாரா தங்கையும்தான் என்று இரண்டு வாங்கினார்கள். இப்படி எந்தக் குறையும் இல்லாமல் சீர் வரிசைகளால் புகுந்த வீட்டை நிறைத்தார்கள். பாமாவின் அன்னை மரகதம்மாவிற்கு மகளைப் பிரியும் ஏக்கம் மட்டும்தான் இருந்தது. மூன்று மருமகள்களில் பாமா மட்டுமே பட்டதாரி என்று எல்லோரிடமும் பெருமைபட்டுக் கொண்டாள் மாமியார். கூட்டுக் குடும்பம்தான் ஆனால் சந்தோஷத்திற்குக் குறைவே இல்லை. மாமனார் ஓய்வு பெற்ற தாசில்தார் .கணவன் பரந்தாமன் பாமாவிற்கேற்ற அழகும், நல்ல குணமும் கொண்டிருந்தான். மருந்தாளுநர் பட்டப்படிப்பு முடித்திருந்தான் எங்கும் வேலை செய்ய விரும்பாமல் சொந்தமாகப் பெரிய மருந்துக் கடை வைத்திருந்தான்.
பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்ததால் எப்போதும் நல்ல வியாபரம். அதோடு பல மருத்தவர்கள் இங்கு வாங்கும்படி பரிந்துரைக்க ஒப்பந்தமும் போட்டிருந்தான்.
கடையில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் வேலை செய்தனர். காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து வரை கடை திறந்திருக்கும். ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை. மதியம் பன்னிரெண்டு மணிக்கு உணவருந்தி விட்டு ஒரு மணிக்கு அவனது தந்தை கடைக்கு வருவார், இவன் வீட்டிற்குச் சென்று உணவருந்தி விட்டு நான்கு மணிக்குதான் வரவேண்டும் இது தந்தையின் அன்புக் கட்டளை. கணவனுக்குப் பறிமாறிவிட்டு பாமா வந்தபின் பெண்கள் நான்கு பேரும் சிரிப்பும், குதூகலமுமாய் உணவருந்துவர். அதன் பின் ஓய்வுதான். மனைவியோடு பேசிக் கொண்டிருந்து விட்டு கடைக்குச் செல்பவன் வீடு திரும்ப இரவு பத்தரை ஆகிவிடும். முல்லை அரும்புகள் வரவு அதிகமில்லாத மாதங்களில் கூட மாமனார் அதிக விலை தந்தாவது அரும்புகள் வாங்கி வந்து விடுவார். நான்கு மணிக்கு மூவரும் அமர்ந்து மளமளவென கட்டி முடித்து விடுவர். கணவரின் பூஜைக்கு கொஞ்சம் வைத்து விட்டு மருமகள்களுக்குத் தானே .தலைவாரி பூ வைத்து விடுவாள் மாமியார். நல்ல புதுப் படங்கள் வந்திருந்தால் பெண்கள் நால்வரும் காரில் சென்று பார்த்து வர அனுமதி தருவார் குடும்பத் தலைவர். இது போக ஞாயிற்றுக் கிழமைகளில் அவரவர் மனைவி பிள்ளைகளோடு வெளியில் சென்று வர மூன்று கார்கள் இருந்தன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் குடும்பத்தின் ஒற்றுமை, குதூகலம் கண்டு பாராட்டியவர்களும் இருந்தார்கள். பொறாமைப் பட்டவர்களும் இருந்தார்கள்.
‘அக்கா சாப்பிட வரியா,’ நினைவு துண்டிக்கப்பட்டுப் பார்த்தாள் பாமா. உனக்குப் பிடிச்ச தக்காளிச் சட்டினி செஞ்சிருக்கேன் என்றாள் மலர். நேரம் ஏழு ஆகிவிட்டிருந்தது. மலரும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப் போகவேண்டும். சரி என்று எழுந்து சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள் பாமா. மலருக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஒடிசலான உடல், நிறம் கருப்பு என்றாலும், பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் அகன்ற விழிகள், கருநாகமாய் நீண்ட பின்னல், பளீரென்ற பல்வரிசை, இனிய குணம், முகத்தில் நிரந்தரமாய் குடிபுகுந்திருக்கும் புன்னகை.தேனீயின் சுறுசுறுப்பு. இந்த வீட்டில் பதினைந்து ஆண்டுகளாய் வேலை பார்க்கிறாள். . நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இவளது பணிகள் இருக்கும். அன்பான அக்கரையான பேச்சு, நிறைவான மனம். எத்தனையோ வீடுகளில் இவள் விரும்பும் சம்பளம் தருவதாக அழைத்தும் இவள் அதையெல்லாம் மறுத்து விட்டாள். இது தவிர இன்னும் ஒரு வயதான தம்பதியர் இல்லத்தில் பகல் உணவு மட்டும் சமைக்கப் போகிறாள். அங்கு ஏற்கெனவே உள்ள பெண்மணி காலை மாலை .பார்த்துக் கொள்வாள்
தனக்கும் தன் இரண்டு பெண்களுக்கும் சேர்த்து இட்டிலியை ஒரு தூக்கில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். மலரின் கைப்பக்குவம் அலாதியானது. கடமைக்குச் செய்யாமல் விரும்பி தன் நேசத்தையும் சேர்த்துச் சமைப்பதால்தான் இத்தனை சுவையோ என்று வியந்தாள் பாமா ஹாலில் வந்து அமர்ந்தாள், தோட்டத்தில் இப்போது நல்ல வெயில் , திரும்பவும் பன்னிரெண்டு மணிக்கு வருவாள் மலர்.ஒன்றரை அல்லது இரண்டு மணிக்கு இருவரும் சேர்ந்து உணவு உண்பர். அதற்குப் பின்னர் ஏழுமணிக்கு இரவிற்காக தோசையோ, சப்பாத்தியோ செய்து வைத்துவிட்டுக் கிளம்பி விடுவாள் மலர். இதுதான் அவளுடைய நாள் அட்டவணை.
. வெற்றிலைக் கொடியில் வெற்றிலை பறிக்க வந்த பக்கத்து வீட்டு ஆசாரியம்மா அரைமணி நேரம் தன் மருமகளின் புராணம் பேசிவிட்டுதான் போனாள். பாமா தன் மாமியாரை நினைத்தாள். அமைதியான குணம், அதிராத பேச்சு, முகத்தில் கோபம் ஒருநாளும் எட்டிப் பார்த்ததில்லை அந்த ஒருநாள் தவிர. மாமனார் கண்டிப்பானவர். நீதி நேர்மை பார்ப்பவர், பொய் பித்தலாட்டம் அறவே பிடிக்காது. வேலையாட்களிடம் கண்டிப்பும் இருக்கும், கருணையும் அதிகமாய் காட்டுவார். பிள்ளைகளையும் சரியாகவே வளர்த்திருந்தார். பரந்தாமன் அம்மாவைப் போல அமைதியானவன். பாமாவின்மேல் உயிராக இருந்தான். முதல் குழந்தைப் பேற்றுக்கு அம்மா வீட்டுக்கு வந்தாள் பாமா. அதற்குப் பின் இரண்டாவது மூன்றாவது ஏன் நான்காவது பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் கடலூருக்கு அனுப்பவே இல்லை,அங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் பரந்தாமன். அவளையும் குழந்தைகளையும் பிரிந்திருப்பது முடியாத ஒன்று என்பான்.எட்டு வருடங்களில் முதலும் நான்காவதும் ஆண் ,இரண்டாவதும் மூன்றாவதும் பெண் குழந்தைகள். சேர்ந்தாற்போல் பத்து நாட்கள் கூட வந்து பிறந்தகத்தில் தங்குவதில்லை பாமா. சின்னவனுக்கு முதல் பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடினார்கள். அதற்கு வந்திருந்த பாமாவின் பெரிய அண்ணன், ‘ அம்மாவுக்கும் வயசாயிட்டே போகுது, முன்ன மாதிரி இல்ல, அடிக்கடி மயக்கம் வருது, நீ ஒரு பத்து நாள் வந்து தங்கக் கூடாதாம்மா?’என்றார்.
அந்த டிசம்பர் மாத விடுமுறையில் மனைவியையும் பிள்ளைகளையும் கடலூருக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றான் பரந்தாமன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன்களின் குடும்பத்தோடும் அம்மாவுடனும் இருந்தது சந்தோஷமாக இருந்தது, கோவில் கடற்கரை, சினிமா என்று நாள் ஓடியது. இவர்களை அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லியிருந்த பரந்தாமன் புத்தாண்டு என்பதால் நேரமில்லை என்று சொல்லி காரை அனுப்பியிருந்தான். அன்று காலையில் புறப்பட்டு மதியம் பன்னிரெண்டு மணிக்கு செஞ்சி வந்து சேர்ந்தார்கள். மாமன் மாமி முகம் சிரித்தாலும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் பாமா. மதியம் ஒருமணிக்கு வந்த பரந்தாமன் குழந்தைகளைக் கொஞ்சிவிட்டு இவளிடம் மாமியின் நலம் விசாரித்து விட்டு அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வேலை என்று சொல்லிச் சென்று விட்டான். பெண்களிடமும் உணவருந்தும்போது பழைய குதூகலம் இல்லை. அரும்புகளும் கட்டுவதற்கு வாங்கி வந்திருக்கவில்லை. இரவு வரும் கணவனிடம் என்னவென்று கேட்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
பத்தரைக்கு வந்தவன் இரண்டு தோசையோடு போதும் பசிக்கவில்லை என்று படுக்கப் போனான்.
பத்துநாள் பிரிவு, எத்தனை கதைகள் சொல்லவேண்டுமென்று நினைத்திருந்தாள்,
மூன்று பிள்ளைகளும் வழக்கம்போல் பாட்டியுடன் படுக்கச் சென்றனர். பிள்ளகளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு,’மாமி என்ன ஆச்சு, எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கற மாதிரி தோணுது’
‘ ஒண்ணுமில்ல பாமா, நீ படித்த பெண், தைரியமா இருக்கணும், சாதிக்கணும், மனச போட்டு அலட்டிக்காத போய் தூங்கு’ என்றாள் மாமி.
குழப்பம் இன்னும் அதிகமாக அறைக்கு வந்தாள் கணவனிடம் கேட்கலாம் என்று, ஆனால் ஏமாற்றமே காத்திருந்தது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான். அன்று இரவு முழுவதும் இவளுக்குத் தூக்கமே இல்லை, எப்போது தூங்கினாள் என்றே தெரியாது.எப்போதும் போலவே பரந்தாமன் ஒன்பது மணிக்கு கடைக்குப் புறப்பட்டுச் சென்றான். இவளுடன் பேசுவதை ஏனோ தவிர்ப்பது போலவே இவளுக்குத் தோன்றியது. சமையல்கார அம்மா மதிய உணவிற்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டே,’கல்லூர்ல அம்மா,அண்ணன், அண்ணி புள்ளீங்க எல்லாம் நல்லா இருக்காங்களா கண்ணு?’ என்றாள். ‘நல்லா இருக்காங்க ‘ என்று சொல்லிவிட்டு,’ மாமாக்கு காபியா நான் கொண்டு போய் தரேன்’ என்று வாங்கிக் கொண்டு மாடிப்படியேறினாள். அறைக் கதவு மூடியிருந்தது.உள்ளே பேச்சுக்குரல்,
‘ கல்யாணி பாமாகிட்ட எதுவும் சொன்னியா?’ ‘இல்லங்க, அவ மனசு ஒடைஞ்சிடுவா’
‘ அந்த கழுதைய வேலைய விட்டு நான் நிறுத்திட்டேன், இவன் மறுபடியும் அழைச்சுகிட்டான், ‘
‘ நீங்க நல்லதனமா புத்தி சொன்னீங்களா’?
‘நான் சொல்லாமலா இருப்பேன், எதுவும் ஏற மாட்டேங்குது.’
இவள் காபியைத் தராமலே கீழே இறங்கினாள்.
அன்று மதியம் சாப்பாடு கடைக்குப் போனது, இரவு வந்தவன் முகம் பார்த்துப் பேசாமலே உறங்கிப் போனான்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும் பத்துமணிபோல் கடையில் வேலை என்று சொல்லிச் சென்றான். கடைப் பையன் வந்து அண்ணன் சாயந்திரம் வருவார் என்று சொல்லிப் போனான். இவள் மூன்று மணிக்கு சமையல்கார அம்மாவிடம் வெளியில் போவதைச் சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து கடைக்கு வந்தாள். கடையின் சிறிய கதவு மட்டும் திறந்திருந்தது. உள் அறையில் சிரிப்பும், பேச்சும் ,
இவள் உள்ளே வந்து,’ என்னங்க ‘ என்றாள். அவசரமாக வெளியில் வந்தான் பரந்தாமன், ‘உள்ளே யாரு’ என்று அறையில் நுழைந்தாள் பாமா. அங்கே கலைந்த தலையோடு சேலையைச் சரி செய்து கொண்டிருந்தாள் கௌரி.
வானம் இடிந்து தலையில் விழுந்ததா, பூமி பிளந்து கீழே இறங்குகிறதா, ஒட்டு மொத்த இரத்தமும் தலையில் வந்து மோதியதா தலை கிறுகிறுவென்று சுற்ற கதவில் சாய்ந்தாள் பாமா. அவளைத் தாண்டி வந்து பரந்தாமன் பின்னால் நின்று கொண்டு பயந்தவள் போல் அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள் கௌரி.
ஒன்றுமே நடவாததுபோல் ,’ நான்தான் சாயந்திரம் வருகிறேன் என்று சொல்லி அனுப்பினேனே’ என்றான். தெளிந்து நிமிர்ந்த பாமா ,’ எத்தனை நாளாய் இந்த நாடகம்? ‘ இதில என்ன தப்பு , அவனவன் ஏதேதோ செய்கிறான். ‘
‘மலைபோல நம்பினேனே ஏமாத்திட்டீங்க’
‘வீட்டில எல்லாருக்கும் தெரியும், உனக்கு சொல்லியிருப்பாங்கனு நெனச்சேன்.’
‘ நான்கு குழந்தைகளின் தகப்பன் செய்யற வேலையா இது?’
‘இதோ பாரு பாமா, சும்மா எனக்கு புத்தி சொல்லாதே’
‘ என்ன செய்யணும்?’
‘ ஆர்ப்பாட்டம் பண்ணாதே, ஒரு நல்ல நாளில் கௌரிய கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிகிட்டு வந்திடுவேன்’
‘ அப்போ நான்’
‘ நீ எப்பவும் போல இரு புரிஞ்சுக்கோ, ப்ராக்டிகலா யோசி’
என்ன ஒரு ஆணவம், ஆணாதிக்கத்தின் உச்சம், பதில் சொல்ல முடியாது நின்றவளை, உள்ளே வந்த மாமி தாங்கிக் கொள்ள, ‘பாமா வா நாம நம்ம வீட்டுக்குப் போகலாம்.
திமிரெல்லாம் ஒருநாள் அடங்கும் நீயே அதைப் பார்ப்பாய்’
என்று அழைத்துச் சென்றார் மாமனார். இவளைக் காரில் ஏற்றி விட்டு திரும்பவும் கடைக்குள் வந்தவர்கள், ‘ நீயெல்லாம் ஒரு மனுஷனா டா,’ விதவைக்கு வாழ்வு தரீங்களோ?
‘உன்னைப் பெற்ற பாவத்துக்கு கடைய விடறேன். எப்பவும் எங்களத் தேடி வராதே,’
‘ உன்னப் பெத்த வயிறு எரியுதுடா, மகாலஷ்மி மாதிரி பெண்டாட்டிக்கு,பச்சிளம் குழந்தைகளுக்குத் துரோகம் செய்ற நீ நல்லாவே இருக்க மாட்ட,’
‘ கல்யாணி வா போகலாம்’
‘அடிப்பாவி, பாவம்னு வேல போட்டுத் தந்தா அழகான குடும்பத்த கலைச்சுட்டியே,மோசக்காரி’
அடுத்த ஆறு மாதங்களில் இருந்த நிலபுலன்கள், வீடுகள் என்று எல்லாவற்றையும் விற்று இரண்டு மகன்களுக்கும் பிரித்துத் தந்துவிட்டு திருவண்ணாமலையில் ஒரு வீட்டை வாங்கி இவர்களை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார் மாமனார். இரண்டு பிள்ளைகளும் மாற்றல் வாங்கிக் கொண்டு பெங்களூருக்கும், திருவனந்தபுரத்திற்கும் சென்றனர்.
முப்பது வருடங்கள் ஓடிவிட்டது. பெரியவன் நீதிபதியாக இருக்கிறான் மதுரையில். மற்ற மூவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். நான்கு பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்கிய தெய்வங்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து ஏழு ஆண்டுகளாகிறது.இரண்டு வருடத்திற்கு முன் ஒரு நாள் கோயிலுக்கு ஆசாரி வீட்டம்மாவுடன் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்ததில் பாமாவிற்கு இடுப்பு எலும்பு முறிந்து போனது. இப்போது நடமாட ஆரம்பித்திருக்கிறாள். பிள்ளைகள் வற்புறுத்தி அழைத்தும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து வருகிறேன் என்று சொல்லிருக்கிறாள்.
எந்த நாளை மறந்தாலும் இந்த நாளை மட்டும் இவள் மறப்பது இல்லை, நம்பிக்கை துரோகம் உச்சம் தொட்ட நாள், கண்கண்ட தெய்வங்களின் தரிசனம் கிடைத்த நாள். மருமகளை மகளாக மீட்டுக் கொண்ட நாள் ,அந்த நாள் இந்த நாள்தான் அது இன்றுதான். பாமாவின் கண்களில் நிறைந்த நீர்ப் பெருக்கு, பனித்தூவலாய்க் கன்னங்களில் சிதறியது.