ஆர் வத்ஸலா

நீ வருவாய் என தெரியும்
நீ கிளம்பி போய்
ஆண்டுகள் ஆகி விட்டன
அதற்கு கணக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை
நான் எப்போதும் போல்
பணி புரிகிறேன்
சமைக்கிறேன்
சாப்பிடுகிறேன்
தூங்குகிறேன்
பெரும்பாலான இரவுகள்
சில சமயம் அவற்றில்
நீ கூட வருகிறாய்
அதே சுருட்டை முடியும்
புன்னகை நிறைந்த
முகமுமாய்
பேசத் தான் நேரம் இருப்பதில்லை
விடிந்து விடுகிறது
நீ வருவாய் எனத் தெரியும்
சாவதற்கு முன்
வந்தால் நல்லது
கொஞ்சம் பழைய விஷயங்களை
பேசி சிரிக்கலாம்