[எஸ்ஸார்சியின் ”ஞானவாபி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு.
வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு முன்பணமும் தந்துவிட்டுக் கொரானோ வந்ததால் வராதவர், வீட்டை விற்பனை செய்ய வரும் தரகரின் மறுபக்கம், வீட்டுப் பூட்டைத் திறக்க வந்த பாய் வேலை செய்யாததால் காசு வாங்க மறுப்பது, குடித்தனம் வருபவரின் தொல்லைகள், குடிநீர்க் குழாயில் மோட்டார் போட்டுத் தண்ணீர் திருடுவது, திருமணநாள் வரை வந்து நின்று போகும் திருமணம், கவிதைத்தொகுப்பு போடுவதன் சங்கடங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
வைணவத்தில் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உண்டு. அவற்றில் வடகலைக்காரர்கள் மிகவும் ஆசாரம் மிக்கவர்கள். இதைப் போகிற போக்கில் சொல்கிறது “ஞானவாபி” சிறுகதை. ஞானவாபி என்பது பிராமணர்கள் அவர்களுக்கென ஏற்படுத்திக் கொண்ட கருமகாரியம் செய்யும் இடம். ஆனால் இக்கதை தகனம் செய்யும் இடத்தில் நடக்கிறது. வடகலைக்காரர்கள் வெட்டியான்களைச் சவத்தின் அருகில் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

அதனால் பிரேதம் சரியாக வேகவில்லை. கேவி சார் என்பவர் கண்டுபிடித்து வெட்டியான்களை வைத்து சாவு வீட்டுக்குத் தெரியாமல் சரி செய்கிறார், கேவி சாருக்காக எழுதப்பட்ட கதை இது. அவரும் அய்யருதான். ஆனால் வெட்டியான்களோடு வாழ்பவர்.
இப்படி எல்லாக் கதைகளுமே மனத்தில் இடம் பிடிக்கும் வண்ணம் உள்ளன. அந்தந்தக் கதைகளும் அவற்றுக் கேற்ற எளிமையான நடையை மேற்கொண்டுள்ளன.
பெண் அழைப்பு முடிந்தவுடன் மணப்பெண்ணும் அவள் அம்மாவும் யாரிடத்தும் சொல்லாமல் எங்கோ சென்றுவிடத் திருமணம் நின்றுவிடுகிறது “கேட்டிலும் துணிந்து நில் “ சிறுகதையில். மாப்பிள்ளை மனம் கலங்காமல் அதே மேடையில் தன் அப்பாவின் அறுபதாம் கல்யாணத்தைத் தன் செலவில் நடத்தி விடுகிறான். அவனின் நல்ல மன் போற்றப்படவேண்டியதுதான். ஆனால் ஓடிப்போன மணப்பெண், அவளது அம்மா ஆகியோரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது
தொன்மங்களை அவற்றின் போக்கைச் சிதைக்காமல் கட்டுடைத்து எழுதவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். ஆனால் எஸ்ஸார்சி போக்கையே மாற்றுகிறார். இராமனின் ஆணைப்படி சீதையைக் காட்டில் கொண்டுபோய் விட்ட இலக்குவன் மனம் வெறுத்துப் பச்சைமலை நோக்கிப் பயணம் செய்வதாக “யாரே பெரியார்” எனும் கதை சொல்கிறது.
வாசிக்க வாசிக்க இந்தக் கதைகள் நமக்கு நெருக்கமாக வந்து மனத்தில் அமர்ந்து இம்சைப்படுத்துகின்றன. இதுவே இத்தொகுப்பின் வெற்றி.
[ஞானவாபி—சிறுகதைத் தொகுப்பு—எஸ்ஸார்சி—வெளியீடு: சந்தியா பதிப்பகம்; சென்னை 600 083. 044-2489 6979—பக்: 104; விலை;ரூ 120]