வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++
அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]
சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு
இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்
நேரம் : பகல் வேளை
பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.
[ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.]
புருனோ: [ மோனிகாவைப் பார்த்து] எந்த ஓர் அழகிய மாது கர்வ மின்றி, எதை எப்போது எங்கே சொல்ல வேண்டும் என்று அறிந்தவளோ, சபையில் உரக்கப் பேசாதளோ, ஏழ்மையில் துன்புறாதவளோ, பகட்டுப் பட்டாடை, மினுக்கு ஆபரணம் அணியாதவளோ, விடுதலை உணர்வு உள்ளவளோ, புண்பட்ட உணர்வை மென்மையாகக் காட்டுபளோ, சினத்தை நழுவச் செய்பவளோ, விலைமதிப்புள்ளவற்றை அற்பச் செயலுக்காக இழக்கா திருப்பளோ, சிந்திக்கும் மாதாய், ஆனால் தனது மனதில் தோன்றிய எண்ணமதை வெளியில் காட்டிக் கொள்ளாதவளாய் இருப்பவள் எவளோ அவளைத் தான் நான் மெய்யான மாது என்று சொல்வேன். அப்படி பெண் ஒருத்தி இருந்தால்…… [முடிக்காமல் தயங்குகிறான்]
மோனிகா: அவளை எதற்கு வைத்துக் கொள்வாய் ?
புருனோ: பேபிகளைப் பேணிக்கொள்ளும் வீட்டுக்காரியாய் அமர்த்திக் கொள்வேன்.
மோனிகா: [சிரித்துக் கொண்டு எதிர்ப்புடன்] ஆழமில்லா பேச்சு, மூடத் தனமான முடிவு.
காஸ்ஸியோ: அழுத்தமாய் பேசுகிறார் மேடம். அவர் வேதாந்தம் பேசாமல் போர்ப் படைச் சேவகன் போல் நடந்து கொள்கிறார்.
புருனோ: [மெதுவாக] காஸ்ஸியோ பாராட்டு மோனிகாவை. முத்தமிடு அவள் பளிங்கு கரத்தை. அவள் கோடியில் ஒருத்தி ! உனக்குத் தான் ஏற்றவள் !
மோனா: [சினந்து] போதும் நிறுத்து புருனோ !
[தூரத்தில் சங்க நாதம் ஊதும் எதிரொலி] [ஒத்தல்லோ தன் சுற்றம் சூழ நெருங்கி வருகிறான்.]
மோனிகா: என் இனிய ஒத்தல்லோ [முன்னால் வேகமாகச் செல்கிறாள் புன்முறுவல் பூண்டு]
ஒத்தல்லோ: என்னருமைக் கண்ணே மோனிகா [ஓடி வந்து இறுகத் தழுவிக் கொள்கிறான்] புயல் அடிக்கும் இந்த போர்க் களத்தில் என் இதயத்தில் அமைதி நிலவ, இன்பம் பொங்க நீ வந்தாய் கண்ணே. நான் எதிர்பாராத இனிய சந்திப்பு இது. போர்க் கார்முகில் இடையே தோன்றும் மின்னல் போல் என் நெஞ்சைத் தீண்டினாய் கண்ணே. எதிர்காலம் மாறப் போவது தெரியுது எனக்கு.
மோனிகா: நம் எதிர்கால இன்பப் பயணம் துவங்க சொர்க்க வாசல் திறக்கட்டும். நமது இல்லற வாழ்வு செழிக்க நாம் ஒன்றாய் இணைந்து வாழ வாய்ப்புகள் பெருகட்டும்.
ஒத்தல்லோ: தெய்வீக கடவுள் நம்மை ஆசீர்வதிக் கட்டும். என்னால் பேச முடியவில்லை. [திரும்பத்திரும்ப மோனிகாவை முத்தமிடுகிறான்] நான் நினைத்துப் பார்க்காத தெய்வீக நிகழ்ச்சி இது.
புருனோ: [ஒத்தல்லோவும் மோனிகாவும் பித்தர் போல் தழுவிக் கொண்டு முத்தமிட்டு பரவசம் அடைவதைத் தாங்க முடியாமல் இங்கும் அங்கும் நடக்கிறான்]. [மனத்துக்குள்] உன் இன்ப காலம் ஆரம்பம் என்று கனவு காணாதே. இதோ உன்னைப் பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறேன். என் உயர் பதவியைப் பிடுங்கி, தகுதி யற்றவன் ஒருவனுக்கு எப்படி நீ தரலாம் ? உன் முடிவு காலம் வந்து விட்டது !
ஒத்தல்லோ: [மோனிகாவுடன்] கோட்டைக்குள் செல்வோம். ஆடுவோம் பாடுவோம், குடிப்போம், கூடுவோம். [படைக் காவலருடன்] நல்ல செய்தி. போர் நின்று விட்டது. புயலால் போரை நிறுத்தமானது. [மோனிகாவிடம்] கண்ணே சைப்பிரஸ் மக்கள் உன்னைப் போற்றுவர். இன்ப புரி இது. [புருனோவிடம்] கடல்கரையில் வந்துள்ள என் பெட்டி படுக்கைகளை எடுத்து வா. ஷைப்பிரஸ் உல்லாச புரியில் உண்டு களித்திருப்போம்.
[ஒத்தல்லோவும், மோனிகாவும் வெளியே செல்கிறார்]
[தொடரும்]
- மூப்பு
- இழை
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3
- பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்
- அச்சம்
- நாவல் தினை அத்தியாயம் பத்து CE 300
- இலக்கியப்பூக்கள் 277
- ஆசை 1
- ஆசை 2
- சிறு ஆசை
- குற்றமும், தண்டனையும்
- பட்டறிவின் பகிர்வுகள் – எஸ்ஸார்சியின் ”ஞானவாபி”