வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது.
குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல சுற்று வட்டார கிராமங்களுக்கு தொல்லை உண்டு பண்ணும் சங்கதி வேறேதுமிலலை. நீர்க் கசிவில் இழைந்து வரும் விஷப் பிராணிகள் வீடுகளுக்குள் புகுந்து கடித்தும் கொடுக்கு கொண்டு கொட்டியும் துன்பம் தரும்.
தேள்களை இழிந்த விஷப் பிராணிகளாகக் குறிப்பிட்டிருப்பதை குயிலி படித்திருக்கிறாள். தேள்களோடு ஜலமண்டலி, பூரான், செவியன் என்று ஊரும் பிராணிகள் குகைக்குள் பாறை இடுக்கில் பதுங்கி இருந்து மழை ஈரம் மேலே படிந்து அசௌகரியம் உண்டாக்க மெல்ல மேல்பரப்புக்கு வந்து சேரும்.
அங்கே சதா இருள்வெளியைக் கண்காணித்துக் கொண்டும் எதிரி என்று ஊகித்து அடுத்த அசைவை எடுக்கத் தயாராகப் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டும் உயிர் பிழைக்க உபாயம் தேடிக் கொண்டும் இருக்கும் இழை ஜந்துக்களைத் தவிர்க்கக் கால்களில் கனத்த தோல் செருப்புகளிட்டு இருந்தனர் இருவரும்.
வானி குரல் அரை இருட்டுக்கு நடுவே தெளிவாகக் கேட்டது –எட்டுக் கால்கள், ஒவ்வொரு காலும் மயிர்க் காட்டுக்கு நடுவே பொதிந்தது, நடுவில் கோழிமுட்டை அளவு இரு கண்கள், பெரிய பற்களால் நிரம்பிய வாய், காக்கி நிறம். இது என்ன பிராணி?
குயிலி சற்று யோசித்து விட்டு தெரியவில்லை, ஏதோ சிலந்திப் பூச்சி போல் உள்ளது என்றாள்.
அப்படியா, அந்தப் பூச்சி உன் முதுகுக்கு மேலே உட்கார்ந்து என்னையே பார்க்கிறது. அசையாமல் இரு.
சொல்லியபடியே கையில் பிடித்திருந்த நீண்ட லேசர் குச்சியால் சிலந்திமேல் தொட்டுக் கீழே வீழ்த்தி அதைப் பற்றி எரியச் செய்தாள்.
வானம்பாடியின் காலை ஏதோ எஃகுக் கயறு கொண்டு கட்டி மேலே இழுப்பதாக அவளுக்குத் தோன்றியது.
குயிலி, உன் பின்பார்வையைத் தொடங்கு என்றபோதே சிலந்தி வலை ஒன்றில் கால் மாட்டக் குப்புற விழுந்த வானம்பாடியை வலையின் மையத்தில் கண் இமைக்காமல் பார்த்தபடி பிரம்மாண்டமான கருஞ்சிலந்தி ஒன்று இரை வரும் ஆர்வத்தில் எச்சில் வடித்தபடி இருந்தது.
குயிலி தன் கையில் வைத்திருந்த சிறு கட்டையை இழுத்து நீளமாக்கி அதை லேசர் துப்பாக்கியாக்கி கருஞ்சிலந்தியை நோக்கி இலக்கு வைத்துச் சுட்டிட, கருப்புப் புகையும் கரியமில வாயுப் பெருக்குமாக துர்நாற்றத்தோடு அது எரிந்தது. தேளர் அரசில் நறுமணமாக அது கருதப்படுவது நினைவு வரக் குயிலியும் வானம்பாடியும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.
பகைவனை எரிப்பாய் என் நெஞ்சே பகைவனை எரிப்பாய் என்று பாடி இருவரும் கைகோர்த்து நடந்தனர். பின்னால் பார்க்க அந்த பிரம்மாண்டமான சிலந்தி வலை பற்றி எரிந்து கொண்டிருந்தது.
எதிரே தண்ணீர் கசியும் வாடை. வெளிச்சம் கசியும் குகைப் பரப்பு அதன் பின் வழியில்லை என்பதுபோல் பாறை அடைத்துக் கிடந்தது.
பாறைகள் நடுவில் மருத்துவர் மண்புழு போல் மயங்கிச் சுருண்டிருக்க, அவர் கழுத்தில் ஒன்றும் காலின் ஆடுசதையில் ஒன்றுமாகச் சிலந்திகளுமாக வைத்திய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தன. காதில் ஆபரணம் பூட்டியதுபோல் சிவந்து காலின்றி நகரும் மரவட்டை ஒன்று காதுமடலில் உடல் உறுப்பு போல ஒட்டியிருந்தது.
அவசரமும் வேகமுமாகச் செயல்பட்டார்கள் இரண்டு பெண்களும். சிலந்திகளையும் மரவட்டையையும் உடனே அழித்தபிறகு மருத்துவரின் காயங்களில் கசிந்து வந்த குருதியைத் துடைத்து ரத்தப் போக்கை நிறுத்தினார்கள்.
காலவெளியில் பயணப்பட மருத்துவரைத் தயார்ப்படுத்த வேண்டும். வேகம் வெப்பத்தைப் பிறப்பிக்கும். வெப்பம் சகல மாசையும் அழிக்கக் கூடியது. எல்லாக் கசடும் நீக்கக் கூடியது. வெளியே வெப்பமும் உள்ளே குளிருமாக நிலைத்த காலப் படகில் மருத்துவரின் உடலும் அதில் சிறைப்பிடித்த அவர் உயிரும் அப்படியே இந்த மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஐம்பதாவது நூற்றாண்டில் போய்ச் சேர வேண்டும்.
இரண்டு பெண்களும் அசாத்திய வலிமையோடு மருத்துவரைக் குகைக்கு வெளியே தூக்கிக் கொண்டு வந்தார்கள். எந்த விதமான தொழில்நுட்ப மேன்மையும் பார்வையில் படாது தரையில் வைத்த மரப்பெட்டி போல் அவர்கள் திரும்ப வேண்டிய வாகனம் காத்திருந்தது.
அடுத்த வினாடி ஒரு ஒளியாண்டு கடந்து காலத்தினூடே வேகம் கொண்டார்கள் அவர்கள். ஒரு இருமல் சத்தத்தோடு கண்விழித்துக் கொண்டார் மருத்துவர் நீலர். குயிலி அவரை அன்போடு நோக்கிச் சிரித்தபடி பழம் உண்கிறீர்களா எனக் கேட்டாள்.
அதெல்லாம் இருக்கட்டும் நாம் வழுக்குப் பாறை குகைக்குள் என்ன செய்கிறோம்?
அவர் குழம்பிய பார்வையோடு எழுந்து நிற்க முனைந்தார். தள்ளாடினாலும் தரையில் விழாதபடி தாங்கிப் பிடித்து இடுப்பைச் சுற்றி இறுக்கமாக ஒரு மான் தோலால் அல்லது கீரித் தோலால் செய்த பட்டை இறுகக் கட்டியிருந்தது.
குயிலி, வானம்பாடி, எங்கே போகிறோம்? வயிற்றைக் கட்டிப் பயணம் போவது எங்கே? அவர் திரும்பத் திரும்பக் கேட்க இரு பெண்களும் புன்சிரிப்பைத்தான் மறுமொழியாக அளித்தார்கள்.
வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள். நான் அற்ப சங்கைக்கு இறங்கிக் குத்தவைக்க வேண்டும்.
அவர் குயிலியின் கையை அசைத்துக் கவனமீர்த்துக் கேட்டார்.
வானம்பாடி கூறினாள் – அது ஒண்ணும் கடினமானதில்லை. இன்னும் ஒரு பத்து நிமிடம் பொறுத்தால் சௌகரியமாகக் கழித்து வரலாம்.
வானம்பாடி சொல்ல மருத்துவர் சற்றுச் சினந்து குரலுயர்த்தினார் – நீங்கள் இருவரும் யார்? யார் என்று கேட்கிறேன். வடநாட்டில் இருந்து மருத்துவம் கற்றுப்போக வந்தவர்கள் என்றது பொய்யாக இருக்கும். என்னை எங்கோ கவர்ந்து போகிறீர்கள். வாகனத்தை நிறுத்துங்கள். நான் இறங்கி என் வழியே போகிறேன், நீங்கள் வினோத ரத சஞ்சாரம் எல்லாம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.
அவர் மறுபடி எழுந்தபோது இடுப்பில் கட்டிய தோல்பட்டி இல்லாமல் போக, நடக்க முடிந்தது அவரால். நாலடி நடந்ததும் ஒரு கதவு தட்டுப்பட்டது,
சரி நான் இறங்கிக் கொள்கிறேன். நீங்கள் பத்திரமாகப் பயணம் செய்து ஊர் திரும்புங்கள். யாராவது வரும்போது போய்ச் சேர்ந்ததைச் சொல்லியனுப்புங்கள்.
கடகடவென்று பேசியபடி மூடியிருந்த கதவைத் திறக்க முற்பட வானம்பாடி அமைதியாகச் சொன்னாள் – அந்தக் கதவு கணினி அறைக்குத் திறக்கும்.
கதவிலேயே சாய்ந்து உட்கார்ந்தார். அவர் புலம்பியதன் சாரமிது –
யட்சினிப் பிசாசுகளா நீங்கள் இருவரும். ஏன் என்னைப் போன்ற அரைக் கிழவனைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்? ஆயுசு நீட்டிக்கும் மருந்து வேண்டுமானால் அது பொய்யான விஷயமாகி விட்டதே பார்க்கவில்லையா.
சஞ்சீவனி என்பது தோல்வியின் மறுபெயர். இன்று மட்டும் இல்லை. கடந்த ஐநூறு ஆண்டில் மறுபடி தோற்றது அது. சாகா மருந்து அருந்தி சோதனைக்கு ஆளான முப்பது பேரில் சிலர் பறந்து போயே போனார்கள். எனக்கு, சஞ்சீவனிக்குத் தோல்விதானே.
நிறையப் பேசியதால் வயிறு வலிப்பதாகத் தோன்றக் கழிவறைக் கதவை அவர் திறக்க, உள்ளே போய்வர அடுத்த பத்து நிமிடமானது.
அண்ணாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கலாம் என்றாள் குயிலி.
பொறு. செய்ய வேண்டிய எல்லாம் செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக ஒரு மன்னிப்பு கேட்கலாம் என்றாள் வானம்பாடி.
வெளியே திறக்கும் கதவு இதற்கு அப்பால் இருக்கும். நானே தேடிப் போய்க் கொள்கிறேன்.
அவர் அவசரமாக நடக்க முற்பட இந்த இரண்டு பெண்களும் நீளமான லேசர் துப்பாக்கிகளால் மருத்துவரை செயலிழக்கச் செய்து தரையில் வீழ்த்தினார்கள். கை அசைக்க, படுக்கை அறை கூடியதாக அந்த அமைப்பு நீட்சி கண்டது.
மருத்துவரை மறுபடி சுமந்து படுக்கையில் படுக்க வைத்து அதிசர்க்கரை நீர் க்ளூக்கோஸ் சிறு ரத்தக்குழல் ஒன்றில் வாயில் கண்டு ஊசி கொண்டு குத்தித் திறந்து சொட்டுச் சொட்டாக மருத்துவர் உடலில் செலுத்தப்பட தேவையானதெல்லாம் செய்து முன்வசம் அவர்கள் இருக்கைக்குத் திரும்பினார்கள்.
சீரான ஓங்கார ஒலிக்கு நடுவே காலப் படகு நகர்ந்து கொண்டிருந்தது. எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளக் கையசைக்க சுவரும் டிஜிட்டல் அறிவிப்புமாகக் கண்ணில் பட்டது.
என்ன, இன்னமும் மூன்றாம் நூற்றாண்டில் தான் இருக்கிறோமா ஏன் இவ்வளவு தாமதம்?
இருவரும் மருகி ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, இந்தக் காலகட்டத்தில் நிறைய ஊர்திகள் காலப் பயணம் மேற்கொண்டிருப்பதால் கண்காணிப்பு அதிகமாக உள்ளது ஆகவே படகுகள் கண்காணிக்கப்பட்டுப் பயணம் தொடர நேரமாகிறது என்று அடுத்த சுவர் அறிவிப்பு சொன்னது.
அது சரிதான் என்றாள் வானம்பாடி குயிலியின் கூந்தலை வருடியபடி. வேண்டாம் வைத்தியர் பின்னால் இருக்கிறார் என்றாள் குயிலி.
அவர் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக் கண் விழிக்கப் போவதில்லை என்றபடி மறுபடி குயிலியை அணைத்து மனமின்றி பின்னர் விலகியிருந்தாள் மற்றையவள்.
ஏன் இத்தனை ஊர்திகள் காலப் பயணத்தில் ஒரே நேரத்தில் ஈடுபடக் காரணம் எனச் சுவரைக் கேட்டார்கள் அவர்கள். சற்று நேரம் அமைதியாக இருந்த சுவர் மறுபடி ஒளிர்ந்தது.
மற்ற பிரபஞ்சங்கள் நம் இந்த ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி தொடர்பாக மூன்றாம் நூற்றாண்டைத் தொட்டு மீண்டு வருவதைக் கொள்கை அடிப்படியில் ஆதரிக்கின்றன.
நம் பிரபஞ்சத்தில் சிறிதளவே உள்ள எதிர்ப்பாளர்களும், ஒரு சில எப்போதும் எதையும் யாரையும் விரோதிக்கும் சில மாற்றுப் பிரஞ்சங்களும் உங்கள் இருவரையும் உயிர் நீக்கி இந்தப் பயணம் தோல்வியுற முயன்று தோற்றதை நீங்கள் இருவரும் அறிவீர்கள்.
ஒரு முறை அந்த மருந்தை நாம் உருவாக்க உதவி செய்து உருவாக்கிப் பயன்படுத்திய பிறகு மூலிகை மருந்து உண்மையிலேயே சக்தி வாய்ந்ததா என்று பரிசோதனை செய்யும் வரை பல பிரபஞ்சங்கள் நம்மோடு இருக்கும்.
உங்கள் இருவருக்கும், மருத்துவருக்கும் காவல் பாதுகாப்பு அளிக்க அந்தந்த பிரபஞ்சங்கள் பங்கெடுக்கின்றன
மேலும், பாதுகாப்பாகப் பயணம் செய்ய உங்களுக்கு சகல கண்காணிப்பும் வழி நடத்தலும் தர பெருந்தேளரசர் உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பு என்றாலே தாமதம்தானே. பாதுகாப்பான பயணத்தை முடித்து வென்று வருக. சொல்லிவிட்டுச் சுவர் சும்மா இருந்தது.
குயிலி வானம்பாடியின் கையைத் தன் கரங்களிடையே குவித்தபடி மனதில் சொன்னது – இது அரசியல்ரீதியாகச் சரியாக மொழிதல் politically correct speaking.
இயற்பியல், வேதியியல், விலங்கியல் தொடர்பான ஆய்வுகள் நடக்கும்போது அடுத்த அடுத்த பிரபஞ்சங்கள் அந்த ஆய்வுகளை மறைவாகப் பிரதியாக்கித் தத்தம் பிரபஞ்சச் சூழலில் மறு ஆய்வு செய்தல் எப்போதும் நடப்பதுதான்.
ஆனால் அதை மறைமுக உதவி என்று குறிப்பிடுவது மறைமுக பந்தய முயற்சி தவிர வேறேதும் இல்லை.
வானம்பாடி கேட்டாள் -அப்போது மாற்றார் நம் பாதையை ஒட்டியும் வெட்டியும் காலப் பயணம் செய்வது பாதுகாப்பு அளிக்க இல்லை. நேரம் கனிந்து வந்தால் மறைமுகத் தாக்குதலுக்காக. அப்படித்தானே?
என் வாயில், மனதில் வார்த்தைகளைத் திணிக்கிறாயடி என்றபடி குயிலி நெருங்கி நின்று வானம்பாடியின் கண்ணுக்குள் நோக்கினாள்.
இப்போது எந்த நுற்றாண்டில் கடந்து போகிறோம்? குயிலி சுவரைக் கேட்க ஆறாம் நூற்றாண்டு கடந்து ஏழாவது நுழையப் போகிறோம் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது.
நம் காலப் படகுக்கு அருகே மற்ற கலங்கள் வருவதால் நமக்கு என்ன ஆகப் போகிறது என்று கேட்பாயென எதிர்பார்த்தேன். குயிலி சிரித்தபடி சொன்னாள்.
கேட்கத் தோன்றியது உண்மை. ஒவ்வொன்றையும் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் தெரியாமல் இவளை எப்படி இப்படியான முக்கிய திட்டங்களில் பங்கெடுக்க அனுப்பி வைக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவாய் என்று பயம். வானம்பாடி மொழிந்தாள்.
உனக்கு அப்படி பயம் என்றால் எனக்கு வேறு மாதிரி என்றாள் குயிலி –
நீ எனனைச் சோதிக்கத்தான் கேள்வி கேட்கிறாய் என்று தோணும். ஏதாவது வாய்க்கு வந்ததைச் சொல்லக் கூடாதே, சொல்ல வேண்டிய எதுவும் விட்டுப் போகக்கூடாதே என்று பயம்.
ஆக இரண்டு பேருக்கும் காரணமில்லாத பயம். களைந்து விடுவோம் இரண்டு அச்சத்தையும் என்றாள் வானம்பாடி.
தாமதத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு என்றாள் குயிலி –
நாம் எல்லோரும் வேகத்தைக் கைக்கொண்டு காலம் கடக்கப் பார்க்கிறோம். நம் காலக் கலத்துக்கு ஐந்து ஒளியாண்டு தூரத்தில் வரும் வேறெந்தக் கலமும் நம் அருகில் வருவது என்ற வகையில் அடங்கும். அப்படி அருகே வரும்போது நம் காலப் படகு தானே வேகம் குறைத்து விடும். அந்தக் கலத்தை விபத்து நேரலாம் என எச்சரித்து சரியான பாதை, வேகத்துக்கு கொண்டு செலுத்த உதவி செய்து மீளுதல் தன்னிச்சையாக நம் கலத்தால் மேற்கொள்ளப்படும்; அதனாலும், நம் காலப் பயணம் தாமதமாகும்.
அவள் சொல்லி முடிக்கும் முன் காலக் கலம் ஆடி அலைபாய்ந்து வேகம் நிலைத்து நின்றது;
ஒரு வினாடி நிற்கும் எனப் பொறுமையாக இருந்தார்கள். இல்லை. ஒரு நிமிடம் நிற்குமா? இல்லை. ஒரு மணி நேரம்? அதுவும் இல்லை. படகு நின்றுவிட்டது.
மன்னிக்கவும். படகு பழுது திருத்தப்பட இருக்கிறது, பழுது நீக்கப் பிடிக்கும் நேரம் தெரியவில்லை.
வரிசையாக அறிவிப்புகள். சுவரில் பரத்திய ஒளி மங்கலாக ஒளிர்ந்தது, பதினெட்டாம் நூற்றாண்டு. சுவர் சொன்னது. அப்புறம் அந்தகார இருட்டு நான்கு திசையும்.
தொடரும்
- உவள்
- பார்வை
- வாளி கசியும் வாழ்வு
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6
- நாவல் தினை அத்தியாயம் பதினெட்டு CE 300
- குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்
- இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.
- சூட்டு யுகப் பிரளயம் !மாந்தர் பிழைப்ப தெப்படி ?
- கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்
- ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள்