பார்வை 

This entry is part 2 of 11 in the series 11 ஜூன் 2023

ஸிந்துஜா 

மர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது ‘ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?” என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான். 

நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

அருண் பதிலளிப்பதற்கு முன்பே நரசிம்  “எங்கே நீ இவ்வளவு தூரம்?” என்று கேட்டான்.

 “நகைக்காரத் தெருவிலே அம்மாவோட வேலை கொஞ்சம் இருந்தது. அவள் அலைய வாண்டாமேன்னு நா வந்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தது

 வந்தோம், பகத்ராம்லே அம்மாக்குப் பிடிச்ச ஸ்வீட்டையும் எனக்குப் பிடிச்ச காரத்தையும் வாங்கிண்டு போலாம்னு இங்கே வந்தேன். வெளியே வந்தா நீ என் மேலே வந்து விழறே!” என்று அருண் சிரித்தான். 

“கிரிஜாவைப் பாத்துட்டுப் போறயோன்னு நினைச்சேன்” என்றான் நரசிம்.

அப்போது அவர்களுக்கு முன்னால் வந்து கையேந்தி நின்ற கிழவனிடம் அருண் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தான்.   

“எங்கயோ ஹென்னூர்லேந்து இவ்ளோ தூரம் வந்திருக்கே. எவ்வளவு மாசமாச்சு உன்னைப் பாத்து!” ” என்றான் நரசிம்.

“ஆமா. ப்ரெட்டி லாங் டைம்” என்று அருண் நண்பனை நேசத்துடன் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

 “சரி வா.என் வீட்லேயும் உன் காலடி படட்டும். நீ இப்போ ஃப்ரீதானே?” என்று கேட்டான் நரசிம்.

அவர்கள் கார் பார்க்கிங்கை நோக்கிச் சென்றார்கள். அந்தத் தெருவில் மின்னிய கடைகளும் அவற்றில் குழுமியிருந்த கூட்டமும் செல்வத்தின் 

அணைப்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பித்தன. தெருவில் நடந்து சென்ற யுவதிகள் அணிந்திருந்தமிகக்  குறைவான ஆடைகளிலிருந்து மிக அதிகமான வாசனைத் திரவிய மணம் வெளிப்பட்டுத் தெருவில் சூழ்ந்தி

ருந்தது. நாணயத்தின் மறுபக்கத்தைச் சுட்டிக் காண்பிப்பது போலக் குழந்தையை  ஒரு கையால் ஏந்திக் கொண்டு மறு கையால் யாசிக்கும் ஏழைப் பெண்களும், அழுக்கு உடைகளுடன் நடைபாதை வியாபாரிகளும் நின்றார்கள். 

“மாமி இப்போ எப்படி இருக்கா? கம்ப்ளீட் ரெஸ்ட் ரொம்ப போர்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாளா?” என்று நரசிம் கேட்டான் நடந்தபடி.

“ஆமா. வேலைலேந்து ரிட்டயராயி ஒரு மாசம் ஆறது. ஸ்கூல்லே அவளை வீட்டுக்குப் போன்னு சொன்னது பத்தி அவள் கவலைப்படலே. உனக்கு  

அறுபது வயசாச்சு. கிளம்புன்னு சொன்னதுதான்…” என்று சிரித்தான் அருண்.

அவர்கள் நடக்கும் போது நரசிம்மின் கையிலிருந்த பையிலிருந்து சலங் சலங் என்று சப்தம் வந்தது.

“இது என்ன கொலுசுச் சப்தம்? யார் டான்ஸ் ஆடப் போறா?” 

நரசிம் சிரித்தபடி “டான்ஸ் ஆட வைக்கும் ஐட்டம்தான்” என்றான். “ஜாக் டேனியல்ஸ்! நாலு பாட்டில். இப்போ அது ஆடறது. அப்புறம் நாம!”

அவர்கள் காரை அடைந்தார்கள். கதவைத் திறந்து கொண்டே “கிரிஜா வீடு இருக்கற ரோடுலேதான்  என் ஃபிரெண்டோட அண்ணனும் இருக்கான். கஸ்டம்ஸ்லே வேலை. மாசத்துக்கு ஒரு சப்ளை கொடுத்துடுவான்” என்றான் நரசிம்.

அருண் அவனிடம் ” இவ்வளவு வாங்கிண்டு போறியே ராதா வீட்டிலே இல்லியா?”

“ஆமாம். ஜெயநகர் போயிருக்கா. அவ தங்கை லண்டன்லேந்து வந்திருக்கா; அவளோட நாலஞ்சு நாள் இருக்கலாம்னு நேத்தி போனா” என்றான் நரசிம்.

“ஆமா. எங்களுக்குத் தெரியாதாக்கும்? அவளை அப்படின்னா அடக்கி வச்சிருக்கே . ஆக்சுவலா அவதான் இப்போ நிம்மதியா சந்தோஷமா அப்பா அம்மா தங்கையோட  இருக்கலாம்னு போயிருப்பா!”

“எனக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்க உன்னை மாதிரி நாலஞ்சு பேர், இல்லேல்ல நீ ஒருத்தனே போறும்” என்றான் நரசிம். “ஆனா ராதா எப்பவும் சொல்ற மாதிரி கிரிஜா அதிர்ஷ்டக்காரி. ‘உங்க சிநேகிதர் 

அப்படின்னா கல்யாணத்துக்கு மிந்தியே அவளைத் தாங்கிப் பிடிக்கறார். ஹூம், எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்’னு சொல்லி என் வாயைப் பிடுங்குவா….” நரசிம் வாய் விட்டுச் சிரித்தான். 

அருண் ஒன்றும் பேசாமல் கார் செல்லும் வழியைப் பார்த்துக் கொண்டி

ருந்தான்.

“நரசிம். லெட்ஸ் ஹாவ் எ ஷார்ட்  செஸ்ஷன் . இப்போது மணி ஆறரை ஆறது.  நான் ஒரு ஏழரை மணிக்கு வீட்டுக்குக் கிளம்பி விடுகிறேன்” என்றான் அருண். நரசிம் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் காரை ஒட்டிச் சென்றான்.

அவர்கள் நரசிம்மின் வீட்டை அடைந்து மாடிக்குச் சென்றார்கள். முன்னிரவின் லேசான குளிர் காற்றும் மேலே விரிந்திருந்த இன்னும் முற்றிலும் கறுக்காத இளம் நீல ஆகாயமும், கூடு திரும்பும் பறவைகளின் ஒலியும் மனதுக்கு இதமாக இருந்தன என்று அருண் நினைத்தான். ஒரு விஸ்கி பாட்டிலைத் திறந்து இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் திரவத்தை நரசிம் நிரப்பினான். அருண் தன்னிடமிருந்த பை ஒன்றிலிருந்து பக்கோடாவை எடுத்தான்.    

தம்ளரை எடுத்து ஒரு வாய் அருந்திய நரசிம் அருணிடம் “கிரிஜாவுடன் ஏதாவது மனஸ்தாபமா?” என்று கேட்டான்.

அருணும்  விஸ்கியை ஒரு வாய் குடித்து விட்டுத் தம்ளரைக் கீழே வைத்தான். சில வினாடிகளுக்குப் பின் “ஏன் அப்படிக் கேக்கறே ?” என்று நண்பனை உற்றுப் பார்த்தான்.

“நா உன்னைப் பாத்ததிலேந்து ரண்டு மூணு தடவை கிரிஜாவைப் பத்திப் பேசினேன். வழக்கமா நீ காமிக்கிற இன்டரெஸ்ட் காணலையே. அவளைப் 

பத்திப் பேசறதை அவாய்ட் பண்ணற மாதிரி இருந்ததேன்னுதான் கேட்டேன்.”

அருண் குனிந்து விஸ்கி பாட்டிலைப் பார்த்தபடி மௌனமாக இருந்தான். அவன் தனக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்லி விடலாமா என்று நரசிம் யோசித்தான். 

 அப்போது நரசிம்மின் கைபேசி ஒலித்தது. அதைப் பார்த்து விட்டு “ராதா” என்றான் அருணிடம். பிறகு “ஹலோ! எதுக்குத் திடீர்னு இப்பக் கூப்பிடறே?” என்றான்.

மறுமுனையிலிருந்து வந்த பதிலைக் கேட்டு “அப்பாடா! வாமிட்டிங் நின்னுடுத்தா? வாட்ட க்ரேட் ரிலீஃப்.” என்றான். அருண் பக்கம் திரும்பி “ஷீ இஸ் ஆன் தி ஃபேமிலி வே!” என்றான்.

அருண் “ஓ கங்கிராட்ஸ்” என்றான்.

“இரு, இரு, நீயே அவளோட பேசு” என்றான். 

அருண் அவளுக்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தான். 

“இன்னிக்கி என்ன பேச்சிலர் பார்ட்டியா? எப்படா நான் ரெண்டு நாள் வெளியே போவேன்னு உங்க பிரென்டுதான் காத்திண்டி

ருக்காரே!  விஸ்கி வாசனை போன்ல வரது ” என்று சிரித்தாள். 

அருண் சிரித்தபடி போனை நண்பனிடம் கொடுத்தான். அவன் பேசி முடித்து விட்டுக் கைபேசியைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.

“ரொம்ப நல்ல நியூஸ். ஐம் வெரி ஹேப்பி” என்றான் அருண்.

“தாங்க்ஸ். நீ இன்னிக்கி இங்கேயே இருந்துடேன். வீ வில் செலெப்ரெட் இட்” என்றான் நரசிம். 

“அதுக்கென்ன? நான் அம்மாவுக்குப் போன் பண்ணிச் சொல்லிடறேன். இல்லாட்டா நான் வரவரைக்கும் சாப்பிடாம காத்திண்டிருப்பா” என்ற அருண் தன் கைபேசியை எடுத்தான். 

நரசிம் “நா கீழே போய் ஐஸ் எடுத்துண்டு வரேன்” என்று சொல்லி விட்டுச் சென்றான். அருண் அம்மாவிடம் திடீரென்று வழியில் நரசிம்மைப் 

பார்த்ததையும் இரவு அவனோடு தங்கி விடுவதையும் பற்றிச் சொன்னான்.  

திரும்பி வந்த நரசிம் இருவ்ருடைய தம்ளர்களில் இருந்த திரவத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டான்.

“நீ கிரிஜாவைப் பத்திக் கேட்டேல்ல? அவ ஃபாரின் போகணும்னு சொல்றா. அவளுக்கு யு.எஸ்.லே வேலை கிடைச்சிருக்கு.”

“என்னது?” 

சில வினாடிகள் கழித்து அருண் சொன்னான். “விசித்திரமா இல்லே? யு.எஸ்.லே வேலை கிடைச்சிருக்குங்கறது ஒருத்தருக்கு எவ்வளவு சந்தோஷமான விஷயம்? ஆனா நா மூஞ்சியைத் தொங்கப் போட்டுண்டு கிடக்கேன். உனக்கும் கேக்கவே அதிர்ச்சியா இருக்கு! வாட் எ ஷிட்!”

“கிரிஜா இந்த மாதிரி ஃபாரின் வேலைக்கு ட்ரை பண்ணினது உனக்குப் பிடிக்கலையா?”

அருண் ஆமென்று தலையை ஆட்டினான்.

“அவ அங்கே வேலைக்கு ட்ரை பண்ணினது உனக்கு முன்னாலேயே தெரியாதா?”

“நாங்க பேசினதேயில்லே. அவ வேலை கிடைச்சதைப் பத்தி சொன்னப்போ, ஏன் முன்னாலேயே இதைப்  பத்திப் பேசலேன்னு கேட்டேன். சும்மா ட்ரை பண்ணறதைப் பத்தி என்ன பிரயோஜனம், வேலை கிடைக்கிறதான்னு பாக்கலாம்னுதான் பேசாம இருந்தேன்னு சொல்றா.”

“அதுவும் சரிதானே? நிச்சயம் இல்லாத ஒரு விஷயத்தைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகிறதுன்னு நினைச்சிருப்பா.அவ அப்ளை பண்ணறதுக்கு முன்னே உன்கிட்டே சொல்லியிருந்தா நீ சரின்னு சொல்லியிருப்பியா?” என்று நரசிம் கேட்டான்.

அருண் பதிலளிக்காமல் நண்பனை உற்றுப் பார்த்தான்.

“சரி, அதை விடு. மாமிக்கு  இதெல்லாம் தெரியுமா?”

“கிரிஜா சொன்ன அன்னிக்கே அம்மாவிடம் போய்ச் சொன்னேன். அவ ரெண்டு நிமிஷம் பேசாம இருந்துட்டு மார்க்கெட்டு வரைக்கும் போயிட்டு வரேன்னு கிளம்பிட்டா.”

சில வினாடிகள் அமைதியில் ஊர்ந்தன. நரசிம் ஒரு பக்கோடாத் துண்டை எடுத்துக் கடித்துத் தின்றான்.

“அவ திரும்பி வந்ததும் நீ ஒண்ணுமே சொல்லலையேம்மான்னேன். சொல்றதுக்கு என்ன இருக்கு? அவளை வேலைக்கு வரச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு. போக வேண்டியதுதானேன்னா.” 

“ராதா ஒரு தடவை சொல்லியிருக்கா கிரிஜா ரொம்ப இன்டிபென்டென்ட் டைப்னு. சில பேர் அப்படி இருக்கா. யூ கான்ட் ஹெல்ப் இட்.”

அருண் ஒன்றும் பதிலளிக்காமல் தம்ளரில் இருந்த விஸ்கியை எடுத்துக் குடித்தான். 

“அப்போ கல்யாணம்?” என்று கேட்டான் நரசிம்.

“அம்மா கல்யாணத்தைப் பண்ணிண்டு அவளோட நீயும் அமெரிக்காவுக்குப் போயிடுங்கறா.”

“என்னது?”

“உனக்குத்தான் தெரியுமே. என்னை ஆபீஸ்லே அமெரிக்காவுக்குப் போன்னு சொன்னது பத்தி. நான்தான் மாட்டேன்னுட்டேன்.”

“ஆமா. அது ஆறு மாசத்துக்கு முன்னாலே” என்றான் நரசிம்

“அதுக்கப்புறம் ரெண்டு மாசம் முன்னாலே மறுபடியும் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையா அமெரிக்கா போன்னு ஒரு கலாட்டா நடந்தது.”.

நரசிம் நண்பன் சொன்னதை அசை போடுவது போலப் பேசாமலிருந்தான்.

“அம்மா அதை ஞாபகம் வச்சிண்டுதான் கிரிஜாவோட அமெரிக்காவுக்குப் போயிடுங்கறா” என்றான் அருண். 

“கிரிஜாவும் அதைப் பிடிச்சுண்டுதான் வேலைக்கு ட்ரை பண்ணினாளோ?

அருண் திடுக்கிட்டு நண்பனைப் பார்த்தான்.

“இப்படிப் பாக்க எனக்குத் தோணலையே” என்றான் நரசிம்மிடம்.  

“ஷீ’ஸ் எ ஸ்மார்ட் லேடி” என்றான் நரசிம்.

“ஆனா நான் எங்கம்மாவோட சண்டை போட்டேன், உன்னைத் தனியா விட்டுட்டு நான் எப்படிப் போவேன்னு. “

நரசிம் விஸ்கியை உறிஞ்சியபடி “என்ன சொன்னா மாமி?”

“தனி என்னடா தனின்னா. ஒவ்வொரு மாசமும் ஒரு தடவையாவது பத்து நாள் பாம்பே, இல்லாட்டா ஒரு வாரம் டெல்லி, அதுவும் இல்லாட்டி நாலஞ்சு நாள் மெட்றாஸ்ன்னு நீ போய்ட்டு வரப்போல்லாம் எந்தத் துணை இருந்து என்னைக் காப்பாத்திண்டு இருந்தது? ஒரு தடவை ட்ரெய்னிங்ன்னு ஒரு மாசம் ஜெர்மனி போய் இருந்திட்டு வந்தே. நான் ஸ்கூலுக்கும் போயிண்டு ஆத்தையும் கவனிச்சிண்டு தனியா இருக்கலையா? நாமளும் இந்த பெங்களூருக்கு வந்து முப்பது வருஷமாகப் போறது. இந்த ஹென்னூருக்கு  வந்து அதுவும் பத்து வருஷம்னு ஓடிப் போயிடுத்து. இந்த காம்ப்ளெக்ஸ்லே இருக்கற பாதி மாமிகளும் மாமாக்களும் என்பிரெண்ட்ஸ்

தான். ஏதாவது உதவின்னா ரெண்டு நாளைக்கு வந்து பாத்துக்க மாட்டாளா? அப்படியே உடம்புக்கு முடியாம வந்து ஆஸ்பத்திரி அது இதுன்னா உன் பிரெண்ட் நரசிம் இருக்கான். ராதா இருக்கா. தனியாம் தனி என்று என்னைக் காய்ச்சி எடுத்துட்டா. நீங்க ரெண்டு பேரும் சிறுசுகள். இனிமே நீ கவலைப்படவேண்டியது, கவனிச்சிக்க வேண்டியது எல்லாம் உன்னையும் கிரிஜாவையும் பத்தித்தான். கல்யாணத்தைப் பண்ணிண்டு வேலையைப் பாக்க அமெரிக்காவுக்குக்  கெளம்புங்கோ. ஒரு வருஷத்துக்கோ இல்லே ரெண்டு வருஷத்துக்கோ  ஒரு தடவை பத்துப் பதினஞ்சு நாள் இங்க வந்து தங்குங்கோ. நீ என்ன எங்க சீமாச்சுப் பெரியப்பா நூறு வருஷத்துக்கு முன்னாலே லண்டன் போன மாதிரியா போறே. அங்கேர்ந்து அவரோட அம்மாவுக்கு லெட்டர் போட்டா அது இங்கே வரதுக்கு ஒரு மாசம் ஆனது. இப்பதான் பேசிக்கிறவா மூஞ்சியைப் போன்லேயோ  கம்ப்யுட்டர்லையோ  பாத்து ஒரு நாளைக்கு எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பேசலாமே. சும்மாக் கிட. வெறுமனே வேண்டாததுக்கெல்லாம் அலட்டிண்டுன்னு லெக்சர் அடிச்சா” என்றான் அருண்.

நரசிம் கையிலிருந்த தம்ளரைக் கீழே வைத்து விட்டு வாய் விட்டுச் சிரித்தான். “மாமி இஸ் கிரேட்.”

“எனக்குக் கடுப்பா இருக்கு. உனக்கு சிரிப்பு வரதா?” என்று நண்பனைக் கோபித்துக் கொண்டான் அருண்.

“கிரிஜா வெரி லக்கி கேர்ள்” என்றான் நரசிம்.

“என்ன சொல்றே?”

“எத்தனை பேருக்கு இந்த மாதிரி மனுஷாளோட சம்பந்தம் கிடைக்கிறது?” என்று கேட்டான் நரசிம்.

அருண் நண்பனை உற்றுப் பார்த்தான். அவன் குரல் இயல்பாக இருக்கிறதா என்று ஓர் எண்ணம் மனதில் பட்டு ஓடியது.

“அமெரிக்கா போறதைப் பத்தி இந்த நியூஸ் கிடைச்சதுக்கு அப்புறம் நீயும் கிரிஜாவும் என்ன பேசி முடிவு எடுத்தேள்?”

“அதுக்கு அவ சான்ஸே கொடுக்கலையே” என்றான் அருண்.

“வாட் டூ யூ மீன்?” என்றான் நரசிம் ஆச்சரியத்துடன்.”அவளுக்கு டிஸ்கஸ் பண்ணப் பிடிக்கலையா? சரி நீயாவது போய்ப் பேசியிருக்கலாமே?”

அருண் சற்றுத் தயக்கத்துடன் “அவள் இந்த நியூஸ் சொன்ன மறுநா என்னைப் பாக்க வந்தா. எனக்கு ஆபீஸ்லே ரெண்டு மூணு நாள் டைட் ஒர்க் இருக்குன்னு சொன்னேன். அதுக்கப்புறம் பாக்கலே.”

“அதாவது அவள் திரும்பத் திரும்ப வந்து உன் கால்லே வந்து விழுந்து வேண்டிக்கலேங்கிறே. வாட் நான்சென்ஸ்!” என்றான் நரசிம். அவன் குரலில் லேசான கோபம் தொனித்தது.  

அப்போது நரசிம்மின் கைபேசியில் அலாரம் அடிக்கும் ஒலி எழுந்து வந்தது. 

“ஓ, மை காட். மறந்தே போயிட்டேனே?” என்று அதை எடுத்துப் பார்த்து விட்டு அருணிடம் சொன்னான். “ஒரு கான்கால் இப்ப இருக்கு. ஓவர்சீஸ் கஸ்டமரோட. பதினஞ்சு இருபது நிமிஷத்துக்குள்ள முடிஞ்சிடும். சாரி. நீ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. நான் வந்துடறேன். அப்புறம் ஸ்விக்கில டின்னர் ஆர்டர் பண்ணிடலாம். சரியா?” என்று எழுந்தான்.

“அதுக்கென்ன, நீ உன் வேலையை முடிச்சிட்டு வா” என்றான் அருண்.

அவன் கீழே இறங்கிச் சென்றான். அருண் தன் தம்ளரில் இருந்த மீதி விஸ்கியை ஒரே வாயில் விட்டுக் கொண்டான். பிறகு அப்படியே மல்லாந்தபடி தரையில் படுத்துக் கொண்டு மேலே காட்சியளித்த ஆகாயத்தைப் பார்த்தான் .கறுப்புப் படுதாவில் நெய்த வைரப் பூவைப் போல நட்சத்திரம் ஒன்று மிகுந்த ஒளியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

அவன் கண்களை மூடிக் கொண்டான். இவ்வளவு நேரம் நரசிம்முடன் நடந்த சம்பாஷணை மனதில் ஓடியது. மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டிய தருணங்கள் உளைச்சலை ஏற்படுத்தி விட்டன போல அவனுக்குத் தோன்றியது. அதற்கு யார் பொறுப்பு என்னும் கேள்வியும் எழுந்து அலைக்கழித்தது. அவன் கண்களை மறுபடியும் திறந்து வானத்தைப் பார்த்தான். ‘பக்கத்தில் இருப்பதையே பார்க்கத் தெரியாத உனக்கு இவ்வளவு தூரத்தில் இருப்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் துப்பு இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே வானில் சற்று முன்பு தென்பட்ட நட்சத்திரம் மறைந்து போனது.    

Series Navigationஉவள்வாளி கசியும் வாழ்வு
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *