—வளவ. துரையன்
நான்கு கரைகளிலும்
நாணல்கள்
படிக்கட்டுகள் இல்லையெனினும்
சாய்தளப்பாதை.
ஆள்குளிப்பதை யாரும்
அறியாத அளவிற்கு
கண்களை மறைக்கும்
காட்டாமணக்கு.
குட்டையோ அல்லது குளமோ
எப்பெயரிட்டு அழைத்தாலும்
எல்லார்க்கும் பொதுவானது.
மாடுகளை மேயவிட்டபின்
மத்தியான வேளையில்
மேய்ப்பவர்களுக்கு
அதுதான் சொர்க்கம்.
இப்போது
நீவரும் பாதையெல்லாம்
அடைபட்டுப் போனதால்
நீரும் வழி மறந்து போயிற்று.
பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால்
பயனற்றுக் கிடக்கிறது.
ஆண்டுதோறும் வரும்
வலசைப் பறவை
மட்டுமிங்கே ஓரமாக
உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது