துயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்

This entry is part 7 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

குரு அரவிந்தன்

கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார்.

நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது உள்ளகக் கணக்காய்வுக்காக நான் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் இவர்களைச் சந்தித்திருக்கின்றேன். பல ஜோடிகளுக்கு மத்தியில் இவர்கள் மட்டும் விசேடமாக என் கண்ணில் பட்டதற்குக் காரணம், அப்போது காதலர்களாக இருந்த இருவரும் தமிழர்களாக இருந்ததே. அங்கு சந்தித்ததில் அவர்களுடன் நட்பாகப் பழகமுடிந்தது. விமலின் மனைவி யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் எனது மனைவியின் வீட்டின் அயலவர் என்பதால் எங்கள் நட்பு மேலும் தொடர்ந்தது.

விமல் கனடாவுக்கு வந்த போது, ஒருநாள் கீதவாணி அதிபர் நடா ராஜ்குமார் என்னை அழைத்து விமல் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும், கீதவாணி கலையகத்திற்கு வரும்படியும், வரும்போது எனது சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வரும்படி கேட்டிருந்தார். அங்கே சென்ற போது, ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘அவளுக்கு ஒரு கடிதம்’ என்ற எனது கதையைத் தான் வாசித்தாகவும், அதை இசையும் கதையுமாக ஒலிப்பதிவு செய்ய விரும்புவதாகவும், அதற்கான அனுமதியைத் தரும்படியும் கேட்டிருந்தார். பிபிசி தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளரே அதைக் கேட்டபோது, எனக்குப் பெருமையாக இருப்பதாகச் சொல்லிச் சம்மதம் தெரிவித்தேன். கீதவாணி கலையகத்திலேயே மிகச் சிறப்பாக அந்தக் கதையை இசையும் கதையுமாக்கியிருந்தார். அது மட்டுமல்ல, பல தடவைகள் பிபிசி தமிழோசை ஒலிபரப்பிலும் ஒலிபரப்பியிருந்தார். எனது கதைகளில் வெளிவந்த முதலாவது இசையும் கதையும் இதுதான். இவர் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து எனது பல கதைகளைப் பல வானொலிகளும் இதுவரை இசையும் கதையுமாக்கியிருந்தன.

வரணியூரானின் ‘பாசச்சுமை’ என்ற நாடகத்திலும், வி.பி. கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ என்ற படத்திலும் இவர் நடித்திருக்கின்றார். யோகா தில்லைநாதனின் சகோதரரான இவர் வானொலிக்கலை என்ற நூலையும் வெளியிட்டிருக்கின்றார். ‘இலண்டனில் இருந்து விமல்’ மற்றும் ‘விமலின் பக்கங்கள்’ என்ற, இதுவரை பல நாடுகளிலும் வெளியிட்டிருந்த இரண்டு நூல்களை அக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி கனடாவில் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இத்துயர சம்பவம் நடந்து விட்டிருந்தது. எதிர்பாராத இந்த இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருடன், அவரது ஆத்மா சாந்தியடைய அவர்களது துயரத்தில் நாங்களும் கலந்து கொண்டு பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!

Series Navigationஇந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *