திரு.அ.கணேசன் அவர்களுக்கு அஞ்சலி

This entry is part 6 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

19/08/2023 அன்று நள்ளிரவு கடந்து, 12.30 மணியளவில் (வயது 85) மறைந்த திரு.அ.கணேசன் அவர்களுக்கான எனது அஞ்சலிக் கட்டுரை இது, சம்பிரதாயமான இரங்கலைத் தெரிவிப்பதென்பது நம் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்கு நாமே இரங்கல் தெரிவிப்பது போன்ற அபத்தமான செயல்பாடாக ஆகிவிடும் என்பதால் இதனை ஓர் அஞ்சலிக் கட்டுரையாகச் சமர்ப்பிக்கிறேன். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினை உருவாக்கியவர்களுள் ஒருவரான திரு.அ.கணேசன் அவர்கள் அகில இந்திய நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் புரவலரும் ஆவார். “தோள் சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் , தெரியாத உண்மைகள்” என்ற நூலினை என்னுடன் இணைந்து எழுதியவர் 2010ஆம் ஆண்டின் இறுதியில் இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தது. திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளிவர ஆயத்தமாக இருந்த நிலையில் திரு.அ.கணேசன் அவர்கள் மரணம் அடைந்தது மனதில் பாரமாக நீடிக்கிறது.

திரு.அ.கணேசன் அவர்களுடனான எனது நட்பு 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டது 1990 அல்லது 1991 ஆம் ஆண்டில் (2016இல் காலம்சென்ற) நெல்லை நெடுமாறன் அவர்கள் மூலமாகவே கணேசன் அவர்களுடன் எனக்கு அறிமுகம் நேர்ந்தது நெடுமாறன் அவர்களை அண்ணாச்சியென்று இயல்பாக அழைத்து வந்த நான் கணேசன் அவர்களை ஐயா என்றோ Sir என்றோ தான் அழைத்து வந்தேன், அதற்கு விசேடமான காரணம் என்னவாக இருக்கும் என்று நான் யோசித்ததுண்டு , இயல்பாகவே ஒரு புரவலருக்குரிய சால்பும் மிடுக்கும் திரு.கணேசன் அவர்களிடம் இருந்தமை ஒரு காரணமாக இருக்கக் கூடும். மட்டுமின்றித் திரு கணேசன் அவர்களின் ஆளுமையிலிருந்த தலைமைப் பண்புகள் அவரிடம் ஒரு தனித்த மரியாதையை உருவாக்கி இருக்கவும் கூடும்.

தினத்தந்தி அதிபராக இருந்த சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஒரு நற்பணி மன்றம் இயங்கி வந்தது அந்நற்பணி மன்றத்தின் தலைவராகத் திரு. அ.கணேசன் அவர்கள் இருந்தார். 2001 ஆம் ஆண்டில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கபட்டிருந்த நேரம் அது. தமிழகத்தில் மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சி செய்துகொண்டிருந்தது ஆலடி அருணா அவர்கள் அந்த அரசில், சட்டத் துறை அமைச்சராக இருந்தார்.அவர் திரு.கணேசன் அவர்களை அழைத்து, அப்போதைய தமிழக முதல்வர்.மு.கருணாநிதி அவர்களைச் சந்திக்குமாறும், தி.மு.க விற்குச் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் ஆதரவினைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.திரு.அ.கணேசன் அவர்களோ அ.இ.அ.தி.மு.க விற்கு குறிப்பாக அக்கட்சியின் தலைவி . செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாகச் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆலடி.அருணா அவர்கள் கேலியான தொனியில், “ஜெயலலிதா இனி ஜெயில் லலிதா தான் எனவே அவர்களையெல்லாம் நம்பாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார், திரு.கணேசன் அவர்கள் மேற்கொண்டு அவரிடம் வாதாடாமல் விடைபெற்று வெளிவந்துவிட்டார். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத் தலைவர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்துவிட்டு.நாடார் சங்க கூட்டமைப்பின் பிற நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு விவாதித்துச் சில கோரிக்கைகளின் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து அக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிற பட்சத்தில் நாடார் சங்கக் கூட்டமைப்பின் ஆதரவினை அ.இ.அ.தி.மு.க விற்கு வழங்க முடியுமென்றார். செல்வி.ஜெயலலிதா அவர்களும் அக்கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களே பல வழக்குகளுக்கு ஆளாகியும், தேர்தலில் போட்டி இடுவதற்கே அவருக்குத் தகுதி இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிற வகையில் சட்டச்சிக்கல்களை எதிர்கொண்டும் இருந்த அன்றைய நிலையினை எண்ணிப்பார்த்தால் தான். திரு.கணேசன் அவர்களின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பது புரியும். (அப்போதைய தேர்தல் பிரச்சாரக் களத்தில் ஜெயலலிதா அவர்கள் திருச்செந்தூரில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த போது, திரு கணேசன் அவர்கள் திருச்செந்தூரில் ஜெயலலிதா அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதி பெற்று அப்பகுதிக்கு வந்திருந்தார், அப்போது ஏரலில் நான் தங்கியிருந்த ரகு பில்டிங்கிற்கு வந்து என்னைச் சந்தித்த போது தெரிவித்த விவரங்கள் இவை).

செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களைத் திருச்செந்தூரில் சந்தித்த திரு.கணேசன் அவர்கள் பிரச்சாரத்திற்குத் தேவைப்படும் என்று கருதி வழங்கிய தொகையைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல்.நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றினால் போதும் என்று ஜெயலலிதா வசம் தெரிவித்தார். அதன் காரணமாகவே, கணேசன் அவர்கள் பால் ஜெயலலிதா மிகுந்த மரியாதை வைத்திருந்தார். 2011ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வேளையில் நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சிக்கு அ.இ.அ.தி.மு.கவுடன் உடன்பாடு ஏற்படுவத்ற்கு மூல காரணமாக இருந்தவர் கணேசன் அவர்களே.அது தொடர்பாகச் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தபோது நானும் கணேசன் அவர்களும் இணைந்த்து எழுதி 2010ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டிருந்த “ தோள் சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” நூற் பிரதியை ஜெயலலிதா வசம் வழங்கினார். அந்நூலினை ஜெயலலிதா அவர்கள் ஆழ்ந்து வாசித்துள்ளார் என்பதை உணர்த்துகிற வகையில் ஒரு நிக்ழ்வு 2012ஆம் ஆண்டு நடந்தேறிற்று. CBSEயின் 9ஆம் வகுப்பிற்கான வரலாற்றுப் பாடத்தில் “Clothing – its social history” என்ற தலைப்பில், ஜானகி நாயர் என்ற கல்வியாளரால் எழுதப்பட்ட கட்டுரை இடம்பெற்றிருந்தது, அக்கட்டுரையில் சான்றோர் (நாடார்) சமூகத்தவரின் வரலாறு குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.அத்தவறான தகவல்களின் அடிப்படையிலமைந்த பொய்யான சித்தரிப்பினைச் சுட்டிக்காட்டி அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் அப்போதைய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார், சான்றோர் சமூகத்தவரின் வரலாறு குறித்து அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்த தரவுகள் எமது ”தோள் சீலைக் கலகம்” நூலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன.

தோள் சீலைக் கலகம் குறித்த ஆய்வில் நாங்கள் இணைந்து இறங்கியதன் பின்புலத்தினை இங்கு குறிப்பிட விழைகிறேன்.திரு.அ.கணேசன் அவர்கள் நல்ல சொற்பொழிவாளர், ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பேச வேண்டுமென்றால் அதற்குரிய தரவுகளை நுணுக்கமாகச் சேகரித்து முறைப்படத் தொகுத்துத் தர்க்க பூர்வமாக வழங்குவதில் தேர்ச்சி பெற்றவர். சுற்றி வளைக்காமல் நேரடியாகவும் அதே வேளையில் கேட்போர் மனதில் பசுமரத்தாணி போல் பதிகிற வகையிலும் கருத்தினைத் தெரிவிப்பதில் வல்லவர் .தம்முடைய இளமைக் காலத்தில் (1960களில்) இளைஞர் காங்கிரசில் ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். காமராஜ் அவர்களின் மறைவுக்குப் பிறகு நேரடி அரசியல் ஈடுபாட்டினைக் குறைத்துக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தையடுத்த தாம் பிறந்த ஊரான செட்டி குளத்திலும் அருகிலுள்ள ஊர்களிலும், தாம் பிறந்த நிலைமைக்கார நாடார்கள் எனப்பட்ட அரச குலச் சான்றோர் வாழ்வது குறித்தும், அப்பகுதியில் 19ஆம் நூற்றாண்டில் புராட்டெஸ்டெண்ட் கிறிஸ்தவ பிஷப் ராபர்ட் கால்டுவெல் சான்றோர் சமூகத்தவர் குறித்துப் பொய்யான தகவல்கள் அடங்கிய “Tinnevelly Shanars” என்ற நூலை எழுதி வெளியிட்டதன் விளைவாகக் கால்டுவெல்லுக்குக் கடும் எதிர்ப்புகள் நேரிட்டு அவர் கோடைக்கானலுக்குக் குடிபெயர்ந்தமை போன்ற நிகழ்வுகள் குறித்தும் முழுமையாக அறிந்திருந்தவர். இத்தகைய வரலாற்றுச் செய்திகள் குறித்து அவருடன் நீண்ட நெடிய உரையாடல்களில் நான் ஈடுபட்டதுண்டு. மட்டுமின்றிச் சான்றோர் சமூக வரலாறு குறித்த பழைய நூல்களையும் அவர் மூலமே நான் பெற்று வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2004ஆம் ஆண்டில் என்னுடைய நூலான “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்” உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வெளிவருவதற்கு மணிக்கணக்கில் அவருடன் சமூக வரலாறு குறித்து விவாதித்தமையும் பெருந்துணையாக அமைந்தது.2005ஆம் ஆண்டின் இறுதியில் நான் தொல்லியல் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (South Indian Social History Research Institute – SISHRI) என்ற பெயரில் ஆய்வு நிறுவனம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர் அவரே.

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்திற்குத் திரு.அ.கணேசன் அவர்களின் மறைவு பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவரின் மறைவு பேரிழப்பே. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மற்ற புலவர்களோடு தாமும் புலவர்களாக இருந்த பாண்டியன் அறிவுடை நம்பி, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், பன்னாடு தந்த மாறன் வழுதி போன்ற மன்னர்களோடு ஒப்பிடத்தக்க திரு.அ.கணேசன் அவர்கள் என்னுடன் ஒரு சாலை மாணாக்கர் போல, இருந்து, “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்கக் கலந்துரையாடியதும், விவாதித்ததும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டதும் என்றும் நினைவில் நீங்காமல் நிற்கக்கூடியவையாகும்.

.

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம்    28
author

எஸ். இராமச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *