நாவல்  தினை – அத்தியாயம் 33 – CE 5000

This entry is part 8 of 8 in the series 24 செப்டம்பர் 2023

இரா முருகன்

நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும்.

விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு அனுப்பிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குயிலியின்  மின்னஞ்சல் வந்தது.

ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறக்கத்தில் இருப்பவர் நீலன் இல்லை என்பது குழலனுக்கும் வானம்பாடிக்கும் குயிலிக்கும் மட்டும் இப்போதைக்குத் தெரிந்த உண்மை என்பதால் நீலன் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இம்மூவரும் மட்டும் பரிமாறிக்கொள்வது நடப்பில் உள்ளது.

அவ்வகையில் இன்றைக்கு விடிகாலையில் பெருந்தேளரசர் ஆணைப்படி குயிலி ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் நீலனோடு மனத்தொடர்பு ஏற்படுத்தி அவரை உடனே உறக்கம் நீங்கி வரச் செய்யவேண்டும்.

அவர் அதற்கு முன், உறக்கத்தில் இருந்தபடியே சஞ்சீவினி மருந்து மானிட இனத்துக்கு மட்டுமானது இல்லை என்றும் சகல இனத்துக்குமானது என்றும் விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.

அவர் எழ மறுத்து விட்டால் அவர் கனவில் மறைமுகமாக அவர் உயிர் பேரிடரில் இருப்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டும். பெருந்தேளரின் கருணையே உருவான முகத்தைத் தேள் விடம் மூர்க்கமாகச் சுமந்திருக்கும் ஒன்றாகக் காட்டி நீலரை அவர் கனவில் நூறு தேள்கள் துரத்த ஓட வைக்க வேண்டும்.

இப்படி நிறைவேற்றக் கடினமான ஒரு பட்டியலோடு குயிலியைப் பெருந்துயில் மண்டபத்துக்குள் வரும்போது அவளுக்கு இதொண்ணும் அச்சமூட்டும் ஒன்று இல்லை.   அங்கே சகல அலங்கார பூஷிதரான தேட்சவமாக  அழுகிக் கொண்டிருக்கும் முதுபெருந்தேளர் தான் அவளைப் பயமுறுத்துகிறவர்.

நடைப்பிணம் போல் ஓடும், விஷமம் செய்யும், பாடும் பிணம் அவர். சகசயனத்தில் இருக்கும் அழகர் அழகியர் இன்னும் உயிரோடு இருப்பதால் இவருடைய தொந்தரவு தாங்காமல் சீக்கிரம் ஆயுளை முடித்துக்கொள்வதை எதிர்பார்க்கிறார்களாம்.

குயிலி அவ்வப்போது மண்டபத்தில் ஒவ்வொரு துயிலரின் உடல், உளம் தொடர்பான நிலைமையை ஆய்ந்து அறிக்கை அளிப்பது வழக்கம்.

 துயிலர்கள் உள்மனம் குயிலியோடு சகஜமாக உரையாடும்போது சேகரித்த தகவலில் முதுவரின் கிழவிளையாட்டு தொடர்பானவற்றை நீக்கி அரசுக்கு அனுப்புவது வழக்கம். வானம்பாடி போன்ற நெருங்கியவர்களோடு பகிர்ந்து நகைக்க உதவும் முதுவர் குறும்புகள்.

இன்று ஏமப் பெருந்துயில் மண்டப ஆய்வில் நீலர் சம்பந்தமான உபரி நடவடிக்கை தேவைப்பட்டதால் நடு இரவு கழிந்ததுமே குயிலி துயிலரங்க மண்டபத்துக்கு வந்துவிட்டாள்.

முதுவருக்கு உடல் அழுகாமல் இருக்க நிறைய வேதியியல் பொருட்களை அவருக்கு இரண்டு நாள் முன்னதாகவே பூசி எகிப்திய பாரோ அரசனின் சவம் போல் அழுகி நாறும் கோலம் கொண்டு  கிடக்கச் செய்து விட்டிருந்தாள் குயிலி.

அத்தனை வேதியியல் பொருள் பூசினால் உயிரோடு இருப்பவர் கூட செத்துப் போகக்கூடும். முதுவன் போன்ற பணக்காரச் சவங்கள் உறைந்து ஈயென்று அழுக்குப் பல் காட்டித் துயில்வது சகஜம்.

முதுவன் சவத்தை சாவகாசமாகக் கவனிக்கலாமென்று தீர்மானித்துக் குயிலி நீலரின் அதாவது பிரதி நீலனின் பேழையை நோக்கி நடந்தாள்.

வெறும் உறக்கத்திலிருப்பவர்கள் நெஞ்சு ஏறி இறங்கி அனிச்சைச் செயலில் இருப்பது போல் பெருந்துயில் கொள்வாரின் நெஞ்சு அசைவதில்லை. எனினும் அவர்களின் தொண்டையிலிருந்து ஊஊஊ என்று காற்று உள்ளிருந்து வெளியே கடந்து போவது போல் மெல்லிய சத்தம் எழுப்பி வெளியேறும். அவர்களுக்கு டான்ஸில்லிடிஸ் வரக் காரணம் இதுதான்.

பேழையின் மூடியை உயர்த்தி அந்தச் சத்தத்தைக் கேட்க குயிலி காத்திருக்க, பிரதி நீலர் தலை குழைந்து பேழைக்குள் தலைகீழாக விழுந்துவிட்டார்.

அவருக்கு உயிரில்லை என்று குயிலிக்குப் போதமானது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள் அவள். அசல் நீலன் அவள் இல்லத்தில் தான் கூறு மாற்றி யார் கண்ணிலும் புலப்படாமல் இருக்கிறார். அவரிடம் சொல்லலாமா?

அது இருக்கவே இருக்கிறது அதற்கு முன் வேறே யாரோடு. மனம் தன்னையறியாமல் வானம்பாடியை ஏகியது.

ஏய் என்ன பண்ணிட்டிருக்கே.

குயிலி ஒலியெழுப்பாமல் சிரித்து தொடர்பைத் துண்டித்து குழலனுக்குத் தொடர்பு ஏற்படுத்தினாள். நாற்பரிமாணக் கூறுகளை மாற்றித் தற்போதைக்கு அந்த பிரதி நீலன் உடலைப் பொதுவான காட்சியிலிருந்து மாற்றி வைக்கட்டுமா என்று குயிலி கேட்டாள்.

அதற்கு என்ன கதை சொல்லப் போறே? குழலன் அவளை வினாவினான்.

எதாவது சமாளிக்கலாம். நீலன், அதுதான் பிரதி நீலன் இறந்து போயாச்சு. இனிமேல் வந்து பேசப் போகிறதில்லே. முதுபெரும் தேளர் போல இன்னும் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும்போதே இங்கே கொண்டு வந்து தள்ளி நிம்மதியா இருக்கற விஷயம் இல்லே இது. இதோடு வேறே சஞ்சீவனி கதை எல்லாம் கட்டிச் சொல்ல வேண்டி வரும். அதை எல்லாம் பெருந்தேளன் பார்த்துப்பான். கூட இருக்கற கர்ப்பூரம் கோணாமாணலா வழிகாட்டுவான். வேடிக்கை பார்க்கலாம்.

குயிலி சத்தம் குறைவாக்கிச் சிரித்தாள்.

சரி நீ இந்த பிரதி நீலனை மறைய வை.   நீ வந்த காலத்துக்கு ஒரு பத்து நிமிடம் முன்னால் போய் நீலனை காணாமல் போக்கிடு. பெருந்தேளன் கிட்டே பாதுகாப்பு விரிசல் வந்திருக்குன்னு சொல்லிட்டுப் போ அவன் எப்படி அதை மேற்கொள்ளறான் பார்ப்போம்.

குழலன் குயிலி மனதில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏமப் பெருந்துயில் மண்டபக் கதவுகள் விரியத் திறந்து பெருந்தேளரசர் வேகமாக உள்ளே வந்தார்.

குயிலி, நீலன் பக்கம் போகாதே. அவர் இறந்து போய்ட்டார். என் படுக்கை அறையில் இருக்கும் ஜாக்கிரதை மணி அவர் இறந்ததுமே அடித்து விட்டது. உடம்பு வெப்பம், இதய ஒலி, ரத்த ஓட்டம் இப்படி ஒவ்வொரு வினாடியும் சென்சர்கள் இயங்கி, போய்ச் சேர்ந்தால் ஜாக்கிரதை மணி ஒலிச்சிடும். நீலன் இன்று காலை மூன்று மணி முப்பது நிமிடத்துக்கு அடங்கி விட்டிருக்கார். அப்படியே பேழையில் அவரை இருக்க விட்டுடு. சஞ்சீவனி என்ன ஆகும்னு ஆலோசனை செய்யணும். அதுவரை நீலன் இறப்பை வெளிப்படுத்த வேண்டாம்.

நீலன் இறப்பு ஏதோ விதத்தில் பெருந்தேளரை மகிழ்ச்சியூட்டிப் பரபரப்பாக்கி விட்டிருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவசர சந்திப்பு முன் மண்டபத்தில். வந்து விடு என்று குயிலியைப் பார்த்துச் சொல்லியபடி வெளியே நடந்தார் அவர்.

அவர் போகும் வரை அமைதியாக இருந்த குழலன் குயிலியிடம் சொன்னது இது – நாம் ஒண்ணு திட்டம் போட ஆரம்பிச்சா இவர் நடுவிலே புகுந்து குட்டையைக் குழப்பிட்டுப் போறார்.

சரி நான் வீட்டுக்குப் போகிறேன். நம்ம அசல் நீலன் வைத்தியருக்குக் காலைச் சிற்றுண்டி தரவேணும் என்று கிளம்பி வாசலுக்கு வந்தாள் குயிலி. சஞ்சீவனிக்குப் பேராசைப்பட்டு அவரை இங்கே வரவழைச்சிருக்கவே வேண்டாம். எல்லாம் பெருந்தேளரசர் பிடிவாதம் தான் காரணம். அவள் அலுத்துக் கொண்டாள்.

ஆக நம்ம காஸ்மாஸ் பிரபஞ்ச நீலன் வைத்தியர் இட்டலி சாப்பிடப் போறார். ஆல்ட் எஸ் பிரபஞ்ச நீலன் இறந்து விட்டார். இப்போ பார் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து நீலன் வந்துக்கிட்டே இருக்கார்.

குழலன் குரல் சந்தோஷமாக ஒலித்தது – குழலி நீ உள்ளே ஓடிப்போய் பிரதி நீலனோட உடலை மறை என்றான் அவன். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் ஆல்ட் எஸ் பிரபஞ்ச நீலனின் உடல் பெருந்துயில் பேழையிலிருந்து இறக்கப்பட்டது. அதற்கும் அடுத்த நிமிடம் அந்த   உடலை நுண்சக்தித் துகளாக்கி   குழலி மறைத்தாள். அதை ஆல்ட் எஸ் பிரபஞ்சத்துக்கு குழலன் பத்திரமாக அனுப்பி வைப்பான். அங்கே அந்தத் துகள் அத்தனையும் சேர்ந்து திரளாகி இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.

அவரது உடல் மறைந்ததற்கு அடுத்த நொடி ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து  நீலனை அவரது மனையில் குழலனும் குயிலியும் சந்தித்தார்கள். வீடு முழுக்கக் கொக்கரிக்கும் சேவல்கள் பேசவே விடாமல் தொந்தரவு செய்தன. லுங்கியும் பருத்திக் குப்பாயமும் அணிந்து தரையில் உட்கார்ந்து மீன் சமையலுக்காக சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த ஆல்ட் க்யூ நீலன் பாடும் குரலில் ஓதிக்கொண்டிருந்தார் –

 ஓ சேவலே அதிகம் கூவாதே, நாளை உணவிலும் நாளை மறுநாள் எல்லாம் கழிக்கப்படும்போதும் கூவவும் கொக்கரிக்கவும் முடியாது

பாடியபடி மீன் செதிலை அழுத்தத் தேய்த்து நீக்கிக் கொண்டிருந்தார்.  

 உள்ளே ஆட்டு மாமிசத்தை சின்னச் சின்னத் துண்டுகளாக கத்தி கொண்டு நறுக்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களும் அந்த கசாப்புக்கடை நீலனுக்கு சகோதரிகள் எனச் சொன்னார் அவர் குழலனிடம்.

அவர்கள் பெயர் குயிலி மற்றும் வானம்பாடியா? குயிலி கேட்டபடி குழலனைப் பார்க்க, உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கசாப்புக்கடை நீலன் ஆச்சரியப்பட்டு மீண்டார்.

தேளரசு பயன்படுத்தும் காலப் பயணத் தொழில்நுட்பத்தை விட நூறு மடங்கு முன்னேறிய தொழில்நுட்பத்தைத் தனியனாக குழலன்  பாவிப்பது குழலியை வியப்படைய வைத்தது.

அடுத்த நிமிடம் ஆல்ட் எஸ் நீலன் சவமாகக் கிடந்த பேழை சுத்தப்படுத்தப் பட்டது. அதற்கான தூய்மைப் படுத்தும் அமைப்பு பேழைக்கு உள்ளேயே அதிவேக காற்றுக் கதிரைச் சுழற்றி விமானக் கழிப்பறை மாதிரி தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆல்ட் க்யூ நீலன் பேழைக்குள் ஏமப் பெருந்துயிலைப் போலி செய்தார். குயிலி இல்லத்தில் காஸ்மாஸ் பிரபஞ்ச அசல் நீலன் இட்டலி தின்று கொண்டிருந்தார். 

குயிலி வானம்பாடி இல்லத்தின் கதவை மெல்லத் தட்டி இப்போது வரலாமாடி என்று சிரித்தபடி வினவினாள். நான் கிடந்த கோலம் கண்டு பயந்துட்டியா, ஒரே ஓட்டமா ஓடிட்டே என்று கரிசனமாக விசாரித்தாள் வானம்பாடி.

நீ பாட்டுக்கு இன்று புதிதாய்ப் பிறந்தேன்னு. அது இருக்கட்டும். இப்போ நீலன் இறந்து போய்ட்டார்னு நான் உங்கிட்டே சொன்னா என்ன செய்வே? குயிலி கேட்டாள்.

எந்த நீலன்கறதைப் பொருத்தது அது. நம்ம நீலன் அண்ணார் அப்படீன்னா இன்னும் ஒரு இட்டலி சாப்பிட்டுப் போங்கன்னு கன்னத்திலே தட்டி முழிக்கச் சொல்வேன்.  . இறந்து போனது ஆல்ட் எஸ் நீலன்,   நமக்கு ஆல்ட் எஸ் பிரதி நீலன். என்றால். உங்கள் இல்லத்திலே மாட்டி வச்சிருக்கீங்களே, அருமையான கம்பளி பொன்னாடை, அதைக் கொடுங்கள் என்று சொல்லிக் கேட்டிருப்பேன். வானம்பாடி சொன்னாள்.

உனக்கு பொன்னாடை அதிர்ஷ்டம் இல்லை. மற்றபடி இன்னொரு நீலன் வந்திருக்கார் என்றாள் குயிலி.

ஆல்ட் க்யூ நீலனா, குழலன் அவரை எப்படியாவது இங்கே கொண்டுவரப்  பார்த்தான். இப்போ தானாகவே காரியம் ஆனது போல இருக்கே.

வானம்பாடி கண்ணை விரித்து ஆச்சரியப்பட்டாள். அவளது மூடிய இமைகளை மெல்ல முத்தமிட்டாள் குயிலி. அடுத்த வினாடி பிரபஞ்ச அளவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது அந்த ஏமப்பெருந்துயில் மண்டபத்தில்.

காஸ்மாஸ் பிரபஞ்சத்து அசல் நீலன் இடத்தில் ஆல்ட் க்யூ பிரதி நீலன் பேழையில் உறங்க ஆரம்பித்தார். பெருந்தேளரசரின் அலுவலக உட்சுவரில் குயிலியின் உருவம் துல்லியமாக நிறைய என்ன அவசரம் குயிலி, நீலன் மறுதடவை உயிர் பெற்றுவிட்டாரா என்று கிண்டல் தொனியில் கேட்க, உண்மையாகவே அதுதான் நடந்தது என்று குயிலி புன்சிரிப்போடு சொன்னாள்.

எனக்குத் தெரியும் எப்போ எங்கப்பா முதுபெருந்தேளர் பக்கத்திலே நீலனை பெருந்துயில்லே வைத்தோமோ அப்பவே தெரியும் கிழவர் சும்மா கையைக் காலை வச்சுக்கிட்டு இருக்க மாட்டார்னு. அவருக்கும் கொஞ்சம் ஊடு மந்திரவாதம் போல விஷயங்களில் தேர்ச்சி உண்டே. என்னமோ பண்ணி நீலரை உசிரோடு மீட்டு வச்சிருக்கார். அவரோட அக்கப்போரை எல்லாம் ஒரு அளவு தான் தாங்க முடியும்னு நாளைக்கு மண்டபத்துலே போய் சொல்லிட்டு வாடி தங்கம்.

வாடியாமில்லே. தங்கமாமில்லே. குயிலிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இந்த ஜந்து என்னமோ கூடப்பிறந்து பேர் வைச்சதுபோல் வாடி போடின்னு இழையறதே. துண்டிக்க வேணும் என்று தீர்மானித்துச் சொன்னது இந்தப்படிக்கு இருந்தது –

மூத்த பெருந்தேளர் எதுவும் செய்து நீலன் வைத்தியரை உயிர் மீளுதலுக்கு ஆட்படுத்தவில்லை. நீலன் வைத்தியரே அவர் கால மந்திர தந்திரங்களை பிரயோகிச்சிருப்பார். அல்லது வேறு ஏதாவது பிரபஞ்ச சக்தி அவரை மறு உயிர் உள்ளவராக்கி இருக்கும். எதுவோ எப்படியோ நீலன் இறந்தது உண்மையா நமக்கே தோன்றியதா. அதை ரொம்பப் பேசாமல் அப்படியே ஒதுக்கி விடலாம். நதி தன்பாட்டில் நடக்கட்டும். திரும்ப அதிலிறங்கி நீராட முனைய வேண்டாம்.

அவள் சொல்லச் சொல்ல பெருந்தேளரசர் ரசித்துக் கைதட்டி வரவேற்றார். அடி பெண்ணே, எனக்கு ஆலோசனை சொல்ல நீ தயாரா? 

அவர் சொல்லத் தொடங்க, கதவு திறந்து கர்ப்பூரம் உள்ளே வந்தான்.

 குயிலி அக்கா, நம்ம நீலன் அண்ணார் என்னத்த சொல்றது, பரமபதம் ஏகிட்டார்னு கேட்டு இவ்வளவு நாழிகை அடக்க முடியாமல் அழுதுண்டிருந்தேன். நம்ப பிராப்தம் அப்படின்னா என்ன செய்ய? அவர் நிச்சயம் கைலாசபதவி கெடச்சு DA, TA, அலவன்ஸ் அதுஇதுன்னு அமர்க்களமா இருப்பார் என்று சொல்லியபடி உத்தரத்தைப் பார்த்து வணங்கினான்.

எங்க அப்பாருக்கும் அதெல்லாம் கிடைக்குமில்லியா?

பெருந்தேளரசன் ஆர்வத்தோடு விசாரித்தார்.

ராஜன், நீர் அந்த விஷயத்திலே அர்கன் ஆகல்லே. முதுவர் ஒரேயடியாப் போக மாட்டேன்கிறாரே. போய்ட்டுப் போகட்டும். ராஜன், நீலனோட சிஷ்ருசை செய்யத்தான் குயிலி அக்கா, வராதே காலை ஒடப்பேன்னு துரத்தினாலும் நான் அட்டைப்பூச்சி மாதிரி ஒட்டிண்டு வந்தேன். இப்போ நீலனே இல்லியே யார் பாத தூசி அலம்பிக் குடிக்கணும் நான்?

பெருந்தேளரசரின் கொடுக்கில் தட்டிக் கேட்டான் கர்ப்பூரம். அவனுடைய ராஜன் விளியும், தேளரைக் கண்டமேனிக்கு எங்கெல்லாமோ அணைச்சு தட்டி கொக்கோக விளக்கமாக தாடனம், பீடனம் எல்லாம் பண்றதும் குமட்டிக்கொண்டு வந்தது குயிலிக்கு.

நீலன் போனால் என்ன, நான் இருக்கேன்.

பெருந்தேளரசன் விளையாட்டாக கர்ப்பூரத்தின் பிருஷ்டத்தில் கொட்ட ஐந்து நிமிடம் அவன் வலி உச்சம் தொட, ராஜன் ராஜன் என்று  ஆசனம் பற்றி எரிகிறதுபோல் நாட்டியமாடினான்.

ராஜனா, வேணும்டா உனக்கு என்று குயிலி சிரிப்பை அடக்கியபடி வெளியேறினாள்.

தொடரும்

Series Navigationகவிதை நந்தவனமாகிய நந்தனம் – கவிதை நூல் வெளியீட்டு விழா   
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *