ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 1

This entry is part 5 of 5 in the series 8 அக்டோபர் 2023

( 1 ) 

நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு. 

“சொல்லுங்க அழகேசன்…”

“ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?”

“இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…”

“நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…”

“இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், ஆகியோரையும் சார்ந்த விஷயமாயிற்றே? 

“நீங்க உங்களுக்கா வேணும்ங்கிறபோது செக் ஷன்ல பார்த்து, சொல்லி, காரியத்தை முடிச்சிக்கிறீங்க…வர முடியாத நேரங்கள்ல என்கிட்டே சொல்றீங்க…அப்பவும் அங்கயே சொல்லி வாங்கிக்க வேண்டிதானே? ஏற்கனவே நீங்க ஏற்படுத்தி வச்சிருக்கிற வழக்கம்தானே?” 

“ஐயா, வர முடியாத நிலமை. ஸ்பேர்ஸ் எல்லாம் நேற்றுத்தான் வந்திச்சு…இன்னைக்குத்தான் டோசருக்கு மாட்டப் போறாங்க…நான் கட்டாயம் ஒர்க் ஷாப்புல இருந்தாகணும்…இல்லன்னா பழைய ஸ்பேர்செல்லாம் கலெக்ட் பண்ண முடியாது…அதுக்காகத்தான்…”

“சரி பார்க்கிறேன்…”

“பார்க்கிறேன்னு சொல்லாதீங்கய்யா…முடிச்சுக் கொடுங்க…நீங்க சொன்னீங்கன்னா செய்துடுவாங்கன்னுதான் உங்ககிட்டே சொல்றேன்…நீங்களே உதறுனீங்கன்னா எப்படி?”

“அப்போ எப்பவும் ஒரே மாதிரி இருக்கணுங்க…ஒவ்வொரு தடவையும் உங்க விருப்பப்படியெல்லாம் செய்துக்கிறதுங்கிற நடைமுறை கூடாது…”

“சரிங்கய்யா…சரிங்கய்யா…இனிமே அப்டியே செய்துறுவோம்ங்கய்யா…”

“ரைட்…நீங்க எதுக்கும் இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு மேல பேசுங்க…”

“சரிங்கய்யா…” – எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

ஆயிரத்தெட்டு ஐயா…பேச்சுக்குப் பேச்சு ஐயா, யாருக்கு வேண்டும் இதெல்லாம்? நானா இவர்களை இப்படி ஐயா போடச் சொன்னேன்? சாதாரணமாய் எல்லோரும் அழைப்பதுபோல்  பொதுவாக ‘ஸார்’ என்றுவிட்டுப் போக வேண்டிதானே? ஏன் போலியாய் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டு;ம்? 

மனிதர்கள் தங்கள் காரியங்களை முடித்துக் கொள்ள இப்படியான வழிமுறைகளில் பிறரை, வேண்டியவர்களை அணுகுகிறார்கள். பேசும் பேச்சிலும், அதன் தொனியிலும் உள்ள போலித்தனம் கூசச் செய்யவில்லையா? இவனுக்கு இது புது அனுபவம். ஓவ்வொருவரும் தங்கள் தவறுகளை மறைக்க இப்படியான ஆயதங்களைக் கையாள்கிறார்களோ என்று தோன்றியது. 

மனதில் உண்மையான மரியாதை இருந்தால் போதாதா? இப்படியெல்லாம் கூறிக்கொண்டு இவர்கள் குழையும் பொழுது எதிலும் சந்தேகம் வரத்தான் செய்கிறது. 

‘இருந்து குடிப்போம்’ என்று காபியுடன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான். 

ரமேஷ் அறைக்குள் படிக்க ஆரம்பித்திருப்பது தெரிந்தது. படிக்க என்று உட்கார்ந்து விட்டால் நன்றாய், தீவிரமாய்த்தான் படிக்கிறான். அதில் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. ஆனாலும் அவனை எழுப்பி உட்கார வைப்பது அத்தனை பிரயத்தனமாயிருந்தது; சலிக்காமல் முயல்பவள் சுசீலாதான். 

கணவன், மனைவி இருவரில் ஒருவர் இதைச் செய்துதான் ஆக வேண்டும். இருவருமே ஒதுங்கிக் கொள்ளுதல் என்பது வினையாய்த்தான் முடியும். அத்தோடு மனசாட்சி என்று ஒன்று உள்ளதே?

“என் படிப்புக்காக நீங்க என்ன செய்தீங்க? ரெண்டு பேரும் இழுத்துப் பொத்தித் தூங்கினீங்க…அப்போவே என்னைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தி விட்டிருந்தா நானும் இன்றைக்கு நல்ல மார்க் வாங்கியிருப்பேனில்லையா?” என்று நாளை விரல் நீட்டிக் கேட்டு விடக் கூடாதே? 

இந்தக் கேள்வி அடிக்கடி மனதில் தோன்றத்தான் செய்கிறது. இது மட்டும்தானா? இன்னும் என்னென்னவோ! புதிய அலுவலகம் பயமுறுத்துவதுபோல் வீடும் அடிக்கடி பயமுறுத்தத்தான் செய்கிறது. 

தோளுக்கு மேல் போய்விட்டான் பையன். இனி தோழன்தானே? ஒரு அளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. கண்டிப்பதென்ன? நட்பாகவே ஸ்நேக பாவமாகவேதான் சொல்ல முடிகிறது. சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு மேல் குரலெடுத்தால் உடனே சலிக்கிறான். 

“அப்பா, விடுப்பா…விடுப்பா…டென்ஷனாகாதே! “ என்று நம்மைத் தேற்றுகிறான். அல்லது சலித்தவனாய் படாரென்று அறைக் கதவைச் சாத்துகிறான். அது மரியாதைக் குறைவான செயல் என்று தெரியவில்லை.; சொல்லப் புகுந்தால் வீட்டை விட்டே ஓடி விடுவான் போலிருக்கிறது. ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. 

மனம் பயப்பட்டது. ஒரு குழந்தை வைத்திருப்பவர்களெல்லாம் இப்படித்தான் பயப்படுவார்களோ? என்று தோன்றியது

“என்ன அப்டியே உட்கார்ந்துட்டீங்க? குளிக்கப் போகலையா?”

-அடுப்படியில் இருந்து குரல் கொடுத்தாள் சுசீலா. அவளுக்குத் தெரியும் அவனின் நியமங்கள். அடுத்தடுத்த காரியங்களை எவ்வளவு நேரத்தில் செய்வான் என்பதை அறிவாள். 

எல்லாவற்றிலும் ஒரு முறைமையும், ஒழுங்கு முறையும் வேண்டும் என்று நினைப்பவன் கணேசன். அப்பொழுதுதான் சிந்தனை ஒருமைப்படும். செய்யும் காரியங்கள் சீர்படும். பிழையின்றிச் செய்ய இயலும் என்பதாகச் சொல்லுவான். 

ஆனால் இந்த முறைமையை ஒருவன் தன்னளவில்தான் கடைப்பிடிக்க முடிகிறதே தவிர மற்றவர்பால் திணிக்க முடியுமா? அல்லது எதிர்பார்க்கத்தான் இயலுமா? 

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, முழுக்க முழுக்க அது சாத்தியமாவதில்லை. ஒரு மாதிரி வளைந்து கொடுத்துக் கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது. அப்படி வளைத்தே ஒடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 

“அப்பா, நான் குளிச்சிட்டு வந்திடறேன்…அப்புறம் நீ போகலாம்…”

சொல்லியவாறே டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் ரமேஷ். அவனுக்கு ஆறரைக்குள் கிளம்பியாக வேண்டும். காலை ஷிப்ட். அவனைப் பஸ் ஸ்டாப்பில் விட்டு வந்து இவன் புறப்பட வேண்டும். 

‘சட்டுன்னு குளிச்சிட்டு வா…அப்பாவுக்கு லேட்டாயிடும்…’

சுசீலா சொல்ல நினைப்பதைச் சொல்லி விடுவாள். அது அவள் பாணி. விலையுண்டோ இல்லையோ சொல்கிறாள.; 

ஆனால் தனக்கு அது சாத்தியமாவதில்லை. அம்மா ஆயிரம் சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் பையன். தான் ஒரு வார்த்தை சொன்னால் பொறுக்க மாட்டேன் என்கிறான். 

வீட்டு நிர்வாகத்தில் இது சாத்தியப்படவில்லை. சரி, ஆபீஸ் நடைமுறையிலாவது சாத்தியமாகிறதா? ஆகிறது. சிலவற்றில் ஆகிறது. பலவற்றில் ஆவதில்லை. கடுமையாக நடைமுறைப்படுத்த முனைந்தால் நிறையச் சிக்கல்கள் உருவாகின்றது.நூல் பிடித்தாற்போல் இருக்க முடியாதுதான். ஆனாலும் ரொம்பவும் நெகிழ்வை எதிர்பார்க்கிறார்கள்.  

“இவரென்னங்க, நடப்பு தெரியாத ஆளா இருக்காரு…” காதுபடவே கேட்டிருக்கிறான். 

எது நடப்பு? விதிப்படி நடப்பது நடப்பா? அல்லது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடத்திச் செல்வது நடப்பா? 

வழக்கமான காலை உடற்பயிற்சியை முடித்து தியானத்தில் அமர்ந்தவனின் மனதில் எண்ணங்கள் ஒருமுகப்பட்டு இப்படிப் பல கேள்விகளை எழுப்பின. 

சற்று நேரத்திற்கு முன் பேசிய அழகேசனின் முன் பணக்கேட்பு அனுமதி விஷயமே அதில்தானே தாமதிக்கிறது என்று தோன்றியது.

Series Navigationகனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *