சி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை

author
0 minutes, 4 seconds Read
This entry is part 2 of 4 in the series 15 அக்டோபர் 2023

கோ. மன்றவாணன்

ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது.

(சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து)

—கோ. மன்றவாணன்—

“ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகத்தின் முன்னுரை.

சி. ஞானபாரதி எழுதி உள்ள சந்திரமுகி சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க யாருடைய மூளையும் சிலிர்த்துக் கொள்ளும்.  இதை இலக்கிய சாட்சிப் பெட்டியில் ஏறி உரக்கச் சொல்லுவேன்.

இருபது, நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் “செம்மலர்” இலக்கிய இதழில் எழுதிய கதைகளைத் தொகுத்துத்தான், இந்தப் புத்தகம் புதிதாய் மலர்ந்து உள்ளது. பழைய கதைகள்தாமே என்று அலட்சியமாகப் படிக்கத் தொடங்கினால், இன்றைய புதுமைக்கும் ஈடுகொடுத்துக் கதைகள் விறுவிறுக்கின்றன.. பழுப்பு நிறப் பக்கங்கள்தாமே என்று நினைத்தால், சூடு மாறாத சூரியப் பக்கங்களாகவே கதைகள் ஒளிர்கின்றன.

“முகப்பரிச்சயம் இல்லாத நாளிலேயே எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி ஊக்குவித்ததன் மூலம் அஞ்சல் துறையை லாபம் அடைய வைத்து, கை நஷ்டப்பட்டுக் கொண்டவர் தி.க.சி”.என்று ஞானபாரதி குறிப்பிடுகிறார். தி.க.சி., ஞானபாரதியின் கதைகளை ரசித்து ரசித்துப் படித்துப் பாராட்டி வந்திருக்கிறார் என்றால் ஞானபாரதியின் எழுத்தாளுமை எவ்வளவு உயர்ந்தது என்பதை நாமும் உணரலாம்.

இந்தத் தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. வாழ்வின் நிகழ்வுகளைக் கதையாக்குவது எளிது. உணர்வுகளைக் கதை ஆக்குவது எல்லாராலும் முடியாது. அது, ஞானபாரதிக்கு எளிதாகக் கைகூடி உள்ளது. 

கதையின் சொல்தொடர் எதுவும் சாதாரணமாய்த் தெரியவில்லை. ஒவ்வொரு தொடரையும் செதுக்கிச் செதுக்கிச் சிற்பம் ஆக்கி உள்ளார். சில வரிகள் இயல்பாய் மலர்ந்த கவிதைகளாக மிளிர்கின்றன. சில தொடர்கள் அனுபவச் சுவடுகளாகப் பயணிக்கின்றன. சில பேச்சுகள், நகைச்சுவைச் சரங்களாக வெடிக்கின்றன. சில வாக்கியங்கள், சமூகக் கொந்தளிப்பாகத் தகிக்கின்றன. எதையும் புதிதாய்ச் சொல்லத் துடிக்கிறது ஞானபாரதியின் மனது. இவரின் எழுத்துநடை, அடுத்தடுத்த கதைகளைப் படிக்கத் தூண்டிக்கொண்டே செல்கிறது. 

அவஸ்தை படுவதைச் சொன்னாலும் மரணம் பற்றிப் பேசினாலும் எப்படி இவரால் இயல்பாக நகைச்சுவையாகச் சொல்ல முடிகிறது என்பது வியப்புதான். வரிகளில் நகைச்சுவை ததும்பினாலும் வார்த்தைகளின் அடியில் இரக்கக் கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

இந்தத் தொகுப்பின் முதல்கதை “அவஸ்தை”. சகுணம் பார்க்கத் தவறாத நம் எழுத்தாளர்கள் யாரும் இதை முதல் கதையாக வைக்க மாட்டார்கள். இளமையில் சமமாய் வாழ்ந்த தோழிகள், பிறகொரு காலத்தில் சந்திக்கிறார்கள். ஒருத்தி வசதியாக இருக்கிறாள். இன்னொருத்தி வறுமையின் அச்சு அசலாய் இருக்கி்றாள். பணக்காரத் தோழி, தன் கணவனுடன் ஏழைத் தோழியின் வீட்டுக்கு வருகிறாள். வறுமையின் கொடுமையை மறைக்க ஏழைத் தோழி படும்பாட்டை இதைவிடச் சிறப்பாய்ச் சொல்லி இருக்க முடியாது. இனியும் சொல்ல முடியாது. பழைய திரைப்படங்கள் வறுமையைப் படம்பிடித்துக் காட்டி இருக்கின்றன. நாமும் கண்ணீர் விட்டிருப்போம். ஆனால் இவரின் எழுத்தில் வறுமையைப் படிக்கும் போது நம் வாய் சிரிக்கிறது ; உள்ளம் அழுகிறது.

“காலண்டரில் தெரிந்த கறுப்பு வட்டம் ஆடி அமாவாசை நாள் என்று காட்டியது” எனத் தொடங்கும் மரணம் என்ற கதை வித்தியாசமானது. சற்று நேரத்தில் மரணம் நிகழப் போகிறச் சூழலைப் பகடியாகவும் சொல்கிறார். பதைபதைக்கவும் சொல்கிறார். “இதோ அணையப் போகிறேன் என்பது போல உயிர்த்திரி தடுமாறியது. மூச்சு, திணறித் திணறி வெளிவந்தது. நெடுந்தூரம் ஓடி ஓடிக் களைத்த இயந்திரத்தின் சக்கரங்கள் மெல்ல மெல்ல ஓட்டம் நிற்கிறது மாதிரித் தோன்றியது” என்று மரணத்தை விவரித்துச் செல்கிறார். சாவு பற்றிய அத்தனை சகுணக் குறிகளும் மிரட்டுகின்றன. மூடத் தனத்திலிருந்து வெளிவந்த முழுநிலவாய்க் கதை முடிகிறது.

மலைஏற்றம் என்றொரு கதை. மருதமலை ஏறி இறங்கும் காலப் பொழுதில் பல மனிதச் சித்திரங்களை வரைந்து மனதில் பதித்துவிடுகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த “வேறொரு நான் கடவுள்” படமாக காட்சிகள் நகர்கின்றன. 

முன் மண்டபத்தில் இரண்டு இரத்தக் கண்ணீர்கள் மும்முரமாய்ச் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. தொழில் போட்டி. வசவுகள் பூராவும் பெரிய ‘A’. இது ஒரு காட்சி. 

“ஆதிவாசிப் பெண், குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அரைகுறையாய் மறைக்க, சிறு கந்தல். இளசுகளின் கண்கள் அவளையே மொய்த்தன” என்று எழுதிவிட்டு, ஞான பாரதி கோபம் பொங்கக் கத்துகிறார். “இதிலுமாடா செக்ஸ்?” இந்த இடத்தில் ஞான பாரதியை, மகாகவி பாரதியாய்க் கண்டேன். 

கதையின் தொடக்கத்தில் எதேச்சையாக வரும் ஓர் இளம்பெண். கதையின் முடிவிலும் அவளே வருகிறாள். கதைசெய் முறையின் நேர்த்தி அது. கதையின் இறுதியில் ஆசிரியரே கோபத்தின் உச்சம் தொட்டுக் கொதித்துப் போகிறார்.

“அவசரமாய் ஒரு பூதம் வேணும்” என்றொரு கதை. வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதை இவ்வளவு நகைச்சுவையாக யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். வேதனையும் சோதனையும் எல்லை கடக்கும்போது வார்த்தைகளில் எள்ளல் ஏகடியம் பீறிடுவது ஒரு வகை மனஇயல்பு. அதை இந்தக் கதையில் காண முடிகிறது. குழந்தையைக் கடத்திச் சென்று பணம்பறிக்கும் கயவனைவிடவும், வரதட்சணை கேட்பவனைக் கொடியவனாகக் காட்சிப் படுத்துகிறது இந்தக் கதை. இந்தக் கதையின் சொல்லுமுறை மிகச் சிறப்பு. ஒவ்வொரு வரியும் வெடிச்சிரிப்பு.

தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற கதை “சந்திரமுகி”. வித்தியாசமான கூறுமுறை கொண்டது. வங்க எழுத்தாளர் சரத் சந்திரரையே கதைப் பாத்திரமாகக் கொண்டு உலவவிட்ட கதை. தேவதாஸில் வரும் கதாபாத்திரமான சந்திரமுகி, சரத் சந்திரரை நேரில் சந்திக்கிறார். அவர்களின் உரையாடல்கள் வழியாகத் தெய்வீகக் காதலை அலசுகிறது கதை. ஞானபாரதியின் கலைநேர்த்தியை இந்தக் கதையில் கண்டு வியக்கலாம்.

வாழ்க்கையின் விளிம்புநிலை மனிதர்களே, இவர் கதைகளின் பாத்திரங்கள். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. 

இத் தொகுப்பில் உள்ளவை சிறுகதைகள் என்று சொல்வதைவிடவும் செவ்வியல் கதைகள் என்றே சொல்ல வேண்டும். கூடைக்குள் இருக்கும் எல்லாப் பழங்களுக்கும் தரச்சான்று பகர்பவை சில சுளைகள். அவை போலவே சில கதைகள் குறித்து இங்கே அறிமுகம் செய்துள்ளேன். 

சந்திரமுகி சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும், ஞானபாரதி தமிழின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமையாக வளர்ந்திருக்க வேண்டியவர் என்று தோன்றியது. தொடர்ந்து எழுதி இருந்தால் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களை முந்தி இருந்திருப்பார். சாகித்ய அகாடெமியும் விருது வழங்கிச் சிறப்புச் செய்திருக்கும். யாருடைய ஆற்றுப்படுத்தலாலோ மடைமாற்றத்தாலோ கோவையில் முதன்மையான குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ்ஓச்சி வருகிறார். 

எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி, என் வாழ்வும் போராட்டமும் என்ற நூலில் ஞானபாரதியைக் குறிப்பிடுகிறார் இப்படி : “தமிழின் துரதிர்ஷ்டம், கொஞ்ச காலத்தில் இலக்கிய உலகில் இருந்து அஞ்ஞாத வாசம் சென்றுவிட்டார்.”

ஆசிரியர் எதிர்பார்ப்பது போலவே, இதயத்தின் வழியே மூளையினுள் நுழைந்து வாசகனின் சமூக அக்கறையையும் நல்லுணர்வையும் உயர்நிலைக்கு உயர்த்தும் இலக்கியப் படைப்பாகவே இந்தத் தொகுப்பு அமைந்து உள்ளது. 

நூல் குறிப்பு : சந்திரமுகி, சிறுகதைத் தொகுப்பு. ஆசிரியர் : சி. ஞானபாரதி, சுவடு வெளியீடு, சென்னை-73. அலைபேசி : 9551065500

Series Navigationபூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் விண்வெளியில் உள்ளனவா ?கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *