கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

This entry is part 3 of 4 in the series 15 அக்டோபர் 2023

குரு அரவிந்தன்

கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும்  இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.

எம் மொழி அழிந்து விட்டால், எம்மினமும் அழிந்து விடும் என்பது யாவரும் அறிந்ததே! புலம்பெயர்ந்த மண்ணில் எமது மொழி நிலைத்திருக்க வேண்டுமானால், எமது பண்பாடு கலாச்சாரமும் இந்த மண்ணில் நிலைத்திருக்க வேண்டும். எமக்கான அடையாளங்களை நாம் காப்பாற்றாவிட்டால், புகுந்த மண்ணில் முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம். எனவேதான் இதைச் சிந்தனையில் கொண்டு, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் கனடா கலைமன்றம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலையான பரதத்தைப் பலம்பெயர்ந்த இந்தக் கனடிய மண்ணில் அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு, 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா கலைமன்றத்தின் நிறுவுனராகவும், இயக்குனராகவும், அதிபராகவும் சிறிமதி நிறைஞ்சனா சந்துரு அவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவரை கனடா கலைமன்றத்தில் இருந்து எமது பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் 66 நிருத்த நிறைஞர்களும், 44 டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்களும் இதற்கான தகுந்த பயிற்சி பெற்றதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் இது பெரியதொரு சாதனை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இந்த மன்றத்தின் இன்னுமொரு இயக்குனரான கனடாவில் பிறந்து வளர்ந்த செல்வி ஐஸ்வரியா சந்துரு அவர்கள் பல்கலை விற்பன்னராக இருக்கின்றார். பரதநாட்டியத்தில் மட்டுமல்ல, இசைத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, மற்றும் வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமையாகச் செயற்படுகின்றார். சினிமாத்துறையில் இசையமைப்பாளர் டி. இமாமின் இசையமைப்பில் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் ‘அம்சவல்லி’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலராலும் பாராட்டப் பட்டிருக்கின்றார். தான் அறிந்தவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிப்பதிலும் மிகவும் ஆர்வமாகச் செயற்படுகின்றார்.

கனடா நாடு பல்கலாச்சார நாடாக இருப்பது மட்டுமல்ல, எங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பேணிக்காக்க உதவும் நாடாகவும் இருக்கின்றது. இத்துறையில் ஈடுபாடு கொண்ட 2022 ஆம் அ+ண்டு ‘நிருத்த நிறைஞர்’ பட்டடம் பெற்ற செல்வி நிலக்ஸா பிரகாஸ் மேடையில் கௌரவிக்கப்பட்டார். இவருடன் நடன ஆசிரியருக்கான டிப்ளோமா பட்டம் பெற்ற செல்வி பூமிகா புவிதரன், செல்வி லக்ஸயா வேணுகோபாலன், செல்வி அராபி ஜெயச்சந்திரன், செல்வி தக்ஸா பாலநாதன், செல்வி பிரியங்கா சக்ரபோதி, செல்வி லாவன்யா ஜோஸி, செல்வி கர்மின்ஜொட் மினாஸ், செல்வி கேதாயினி சிவகுமாரன், செல்வி சிறிஸதி சீஹல், செல்வி பிரித்திகா கமலேசன், செல்வி சுபிக்ஸா மணிவண்ணன் ஆகியோரும் சான்றிதழ்களும், விருதுகளும் கொடுக்கப்பட்டு, மேடையில் கௌரவிக்கப்பட்டனர். எமது பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினரும் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் தொடருவதற்கு வழியமைத்த ஒரு சிறந்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.

Series Navigationசி.ஞானபாரதி எழுதிய சந்திரமுகி – ஓர் அறிமுகக் கட்டுரை  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *