ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2

This entry is part 7 of 8 in the series 5 நவம்பர் 2023

“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான்.

சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான்.

ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது.

“இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்…சளி பிடிக்கும்…அதனால ஈரம் போகத் துடைக்கணும்…புரிஞ்சுதா?” – என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு பழக்கம்கூட இன்னும் கைவரவில்லை.

நினைத்தபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. சுவர் நன்றாக இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். அதுபோல் உடல் ஆரோக்யம் இருந்தால்தான் நன்றாய் கவனமாய் சுறுசுறுப்பாய் படிக்க முடியும். இதெல்லாமும் எத்தனையோ முறை சொல்லியாயிற்று. கேட்டால்தானே?

“வாயைத் திறந்தால் அட்வைஸ்தானாப்பா? பிளேடு போடாதே…பேசாம இரு…”

இப்படி அவன் அடிக்கடி கூறப்போக. உண்மையிலேயே தான் அப்படித்தான் இருக்கிறோமோ என்று ஒரு எண்ணம் வந்து விட்டது இவனுக்கு.

அடிப்படையாய்ச் சில விஷயங்கள் பழகவில்லையென்றால் என்ன பயன்? இதை எப்படி அவனுக்குப் புரியவைப்பது? சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்?

“எல்லாம் போகப் போகச் சரியாப் போகும்…விடுங்க…சும்மா சொல்லிட்டிருந்தா சங்கடப் படுறான்…பெரிய நொச்சுப் பார்ட்டிங்கிறான் உங்களை…”

இவனுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது. இந்தக் காலத்துப் பையன்கள் பேசும் பேச்சும், அவர்களின் பாஷையும் விநோதமாய்த்தான் இருக்கிறது. என்னென்னவோ வார்த்தைகளெல்லாம் உபயோகத்துக்கு வந்துவிட்டன.

மச்சி, மச்சான்….ஜவ்வு பார்ட்டி, கடல போடாத, ஜல்லியடிக்காத, லொள்ளு, ஜொள்ளு, தீயா இருக்கு, செம… இப்படி இன்னும் பல…. – எதுவும் ஒழுக்கத்தின், கட்டுப்பாட்டின் அடையாளங்களாய்த் தெரியவில்லை என்பது மட்டும் நிஜம்.

“என்னங்க…குளிச்சு முடிச்சாச்சா? போர்க் குழாயை மூடுங்க…மோட்டாரை நிறுத்தணும்…-கம்ப்ரெஷர் மோட்டார் ஓடும் சத்தத்தை மீறி சுசீலா கத்தினாள்.

இரண்டு வாளி குளிக்கவில்லை. அதற்குள் தொட்டி நிறைந்து வழிகிறது. ஓரளவுக்கு பூமிக்கடியில் தண்ணீர் இருப்பு நன்றாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும். இப்பொழுது அரை மணிக்குள் நிரம்பி விடுகிறது.

பின்புறம் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் போர்த்துளை போடுவதற்கு நீரோட்டம் பார்த்துச் சொன்னவர் சாமிநாதன்தான். இவன் அலுவலகத்தில் பணியாற்றும் புவியியல் ஆய்வாளர்.

5


“உங்ககிட்டப் போய் காசு வாங்குவேனா சார்? அதெல்லாம் ஒரு பைசா வேணாம்…நான் வாங்க மாட்டேன்…”கட்டாயமாக மறுத்து விட்டார்.

நீரோட்டம் நிர்ணயம் செய்யும் அந்தக் கருவிக்கான வாடகைக் கட்டணத்தையும் அவர் மறுத்தார். அது கூடாது, தவறு என்று இவன்தான் கட்டாயமாகச் செலுத்தி ரசீது பெற்றான். வெளியே இந்த மாதிரி அவர் பலவாறாக இருக்கக்கூடும் என்று தோன்றியது இவனுக்கு.

மோட்டாரை நிறுத்தினாள் சுசீலா. உடனேயே ரமேஷ் கொல்லைப்புறம் நோக்கி ஓடுவதைப் பார்த்தான்.

கம்ப்ரெஷர் மோட்டார் என்பதால் உடனே ‘ஏர் ரிலீஸ்’ பண்ண வேண்டும். அந்தக் காற்று வேகமான சத்தத்தோடு வால்வைத் திறந்து விடும்போது வெளியேறும். அதைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். ப்ளஸ்-2 படிக்கும் பையன். இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை. படிப்பு, படிப்பு, படிப்பு. அத்தனை படிப்புச் சுமை.

இந்தப் படிப்புச் சுமையினால் அவர்கள் எத்தனை பால்ய சந்தோஷத்தை இழந்திருக்கிறார்கள்?

“கிரிக்கெட் ஒன்றைத்தவிர வேறே என்னெல்லாம் விளையாட்டுத் தெரியும் உனக்கு?”

“ஏம்ப்பா அப்டிக் கேட்கிறே?”

“கேட்கிறேன்…சொல்லு…”

“ஃபுட்பால், டென்னிஸ், வாலிபால், கபடி, பாஸ்கட் பால்…”

“கிட்டி விளையாட்டு தெரியுமா?”

“அப்டீன்னா?”

“ஒரு அடிக்கு ஒரு கம்பு, நல்லா மொழு மொழுன்னு சீவிக்கணும். அதுல கால் அடி அளவுக்கு ஒரு கில்லி…ரெண்டு பக்கமும் முனையிலே சிறைச்சு, நடுவுல மேடா மத்தளம் மாதிரி சைசுல தயார் பண்ணனும். இங்கிலீஷ் எழுத்து ‘டி’ மாதிரி தரைல குழி தோண்டி இந்தக் கில்லியை நுனில வச்சு அந்தப் பெரிய கம்பால எத்தி விடணும். கேட்ச் பிடிச்சா அவுட்டு. தரைல விழுந்ததை எடுத்து ‘டி’எழுத்துக் குழில வச்சிருக்கிற கம்பு மேல படுறமாதிரி எறிஞ்சாலும் அவுட்டு. படலைன்னா பிறகு கில்லியை வச்சு கம்பால அடிக்கணும். இப்படியே விளையாட்டு தொடரும்.

“சரியான லூஸூ _ விளையாட்டா இருக்கும் போலிருக்கு…”

“அப்படியில்லடா…இதுலேர்ந்துதான் கிரிக்கெட் டெவலப் ஆச்சு…அது தெரியுமா உனக்கு?”

“விடாதப்பா…ரீல் விடாத…”

சொல்லிக்கொண்டு படிக்கப் போய்விட்டான் ரமேஷ்.

அன்று ஐந்தாறு பேராகச் சேர்ந்து இப்படி விளையாடிய கிட்டி, பம்பரம், கோலி என்பதான சிறு சிறு விளையாட்டுக்களில் இருந்த இன்பம், அவை அளித்த சந்தோஷம், எல்லாமும் இழந்து விட்டார்களே இன்றைய சிறுவர்கள்?

6


நினைக்க நினைக்க ஏக்கமாகத்தான் இருந்தது இவனுக்கு.

இன்று காலையில் எழுந்ததிலிருந்து பையன் சிந்தனையாகவே ஆகிவிட்டதோ என்று தோன்றியது.

நேரத்தைப் பார்த்தான். ஆறு பதினைந்து.

“ரமேஷ், ரெடியா?”

“ஷூ_ மாட்டிட்டிருக்கேம்ப்பா…”

“பாட்டில்ல தண்ணி விடுங்க…”

“அதைத்தான் தேடுறேன்…பாட்டிலைக் காணலை…”

“காணாட்டி என்ன? இன்னொண்ணை எடுத்து நிரப்பி கொடுத்தனுப்புங்க…ஸ்கூல்ல வச்சிட்டு வந்திருப்பான்…”

சர்வ சாதாரணமாய்ச் சொல்கிறாள். ஒரு பாட்டில் நூற்றைம்பது ரூபாய். எத்தனை பாட்டில்கள்தான் வாங்குவது? அதுபோல் எத்தனை பேனாக்கள்தான் வாங்குவது? தொலைப்பதற்கு ஒரு அளவே இல்லையா? கவனமாக வைத்துக் கொள்வதல்லவா நல்ல பழக்கம். காசு, தேவைக்கு செலவு செய்யலாம். விரயம் பண்ண முடியுமா? சொல்ல முடியாது. சொல்லிச் சொல்லி அலுத்து விட்டான்.

“சதா குற்றம் சொல்லுறது, குறை சொல்லுறது, இதுதான் வேலை உங்க அப்பாவுக்கு…”

சுசீலாவே இப்படிச் சொல்கிறாள். தேவையான அறிவுரைகள், சொல்லப்பட வேண்டாமா? நல்ல விஷயங்கள் எப்பொழுதும் சற்றுத் தீவிரமாகத்தானே வெளிப்படும்? அது மனதில் படிந்தால்தானே பொறுப்புணர்ச்சி வரும்! ஒரு சிறுவன் ஒரு நல்ல பிரஜையாக உருவாவது முக்கியமில்லையா? இன்று அவனை சீராக வடிவமைத்தால்தானே நாளை கலைநயம்மிக்க, கருத்தான பொக்கிஷமாக உருவாவான்?

மனதில் எண்ண ஓட்டங்கள் வரிசையிட புதிய பாட்டிலில் வெந்நீரை நிரப்பி பையனிடம் கொடுத்தான்.

கேட்டைத் திறந்து வண்டியை வெளியேற்றினான்.

“ஒன் எம்” போயிருக்கும். ரெண்டு பஸ் மாறிப்போ…அரச மரம் ஸ்டாப்புல கொண்டு விடுறேன்…”

பையன் பின்னால் அமர வண்டியைக் கிளப்பியபோது மீண்டும் தொலைபேசி மணி அடித்தது.

தினசரி வழக்கம்தானே இது! எல்லோருக்குமான கடனை, தான் ஒருவனே சுமப்பது என்பதான நடைமுறையை ஏற்றுக் கொண்டாயிற்று. கவனித்துத்தானே ஆக வேண்டும்!

புதிய அலுவலகப் பொறுப்பில் எத்தனையோ வித விதமான டென்ஷன்; இந்த எண்ணத்தோடேயே தொலைபேசி விபரத்தை வந்து கேட்டுக் கொள்வோம் என்று போய்க் கொண்டிருந்தான் கணேசன்.

Series Navigationதினை       அத்தியாயம்  முப்பத்தெட்டு     பொ.யு 5000ஆதிவாசி கேரளர்கள் என்று கேரள இடதுசாரி அரசாங்கம் செய்யும் இனவெறித்தனம்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *