வளவ. துரையன்
மேகங்களின் உருவங்கள்
காற்றால் மாறுவதைப் போல
மெதுவாக இங்கே
இரக்கமின்றிச்
செல்கிறது கடந்த காலம்
அன்று முதல் பார்வையில்
நீ தந்த குளிர்மொழிதான்
மனக்குகையில்
உட்கார்ந்துகொண்டு
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது
நினைத்து நினைத்து
மறக்க முயல்கிறேன்
நினைவுகளைப் போட்டுக்
கசக்கிப் பிழிந்து
கரும்பறைக்கும் இயந்திரமாக
மனம் கசப்பு கொள்கிறது
எல்லாம் காலியானாலும்
சமையல் பாத்திரத்தின்
அடியில் ஒட்டியிருக்கும்
ஒரு சிறு
சோற்றுப் பருக்கையாய்
நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய்
அதனால்
பசியாறாது
என்று தெரிந்திருந்தும்
அதையே ஏக்கத்துடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்