ஆர் வத்ஸலா
தள்ளாடி தள்ளாடித் தான்
நடக்க முடிகிறது
இப்போதெல்லாம்
என் கால்களின் வழியே
ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறது
தள்ளாமை
அதனை தோற்கடிக்கும் முயற்சியில்
தீவிரமாக நானும்
எதற்கும் இருக்கட்டும் என்று
என்னவர் வாங்கி வைத்த
சக்கர நாற்காலி
அமர்ந்திருக்கிறது
எங்கள் அறையின்
ஒரு மூலையில்
என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு
வீட்டுக்குள் நடக்கிறேன்
அடி கணக்கு ஒப்பிக்கும் கருவியை சுமந்தபடி
தினமும் மும்முறை
மருத்துவர் சொன்னபடி
மைல் கணக்கில் நடந்தாலும்
இரண்டாயிரம் அடிகளே நடந்ததாக
கூறுகிறது கருவி சட்டாம்பிள்ளைத்தனமாக
ஆனாலும் நடக்கிறேன்
நாள் தவறாமல்
சொல்லி விட்டேன் அவரிடம்
“தள்ர வரெக்கும்
தள்ரேன்.
அப்பறம் நீங்க தள்ளலாம்”