என்ன யோசிச்சுட்டு இருக்க?

author
0 minutes, 29 seconds Read
This entry is part 4 of 4 in the series 24 மார்ச் 2024

சோம. அழகு

            Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப் பாதைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டிருப்பினும் அந்த இடையிணைப்பிற்குச் சமயத்தில் பெரிய பொருளோ காரணமோ இருக்காது. அதுதான் பிரச்சனையே. அதுதான் அதன் அழகும் கூட! உச்சகட்டமாக ஒன்றுமே யோசிக்காமல் வெறுமனே எதையோ பார்த்துக் கொண்டே கூட இருந்திருப்பேன் சில சமயம். இது புரியாமல் இக்கேள்வியை அடிக்கடி கேட்பதில் என்னதான் இருக்கிறதோ? பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். நீங்கள்தான் தாங்க மாட்டீர்கள்…. ஆமா!

            ஒரு பிற்பகல் நேரம் மாடத்தில் அமர்ந்திருந்த என்னிடம் இக்கேள்வி வந்து விழுந்தது என்னவனிடம் இருந்து.

“சும்மா அப்பிடியே யோசிச்சிட்டு இருந்தேன்” – நான்

“அப்பிடி என்னத்த எப்போ பாத்தாலும் சும்மாவே யோசிச்சுட்டு இருக்க? இன்னிக்கு எனக்குத் தெரிஞ்சாகணும்” – என்னவன்

“நெறைய ஓடிட்டு இருந்துச்சு மண்டைக்குள்ள…” – தயங்கியபடியே இழுத்தேன்.

“பரவாயில்லை. எனக்கு நெறைய நேரம் இருக்கு. வரிசையா சொல்லு எல்லாத்தையும்” – வம்படியாக வந்து மாட்டினார்கள்.

“எல்ல்ல்ல்லாஆஆஆத்தையுமா?” – ஒரு முடிவுடன் அப்போதைய என் சிந்தனைச் சிதறல்களை முத்துப் பரல்களை (அதாங்க! Pearls of Wisdom!) ஒன்றுவிடாமல் கொட்டத் தயாரானேன். “மதியம் சொதி செய்திருந்தேன் இல்லையா? அதுல இருந்துதான் ஆரம்பிச்சுச்சு”

“சொதிக்கு என்னவாம்?”

“சொதிக்கு ஒண்ணும் இல்ல. நாந்தானே செஞ்சேன். நல்லாதான் இருக்கும். அதோட தோற்றத்தைப் பற்றி…”… புத்திசாலித்தனமாக என்னைக் குறுக்கிடுவதாக நினைத்து “தோற்றம் வெள்ளை நிறத்துல இருக்கும்” என்று விளக்கம் தந்ததைப் பரிதாபமாகப் பார்த்தேன்.

“இனி நான் பேசும்போது குறுக்கிட மாட்டீர்கள் என்றால் மட்டுமே எல்லாவற்றையும் கூறுவேன்” என்றேன்.

தான் விழுந்திருக்கும் பள்ளத்தின் ஆழம் தெரியாமல் ஒப்புக் கொண்ட என்னவனிடம் தொடர்ந்தேன்.

இனி என்னுள் ஓடிய…. எப்போ பார்த்தாலும் ஓடிட்டே இருக்கணுமா என்ன? நிதானமாக நடைபோட்ட எண்ணங்கள்!

சொதியோட தோற்றம்… அதாவது origin. திருநெல்வேலிக்கே உரியது அது. அப்போதெல்லாம் ஊரடைத்து கல்யாணம் நடக்கும்…. ஆங்! இப்போ இன்னும் மோசம். நாடடைத்து நடக்கிறதே! கல்யாணச் சாப்பாடு முடிந்து தேங்காய் நிறைய மீந்து விட்டால் அதைக் காலி செய்ய மறுநாள் தேங்காய்ப்பால் எடுத்து சிறுபருப்பு, காய்கறி போட்டு சொதி செய்து சாப்பிடுவார்கள். இப்போது என்னவென்றால் சொதி சாப்பாட்டையும் ஒரு சடங்காக மாற்றி ஏதோ சோத்துக்கு செத்தவர்கள் மாதிரி வலுக்கட்டாயமாக மூன்று நாள் கூத்தடிக்கிறார்கள். நான் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தால் பதிவுத் திருமணம் செய்து அலுவகத்தில் கூடும் சொச்சம் பேருக்கும் ‘இனி சபை கலையலாம்’ என அங்கேயே டாட்டா காட்டியிருப்பேன். சொல்ல முடியாது… வந்து சேர்ற கிறுக்கி எப்பிடியோ?

என் கமலா ஆச்சிதான் அடிக்கடி சொதி செய்வாள். அவள் செய்யும் எல்லாமே நன்றாக இருக்கும் எனினும் அவளது உள்ளித்தீயலுக்கு உலகில் ஈடு இணையே கிடையாது. கேரளாவில் தேங்காய் எண்ணெயில் செய்வார்கள். ஆச்சி  நல்லெண்ணெய் இட்டு செய்வாள். பொருட்களும் அவற்றின் அளவும் அவள் சொல்பேச்சு கேட்டு கடைசியில் சுவையும் மணமும் பிரமாதமாக வந்துவிடும். அளவுகளை எழுதி வைக்க முடியாத படி நான்கு விரல்களையும் சேர்த்த வாக்கில் உள்ளங்கையை லேசாகச் சுருக்கிக் கட்டை விரலை மடக்கி மோதிர விரலிலோ நடுவிரலிலோ மேலே கீழே என இஷ்டப்பட்ட இடத்தில் வைத்து ‘இவ்வளவு’ என்பாள். எப்போது காணச் சென்றாலும் ஒரு வாரத்திற்குக் காணுமளவு சின்ன தூக்குச் சட்டி நிறைய செய்து தந்தனுப்புவாள். அவள் கை வாக்குக்கு அது கெடவே செய்யாது.    

அதற்கு அடுத்தபடியாக கோமதிநாயகம் சித்தப்பாவின் கீழ் வீட்டில் வசித்த ஒரு ஆச்சி செய்து தந்த வத்தக்குழம்பைச் சொல்லலாம். அப்போது மாசமாயிருந்த எனக்கு அவ்வப்போது ஏதாவது செய்து அப்பாவிடம் கொடுத்தனுப்புவார்கள். மாங்காய் ஊறுகாய் கேட்டு வாங்கி ரசித்துச் சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. “அம்மாயிக்கு நச்சிந்தா பாபு” என்று மறக்காமல் கேட்பார்களாம்.

தெலுங்கு….. இந்த மொழியைக் கேட்டதும் பேயோனின் வரிகள் நியாபகம் வர சிரிப்பு சிரிப்பாய் வந்தது. “தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்ன அழகு என வியக்கையில் தன் அழகிற்குத் தொடர்பே இன்றி கடுக்கு முடுக்கு என தெலுங்கில் பேசத் துவங்கிவிட்டாள்”. ‘போக புத்தக’த்தில் கூட இதே மாதிரி ஒரு இடத்தில் எழுதப்பட்டிருக்குமே. அப்போ… போகன் சங்கர்தான் பேயோனா? ஆமா… அப்படித்தான் இருக்கணும். அந்தப் புத்தகத்தில் இன்னொரு இடத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவர்தான் என்று புரிந்துகொள்ளும்படி உள்ள கட்டுரை… ஹைய்ய்ய்யோ! என்ன ஒரு sense of humour! போகன் சங்கர் அவர்களுக்கு அன்று மட்டும்தான் சிரிப்பை அடக்கி வயிறு வலித்தது. எனக்கோ அக்கட்டுரையின் நினைவு வரும்போதெல்லாம் சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது.

Violin இசையை விட அதை வெகுவாக ரசித்த குன்னக்குடி வைத்திநாதன் அவர்களின் பாவனைகள்தாம் எல்லோருக்கும் முதலில் நியாபகம் வரும். Violinஐ நினைத்த பிறகு தானாக மனதில் Vivaldiன் Summer Presto கேட்கிறதே! என்ன ஒரு அற்புதமான இசைக்கருவி!

Beethovenன் 5th symphonyல் வரும் முதல் மூன்று நொடிகள்… அதை வைத்து ‘Silence’  என்று ஒரு முழு நீளப் படத்தையே எடுத்திருக்கிறாரே Mohsen Makhmalbaf. பார்வையற்ற அச்சிறுவனையும் அந்த ‘ ப ப ப பம்ம்ம்’ என்னும் music notesஸையும் வைத்து என்ன ஒரு அழகியல் நிறைந்த படமாக்கல்.

ஆனாலும் நம் நாதஸ்வரம் போல் தனித்துவம் பெற்ற இசைக்கருவி உலகிலேயே கிடையாது. இதைப்பற்றி ‘நாடற்றவன்’ புத்தகத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதியிருப்பார். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘சஞ்சாரம்’ வாசித்த பிறகு நாதஸ்வரம் இன்னும் பிடித்துப் போனது. அதன் பிறகு எந்தக் கல்யாண வீட்டிற்குச் சென்றாலும் மேளக்காரர்களிடம் ‘என்ன சொல்லப் போகிறாய்?’ வாசிக்கும்படி தாழ்மையான விண்ணப்பம் வைத்துவிடுவேன். நாதஸ்வரத்தில் அப்பாடலைக் கேட்கையில் ஒவ்வொரு முறையும் புல்லரிக்கும்.

ஒரு பாடல் என்ன செய்துவிடும்? ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அரசின் அலட்சியம் எல்லாவற்றையும் வலிமையாகப் பேசும் ‘ஒருத்தரும் வரேல’வின் முடிவில் வரும் பாடல்…. “ஆயிலு கேனு காக்குமுன்னா அந்த ஆர்மிக மூணும் வீண்தானா?”, “நாங்க தீத்துக்க வேண்டிய கணக்குகள் எல்லாம் வேறொரு விடுதலையா?” – ஒவ்வொரு வரியும் ரேஸ்மி சதீஷ் அவர்களின் குரலில் நெஞ்சை உலுக்கிப் பிழிந்து தொண்டையை அடைத்து நிற்கும். ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் இறுதியில் வரும் “ஆள மட்டும் நீங்களா? அட சொல்லுங்கடா… செத்து மாள மட்டும் நாங்களா? வந்து அள்ளுங்கடா….” பாடல் வரிகளும் நினைவிற்கு வந்தன. மனம் செவ்வணக்கத்துடன் தோழர் திவ்யபாரதி அவர்களின் ஆளுமையை வியந்தது. 

அதைத் தொடர்ந்து அனிச்சையாகப் பழங்குடியினரை இடம் பெயரச் சொல்வதைச் சாடும் ‘Gaon Chodab nahin’ பாடல் மனதில் ஒலித்தது.

எவ்ளோ பிரச்சனை நடக்குது நம்மைச் சுற்றி?

We are all just bloody brash hedonists. ச்சை!

“How many times have people used a pen or paintbrush because they couldn’t pull a trigger?” – Virginia Woolf. எவ்வளவு உணர்வுப்பூர்வமான சிந்தனை? கோபம் மட்டுமல்ல… வலியையும் அறச்சீற்றத்தையும் தரும் எந்த நிகழ்வையும் கலையின் மூலம் வெளிப்படுத்துதல்/சாடுதல் என்ன ஒரு அற்புதமான உத்தி?

Ray Bradburyன் “Everyone must leave something behind…” எனத் துவங்கும் அந்த இரண்டு பத்திகள் எவ்வளவு உண்மையானவை? Roberto Benigni தன் பிறவிப்பயனை La Vita e Bellaவிலேயே அடைந்து விட்டார். அப்படத்திற்கு முன்னான அவரது வாழ்க்கைக்கும் அதன்பிறகு அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் அந்த ஒரு படைப்பே போதுமானது.

இந்த ஒரு வாழ்வு பத்தவே பத்தாது… உலகில் இருக்கும் அருமையான படைப்புகள் ஒவ்வொன்றையும் தேடித் தேடி ரசிக்க.

ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்குமா நிச்சயமாக?

சிலரைப் பார்க்கையில் “ஆகா! எவ்வளவு நல்லவர்; வல்லவர்; நாற்பதும் தெரிந்தவர்…..” என்று தோன்றும். இத்தோன்றல் வியாதி நம்முள் வேர்விடும் போதே அதற்கு மருந்திட்டுக் குணமாக்கும் பொருட்டு திருவாய் மலர்ந்தருளத் துவங்கி விடுகின்றனர். என்னதான் ‘நிறையுடைமை… பொறையுடைமை…’ என இருந்தாலும் நம்மைக் கடுப்பேற்றும் நற்பணியில் அயாராது உப்புசப்பில்லாத உபதேசம் நல்கி ஈடுபடும் திருவாளன் திருவாட்டிகளிடம் இனி ஒவ்வொரு அமர்வுக்கும் கால் மணி நேரத்திற்கு 1000 ரூபாய் வீதம் வசூலிக்கலாம் என்றிருக்கிறேன். என்னதான் அவர்கள் போகிற போக்கில் தொண்டாற்றும் மனப்பான்மையுடன் செயல்பட்டாலும் எனக்கும் நியாய நித்தியானந்தம் தர்ம தணிகாட்சலம் என்றெல்லாம் இருக்கிறதல்லவா?

“சொந்தந்தான்… ஆனா நல்லவங்க” – இப்படி அறிமுகப்படுத்தும் சூழல் ஒரு முறையாவது அமைந்திட வேண்டும். தமாஷா இருக்கும்ல!

மனதிற்குள் சிரித்தது முகத்தில் குறுநகையாக வெளிப்பட சாலையைப் பார்த்தேன். உடனே தோன்றியது….

எவ்வளவுதான் கொதிக்கும் தார் ஊற்றி மறைக்க முற்பட்டாலும் நிலம் தன் தன்மையை அறிவித்தபடி சாலையில் ஆங்காங்கே விழும் விரிசல்களில் பச்சை பூக்கத்தான் செய்கிறது. என்னதான் பிறரால் நம்முள் வெறுமை ஊற்றப்பட்டாலும் ஏதேனும் ஒரு கவிதை கண்முன் அரங்கேறுவதில், மீச்சிறு விஷயங்களிலும் ரசனையின் மூலம் நல்லுணர்வை(feel good factor) மீட்டெடுக்கும் நம் இயல்பைப் பறைசாற்றியபடி, ஒவ்வொரு நொடியும் உயிர் கொள்கிறது. – parallel textக்கு என்ன ஓர் அருமையான எடுத்துக்காட்டு! இப்படி கொச கொசனு யோசிப்பது நான் மட்டுந்தானா?

இதே போன்ற தற்குறிப்பேற்றும் பழக்கம் அன்று கடற்கரையிலும் எட்டிப் பார்த்தது. ரொம்ப கூட்டம் இல்லாத அந்த மாலையில் ஏதோ மனவருத்தத்தில் வெகு நேரமாகக் கடலை வெறித்து நோக்கிக் கொண்டிருந்த பெண் ஒருவள் கலங்கிய கண்களுடன் கால் நனைக்கவென எழுந்து சென்றாள்.

சட்டென என் கைகள் இரண்டையும் தன் கைகளினுள் இட்டு அழுத்திய என்னவன், “போதும்டா மா!” என்றதையும் பொருட்படுத்தாமல் நான் “அவள் முன்னேறிச் செல்லச் செல்ல ஏதோ தன் உவர்ப்புத் தன்மையை அதிகரிக்க விரும்பாததைப் போல் கடல் தன் அலைகளை உள்ளே இழுத்துக் கொண்டே சென்றது” என்று தொடர மீண்டும் “அடேய்! முடியல டா… உன் கையவே காலா நெனச்சு கேக்குறேன்…” எனக் கெஞ்சத் துவங்க நானோ, “எதுக்கு கைய போய் காலா நனைச்சு துவைச்சு காய போட்டுகிட்டு?” என்று என் கால் விரல்களைக் குழந்தையைப் போல ஆட்டி கால்களின் இருப்பை நினைவூட்டினேன். கொஞ்சமும் யோசிக்காமல் சற்றும் தயங்காமல் என் பாதங்களைப் பிடித்து சரணாகதி அடைந்த என்னவனை அத்தோடு “பிழைத்துப் போங்கள்” என்று விட்டேன்.

மிக அழகாகப் பழிவாங்கிய திருப்தியில் கால்கள் இரண்டையும் மேசையின் மீது நீட்டி வலது குதிகாலை இடது கணுக்காலின் மேல் போட்டு கைகளைப் பிடரியில் ஒய்யாரமாக வைத்துச் சிந்திக்கும் தோரணையைக் கம்பீரமாக அணிந்து கொண்டேன். இனி நிம்மதியாக யோசிக்கலாம்… அல்லது யோசிக்காமலும் இருக்கலாம்!

இனிமேலும் யாராச்சும் கேப்பீங்க? எங்க, கேளுங்க பாப்போம்?

  • சோம. அழகு
Series Navigationமுக்காடு போட்ட நிலா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *