குரு அரவிந்தன்
சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 23 ஆம் திகதி 2024 அன்று சொற்கோ வி. என். மதிஅழகன் அவர்களின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு’ என்ற நூல் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
சுமார் 2:00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானபோது, திரு. சோம சச்சிதானந்தன் தமிழ்த்தாய் வாழ்தும், செல்வி கிஸோரி ராஜ்குமார் கனடாப் பண்ணும் இசைத்தனர். தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது. இதையடுத்து பேராசிரியர் இ.பாலசுந்தரம், மருத்துவர் வடிவேல் சாந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அடுத்து முதன்மை விருந்தினரான திரு. இன்பஜோதி நித்தியராஜ் செல்லப்பு அவர்களின் உரை இடம் பெற்றது.
நூல் நயவுரையை முனைவர் மைதிலி தயாநிதி அவர்களும், திருமதி வாசுகி நகுலராஜா அவர்களும் நிகழ்த்தினார்கள், அடுத்து யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராம் அவர்களின் வாழ்த்துச் செய்தியை ஏ.ஆர். நந்திராஜன் அவர்கள் வாசித்தார். அதைத் தொடர்ந்து முதன்மைப் பிரதிகளும், விசேட பிரதிகளும் வழங்கப்பட்டன.
அடுத்து கனடா எழுத்தாளர் இணையத்தின் மதிப்பளிப்பு இடம் பெற்றது.
தொடர்ந்து கனடா எழுத்தாளர் இணையத்தின் துணைத்தலைவர் குரு அரவிந்தனின் வாழ்த்துரையும், நன்றியுரையும் இடம் பெற்றன. ‘எனது தாயாரின் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் வாழ்த்துரையும், எழுத்தாளர் இணையத்தின் சார்பாக நன்றியுரையும் சொல்ல இன்று எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே வருவதால் இப்பொழுதெல்லாம் இப்படியான நிகழ்வுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகிறது. ஆனாலும் புலம்பெயர்ந்த மண்ணில் இது போன்ற ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு எம்மால் அணி சேர்க்கமுடிகின்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செல்லத்துரை கிருஸ்ணகோபால் மற்றும் ஜெகநாதன் சுஜந்தன் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம் பெற்றன. இறுதியாக மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்களின் மதிப்பளிப்பு இடம் பெற்றது. நூல் ஆசிரியர் வி.என். மதிஅழகன் தனது ஏற்புரையில் ‘இந்த நூல் அறிமுக நிகழ்வுக்குத் தனது அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கும், குறிப்பாக இலங்கை வானொலியில் தன்னுடன் சமகாலத்தில் பணி புரிந்தவர்களுக்கும், மற்றும் நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கும், வருகை தந்த ஊடகப் பிரிவினருக்கும், உறவினர் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.’ தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. நிகழ்ச்சி அறிவிப்பாளர் திருமதி நிர்மலா இரத்தினசபாபதி நிகழ்ச்சிகளைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.
- பூனை
- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு
- பெண்ணும் நெருப்பும்
- நெடுநல்வாடை