மகிழ் !

author
0 minutes, 7 seconds Read
This entry is part 4 of 6 in the series 14 ஏப்ரல் 2024

சோம. அழகு

உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் துவங்கிய வேகத்தில் மின்னலென முடிந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அதன் விதை விழுந்தது மூன்று மாதங்களுக்கு முன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென விளையாட்டாக உவன் கேட்டான்,
“நாம இன்னொரு கொழந்த பெத்துக்கலாமா?”
“என் உடம்பு ஒத்துழைக்கணுமே” என்றவள் சட்டென கேட்டாள் “நாம ஏன் ஒரு குழந்தைய தத்தெடுக்கக் கூடாது?”

உவள் விளையாட்டாக அல்லாமல் நிஜமாகத்தான் கேட்கிறாள் என்பதை உணராமல் “ஹாஹா… எனக்கு என் பிள்ளைதான் வேணும்” என்று சிரித்தவாறே சொல்லிச் சென்றான். உவளையும் அறியாமல் ரொம்ப மெனக்கெடாமல் அவ்வளவு பெரிய விஷயம் மிகச் சாதாரணமாக வெளிப்பட்டது முதலே அவ்வெண்ணம் உவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு அது குறித்து உவன் கூற சாத்தியமுள்ள எல்லா வகையான காரணங்களையும் மனதினுள் போட்டு அலசி ஆராய்ந்து அதற்கெதிரான சரியான வாதத்தை முன்வைத்து உவனை சம்மதிக்க வைக்கும் வழிமுறைகளை ஆராயத் துவங்கினாள்.

“என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை மாதிரி வராது” – “இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தையின் மீது ஊற்றெடுக்கும் அன்புக்கு வரைவிலக்கணம் ஏது? பெற்றோர்களாவதற்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதனால் தத்தெடுக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே பெற்றோர்கள் என்பதும் இல்லை. ஆம் எனில் அநாதை இல்லங்களே இருக்காதே.”

“ஏன் தத்தெடுக்கணும்னு எண்ணம் வந்துச்சு உனக்கு?” – “இன்னொரு குழந்தை வேணும்னு முடிவு பண்ணிட்டோம். அதை அர்த்தமுள்ளதா ஆக்கலாம்னு… யாருமே இல்லாம போன சக உயிருக்கு ஒரு அழகான குடும்பத்தைக் குடுக்கலாமே… இது சமூகத்துல பெரிய மாற்றத்தை ஒண்ணும் கொண்டு வரப் போறதில்லதான். Just one less orphan in the world is all we can do”
இப்படியாகப் பல பல தருக்கங்களை மனதளவில் தயார் செய்து வைத்திருந்தவள் முந்தைய நாள் மெதுவாக உவனிடம், “ப்பா… ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்னு எனக்கு தோணீட்டே இருக்கு” என்றதற்கு “எனக்குத் தோணல” என்று ‘எனக்கு’ல் அழுத்தம் வைத்துத் திருத்தமாக உடனே வந்து விழுந்தது மறுமொழி. “அதான் ஏன்?” என்று கேட்கும் முன்னரே வலுக்கட்டாயமாக ஒரு அலைபேசி அழைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான் உவன். அனைத்துத் தயாரிப்புகளும் தவிடுபொடியாயின. கற்பனையில் நிகழ்ந்த ஒத்திகை உரையாடல்கள் யாவும் ஒரு வாய்ப்பு கூட பெறாததால் பாவம்போல் உவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பற்றித்தான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

பேச்சுவார்த்தைக்கு வந்தால்தானே ஒப்புக்கொள்ள வைக்க முடியும். முதல் அடியே சறுக்குகிறதே! இன்று எப்படியும் விடுவதாயில்லை. பிடித்து வைத்தாவது கேட்டு விடுவது என உறுதி பூண்டவாறே மீண்டும் எல்லாவற்றையும் தன் மனதில் ஓட்டியபடி ஆயத்தமானாள்.

உவன் உவளைப் போல அப்படி ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. அதனால் எப்படியும் உவனை சம்மதிக்க வைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கனவு காணத் துவங்கினாள். இப்போது உவள் கண்களுக்குத் தன் மகளுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது கண்டு பூரித்துப் போனாள். இரண்டு செல்வங்களையும் அள்ளிக் கொஞ்சிக் கொண்டாள். காலியாக இருக்கும் ஒரு கை சீக்கிரமே நிரம்பப் போகும் உவகை உவளை ஆட்கொண்டது. அப்போதிருந்த மகிழ்ச்சியான மனநிலையில் அக்குழந்தைக்குப் பெயர் கூட வைத்துவிட்டாள் – ‘மகிழ்’.

எவ்விதத் தயக்கமும் இன்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள, தனது நியாயங்களை முழுதாகப் புரிந்து கொள்ள, ஒரே விஷயத்திற்கு ஆயிரம் முறை உடைந்து போய் புலம்பித் தீர்த்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதலளிக்க தானும் தங்கையும் எப்படி ஒருவருக்கொருவர் இருக்கிறோமோ அதே போல் தன் மகளுக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வரத்தான் போகிறார்கள்.

அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அன்னாரது முற்போக்கான கொள்கைகளையும் சிந்தனையோட்டத்தையும் வைத்து எளிதில் சொல்லலாம் – தத்தெடுக்கும் முடிவை மனமுவந்து வரவேற்பார்கள். அவர்களின் ஆளுமை அப்படி. அம்மா எதையுமே பெரிதாக எதிர்க்க மாட்டாள். ‘இது சரியா வருமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தையைக் கொண்டு போய்க் காண்பித்தால் போதும்.

எல்லாவற்றையும் மறந்து அப்படியே உச்சி முகர்ந்து கொஞ்சித் தீர்த்து அன்பைப் பொழிவாள்.

தங்கையிடம் ஏற்கெனவே இதைப் பற்றிச் சொன்ன போது, “செம டா… Can’t wait to meet my next niece/nephew” என்று குதூகலித்தாள். இவ்வாறாக நிஜமாகவே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துவிட்ட உணர்வில் மிதந்தாள் உவள்.

மாலை வீடு திரும்பிய உவனுக்கு நல்ல இஞ்சித் தேநீர் இட்டுத் தந்தாள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு கெட்ட பழக்கமேனும் வேண்டுமல்லவா? அதன் பொருட்டு டீ, காபி பழக்கத்தைக் கைவசம் வைத்திருந்தான். ஓய்வான அமைதியான மனநிலையில் உவன் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மெல்ல அருகில் சென்று சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“ப்பா…”

“ம்ம்..?” – அலைபேசியில் இருந்து கண்களை அகற்றாமலேயே உவளிடம் கேட்டான். நெளிய வைக்கும் அமைதியைச் சுற்றிலும் படர விட்டு உவனது கைகள் காலியாகி கண்களில் தன் பிம்பம் நிறையும் வரை காத்திருந்தாள். உவளது இந்த மௌனம் இடும் ஆணை உவனுக்கு ரொம்பவே பரிச்சயம் ஆதலால் அலைபேசியைக் கீழே வைத்து விட்டு உவளைப் பார்த்து கேட்டான்… “சொல்லுடா மா…”

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத முழுசா கேளுங்களேன்… உங்க காரணத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். உங்களுக்கு ஏன் தத்தெடுக்க வேண்டாம்ணு தோணுது?” தொடர்ந்து தான் யோசித்து வைத்தவற்றையெல்லாம் கூறினாள்.

சிறிது நேரம் ஆழமாக உவளை உற்று நோக்கி பின்பு கூறினான்.

“என்னோட எண்ணம் சரின்னு சொல்லமாட்டேன். ஆனா எதார்த்தத்துக்குப் பக்கத்துல நின்னு சொல்றேன். புதுசா வர்ற குழந்தையையும் நம்ம பாப்பாவையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமான்னு தெரியல…”

“ஒருவேளை நமக்கு பாப்பா பொறக்காம போயிருந்தா…?”

“கண்டிப்பா தத்தெடுத்துருப்போம். அப்போ ஒப்பீடுங்குற பேச்சுக்கே இடம் இல்லையே! அப்போ நம்ம உலகமே அந்த குழந்தைதான்னு ஆகும்போது மொத்த அன்பையும் அதுகிட்ட தான் காமிப்போம்.”

“அது இப்போ அப்பிடிதான் பா இருக்கும். கொழந்தைன்னு வந்து நம்மளோடதுன்னு ஆன பிறகு எல்லாமே மாறிடும்”

“ஒருவேளை மாறலன்னா…. எப்பவும் ஒரு சின்ன வித்தியாசம் ஆழ் மனசுல நம்மளையும் அறியாம இருந்துட்டே இருக்குமோன்னு பயமா இருக்கு. ஏதோ ஒரு சூழல்ல அது லேசா எட்டிப் பார்த்தா கூட என்னை என்னாலயே மன்னிக்க முடியாது. பாவம் அந்தப் பிஞ்சு என்ன பாடு படும்? நம்மள விடு… சுத்தி இருக்கவங்க எப்படி அணுகுவாங்கன்னு நெனச்சு பாத்தியா?”
“அப்பா அம்மால்லாம் சந்தோஷமா….” – உவள் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான்.

“அத்தை மாமா எவ்ளோ பரந்துபட்ட பார்வை உள்ளவங்கன்னு எனக்குத் தெரியும். என்ன பிரச்சனைனா நம்மள சுத்தி இருக்குறது அவங்க மட்டும் இல்ல”
“ஊருக்காக வாழ முடியுமா?”
“கொழந்தைய வீட்டுக்குள்ளயேவா வச்சு வளர்க்க முடியும்? வெளிய எங்கயாவது… உதாரணமா ஒரு விசேஷ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும் போது எல்லாரும் பாப்பாவைப் பாக்குற மாதிரியே அந்தக் குழந்தையையும் பார்ப்பாங்கன்னு சொல்ல முடியாது. பாப்பாவை மட்டும் தூக்கிக் கொஞ்சி அந்தக் குழந்தைய ரெண்டாந்தரமா நடத்துனா அந்தக் குழந்தை பரிதவிச்சுப் போய்டாதா? பாவம்… அதுக்கு என்ன நடக்குதுன்னு கூடப் புரியாது. ஊருக்குப் பாடமா எடுக்க முடியும்? இதுல வேற சில சில்லரைங்க நேரிடையாவோ நாசூக்காவோ அந்தக் குழந்தைக்கு அரைகுறையா விவரம் தெரிய ஆரம்பிக்குற வயசுல ‘தத்துப்பிள்ளை’ அது இதுன்னு உளறி வச்சா…? அப்படிப்பட்ட ஜென்மங்களும் நம்மளச் சுத்தி இருக்குல்ல?”

“அதுக்கு அப்புறம் நாம உரிமையா நல்லதுக்குக் கண்டிச்சாலும் குழந்தைக்கும் நம்மளுக்கும் வித்தியாசமாதான் தெரியும், இல்ல?”

“அதுக்குதான் சொல்றேன். நீயே யோசிச்சுப் பாரு மா…” என்றபடி உவள் கரங்களைப் பற்றினான்.

குழந்தை ஏதோ கேட்டு அழ ஆரம்பிக்கவும் “நீ உட்காரு… நான் பாத்துக்குறேன்” என்றபடி எழுந்து சென்றான்.

தன்னுள் எழ வாய்ப்பிருக்கும் பாரபட்சம் குறித்துப் பொய் சொல்கிறான், மனதறிந்து அல்ல. அக்குழந்தையையும் தன்னுயிராகவே சீராட்டுவான். பிறரைச் சார்ந்து உவனுள் எழும் மனத்தடையைப் பற்றி உவள் யோசிக்கவே இல்லை. இது இன்னொரு மனமும் அதன் உணர்வுகளும் சம்பந்தப்பட்டது. விட்டால் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவற்ற அவ்வாழ்க்கைக்குப் பழகி அதன் போக்கில் வளர இருக்கும் ஒரு குழந்தையைக் கூட்டி வந்து புண்படும் சூழலுக்கு ஆளாக்கிவிடக் கூடாது. இந்தக் கரிசனமும் அக்கறையும் புரிந்தாலும் சமாதானமளிப்பதாக இல்லை உவளுக்கு.

முன்பின் பார்த்திராத அந்தக் குழந்தைக்காகவும் உலகையே எதிர்க்கத் துணிவும் முனிவும் கொண்டாள். ஆனால் உவனது நியாயங்களில் தானாக விளங்கி நின்ற நிலைப்பாட்டில் உவளது பகற்கனவில் உவளை நோக்கி ஓடி வந்த அக்குழந்தை இப்போது அப்படியே பின்னோக்கிச் சென்றது. ஒளியாகத் தெரிந்த அதன் முகத்தை உவள் சரியாகக் கூடப் பார்த்திருக்கவில்லை. ஏனோ அழுகை வருவது போல் நெஞ்சம் இறுகித் தொண்டை கட்ட ஆரம்பித்தது.

“மகிழ்…” என ஆசையாக ஒரு முறை விளித்தாள். “அம்மா” என்று கேட்டது உவளுக்கு மட்டும், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து. இரண்டாம் முறையாகச் சிலிர்த்தாள்.

  • சோம. அழகு

Series Navigationகனடாவில் சூரியனைத் தேடிய பயணம்அதுவே போதும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *